Home » Cover Story » உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு

 
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு


ஆசிரியர் குழு
Author:

டாக்டர். சுதாகர்

மேலாண்மை இயக்குநர்

சுதா மருத்துவமனை, ஈரோடு.

நம்பிக்கையும், உறுதியும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயலாற்றி வருபவர் இவர். மகத்தான பணிகளைச் செய்யவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம் எனக் கூறி சமூக நற் பணிகளை நிரம்ப செய்து வருபவர்.

நம் எண்ணங்கள் எப்படியோ, அப்படி தான் வாழ்க்கை அமையும் எனவே எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்தவையே எண்ண முயற்சிப்போம் என்று சிறப்பான செயல்பாடுகளுடனேயே செயல்பட்டு வருபவர்.

“”உணவே உயிர்” என்ற அமைப்பைத் தொடங்கி தினமும் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாத 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர்  கொடுத்து உதவி வருகின்ற உயிர்ச் சேவையை திறம் பட செய்து வருபவர்.

தண்ணீர், சுற்றுச் சூழல்  மாசுபாடு தவிர்க்க ஈரோடை சேவை அமைப்பை உருவாக்கி மக்களின் ஆரோக்கியம்  மேம்பட பாடுபட்டு வருபவர்.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள டாக்டர் சுதாகர் அவர்களை நாம் நேர்முகம்  கண்டதிலிருந்து இனி…

கே: நீங்கள் பிறந்து, வளர்ந்து, பயின்ற அனுபவம் குறித்து…?

நான் ஈரோடு மாவட்டத்தில் திரு. கந்தசாமி, திருமதி. தனபாக்கியம் அவர்களின் மகனாக 1978ம் ஆண்டு பிறந்தேன்.  பெற்றோர் இருவருமே மருத்துவர்கள்.

நான் படித்தது எல்லாமே ஊட்டியில் தான் . எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரை க்ளுப் ஸ்கூலில்தான் பயின்றேன். குழந்தைக்கல்வியை மிக அழகாக போதிக்கும், அந்தப் பள்ளியில் 4ம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது.

அதன் பின்னர் ஊட்டியில் உள்ள பிரபலமான  லாரன்ஸ் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும் பயின்றேன். இப்பள்ளியில் பயின்றதால் எதையும் சமாளிக்கக் கூடிய வலிமையும், அறிவையும் பெற்றேன்.

பின்னர் எனது சொந்த ஊருக்கே வந்து பாரதி வித்யாபவன் பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தேன். படிக்கின்றபோதே டாக்டராக வரவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருப்பேன். அதையே இலட்சியமாகவும் கொண்டேன்.

மருத்துவம் தான் என்னுடைய குறிக்கோள். அதை அடைய வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துப் படித்தேன். என்னுடைய உழைப்புக்கு பலன் கிடைத்தது.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., பட்டத்தைப் பெற்றேன். பின்னர் M. D., ஜென்ரல் மெடிசனை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பிறகு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் டி.என்.பி. கார்டியாலாஜி முடித்தேன். 12 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பையே படித்தேன்.

அந்த 12 வருடத்தில் கற்றுக்கொண்ட அனுபவம் மிகவும் அதிகம். மருத்துவம் சார்ந்த அனைத்து உத்திகளையும் துல்லியமாகக் கற்றுக்கொண்டேன்.

கே: படிப்பை முடித்து எப்பொழுது மருத்துவப்பணியைத் தொடங்கினீர்கள்…?

மருத்துவத்திலேயே மூன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெற்றதால் என்னால் அனைத்து விதமான நோய்களுக்கும் செம்மையாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற உந்துதல் எனக்குள் தோன்றியது. அதன்பிறகு 2009ம் ஆண்டு ஈரோட்டிற்கு வந்தேன். என் பெற்றோர்களும் மருத்துவர்கள் என்பதால் அவர்களுடன் சேர்ந்து கார்டியாலாஜியாக பணியாற்றினேன்.

கே: சுதா மருத்துவமனை எப்பொழுது தொடங்கப்பட்டது….?

