Home » Articles » சோதனைகளை, சோதனை செய்…

 
சோதனைகளை, சோதனை செய்…


கோவை ஆறுமுகம்
Author:

“வாழ்வில் ஒரே நோக்கத்துடன் செய்யும் பணியிலே, இறுதிவரை நிலைத்திருப்பதிலும், அதை நிலையாக வைத்திருப்பதிலும் தான் நிலையான, உண்மையானவெற்றி அடங்கியுள்ளது”. என்பது வெற்றியின் தத்துவம். ஆக, வெற்றி என்பது நினைத்ததை அடைவதல்ல, மற்றவர்களை விட, சற்று அதிகப்படியாக இருப்பதும் அல்ல, உதாரணமாக ஒருவரிடம் நூறு கோடி ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இன்னொருவரிடம் நூறு கோடிக்கு மேல், ஐந்தாயிரம் ரூபாய் இருந்தால், முதல் நபரை விட பெரிய பணக்காரர் என்று சொல்லலாமே தவிர, வெற்றி பெற்றவர் என்று சொல்ல முடியுமா…? இவர்களை விட மூன்றாம் நபரிடம் ஆயிரம் ரூபாய் அதிகமாக இருந்தால், மற்றவர்களை தோற்றவர்களாக சொல்லிவிட முடியுமா? ஆகவே, மேற்கூறிய வெற்றியின் தத்துவப்படி, இது நிலைத்த வெற்றியல்ல. ரூபாய் அதிகமாக இருந்தால், மற்றவர்களை தோற்றவர்களாக சொல்லிவிட முடியுமா? ஆகவே, மேற்கூறிய வெற்றியின் தத்துவப்படி, இது நிலைத்த வெற்றியல்ல.

இன்று கடுமையாக உழைத்து, பெரும் வெற்றி கண்டவர்கள் கூட,சாதாரண சிறு விஷயத்தில் கேள்விகளைச் சந்திருக்கிறார்கள். அதன் காரணங்களைச் சற்று ஆழமாக ஆராய்வோம்.

முதலில், வெற்றி என்பதன் ஆரம்பமும், முடிவும் எது? வெற்றியை நிரந்தரமாக்க என்ன வழி?வெற்றி நிலையில்லாமல் போவதற்கான காரணம் என்ன? என்பதை சில உதாரணங்களோடு அகத்தாய்வு செய்வோம். வெற்றி என்பது எங்கே நிர்ணயிக்கப்படுகிறது?  மலையில் ஏறுபவர்களுக்கு, மலை உச்சியை அடைவது (வெற்றியின்) முடிவு. மலையை விட்டு இறங்குபவர்களுக்கு மலை அடிவாரம் (வெற்றியின்) முடிவாக அமைகிறது. யோசித்துப் பாருங்கள்!.. இந்த செயலில் வெற்றி யாருக்கு? வெற்றி எங்கே இருக்கிறது? மலை உச்சியிலா? மலையடிவாரத்திலா?

அடுத்து ஓட்டப்பந்தயத்தில், பந்தய வீரர்கள் ஓட்டத்தை தொடங்கிய இடத்திலேயே முடிப்பது தான் வெற்றியாக நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வெற்றியின் ஆரம்பமும், முடிவும் ஒரே இடத்தில் அமைந்துவிட்டது. இந்த மூன்று வகைகளில் எந்த இடத்தில் வெற்றி என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

முதலுக்கும், முடிவுக்கும் “இடைப்பட்ட” கால அளவு, முயற்சி, சூழ்நிலைகளில் தான் என்பது புலனாகிறது இதேபோல்தான் வாழ்க்கையிலும், பிறப்பு ஒரு வெற்றி, இறப்பு ஒரு வெற்றி. வாழ்க்கைப்பயணத்தில் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் நம் இறந்த கால காயங்கள், நிகழ்கால நிர்ணயங்கள், எதிர்கால இலக்குகள் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பது அறிவுப்பூர்வமான உண்மை. அப்போதுதான் பிறப்பு என்கின்றவெற்றிச் சம்பவம், இறப்பு என்னும் வெற்றிச்சரித்திரமாக மாறமுடியும்.

யார் ஒருவருக்கு ‘வெற்றியே இல்லை, தோல்வி மேல் தோல்வி’ என்றநிலை இருக்கின்றதோ, அவர்கள் நிலைத்த வெற்றிக்காக முயற்சிக்கவே, இல்லை என்று அர்த்தம். அதுதான் உண்மையும் கூட.

