Home » Cover Story » எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!

 
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!


ஆசிரியர் குழு
Author:

டாக்டர் P. பிரவீன்ராஜ்

உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை நிபுணர்

ஜெம் மருத்துவமனை, கோவை.

வெற்றியின்’ ரகசியம் என்பது ஒரு காரியத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதுதான் என்று சொல்வார்கள். அத்தொடர் முயற்சியால் மருத்துவ உலகில் சாதித்து வரும் இளைஞர் இவர்.

 • எந்தவொரு வேலையையும் ஆர்வத்துடன் செய்து முடிப்பதில் முன்னோடி என பெயர் எடுத்திருக்கும் சாதிப்பாளர் இவர்.
 • நாம் விரும்பும் வாழ்க்கைக்கு ஏற்ப எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சைத் துறையில் பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருபவர் இவர்.
 • இருப்பதில் ஆனந்தம் காணுவதை விட்டு, புதிது புதிதாக படைப்பதில்  ஆனந்தம் காணும் தேடல் நிரம்பிய மருத்துவர் இவர்.
 • எடுத்த செயலை அடையும்வரை போராடு… நிச்சயம் கிடைக்கும் பாராட்டு என பலரையும் ஊக்கப்படுத்தி வருபவர்.
 • இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட மருத்துவர் P. பிரவீன்ராஜ் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

உலகத்தரம் வாய்ந்த ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சி. பழனிவேலு அவர்களின் மகன் தாங்கள் என்பது உங்களுக்கு பலமா? பலவீனமா?

ஒரு பிரபலமான மருத்துவரின் மகன் என்பது ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் பெரிய பலமாக இருந்தது. என் தந்தை உலகளவில் புகழ்பெற்றிருப்பதால் அவரின் கீழ் பணியாற்றுகிறோம் என்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

டாக்டர் பழனிவேல் அவர்கள் மகன் என்பதால் என்னிடம் அவரைப் போலவே நிறைய எதிர்பார்ப்பு உண்டு. அந்த எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கிறேன்.

நான் தொடக்கத்திலிருந்து ஜெம் மருத்துவமனை எங்களுடைய சொந்த மருத்துவமனை என்று நான் ஒரு நாளும் பார்த்ததே இல்லை. இங்கு பணியாற்றும் மற்றமருத்துவர்களைப் போலத்தான்  நானும் என்றுதான் நினைப்பேன். பொதுவாகவே என்னுடைய வளர்ச்சி என்பது ஒரு சுயமுயற்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பி உழைக்கிறேன்.

அவரிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களை மட்டுமே நான் எடுத்துக் கொண்டு என் வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

மற்ற மருத்துவர்கள் எப்படி என் தந்தையை உடன் பணியாற்றும் பொழுது ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்களோ அதைப் போலத்தான் நானும் எடுத்துக் கொள்கிறேன்.

உங்கள் தந்தை சாதிப்பிற்குரிய மருத்துவர் என்பதால்தான் நீங்களும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்களா…?

நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் குறிக்கோளுமாக இருந்தது. அனைவரும் மருத்துவர் ஆகிறார்கள், நாமும் ஆகலாம் என்று நான் நினைக்கவில்லை. யாரும் தொடாத துறையை தொட வேண்டும், அத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும்தான் எனக்குள் இருந்தது.

என் தந்தையும் நீ இந்தத்துறையில்தான் வரவேண்டும் என்று ஒருமுறைகூட என்னிடம் கூறியதே கிடையாது. என்னுடைய விருப்பம்தான் அவர்களின் விருப்பம். நானாக ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த துறைதான் இது.

நான் எப்பொழுதும் தனியொரு பாதையை உருவாக்கிக் கொண்டு அதில் பயணப் படத்தான் ஆசைப்படுகிறேன்.

மருத்துவத்தில் பல துறைகள் உண்டு. அதில் நீங்கள் உடல்பருமன் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்…?