எனது தந்தையின் முயற்சியால் முதலில் ஒரு கிளினிக் மிகவும் சிறிய அளவில் தொடங்கப் பட்டது. பின்பு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையுடன் நேரடியாக தொடர்பு வைத்து அப்போலோ இதயம் மருத்துவமனை என்று ஒரு மருத்துவமனையை தொடங்கினோம். ஆரம்பத்தில் நன்றாகப் பெயரெடுத்தோம். ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்து விட்டோம். அப்போது நான் சென்னையில் மருத்துவப்படிப்பை முடித்திருந்தேன் நேரம். மீண்டும் இங்கு வந்து மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டேன்.

அருகிலுள்ள சத்தியமூர்த்தி மருத்துவ மனையை வாடகைக்கு எடுத்து இரண்டு வருடம் நல்லதொரு சிகிச்சைப் பணியை மேற்கொண்டேன். அதன் பிறகு 2012ம் ஆண்டு ‘சுதா இன்ஸ்டியூட் மெடிக்கல் சயின்ஸ்’ என்றபெயரில் மருத்துவமனையை நிறுவினோம். 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி மக்களின் நன்மதிப்போடு செயல்பட்டு வருகிறது.

கே: இம்மருத்துவமனையின் மூலம் நீங்கள் செய்து வரும் சேவைகள் குறித்து…?

‘வந்தபின் எதிர்கொள்வதை விட, வருமுன் காப்பதே சிறந்தது’ என்ற வைர வரியை மருத்துவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறியாகும். சேவை என்பதும் தொண்டு என்பதும் மற்றவர்களுக்கு எவ்வாறு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஒருமுறை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பொழுது ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் அதிகளவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரத்தைப்  படித்தேன். ஒரு மருத்துவராய் இந்த செய்தி என்னை மிகவும் கலங்கடித்தது.

இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். அப்பொழுதுதான் தண்ணீரால்தான் அதிகளவில் நோய் பரவியுள்ளது என்பதையும், அதற்கான காரணம் இங்கு அமைந்திருக்கும் நீரோடைகளின் பரிதாப நிலைதான் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இதனால், ஈரோடை சேவை அமைப்பு ஒன்றைநிறுவி ஓடைகளை சுத்தம் செய்தோம். தொழிற்சாலைகள், சாயக்கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் காவேரி ஆற்றில் கலக்கிறது. அதைத்தான் இப்பகுதிகளில் குடிநீருக்காகப் பயன்படுத்துகிறோம் என்றவிழிப்புணர்வுடன், இந்த குடிநீர் மாசுபாட்டை தவிர்க்க வெளிமாநிலங்களிலிருந்து பல சேவை அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த மாசுப்பாட்டை தவிர்க்க வழிவகை செய்து வருவதோடு, விழிப்புணர்வையும் கொடுத்து வருகிறோம்.

கே: நீங்கள் செய்த சேவையில் உங்களை நெகிழ வைத்த சேவை என்று நீங்கள் நினைப்பது…?

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் இவை தான். நம் ஊரில் எத்தனையோ பேர் தங்க இடமில்லாமல், உடுத்த ஆடையில்லாமல் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இவைகள்  இல்லாமல்  கூட  உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால், உணவில்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது. இதை கருத்தில்  கொண்டு “உணவே உயிர்” என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கி தினமும், 150 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகிறோம்.

இவர்கள் அனைவரும் தங்களின் அன்றாடத் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வாழ்பவர்கள். எந்தவொரு சேவை அமைப்பும் தொடங்கும்பொழுது மக்களின் கருத்துக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கும். பழகப்பழக அதன் பயன்களைத் தெரிந்து கொள்வார்கள். தேவையைப் புரிந்து கொள்வார்கள்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழித்திட வேண்டும்’ என்ற பாரதியின் கூற்றேஇந்த திட்டத்தை செயல்படுத்த வழிவகை செய்தது. தொடர்ந்து 5 மாதங்களாக நடைபெற்று வரும். இத்திட்டம் வெற்றிகரமாக மேலும் தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்