நிலைத்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான, தேவையான மந்திரம் எது தெரியுமா? அந்த இடைப்பட்ட காலத்தில், செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய காலத்தே செய், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான்! இதற்கு உதாரணமாக,

ஒரு பெரிய ‘இரும்பு’ தயாரிப்பு கம்பெனி முதலாளி, தற்செயலாக தன் பள்ளி பால்ய நண்பரை  “கலாசு” தொழிலாளியாக சந்தித்தார். அன்பு மேலிட முதலாளி, அந்த தொழிலாளி நண்பரின் கைகளைப் பிடித்து சந்தோஷமாக, ‘எப்படி இருக்கிறாய்? என்று விசாரிக்க, அந்த கலாசு தொழிலாளி நண்பர், ‘நான் ஒரு பாடத்ததைக் கற்றுக் கொண்டு விட்டேன். அதாவது, நான் எதையும் செய்ய வேண்டிய காலத்தில், செய்ய வேண்டியதை செய்யாததால், அதற்குண்டான தண்டனையைப் பெற்று வருகிறேன்; என்று கூறி காய்ப்புக் காய்த்த தன் கரத்தால், முதலாளி நண்பரின் மென்மையான கரத்தை தடவிக்கொடுத்தார்.

நம்மில் எத்தனை பேர், இவர்களைப் போல இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? வெற்றியும் தோல்வியும் சந்தித்துக் கொள்வது போல, எத்தனை பேர்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்வில், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே என்னவென்றால், ஒரு சில நிமிட சந்தர்ப்பங்களில் வெற்றியை இழந்தாலும், அதன் பாதிப்பை பல மணி நேரம் மட்டுமல்ல, பல நாட்கள், மாதங்களில் கூட சரி செய்யாமல்  இருப்பதுதான். வாழ்க்கை வெற்றிக்குத் தடையாகவும், தோல்விக்குக் காரணமாகவும் இருக்கிறது. இதனால்தான், மனிதனின் குணம், தொழில், உறவுமுறைகள், ஆரோக்கியங்கள் எல்லாம் சீரழிகின்றன.

சரி செய்ய முடியாமைக்குக் காரணம்… நம் மனது சிறு தோல்வியை பெரிதாகக் காட்டி, அடுத்து வெற்றி ஒன்று இருப்பதை மறக்கவும், மறைக்கவும் செய்வதும், அல்லாது வெற்றியை சிறிதாக, அலட்சியமாக காட்டி தள்ளி விடுவதும்தான். இதனால், மனதிற்குள் தோல்வியானது, வெற்றியை ஜெயித்து, வெற்றி பெறுகிறது. மேலும், ஒரு செயலில் வெற்றி பெற்றதும், தோல்வியைப் பற்றி சிந்திக்காத மனம், தோல்வி ஏற்பட்டதும், வெற்றியைச் சிந்திக்காமல், தோல்வியையே நினைத்து விடுகிறது. முடிவில் மறைமுகமாக தோல்வி மனப்பான்மைக்கு நாமே ஊக்கமும், வலுவும் கொடுத்து நமக்குள் உள்ள வெற்றி உணர்வை, தோற்கடித்து விடுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.

நம் உள் மனதில் எதை, எப்படி விதைக்கின்றோமோ, அதுதான் வெளியே முளைக்கும் வெற்றிப்பெறாவிட்டால், வெளியே வெற்றி தோற்றுவிடும். முடிவில் வெற்றி வெறியாக மாறிவிடும். வெற்றிக்காக குணம், கொள்கை, கட்டுப்பாடுகளை மீறி செயல்பட வேண்டியிருக்கும். இப்போதுள்ள காலகட்டத்தில், வெற்றி பெறத் துடிக்கும் மனிதர்களின் மனநிலைப்பாடு இதுதான். இதனால், நிலைத்த வெற்றிக்கு இடமில்லை.

இதைத் தவிர்க்கும் வழிகள் நமக்குள்தான் என்றபேருண்மையை உணர வேண்டும். தோல்வியை வெற்றியாக மாற்றும் சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றி நம் கண்ணோட்டமும், மனஓட்டமும் மாறவேண்டும். அதாவது,

முதல் தோல்வியிலேயே வெற்றி பெறாததற்கு என்ன காரணம்? என்பதை அறியாமல் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். ஒரு காரியத்திற்கு பல காரணங்கள் இருக்கும். உதாரணமாக,

நடக்கும் போது, கால் தடுக்கி கீழே விழுகிறோம். இங்கே விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால்… விழுந்ததற்குக் காரணம், கல்லா? கவனச் சிதறல்களா? இதேபோல்,

காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான். இதற்குக் காரணம் எது? முன் விரோத எண்ணமா? தூண்டுதலா? துப்பாக்கியைக் கொடுத்தவனா? இல்லை துப்பாக்கி தயாரித்தவனா? துப்பாக்கியா, தோட்டாவா? அல்லது காந்தியின் மரண விதியா? இதில் எதைக் காரணமாக சொல்ல முடியும்? இந்த காரணங்களில் ஒன்று இல்லாமல் போயிருந்தாலும் மரணம் நிகழ்ந்திருக்காதே. ஆக, வெற்றிக்கும், தோல்விக்கும் காரணங்களை ஆராய்ந்து, கவனம் செலுத்தினால் தொடர் தோல்வியும் தொடராது. தொடர் வெற்றியும் தடையாகாது. இதுதான் காரணங்கள் மூலம் கற்றுக் கொள்ளும் பயிற்சி. இதுதான் நிலைத்த வெற்றிக்கான முயற்சி. இதைத்தான்,  தோல்வியே வெற்றியின் சூட்சுமம் என்கிறோம். அடுத்து வெற்றி தோல்வி குறித்த நம் கண்ணோட்டம் மாறவேண்டும் என்றவகையில் ஆராய்ந்தால்…

