Home » Articles » வெற்றி பயணங்கள்

 
வெற்றி பயணங்கள்


கவிநேசன் நெல்லை
Author:

வெற்றி பெற்ற மனிதர்களின் சாதனைகள் பல நம்மை வியக்கச் செய்கின்றன. அவர்களின் சாதனைகளைப்போலவே நாமும் பல சாதனைகளைப் புரியவேண்டும் என்ற ஆர்வமும் நமக்குள் உருவாகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பதவிகளும், பாராட்டுகளும், பண முடிப்புகளும், “நாம் கண்டிப்பாக வெற்றியடைந்தே தீர வேண்டும்” என்கின்ற உணர்வைத் தூண்டி, உற்சாகத்தை நமக்குள் விதைக்கிறது.

வெற்றியாளர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அந்த வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமானவைகள் ஒளிந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒன்று “உடல் வலிமை” இன்னொன்று “மன வலிமை”.

ஒருவர் தனது உடலை நன்றாகப் பேணிகாக்கத் தவறிவிட்டால், பல நோய்கள் அவரைப் பற்றிக்கொள்கிறது. தலைவலி, கால்வலி, கைவலி, முதுகுவலி, மூட்டுவலி, இடுப்புவலி என மெதுவாய் ஆரம்பிக்கும் வலிகள் பலவித வலிகளை அவரது உடலுக்குள் ஏற்படுத்தி விடுகிறது. உடலில் ஏற்படும் இந்த வலிகள் உள்ளத்திலும் வலிகளை உருவாக்குகின்றன.

“எனக்கு இப்படி நோய் வந்துவிட்டதே”  என எண்ணுகின்ற மனதில் வலி ஏற்படுகிறது. இந்த உடல் வலியோடு மன வலியும் இணைந்துகொண்டால், ஒருவரின் வலிமை தானாகக் குறைந்துவிடும் உற்சாகத்தை இழப்பதற்கும், நல்ல உணர்வோடு உரையாடுவதற்கும் பெரும் தடையாக இந்த வலிகள் அமைந்து விடுகின்றன.

வெற்றிபெற்ற பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படும். வெற்றியைப் பெறுவதற்கு இந்த வெற்றியாளர்களெல்லாம் நேரம் பார்க்காமல் உழைத்திருப்பார்கள். அடுக்கடுக்காய் வரும் கவலைகளை உள்வாங்காமல், உறுதியோடு உழைக்கும் வழிகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். தோல்விகள் வரும்போது அதனை தோழனாக நினைத்துக்கொண்டு, தனக்குத் தோள்கொடுக்கும் நண்பனாக மாற்றிக் கொள்வார்கள். பிரச்சனைகள் வருகின்றபொழுது, அதன் தாக்கத்தை தாங்கிக் கொண்டு வீறுநடைபோட்டு முன்னேறுவார்கள். இதனால்தான், வெற்றியாளர்கள் எப்போதும் வெற்றியைச் சந்திக்கிறார்கள். தடைகள் வரும்போதெல்லாம் அதனைத் தாண்டிச் செல்வதற்கான வழிகளை மட்டும் பார்க்காமல், அந்தத் தடைகளை வாய்ப்புகளாக மாற்றுவதற்கு வழி என்ன? என்று சிந்திப்பார்கள். இதனால்தான் வெற்றியாளர்கள் தலைவர்களாக எப்போதும் பவனி வருகிறார்கள்.

அது ஒரு புகழ்பெற்ற நிறுவனம். ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டும் அந்த நிறுவனத்திற்கு திடீரென ஒரு சோதனை ஏற்பட்டது.

“இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் அளவுக்கு நமது நிறுவனத்தில் நஷ்டம் உருவாகிவிட்டது. இந்த நஷ்டத்திலிருந்து எப்படி மீண்டுவர முடியும்?” என சோகத்தில் ஆழ்ந்தார். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்.