நான் எதைச் செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பேன். அனைவரும் செய்யும் ஒரே வேலையைச் செய்தால் நிச்சயம் தனித்திறமையைக் காட்டினாலும், அங்கு ஒப்பீடு செய்வார்கள். இதில் யார் சிறந்தவர்கள் என்று பார்ப்பார்கள். இதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். நான் செய்வது அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.

‘லேப்ராஸ்கோபி’ அறுவை சிகிச்சை செய்யும் முறைபரவலாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதனை நிறையப்பேர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் நானும் ஒன்று என்று வந்துவிடக் கூடாது என என் மனதில் ஒரு தீர்மானம் போட்டுக்கொண்டேன்.

அந்த சமயத்தில் தான் ஆஸ்திரேலியா செல்லும் ஒரு வாய்ப்பு வந்தது.  அங்கு நடந்த கான்பிரன்ஸில் ‘ஒபிசிட்டி’ குறித்த பயிறிசியை அளித்தார்கள்.

அந்தப் பயிற்சியில் உடல்பருமன், சர்க்கரை நோய்களுக்கு மட்டும் தனியாக ஒரு துறையைத் தொடங்கி சிகிச்சை அளித்து வந்தது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த முறையை நாம் இந்தியாவில் செய்ய வேண்டும் என்று இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

ஆரம்பத்தில் பல மருத்துவர்கள் இச்சிகிச்சையை ஒரு பெரிய பொருட்டாக நினைக்கவில்லை, என்னையும் மனமாற்றம் செய்தார்கள், ஆனால், நான் விடாப்பிடியாக மருத்துவர்களிடையே கொண்டு சென்றதால், இத்துறை இன்று நன்றாக வளர்ந்து வருகிறது.

ஜெம் மருத்துவமனையில் இந்த உடல்பருமன் சிகிச்சை முறைஎப்போது தொடங்கப் பட்டது…?

உடல் பருமன் சிகிச்சை 2003ம் அண்டிலிருந்தே ஜெம் மருத்துமனையில் இருந்து வந்தது. ஆனால், தனிப்பிரிவாக நான் 2010ம் ஆண்டுதான் கொண்டு வந்தேன்.

உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையயே இப்போது எந்தளவிற்கு இருக்கிறது…?

மிகக்குறைந்தளவில்தான் இருக்கிறது. ஒரு மனிதன் எடை அதிகமாக இருந்தாலும், பாதிப்பு வராமல் இருக்கும் வரை அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

ஆனால், உடல் எடை பன்மடங்கு அதிகரித்து அவர்களால் உடல் இயங்க முடியாத அளவிற்கு செல்லும் போதுதான் இதைப்பற்றி அறிந்து மருத்துவரை நாடி வருகின்றனர்.

இது மிகப்பெரிய விழிப்புணர்வின்மையைக் காட்டினாலும், தற்போது ஓர் அளவிற்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

உடல் பருமனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தொல்லைகள் குறித்து….…?

உணவுக்கட்டுப்பாட்டில் அடிக்கடி தவறிழைத்தல், குடும்பத்தினர்களின் புறக்கணிப்பு, அந்நியர்களின் கேலிப்பேச்சு, கொழுப்புடன் தொடர்ந்து போராட்டம் இவற்றால் மனச்சோர்வுக்கு உள்ளாகக் கூடும்.

ஈரலில் செல்களில் கொழுப்பு கூடும்போது ஈரல் கொழுப்பு நோய் ஏற்படும். ஈரலில் கொழுப்பு சதவீதம் அதிகரிக்கும் அளவுக்கு ஏற்ப ஈரலின் பாதிப்பும் இருக்கும்.

கால்கள் வீங்குதல், தோல் புண், சிறுநீர்ப்பாதையில் சிக்கல், மாதவிடையால் காலங்கடத்தல் நுரையீரல் தொந்தரவு, புற்றுநோய் இப்படியாய் பிரச்சனைகள் வரும்.

