Home » Articles » தூண்டில்

 
தூண்டில்


அனந்தகுமார் இரா
Author:

தோரணவாயில் பச்சைப்பசேலென்று அழகாக இருந்தது! தென்னை ஓலைகள், கிளிப்பச்சை நிறமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் நேர்த்தியாக முடைந்து அடிக்கும் தலைக்கும் அளவு எடுத்து இரவு விடியும் வேளையிலே யாரோ ஒரு இரசனை மிகுந்த கலைஞனை அந்தத் திருமண மண்டபத் தோரண வாயிலை இரசித்து, இரசித்து வடிவமைத்திருந்தான்…

குழந்தைகள் அவரவர் அம்மாக்களால் தேடப்படும் வரை கிடைத்த சுதந்திரத்தில் ஓடிக்கொண்டு குறுக்கு, முறுக்கில் சரிப்பு மணிகளை சிதறவிட்டு உற்சாக அலையை வீசிவிட்டு விசிறிகளாய் சென்றனர். ‘இதோ’ சற்று வேளைக்குள் அவர்கள் மணமக்களோடு வெதுவெதுப்பான ஒளியில் நிழல்படத்தில் சிறைப்படுவதற்கான வரிசைக்கு கட்டப்படுத்தி எடுத்துச் செல்லப்படுவார்கள்.

தென்னம் பாளையில் இருந்து மஞ்சள் வெண்முத்துக்கள் பொழிய பொழிய கட்டியிருந்தார்கள். இதையெல்லாம் அரை நிமிடத்தில் கடந்து போக மனம் வரவில்லை. ஆனாலும், கால் கடந்து விட்டது, காலமும் கடந்து விடுமே. புறநகர் மண்டபம் ஒன்றில் அதிகம் அறிமுகமாகாத, ஆனால் மனமுவந்து, குடும்பத்தோடு அழைப்பு வைத்த நண்பர் ஒருவரது மகன் திருமணம். அடுத்து கலந்து கொள்ள வேண்டிய அலுவலகக் கூட்டம் நினைவில் நிற்க கதிரேசன் திருமண விழாவின் அந்த வினாடி மகிழ்ச்சியால் அதை மாற்றிக் கொண்டிருந்தார். நண்பரைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியாத விழா. தனியாக வந்தாயிற்று, எல்லோரும் யாரோடாவது புன்னகைத்து பேசிக்கொண்டிருக்க, ஐந்து நிமிடம் அமர்ந்து மனமாற மணமக்களை வாழ்த்துவோம் என நினைத்தார். வரிசை ஆரம்பித்திருந்தது.

