Home » Articles » இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!

 
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இன்று மக்களின் மனோபாவம் மாறிவிட்டது. எதிலும் பொறுமையோ, சகிப்புத் தன்மையோ கிடையாது. அவசரம் – அவசரம் தான். இந்த நிலைதான் ஆரோக்கியமும் அமைதியும் தொடர்ந்து கெடுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.

எடுத்தேன்  கவிழ்த்தேன் என்ற நிலையால் இன்று பலர் உரிய காலத்துக்கு முன்பே தங்கள் முடிவைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலை மாற, தொடர் முயற்சி அவசியம் தேவை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,

உலைவின்றித்தாழாது என்றார். தன் முயற்சியில் குறைவு இல்லாமல், சோர்வின்றி முயன்றால், இடையூறாக வரும் விதியையும் (ஊழ்) ஒரு காலத்தில் வென்று விடலாம் என குறள் எண் 620-ல் கூறியுள்ளதை நினைவு கூர்வோம்.

வாழ்க்கை என்பது நீண்ட நெடியபயணம் போன்றது. நமக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைக் குறைப்பதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது நாம் அறிந்த ஒன்று.

ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ இந்தப் பாடல் வரிகள் நமக்குச் சொல்வது, நம்முடைய ஆயுளில் ஓராண்டு குறைத்து விடும் என்பது தான்.

நமக்கு முன்னே காத்திருக்கும் வாழ்க்கையை எட்டிப்பிடித்து, இடைவெளியைக் குறைத்து விடுகிறோம். இதோடு முடிந்துவிடாது. மீண்டும் வாழ்க்கை நமக்கு முன்னே சென்று காத்திருக்கும் அதை மீண்டும் எட்டிப் பிடித்து இடைவெளியைக் குறைக்கும் செயலைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

சிறு குழந்தை நடக்கப்பழகுகிறது. நாம் அதன் முன் நின்று கொண்டு நம் கை விரல்களை நீட்டினால், அதைப் பிடிக்க நடந்து முன்னே வரும். உடனே நாம் சிறிது பின்னால் நகர்ந்து நம் கைவிரல்களுக்கும், குழந்தைக்குமான  இடைவெளியை அதிகமாக்குவோம்.

குழந்தை மீண்டும் முன்னே நடந்து வந்து நம் விரல்களைத் தொட முயற்சிக்கும் போது, நாம் மீண்டும் சிறிது பின்னே நகர்ந்து, இடைவெளியை அதிகமாக்குவோம்.

இதுபோன்றது தான் வாழ்க்கை

இதன் நோக்கம், குழந்தை கீழே விழாமல் தைரியமாக நடப்பதற்கான பயிற்சி என்பதுபோல, நம் வாழ்க்கை ஆரோக்கியமாக, ஆனந்தமாக அமைவதற்கு இயற்கையின், விளையாட்டு தான் இது.

சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை” என்ற சொற்றொடரை நாம் அறிவோம். இது முயற்சியில் தொய்வின்றி செயல்பட வேண்டும் என்பதற்கான நேர்மறை எண்ணப்பயிற்சி.

குழந்தை : சில உதாரணங்கள் மூலம் தெளிவு பெறுவோம். பிறந்த குழந்தை தன் தாயிடமிருந்து தனது உணவான பாலை அருந்தி ஆரோக்கியமாக வளர்கிறது. காற்றுப்புகாத, கலப்படமில்லாத, இடைவெளியே இல்லா வகையில் இந்தப் பாலைக் குடிக்கிறது.

வெளி உணவு என்ற வகையில் மாட்டுப்பால் மற்றும் பவுடர்பால் போன்றவைகளை உணவாகக் கொடுத்து வளர்க்கும் சூழலை உருவாக்கிக் கொண்டோம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே ஆரோக்கியம் கெடும் வாய்ப்பை உருவாக்கி விட்டோம்.

இதற்கு என்ன தான் மாற்று? உள்ளதே! கடந்ததை யாராலும் மாற்ற முடியாது.

எனவே, இன்று முதல் தினமும் நாம் உண்ணும் உணவுகளை வாயிலிட்டு, உதடுகள் இரண்டையும் நன்றாக மூடி, காற்றுப்புகாமல், பற்களால் மென்று, அரைத்து, வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் நீரைக் கலந்து விழுங்கும் செயலைப் பழக்கமாக்குவோம்.

படிப்பு : கல்வி கற்கும் வயதில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும், விழிப்பு நிலையில் கற்பித்தலை கவனித்தாலே, இடைவெளி குறைந்து, முழு அர்த்தத்துடன் மனதில் நன்கு பதியும்.

கல்வி நிலையங்களில் கவனிக்காவிட்டால் வீட்டில் அல்லது டியூசனில் அமர்ந்து உருப்போடும் நிலைக்குத் தள்ளப்படுவதைப் பார்க்கிறோம்.

இல்லறம் : திருமணம் என்ற புனித நிகழ்வால் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இல்லறம் துவங்குகிறது. உடல் வேறு வேறு என்றாலும், எண்ணத்தால் இடைவெளியின்றி இருவரும் இணையும்போது வாழ்க்கை மிகச் சிறப்பானதாக அமைகிறது.