உலகம் முழுவதும் தவிர்க்கக் கூடிய மரணங்களில் ஒன்றாக இருக்கிறது உடல்பருமன். சிறுவர்கள் வளர் இளம் பருவத்தினர் உடல் பருமனுக்கு ஆளாகி வருகிறார்கள். 21ம் நூற்றாண்டின் பொதுநலப் பிரச்சனையாக உடல்பருமன் இருக்கும் என்று மருத்து வல்லுநர்கள் கணித்துள்ளனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் , இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்றவை குறித்து ஒவ்வொருவரும் கவலைப்படுவார்கள். ஆனால், அவை ஏன் ஏற்படுகின்றன…? அதைத் தவிர்க்கும் வழிமுறைகள் என்ன, என்பதை அறிய முற்படுவதில்லை. பின்வரும் பலவகை உடல் கோளாறுகளுக்கு உடல் பருமன் ஒரு காரணியாக இருக்கிறது.

உடல் பருமன் உள்ளவர்களிடம் உடல் அணுக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை ஏற்க மறுக்கிறது. நீண்டகாலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடல்நலம் கெடும்.

அதிக உடல் எடை இதயத்தின் இயக்கத்திற்கு கூடுதல் சுமை தருகிறது. அதிக ரத்த அழுத்தம் மூளை ரத்தக் கசிவு மற்றம் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுத்தும்.

உடலின் அதிக எடை மூட்டுகளில் குறிப்பாக கால்முட்டியில் அதிக தேய்மானத்தை ஏற்படுத்துகிறது. வலியையும் வீக்கத்தையும் தருகிறது.

நாக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் சேரும் கொழுப்பின் விளைவாக சுவாசக் காற்று தடைபட்டு, தூக்கமின்மை பகலில் தலைவலியைத் தரும், அசதியை ஏற்படுத்தும்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கான அறுவை சிகிச்சை வாய்ப்புகள் என்னென்ன அதனால் வரும் பிரச்சனைகள் என்னென்ன?

உடல் பருமன் அறுவைசிகிச்சை எதற்கு செய்யப்படுகிறது  என்றால் உடலின் உள்ள எடையை குறைவதற்கான காரணத்தை முதலில் ஆராய வேண்டும். அதற்கு நான்கு வகையான முறைகளை பின்பற்ற வேண்டும்.

 • கட்டுபடுத்தும் முறை  இரைப்பையின் மேல்பகுதியின் மீது ஒரு பை போன்ற மைப்பை செலுத்துவதன் மூலம் உணவு உட்கொண்டால் அதன் அளவை குறைக்க முடியும்.
 • சத்து உறிஞ்சும் அளவை தடுக்கும் முறை இம்முறையில் உணவு பொருளின் சத்தை சிறுகுடல் உறிஞ்சும்பொழுது அது தடுக்கப்படுகிறது. இது பெரும் அளவில் இல்லாவிடினும் சிறிய  அளவு நாம் இதை செய்கிறோம்.
 • எரிப்புத் தன்மையை அதிகப்படுத்துதல் இது நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் மூலம் வருவது இம் ஹார்மோன் மாறுவதன் மூலம் உடலில் உள்ள எரிப்புதன்மை அதிகமாகிறது.
 • ஹார்மோன் மாற்றத்தின் மூலம் உணவின் மீது ஏற்படும் ஆசை உடம்பில் உள்ள ஹாப்பிடெக்ஸ் குறைக்கிறது.

இந்த நான்கு முறையும் சேர்த்து ஒரு உடல் பருமன் நோயாளிக்கு செய்யும்பொழுது அவர்களின் உடலின் எடை கொஞ்சகொஞ்சமாக குறைகிறது..