கவலை அதிகமானதால் தனியாக காரில் புறப்பட்டு, நகரத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் பூங்காவிற்கு வந்தார். அங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஓரிடத்தில்போய் அமர்ந்துகொண்டார்.

“எந்த வருடமும் இல்லாத சோதனை இந்த வருடம் எனது நிறுவனத்திற்கு வந்துவிட்டதே!” என்று எண்ணும்போது அவரது நெஞ்சம் வலித்தது. அப்போது ஒருவர் அவர் அருகில் வந்தார். நன்றாக உடை அணிந்திருந்த அவர் மேலாண்மை இயக்குநரின் அருகில் வந்து அமர்ந்தார்.

“நீங்கள் ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்?” என்று ஆதரவோடு கேட்டார்.

மேலாண்மை இயக்குநருக்கு அவரது ஆதரவுக் குரல் அமைதியைத் தந்தது.

“நான் எனது தொழிலில் தோல்வியடைந்துவிட்டேன். இந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக 25 கோடி ரூபாய் எனக்கு நஷ்டமாகிவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன்?” என்றார்.

“நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தியாவிலுள்ள இந்தத் தொழிலதிபரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டு, இந்தியாவிலுள்ள ஒரு பெரிய தொழிலதிபரின் பெயரை குறிப்பிட்டார் வந்தவர்.

“நான் பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் மேலாண் இயக்குநர்.

“அந்தத் தொழிலதிபர் நான்தான். நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன். லாபம் கிடைத்த பின்பு பணத்தை நீங்கள் எனக்குத் திருப்பித் தந்தால் போதும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தனது ‘கோட்’ பாக்கெட்டிலிருந்த ‘செக் புக்’ கை கையில் எடுத்தார். பின்பு எழுத ஆரம்பித்தார்.

“இப்போது 50 கோடிக்கு ‘செக்’ தருகிறேன். இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நஷ்டத்தை சரி செய்து கொண்டு தொடர்ந்து கடினமாக உழைத்து முன்னேறுங்கள். ஒரு வருடம் கழித்து எனக்கு இந்தப் பணத்தைத் திருப்பித் தந்தால் போதும்” என்று சொல்லிவிட்டு செக்கை அவர் கையில் கொடுத்துவிட்டு சென்று விட்டார் அவர்.

50 கோடி ரூபாய் ‘செக்’ கைப்பெற்ற மேலாண்மை இயக்குநர் அதிர்ந்துபோனார். அதனை வாங்க வேண்டாம் என மனம் தடுத்தாலும், தனது நிறுவனத்தின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுமே? என்ற பயத்தில் அதனைப் பெற்றுக்கொண்டு தனது அலுவகத்திற்கு வந்தார்.

நிறுவனத்திலுள்ள அத்தனை பணியாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

“எனக்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் 50 கோடி ரூபாய் கடன் தந்திருக்கிறார். இந்த ‘செக்’ என் கையில்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பணத்தை நான் பயன்படுத்தப்போவதில்லை. இந்தப் பணத்தைவிட உங்களை நான் நம்புகிறேன். நமது நிறுவனத்திற்கு ஏன் தோல்வி ஏற்பட்டது? நஷ்டம் எதனால் வந்தது? என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்ள வேண்டும். நஷ்டத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதனை நீக்குவதற்கு பணியாளர்களாகிய நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் நாம் அடுத்த ஆண்டு லாபம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் நாம் அனைவரும் வெற்றி பெறலாம்” –  என்ற மேலாண்மை இயக்குநரின் உறுதியான பேச்சு பணியாளர்களின் ‘உறுதிமொழி’ யாக மாறியது.

பணியாளர்கள், மேலாண்மை இயக்குநரின் ஆலோசனைப்படி ஒற்றுமையோடு பணியாற்றினார்கள். அந்த ஆண்டின் கடுமையான உழைப்பிற்கு பலன் கிடைத்தது. நஷ்டத்தை ஈடுகட்டி இலாபம் 60 கோடிக்குமேல் கிடைத்தது.