முகூர்த்தம் காலை 9.00  முதல் 9.30 என திட்டமிட்டிருக்க மணவிழா சடங்குகள் களைகட்டியிருக்க வாழ்த்துவோர் கூட்டம் வரிசை நகரத் தொடங்கி இருந்தது. யாரும், யாரென கேட்டால் எப்படி அறிமுகப்படுத்துவது என்ற கவலை, நடைமுறையில் நல்ல வேலையாக பரிட்சிக்கப்படவில்லை. தூரத்து, நண்பர் வெகுதொலைவில் ஒரு மிகமிக முக்கிய பிரமுகரை கவனித்து அழைத்து வருவதில் மும்முரமாக இருப்பது தெரிந்தது. சற்று நேரத்தில் வாகனத்தில் கதிரேசன் அலுவலகம் திரும்பும் பொழுதுதான் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நிறைவைப் பெற்றிருந்தார். இதுபோன்ற அழைப்புக்கள் தூண்டில்கள் போல செல்லவிட்டால் என்ன ஆவது என்று தோன்றுகின்றன. நட்பு பாராட்ட நாம் சென்றாக வேண்டும் என்று உத்வேகம் அடைகின்றோம். வெளியூரிலிருந்து பலநாள் பழகிய தோழர்கள் அழைக்கையில் அவர்களது வாழ்நாளில் நமது வாழ்நாளில் சிறப்பாக நடந்தேறும் அந்த ஒரு விழா அவசியமாக சென்றாக வேண்டும் என்ற ஆர்வத்தை, மட்டற்ற முனைப்பை ஏற்படுத்துகின்றது. அவர்கள் இதற்கான சிரமப்பட்டு நீண்ட தூரம் பயணித்து வந்து மணமக்கள் மற்றும் குடும்பத்தினரோடு அழைப்பு வைக்கின்ற திருமணங்கள் இன்னும் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. எப்படியும் விடுவிப்பு பெற்று செல்ல வேண்டும் என்று திட்டமிட வைக்கின்றன. நாட்கள் நெருங்கும் பொழுது பணி விசுவரூபம் எடுக்கும் பொழுது நடுவில் பட்டிமன்றம் நடக்கின்றது. அதில் வேறுவேறு தரப்புகள் வேறுவேறு சூழ்நிலைகளை எடுத்து வைத்து நியாயம் கோருகின்றன. சுவாரஸ்யமான நிகழ்வுதான் கதிரேசன் இதுபோன்றகட்டுரை கதைகள் எழுதுவதைக் கூட கலந்து கொள்ளத் தூண்டிய ஏதோ ஒரு விழா, அழைப்பிதல் அளித்த மகிழ்ச்சி வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதால் கிடைத்த நேரத்தில்தான். நண்பரொருவர், அழைக்கப்பட்ட எல்லா விழாக்களிலும், விருதுகளிலும் கலந்து கலக்குவார் என்று கேள்விப்பட்ட கதிரேசன் அசந்து போனார். எல்லா தூண்டில்களும் சுவையானவையே. இக்கட்டுரை தூண்டில் என்பதனை எதிர்மறை பொருள் நீக்கிப்பார்க்க விழைகின்றது. மகாகவி பாரதியார், தனது…  “நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா…!” என்று தொடங்கும் பாடலில் “நல்லது, தீயது நாமறியோம்…! நாமறியோம்” என்று பாடியிருப்பார். தூண்டில்கள் மீன்களுக்கு நம்மை செய்யக் கூடும்… கண்ணம்மா என்கின்ற பராசக்தி, மீனின் பிறவிப் பெருந்துயர் நீக்கத்தலைப்பட்டாள், என்றே பொருள் கொள்வோம் நாம்…

இன்றைய ஆண்ட்ராய்டு செல்லிடத் தொலைபேசிகள் மீது கவிழ்ந்து கிடக்கும் சமுதாயம் குறித்து “தொடுதிரை அடிமைகள்” என்கின்றதொரு அற்புதமான கட்டுரையை, தமிழ் இந்து (17/06/15) பத்திரிக்கையில் சீனாவில் பதிவு பெற்ற பொறியாளர் திரு மு. இராமநாதன் என்பவர் எழுதி இருந்தார். கதிரேசனின் மேலதிகாரி ஒருவர், இவர் கட்டாயமாக ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் “வாட்ஸ் அப்” ஐ சரிபார்த்து ஏதேனும் கேள்வி இருந்தால் பதில் அனுப்பிவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தொடுதிரை கூட ஒரு தூண்டிலோ…? என்று தோன்றியது. அனிச்சை செயல் போல, இதுபோன்றஒரு கட்டுரை எழுதும்பொழுது கூட ஐந்துமுறைதொடுதிரை செல்போனை சரிபார்த்து பதிலிடுவது நடந்து கொண்டிருப்பது நல்லது…? என்று தெரியவில்லை. இணையதள சமூக ஊடகங்கள் வழியாக இன்றைக்கு தகவல்கள் ஏன் வரவில்லை என்று நண்பர்கள் சற்று நேரம் தாமதமானாலே… கவலைப்பட ஆரம்பிப்பது எந்தவிதமான நேர்மறைசிந்தனையில் சேர்த்தி என்று ஆச்சரியம் பிறக்கிறது.  பரஸ்பரம் தூண்டிலாக… நட்பு உலகம் கண்களை சிவக்க வைத்துக் கொண்டு இருப்பதாக தோன்றுகிறது.