கட்டுப்படுத்தும் முறை- இது இரைப்பையின் மேல்பகுதியில் ஒரு பை (Pouch) அமைப்பதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்க உதவும்.  சத்து உறிஞ்சுவதை தடுத்தல் முறை- இதில் உணவுப் பொருளின் சத்தை சிறுகுடல் உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டும் அமைந்த சிகிச்சை

உடல் பருமனைக் குணப்படுத்த என்ன வழி…?

 1. முதலாவதாக, மருந்துகள் உதவியின்றி உடல் எடையைக் குறைக்க வேண்டும். இது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்குப் பயன்தரும். அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் சமச்சீர் உணவு மூலம் இதைச் செய்தால் போதுமானது.
 2. இரண்டாவதாக மருந்தைப் பயன்படுத்தி உடல்பருமனைக் குறைக்கலாம். இது உடல்நிறைகுறியீட்டு எண் (பி.எம்.ஐ) 30க்குள் இருப்போருக்கு பயன்படும். ஆனாலும், எடை குறைப்புக்கு இது பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைஅல்ல.
 3. பி.எம்.ஐ 32க்கு மேல் உள்ள நபர்களுக்கும் உதாரணமாக சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் பருமனால் பல பிரச்சனைகளுக்கு இரண்டு வழிமுறைகள் சரியானதாக இருக்காது. பொதுவாக அறுவை சிகிச்சை மட்டும் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உடல் பருமன் அறுவை சிகிச்சை எந்த நிலையில் செய்து கொள்ள வேண்டும்…? 

முதலில் உடல் பருமன் உடையவர்கள் தன் உடலைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். உடல் பருமன் அதிகரித்திருந்தாலும் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சாதாரணமாக நினைக்கக் கூடாது.

உடல் பருமன் உடையவர்கள் ஆரம்பக்கட்டத்திலேயே அதற்கான முயற்சிகளை எடுக்க, மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் பருமன் பிரச்சனை என்று வருபவர்களுக்கு முதலில் உணவு பற்றிய முறைகளைக் கூறுகிறோம்.  அதன் பின் உடல் பயிற்சி குறித்து சொல்கிறோம்.

உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டோடு இருந்தும் உடல் பருமன் குறையவில்லை என்றால் மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

தந்தை பல கான்பிரன்ஸ் மூலம் பல பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல இத்துறைசார்ந்து நீங்கள் ஏதேனும் பயிற்சி அளித்து வருகிறீர்களா…?

2008ம் ஆண்டிலிருந்து இது வரைக்கும் ஆண்டிற்கு ஒன்று என்று ஆறு கான்பிரன்ஸ் பயிற்சிகள் கொடுத்திருக்கிறேன். இந்த ஆண்டும் ஒரு கான்பிரன்ஸ் நடத்தப் போகிறேன். ஆறு ட்ரெய்னிங் பயிற்சிகளை நடத்தியிருக்கிறேன். உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்யும் முறை குறித்து பயிற்சிகள் அளித்திருக்கிறேன். இதில் இந்தியாவிலிருந்து 25க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில், பலர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதுமட்டுமல்லாமல், 155க்கும் மேற்பட்ட நிபுணர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன்.

இந்தச் சிகிச்சை குறித்து இதுவரை இந்திய அளவில் எந்தவொரு புத்தகமும் வெளியிடப்பட வில்லை. இந்தக் கான்பிரன்ஸ்க்குப் பிறகு ‘ஸ்பிரிங்கர்’ என்னும் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம் எங்களிடம் அப்புத்தகம் குறித்து ஆலோசனை கூறியுள்ளது. அது குறித்து இப்போது தயாராகி வருகிறேன். இம்முயற்சி எங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

சர்க்கரை நோய் ஒரு நோயே அல்ல என்பது குறித்து…?

ஒரு மனிதன் தனது உடலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்விதப்பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறான் என்று அர்த்தம். அதே, மனிதனுக்கு உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்றால், அதன் பெயர்தான் நோய்.