பார்க்கும் கண்ணோட்டத்திலும் மூன்று வகைகள் உண்டு. 1) தோல்வியோ, ஏமாற்றமோ எல்லாம் சகஜம் என்றசமாதான மனப்பக்குவம். 2) இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்று ஏற்றுக் கொள்வது. 3) வெற்றிக்கான முயற்சி, பயிற்சி, தன்னம்பிக்கை போதாது என்பதையும், காரணத்தையும் அறிந்து கற்றுக் கொள்ளவில்லை என்றும் உணர்வது.

இந்த வகையில்… தோல்வியில் அடங்கியுள்ள வெற்றியைப் பார்க்கத் தெரியாமல், தோல்வியையே முடிவாக நினைத்து, வாழ்க்கையை முடிவுக் கட்டி கொண்டு கடந்த காலத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள், மற்றும் தன்னையே ஏமாற்றிக் கொண்டு வாழாமல், செத்துப் பிழைக்கும் நிலையில் இருப்பவர்களின் கண்ணோட்டம் மாறவேண்டும்.

இதற்கு, உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவம்… ஒரு இளைஞன், தான் படிக்க ஆசைப்பட்ட பட்டப்படிப்பை, குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிக்க முடியாமல் போனதற்காக கவலைப்பட்டதோடு, குடும்பத்தார் மீதும், தன் பிறப்பின் மீதும் வெறுப்புற்று நொந்து கொண்டான். தந்தையின் சுய தொழில் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்தபோது, வேண்டா வெறுப்பாக, தன்னைக் கஷ்டப்பட்டு, மாற்றிக் கொண்டு வேலை செய்தான். ஆனால், தினமும், தான் தோற்றுவிட்டதாகவே நினைத்து வேதனைப்பட்டான்.

இந்த நிலையில், தன்னுடன் படித்த நண்பனைச் சந்தித்த போது அவன் பட்டப் படிப்பை முடித்தும்,கூட நல்ல வேலையின்றி, நிம்மதியின்றி, சொந்தத் தொழிலும் இன்றி கஷ்டப்படுவதை சொல்லக் கேட்டதும், தன் நிலையை நினைத்து, நிம்மதியும், சமாதானமும் அடைந்தான். மனம் மாறி, சந்தோஷமாக தொழிலில் ஈடுபட்டான். மன ஓட்டத்தையும், கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொண்ட பின், பெரும் மாற்றத்தைத் சந்தித்தான்.

இந்நிலையில், மீண்டும் ஒரு சோதனையாக, இளைஞரின் திருமண சமயத்தில் அவன் விரும்பிய பெண், அரசு வேலை இல்லை என்றகாரணத்திற்காக அவனை தவிர்ததாள். ஆனால், இந்த தோல்வி, ஏமாற்றம், இந்த முறை அந்த இளைஞனை சிறிதும் பாதிக்கவில்லை. காரணம், முன்பு தொழில் செய்த விஷயத்தில் வந்த தோல்வி கண்ணோட்டம் மாறியதும், சந்தோஷம் வந்ததை நினைவு கூர்ந்தான். இப்போதும், அதே கண்ணோட்டத்தில் மாற்றி யோசித்தான், தான் விரும்பும் பெண் தனக்குக் கிடைக்காவிட்டாலும், தன்னை விரும்பும் பெண்ணை மணக்கும் மனப்பக்குவத்தை பெற்றதால், இன்று இல்லறவாழ்க்கையிலும், தொழிலிலும் நிலைத்த வெற்றி கண்டுள்ளான்.

ஆகவே, தோல்வியைச் சந்திக்கும் போது, சில சமயம் நம் தைரியத்தை இழக்க நேரலாம். ஆனால், அதை இடைப்பட்ட காலச் சூழ்நிலைகளில் மாற்றி யோசித்தால், சாதாரணமான சோதனைகளை, அசாதாரண சாதனைகளாக மாற்றலாம். வாழ்க்கையில், நிலைத்த வெற்றி பெற, இடைப்பட்ட காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறைஎன்றஇலட்சியத்தோடு அடைக்கப்பட்ட கதவுகளை தடைபட்டதாக நினைத்து, நடை திறக்கும் வரை, அடைபட்டுக் கிடப்பதை விட, முட்டிக் கொண்டு முயன்றால், வெற்றி வாசல் திறக்கும். துணிந்து, சோதனை (தோல்வி) களை, சோதனை (ஆய்வு) செய்து என்றும் நிலையான வெற்றியை, நிலையாக்குவோம்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்