நோமோஃபோபியா என்கின்ற வியாதி கழுத்து வலி முதல் பல சிக்கல்களை செல்போனினால் உருவாக்கிவிடுவதாக கூறினார்கள். ஃபோமோ (Fomo) என்கின்றஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட் என்பது இன்னொரு வகையான உளவியல் சிரமம். பல இளைய தலைமுறையினரின் இரவு உறக்கம் வந்து சேர்ந்து விட்டால் வாட்ஸ் அப் பதில் வந்து விட்டதா… அனுப்பி வைத்த ஃபேஸ்புக் புகைப்படம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து பெறவேண்டிய லைக்குகளை பெற்றதா…? என்று விழித்து காத்திருப்பதிலேயே கழிந்து போய்விடுவது ஃபோஃமோவில் சேர்த்தி. இப்படியெல்லாம் கோணம் இருப்பதாகப் பார்த்தால் வேகம் இன்னும் வேகம் என்று ஆர்வமூட்டும் வலைதளம்… இணைய தூண்டிலே என்று வாதாடிவிடலாம். இந்த தூண்டிலில் நன்மைபுழு இல்லாமல் இல்லை. ஒரு சாதாரணமான மீன் மாட்டிக்கொள்கிறது சாமார்த்தியமான மீன்கள் புழுக்களை மட்டும் கபளீகரம் செய்துவிட்டு தூண்டிலுக்கு முத்தமிட்டுச் சென்று விடுகிறன்றன.

இந்திய ஆட்சிப்பணி தேர்வு முடிவுகள்  4/07/2015 தெரியவந்தன. இந்த செய்தி – தூண்டிலாக இழுத்தது. ஆர்வமிகுதியால் பார்க்கையில், முதலில் லபாஸ்னா (LBSNAA) என்கின்ற இ.ஆ.ப., அதிகாரிகள் பயிற்சி மையத்தில் உள்ள உணவு விடுதி மற்றும் அங்காடியில் பணிபுரியும் ஒரு ஒப்பந்த உதவியாளர் தேர்ச்சி பெற்றதாக செய்தி வெளியானது. ஒரே பெயர் ஒரே விருப்பப்பாடம் எடுத்திருந்துள்ள இன்னொரு மாணவர் என பின்னர் தெரியவந்தது. அது பரவாயில்லை. அவர் பணிச்சுமைக்கு மத்தியில், ஒரு எளிய பின்னணியில் இருந்து இ.ஆ.ப., நேர்முகத் தேர்வு வரை சென்று வந்ததே பிரமிப்பூட்டும் செய்தி என்று கருதி அவர் அடுத்த முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்று அனைத்து நல்உள்ளங்களும் வாழ்த்தி இருந்தன. அவர் பெயர் இரவி. சமீபத்தில் கோவையில் தமிழக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கான பயிற்சி ஒன்றில் பேச நேர்ந்தது. அதில் இலக்கு நம்முடைய சிறிய தூண்டிலாக மாறிவிடக்கூடாது என்னும் பொருள்பட பேசி இருந்தார். கதிரேசன். அதாவது, தனக்குத்தானே ஒரு இளைஞன் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கொண்டாலும் சரி. அது ஒரு தூண்டில் போல அவனை இழுக்கின்றது. அதனால், இ.அ.ப., என்று ஒரு இலக்குத் தூண்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெரிய தூண்டிலில் இஷ்டப்பட்டுச் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று பொருள் பட பேசினார். உங்களுக்குள்ளே இருக்கின்றஇந்திய ஆட்சிப்பணி அதிகாரியை நீங்கள் தேர்வெழுத விண்ணப்பிக்காத காரணத்தால் மனதுக்குள்ளே அடக்கி சிறைவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, ஒரு சிரமமான சூழ்நிலையில் இருந்த போதிலும் மனம் தளராமல் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” (குறள் எண்: 596) என்று திருவள்ளூவர் கூறிய, உயர்வான இலக்கை வைத்த இரவி… ஒரு உன்னதமான எடுத்துக்காட்டாய் தெரிவிக்கின்றார். பெரிய தூண்டிலை தேர்ந்தெடுப்போம்.