ஒரு விபத்தை நாம் நோய் என்று சொல்ல முடியாது. நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு மனிதனின் எதிர்காலம் உடலில் பிரச்சனை நிறைந்ததாக இருக்குமாயின் அனைத்து மனிதனுக்கும் துன்பம்தான். மனித உடல் கட்டுக்குள் இல்லாமல் போவது அனைத்தும் நோய்தான்.

சரி சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தி விடலாம் என்று கூறும் உங்களின் மருத்துவ ஆலோசனைகள் குறித்து…?

இவ்வகையான அறுவைசிகிச்சையில் உடம்பில் உள்ள இன்சுலின், கணையத்தில் இருந்து சுரக்கும் (insulin sensitivity) இன்சுலின் சரியாக வேலை செய்ய வைப்பதினால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும்.

டயாபட்டீஸ் குழந்தைகளுக்கு வரக்கூடிய இவ்வகையான சர்க்கரை நோய் கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்கும் தன்மை முழுவதுமாய் இல்லாதினால் இவ்வகையான அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை.

இதை (ADA)- American Diabetes Association அங்கீகரித்து உள்ளது..

அதுமட்டுமல்லாமல் மற்றநாடுகளை விட இந்தியா போன்றநாடுகளில் அதிகமானோர் உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார்கள். காரணம் நாகரீகம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது.

இந்தியாவிலிருக்கும் மக்களுக்கு சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை கொழுப்பு காணப்படுகிறது. இதனால்தான் தொப்பை, உடல்பருமன் போன்றவை ஏற்படுகிறது.

நீங்கள் பெற்ற விருதுகளில் உங்களுக்குப் பிடித்த விருது என்று எதைச் சொல்வீர்கள்…?

விருதுகள் என்பது சாதித்தவர்களின் பெருமைக்காக அளிக்கப்படும் பரிசுதான். புதுமையான சாதிப்பிற்கு நான் பல விருதுகளை வாங்கியிருக்கிறேன்.

அமெரிக்கா போன்றநாடுகளில் சில விருதுகள் வாங்கியிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய கௌரமாக இருந்தாலும், சொந்த நாட்டில் சொந்த ஊரில் வாங்கும் விருதிற்கு தனி மதிப்பு உண்டு என்று நம்புகிறேன்.

சமீபத்தில் கோவை, ரோட்டரி கிளப்பில் ‘ஒக்கேசனல் எக்ஸ்லண்ட் அவார்ட்’ என்ற விருதை ஆண்டுக்காண்டு ஒருவருக்கு கொடுப்பார்கள். இவ்விருது ரோட்டரி கிளப்பின் உயரிய விருது என்றும் சொல்வார்கள். அதை எனக்கு கொடுத்து கௌரவித்தார்கள், இந்த விருதை மிகப்பெருமையாக கருதுகிறேன்.

லேப்ராஸ்கோபியின் ஆராய்ச்சிக் கூடம் ஜெம் மருத்துவமனை என்று சொல்லலாமா…?

இந்தியாவில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை முன்னெடுத்துக் கொண்டு வந்தவர் என்னுடைய தந்தைதான். அவர், இச்சிகிச்சையை தான் மட்டும் செய்யக்கூடாது, மற்றமருத்துவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து பல கருத்தரங்கில் பேசியிருக்கிறார்.

பல மருத்துவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார். அந்த வகையில் ஜெம் மருத்துவமனை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் ஆராய்ச்சிக்கூடம் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட நற்பண்புகள் பற்றி…?

எதைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் எப்பொழுதும் கட்டாயப்படுத்தவே மாட்டார்.

மருத்துவத்திலுள்ள புதுமைகளை காலத்திற்கு ஏற்றாற் போல் முறையாகப் பின்பற்றுவார். வாழ்க்கையில் சாதித்து விட்டேன் என்று அவர் எப்பொழுதும்   நினைத்ததே இல்லை.