“எக்கணமும் இருவருமே பிறர்

உள்ளத்தில் எழுகின்ற

உணர்ச்சிகளைக் கூர்ந்துணர்ந்து

அக்கணத்தின் சூழ்நிலையைப்

பயனாய் பெற்றே, ஆராய்ந்து

எதிர் விளைவைக் கணித்துக்கொண்டு

மிக்க நலமுள வழியே செயல்களாற்றி

மேலான அறவழியில் வாழ வேண்டும்”

என்று இல்லறத்தைப் பற்றி தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி கூறுவார்கள்.

இந்த நெருக்கம் தான் குடும்பத்திலே வேண்டும். அப்போதுதான் அது இன்பத்தைக் கொடுப்பதாக அமையும்.

பணி: உயிர் வாழ்வதற்கான உணவுப்பொருட்களை வாங்கவும், சார்ந்திருப்போருக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யவும் தேவையான பொருளீட்டுவதற்கான செயலே பணியாகும்.

ஒருவர் தாம் பார்க்கும் பணியில் எவ்விதமான மனக்குறையுமில்லாமல், முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் செயல்படும் நிலைதான் இடைவெளி இல்லா நிலை.

இந்த நிலைக்கு மனம்மாறிவிட்டால், நாம் பெறும் சம்பளத்தொகை எவ்வளவாக இருந்தாலும் நம்மை, அது பாதிக்கவே பாதிக்காது.

ஆனால் வேண்டா வெறுப்பாகச் செயல்பட்டு அதற்குப் பெறும் ஊதியத்தால் வாழும் வாழ்க்கை நிறைவில்லாததாகவே அமைந்து விடுகிறது.

கை நிறையச் சம்பாதிக்கும் பலர் மனக்குறையுடன் வாழ்வதையும், குறைவாகக் கிடைத்தாலும் நிறைவாகப் பணியாற்றி, திருப்தியுடன் சிலர் மகிழ்வாக வாழ்வதையும் பார்க்கிறோமே!

மனஈடுபாடு : இந்நிலையை நாம் எளிதில் பெற முடியும். இலவசமாக ஏதும் கிடைக்காது. இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு பல இலவசங்களை வாரி வழங்கி ஓட்டு வங்கியைத் தக்க வைக்கும் தவறான நடைமுறையைக் கையாண்டு மக்களை மிருகங்களாக மாற்றி வருவது பெரும் பழிச் செயல்.,

இடைவெளியை நீக்க, அல்லது குறைக்க தியானம் அல்லது தவம் செய்வது பலனளிக்கும். உலகம் முழுவதும் இதன் சிறப்பை உணர்த்தவே ஜுன்மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா நாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடத் துவங்கியுள்ளோம்.

இறைநிலையிலிருந்து பின்னப்பட்டு, நம் உடலுக்குள் உயிராக இருக்கும் ஆன்மா, மனமாக விரிந்து, அந்த இறை நிலையோடு தன்னை இரண்டறக் கலக்கச் செய்யும் பயிற்சி – நினைவுதான் தியானமாகும்.

முதுமை : ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?’ என்ற பாடல் வரிகளால் நாம் அறிவது எல்லோருமே ஏதாவதொரு நாளில் இறக்க வேண்டும் என்பதைத் தான்.

இறப்பதற்கு முன் முதுமைப் பருவத்தில் உடல் தளர்வு, உடல் உறுப்புகளின் செயல்பாடு பாதிப்பு, நினைவு இழப்பு, செரியாமை எனப் பலவகை பாதிப்புகளுக்கு உள்ளாவது வாடிக்கை.

மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து, குடும்பத்திலிருந்து பிரித்து வைத்து, சிலரை ஐஇம என்ற தனி அறையில் வாடச் செய்வது வாடிக்கையாகி விட்டது.

குணப்படுத்துகிறோம் என்று கூறி, இடைவெளியுடன் கூடிய மாத்திரைகளுடன் இடைவெளியே இல்லாத ஊசிகள் மூலம் மருந்தினை உடலுக்குள் செலுத்துவது, குளுக்கோஸ் நீர் அனுப்புவது போன்ற செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோம்.

இறுதிவரை மனித குலத்துக்குத் தேவை அன்பு ஒன்றே. இதை வலியுறுத்தியே  “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” எனக் குறள் 71ல் திருவள்ளுவர் தெளிவாக்கியுள்ளார்.

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை  வாழ்க்கையல்ல என்பதை மிக அற்புதமாக பாலை நிலத்தில் மரம் துளிர்த்தாற் போன்றது என்றார் செந்நாப்புலவர்.

எனவே, மனிதராகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நம் வாழ்க்கை இன்றும், என்றும், எக்காலத்தும் அமைதியாக, ஆரோக்கியமாக, ஆனந்தமாக அமைவதற்கு, இடைவெளியை பூஜ்யமாக்கும் கலையைக் கற்றுக் கொண்டோம்.

இதுவரை கற்றது போதும்;

இனி வாழ்ந்து பார்ப்போமே!

ஒன்று உணவை உதடுகளை மூடி உண்போம்.

இரண்டு அனைவரையும் பிரதி பலன் எதிர்பாரா அன்போடு நேசிப்போம்.

இதனால், இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்!

– நிறைவு –

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…