திரு. நாகூர் ரூமி அவர்கள் எழுதிய “இந்த வினாடி” என்கின்ற புத்தகம், தற்செயலாக, எதிர்பாராத விதமாக கிடைத்தது. படித்தால் அதில் “தற்செயல்” என்ற ஒரு அத்தியாயமே வைத்து விவரித்து எழுதியிருக்கின்றார். சத்தியமான வார்த்தைகள். எளிய தமிழில் டாக்டர் தீபக் சோப்ரா அவர்களின் கருத்துக்களின் ஆழமான சாராம்சத்தை அழகாக சொல்கின்றார். தற்செயலாக தோன்றுகின்ற நிகழ்வுகள் எல்லாம் உள்மன ஆற்றலினாலும் இறையருள் அல்லது இயற்கை அருளாலும் நடப்பதாக எழுதி அவற்றை அறிவியல், நடப்பியல் ஆதாரங்களோடும் கலந்து கொடுத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி சில நடைமுறை பயிற்சிகள் மூலம், ஆஃல்பா தியானம் மூலம் எவ்வாறு நேர்மறை மனநிலை கொள்வது எனறு விலாவரியாக விவரித்திருக்கின்றார்.

“காற்றைப்பிடிக்கும் கணக்கறிவாளருக்கு

கூற்றைஉதைக்கும் குறி அது ஆமே”

என்று திருமூலர்

திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். அதன் பொருள், கணக்கு போடுவது போல மூச்சை உள்ளே இழுக்கும் நேரம், உள்ளே வைத்திருக்கும் நேரம், வெளிவிடும் நேரம் (முறையே, பூரகம், கும்பகம், ரேசகம் என்று திருமந்திரம் கூறிகின்றது) என்பனவற்றை கணக்குப் போட்டு மூச்சு விடுபவர்களால், கூற்றுவன் என்று சொல்லக்கூடிய, எமனையும் உதைக்கலாம் என்பது ஆகும். இந்த மாதிரி மூச்சு விடுதல் குறித்து இன்றைய தமிழில் ரூமி அவர்களது புத்தகம் விளக்கமாக, நடைமுறையில் செய்வதற்கு வசதியாக உடனே வைத்தக் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக சொல்லித்தருகின்றது. இதனை ஒரு நல்ல தூண்டில் என்று ஒப்புக் கொள்வதற்கும் இதுபோன்ற புத்கங்களை படித்துப்பலன் அடைவதற்கும் கதிரேசன் விரும்பினார்.

இவ்வாறான பயிற்சிகளை கதிரேசன் மாணவப் பருவத்தில் அரசல் புரசலாக அங்குமிங்கும் கற்றுக்கொண்டார். அதனால் பல தேர்வுகளை வெற்றி கொள்ள முடிந்து இருக்கின்றது. ஒருவேளை ஆழமாகக் கற்றுக் கொண்டிருப்பின், அதற்கேற்ப நன்மை விளைந்து இருக்கும்.  தெய்வப்புலவர், திருக்குறளில் உழைப்பிற்குத் தகுந்த கூலி, நிச்சயம் கிடைக்கும்  – என்று மெய்வருத்தக் கூலி தரும் 24. குறள் என்று முடியும் குறளில் கூறியுள்ளார். சமீபத்தில் தொலைபேசி அழைப்பொன்றை இழக்க நேர்ந்தது. புகழ்பெற்றஆங்கில திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன், உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரான வாரன் பாஃபெட் இவர்களாலேயே வாங்க முடியாத ஒரு பொருளை நம்மால் வாங்க முடிந்திருக்கிறது. ஆஹா… நாம் எவ்வளவு பொருள்வளம் மிக்கவர்கள் தான். அதுசரி மிஸ்ஸிடு காலை ரிடர்ன் செய்வோம் என்றால்…. எதிர் முனையில் இருந்தவர் தனது முக்கியமான அலுவலில் இடையூறாக கதிரேசனின் அழைப்பை நினைத்து விட்டார். ஒரே கோபம் மற்றும் அவசரமான தொனியில் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்றரீதியில் கடுமை குரல் காதுகளை பதம் பார்த்து இதயத்தில் காயம் ஏற்படுத்த முயன்றது. ஒரு தூண்டிலில் மாட்டிய வலி என்று ஒப்பிடலாம். ஏனப்பா வம்பு என கதிரேசன் இணைப்பை துண்டித்தால், அவர் விடவில்லை. வலிந்து மீண்டும் அழைத்து கதிரேசனை யாரென விசாரித்தார். அடையாளம் தெரிந்த பின்னர் கதிரேசன் மதிக்கத்தக்க மனிதர் என்று முடிவு செய்து மன்னிப்புக் கோரினார்.