அடுத்த இலக்கு என்ன…? மருத்துவத்தில் அடுத்த என்ன புதுமைகளை எப்படி கொண்டு வரவேண்டும் என்பது பற்றி மட்டுமே எப்பொழுதும் தேடிக் கொண்டே இருப்பார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை எங்களுக்கு வாழ்க்கைப்பாடமாக சொல்லிக் கொடுத்திருக்கிறார். இப்படி நிறைய அவரிடமிருந்து நான் பெற்றுள்ளேன்.

மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தாலும், புதிது புதிதாக நோய்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன…?

இயற்கையை நாம் நேசிக்கத் தவறி விட்டோம். அதன் விளைவுதான் இன்று புதிது புதிதான நோய்கள், மனிதனை தாக்கும உயிர்கொல்லியாக உருவெடுத்து வருகிறது…

மனிதர்கள் இதுகுறித்து அப்பொழுது செய்யும் சில தவறுகள்தான் அவர்களை பின்வந்து தாக்குகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கமும் அதனை முறையாக மக்களும் பின்பற்றினால் சில பல நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக, பரவலான செய்திகள் இருந்து வருகிறது. அதைப்பற்றி தங்களின் கருத்து…?

ஆரம்ப காலத்தில் மருத்துவத்தை ஒரு சேவை மனப்பான்மையோடு பலரும் செய்து வந்தார்கள். அன்று ஒரு மருத்துவர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுவிட்டால் அவருக்கு எவ்வித விளம்பரமும் தேவையில்லை.

ஆனால், இப்பொழுது மருத்துவத்திலும் கார்ப்ரேட் வந்துவிட்டது. இதன் விளைவுதான் இன்று கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக நினைக்கிறேன்.

ஒரு மருத்துவமனையில் உயர்ந்த கட்டிடம், உயர்தரமான இயந்திரம் போன்றவை இருந்தால் மட்டுமே மருத்துவமனையை மக்கள் நாடுவார்கள் என்பதை சில மருத்துவமனைகள் செய்து வருகின்றன.      இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஒரு மருத்துவமனை மக்களிடையே நன்மதிப்பு பெறவேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்…?

ஆரம்ப காலத்தில் இருந்த மக்களைப் போல் இப்பொழுது மக்கள் இல்லை.

நாகரீகம் வளர்ந்த, இச்சூழ்நிலையில் மக்கள் மருத்துவரிடம் பல கேள்விகள் கேட்டபின்புதான் மருந்தையே உட்கொள்கிறார்கள். இன்றைய மருத்துவம் சார்ந்த அறிவை ஒரு மருத்துவர் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.   உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களிடம் நன்முறையில் பேசி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவரிடம் சென்றால், நிச்சயம் குணமாகி விடும் என்றநிலையைக் கொண்டு வரவேண்டும். இப்படியான செயல்பாடுகள் இருந்தால், விளம்பரங்கள் இன்றி பெயரைப் பெறலாம்…

மருத்துவர்களுக்கு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை என்று பொதுவான கருத்து உண்டு அதுபற்றி…?

இன்றைய உலகில் அனைவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றுதான், ஏதேனும் ஒரு துறையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டே இருந்து குடும்பத்தை மறந்து விடுகிறார்கள். ஒரு மருத்துவர், தன்னிடம் வரும்  நோயாளிகளை எப்படியும் குணப்படுத்த வேண்டும் என்றுதான் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்.  அப்பொழுது குடும்பம் பெரிதாக தெரியாது. ஒரு மருத்துவர், குடும்பத்தையும், மருத்துவமனையையும் ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார்.  பணிநேரம் போக கிடைக்கின்றநேரத்தை குடும்பத்துடன் மட்டுமே செலவழிக்க விரும்பினால் மட்டுமே குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க முடியும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

தாங்கள் பெரிதும் மதித்து போற்றக்கூடியவர்கள் என்றால்…?