மேலாண்மை இயக்குநர் மகிழ்ந்தார். தோல்வி நேரத்தில் கடனாக பணம்கொடுத்த அந்த தொழிலதிபரை மறுநாள் சந்திக்க திட்டமிட்டார். தொலைபேசியில் அவருடைய அலுவலகத்திற்கு தொடர்கொண்டு அவரை அதே பூங்காவில் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

மறுநாள்  குறிப்பிட்ட நேரத்தில் அதே பூங்காவில் அதே இடத்தில் காத்திருந்தார் மேலாண்மை இயக்குநர்.

அதிகாலை நேரத்தில் அந்தத் தொழிலதிபரும், அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண்ணும் வந்துகொண்டிருந்தார்கள். லேசான பனிமூட்டத்தால் தூரத்தில் வந்துகொண்டிருந்த அவர்களின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

மேலாண்மை இயக்குநரின் அருகில் வந்த பெண் “நீங்கள்தான் எங்கள் தொழிலதிபரை சந்திக்க விரும்பினீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம் உங்களோடு வந்த அவரை எங்கே?” என்று கேட்டார் மேலாண்மை இயக்குநர்.

“அவர் என் கணவர்தான். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் இங்கே வருவோம். அவர் இந்தப் பூங்காவைத் தனியே சுற்றி வருவார். அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. மனநிலை சரியில்லாததால் யாரைப் பார்த்தாலும் ‘உங்களுக்கு பணம் வேண்டுமா? நான் தருகிறேன்’ என்றுச்சொல்லி உதவாத பழைய ‘செக் புக்’ குகளை எடுத்துக் கொண்டுவந்து, அதை கையில் வைத்துக்கொண்டு எப்போதாவது கொடுத்துக்கொண்டே போவார். மனநிலை சரியில்லாததால் அவருடைய மன திருப்திக்காக நான் அவரை இங்கு அழைத்து வருகிறேன்” என்றார்.

இதைக்கேட்ட மேலாண்மை இயக்குநர் திடுக்கிட்டு அதிர்ந்து போனார்.

இந்த நிகழ்வில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரைப்போலவே நம்மில் சிலர் சிலவேளைகளில் நம்பிக்கையை இழந்துவிடுவதை நம்மால் உணர முடியும். நாம் சிலவேளைகளில் மனதில் ஏற்படும் வலியை தாங்க இயலாமல் சோகத்தில் மூழ்கிப்போகிறோம். அந்த நேரத்தில் ஆதரவாக ஓரிரு வார்த்தைகள் யாராவது பேசினால் கூட அந்தப் பேச்சுக்கள் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. பெரிய சோகத்தில் இருக்கும்போதுகூட மற்றவர்கள் செய்யும் சின்னஞ்சிறு ஆதரவான செயல்கள்கூட நமது கவலைகளைக் கரையச் செய்கிறது. நம்மை வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கிறது.

நமது வாழ்க்கை பயணத்தில் தோல்விகள் வரலாம். ஆனால் தோல்விகள் தொடர்கதை அல்ல. தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நமது வாழ்க்கையை வெற்றி பயணமாக மாற்றிவிடுகிறது.

அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு, மனநிலை சரியில்லாத ஒருவர் கொடுத்த செக்கூட உற்சாகத்தை ஊற்றெடுக்க வைத்தது. அந்த உற்சாகம் ஊழியர்களிடம் பரவியது. அவர்கள் மேலும் அதிகமாக உழைக்க அந்த உற்சாகம் உரமாக நின்றது.

எனவே, எந்த நிலையில் யார், எதை சொன்னாலும் நமது மனநிலையை சரியாக வைத்துக்கொண்டால் மனம் வலிமைபெறும். அந்த மனவலிமை நமது உடல் வலிமையை அதிகரிக்கும் சிறந்த மனவலிமையும், உடல் வலிமையும் இணைந்துகொண்டால் நம் வாழ்வில் என்றும் வெற்றி நமக்குள் உருவாகும்.

தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…