தூண்டிலில் குத்திய பிறகு வைத்தியம் பார்ப்பது போல தீயினால் சுட்டதை காட்டிலும் ஆறாத புண்கள் மிஸ்ஸிடுகால்களில் உருவாகி விடும் போல. அன்பான இனிய சொற்கள் நல்ல தூண்டில்கள். மிஸ்ஸிடுகால்களால் நடக்கும் இணைந்த குடும்பங்கள் ஏராளம். நாம் சொல்வதெல்லாம் தவறி அழைத்து விட்டாலும் தன்மையாக பேசுவோம். அடையாளம் தெரியாதோரிடத்திலும் அன்பு காட்டுவோமே என்றுதான். அன்னை தெரசா சொல்வது போல் சக மனிதரை நேசிக்க முடியாதவர்கள் கண்ணிற்குத் தெரியாத கடவுளை எப்படி நேசிப்பார்கள். திருவள்ளூவர் என்ன சொல்கின்றார் இப்படி மிஸ்ஸிடுகால் தவறாக போனால் தன்னை விட மேலிருப்பவர் உடன் நாம் எப்படி பேசுவோமோ…? அவ்வளவு பவ்யமாக மெல்லியவர்களிடத்தும் பேசலாமே என்று அறிவுரை வழங்குகின்றார் (குறள் எண். 250). கடைசியில் கதிரேசனை மூன்று முறைதொடர்பு கொள்ள மிஸ்ஸிடு கால் கொடுத்தவர், தவறுதலாக பட்டனை அழுத்தியவராம். எதற்கும் கோபப்படும் முன்பும், தூண்டிலிடும் முன்பும் சற்று சரிபார்ப்பது நல்லதே…!

தற்செயலாக… திருமண மண்டபத்திலிருந்து கிளம்புகையில் கதிரேசனின் கைகளைப் பிடித்துக் கொண்டார் நண்பர். தூரத்து நண்பர் நெஞ்சளவில் நெகிழ்ந்து மகிவும் நெருங்கிவிட்டார். சரிவர கவனிக்கவில்லையே என உருகினார். உணவுசாலைக்கும் அழைத்தார். கதிரேசன் முகமலர்ச்சியுடன் தாம் திருப்தியாக உணவுண்ட மணமக்களை மனதார வாழ்த்தியதாக தெரிவித்தார். நண்பரும் அகமகிழ்ந்தார். கதிரேசனும் ஒரு வித்தியாசமான கல்யாணத்தில் கலந்து கொண்டதற்கு மகிழ்ந்தார். நாகூர் ரூமி அவர்கள் புத்தகத்தில் கூறியவாறு, நண்பர் தற்செயலாக வந்திருக்க மாட்டார், எல்லாம் வல்ல நல்லெண்ணம். மண்டபவாசலுக்கு அவரை வரவழைத்து… திரும்ப போகையில் நிறைவாக, திருப்தியாக போக வைத்தது. அடுத்த தூண்டில் எந்த நிமிடம் கிடைக்கும் என ஏங்க வைத்தது. மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்…. தற்செயலாக…..

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்