என் மருத்துவ வாழ்க்கைக்கு முன்மாதிரியாக விளங்கும் என் தந்தைதான், நான் பெரிதும் மதித்துப் போற்றக்கூடியவர். அவருடன் இருக்கும் நாட்களில், அவர் பழகிய வாழ்க்கைமுறைகுறித்து என்னிடம் அவ்வப்போது பேசுவார். காலச்சூழலுக்கு ஏற்றாற் போல் ஒவ்வொருவரிடமிருந்து ஏதேனும் ஒன்றைகற்றுக் கொள்ளும் சூழல் பல வழிகளில் எனக்கு கிடைத்தது.  அதில் உள்ள நல்லவற்றைஎடுத்துக் கொண்டு சரியான தருணங்களில் அதை செயல்படுத்துகிறேன்.

உங்களிடமிருந்து, உங்களுக்கு பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்…?

ஒவ்வொருவரும் முதலில் அவரவர்களை நேசிக்க வேண்டும். பாசிட்டிவ், நெகட்டீவ்  களை முறையாக அறிந்து அதற்கு தகுந்தாற் போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய வயதிலிருந்தே, எனக்குள் ஒரு பழக்கம் இருந்தது. அது என்னிடம் நானே, கேள்வி கேட்டுக்கொள்வது.  என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு, நானே எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன்.

என்னிடம் பணியாற்றும், சந்திக்கும் அனைத்து நபர்களிடமிருந்தும் ஏதேனும் ஒன்றைப் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றஆர்வம் எனக்குள் இருக்கும்.

குறிப்பாக பாசிட்டீவ் விசயங்களை பெருக்கிக் கொள்வேன். நெகட்டீவ் விசயங்களை கழித்து விடுவேன்.

எதிர்கால திட்டம் குறித்து…?

எதைச் செய்தாலும் அதற்கு திட்டம் என்பது அவசியம். உடல்பருமன் சிகிச்சை முறைகுறித்து மக்களிடையே முறையான விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும்.

உடல்பருமனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் குறித்து நிறைய கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

 • இத்திட்டம் குறித்து நிறைய புதுமைகளை கொண்டு வர வேண்டும்.
 • இச்சிகிச்சை குறித்து புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன்.
 • கேரளாவில் அடுத்த ஆண்டு ஜெம் மருத்துவமனை தொடங்கப்படுகிறது.
 • இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 இடங்களில், இம்மருத்துவமனை நிறுவப்பட வேண்டும்.

கல்விக் களம் குறித்து…?

நான் எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியில் படித்தேன். ஜென்ரல் சர்ஜரியை சென்னை ராமசந்திரா கல்லூரியில் முடித்தேன். கேஸ்ட்ரோ எண்ட்ராலாஜி ஜெம் மருத்துவமனையிலேயே பயின்றேன். பேரியாட்ரிக் சர்ஜரி ஆஸ்திரேலியாவில் கற்றுக் கொண்டேன்.

தங்கள் வெற்றியின் தாரகமந்திரம்…?

தேடல், முயற்சி, தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் அபரா வெற்றி பெற முடியும் என நம்புகிறேன்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2015

அவதூறு அவசியமல்ல
மனதில் உறுதி வேண்டும்
இந்த உலகில் மனிதன் எப்படி வாழ வேண்டும்
மனித வாழ்வில் துலங்காத மர்மங்கள்
பஞ்சதந்திரம் புத்தகங்களுக்கான நேரம்
சத்தும் சக்தியும்
ஓட்டம்
தன்னம்பிக்கையை நாளும் விதையுங்கள்
அறிவார்ந்த அனுபவசாலிகள் ஆலோசனை பெறுதல் அவசியமா?
எழுத்து இதயத்தின் மொழிபெயர்ப்பு
காய்ச்சலால் வரும் வலிப்பு
மாற்றம் தேவையா?
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி
எண்ணத்தில் புதுமை…! சாதிப்பில் பெருமை…!!