Home » Articles » வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்

 
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்


சொக்கலிங்கம் சிவ
Author:

சாவியைப் பார்த்து, சுத்தியல் கேட்டது, உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அது எப்படி? அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன். அதுபோல் ஒருவரை அறிவு ரீதியாக அணுகுவதை விட, உணர்வு ரீதியாக இதயத்தை தொடும்படி மென்மையாக அணுகினால் எதையும் சாதிக்க முடியும்.

தற்காலத்தில் மனிதர்களின் சிந்தையை வசப்படுத்துவது எப்படி? வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? எண்ணற்ற சிந்தனையாளர்கள் கருத்தோவியங்கள் பலவற்றை எழுதிக்குவித்துள்ளனர். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் இப்படி நூல்களைப் படித்தறிந்து தான் வெற்றிப் பெற்றார்களா? இல்லை! ஆனால் அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் வெற்றியடையலாம் என்பதே கருத்து.

நான் பெற்ற சிறந்த ஆலோசனை என்ற தலைப்பில் ஆர்தர் கார்டன் பின்வருமாறு கூறுவர்: ஒருமுறை நான் பிரச்சனைகள் நிறைந்த விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியிருந்தது. என்னை விட வயதில் மூத்தவரும் அனுபவமும் அறிவும் – உள்ள நண்பர் ஒருவரை அணுகினேன். நான் நிச்சியமாக இதைமுடித்திட இயலும் என நம்பினால் நான் இதனைத் தொடங்கிவிடுவேன். ஆனால்…

என் நண்பர் என்னைச் சில நிமிடங்கள் உற்று நோக்கினார். பின் ஒரு காகிதத்தில் 10 வார்த்தைகளை எழுதி அதனை என்னிடம் கொடுத்தார். என்னுடைய வாழ்வில் நான் பெற்ற தலைசிறந்த ஆலோசனை அது. “BE BOLD – AND MIGHTY FORCES WILL COME TO YOUR AID” “துணிந்து நில் வலிவான சக்திகள் உனக்குத் துணை வரும்” எனது சிந்தனையை சிறகடித்து பறக்கச் செய்தன இந்த மந்திர வார்த்தைகள். கடந்த காலங்களில் நான் எங்கெல்லாம் தோற்றேனோ அங்கெல்லாம் நான் ஏன் தோல்வியைத் தழுவினேன் என்பதை அவை படம் பிடித்துக் காட்டின.

“பல காரியங்களை நான் முறையாகச் செய்ய முயற்சித்துத் தோல்வியடையவில்லை – மாறாக தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்ச உணர்வே என்னை முறையாக முயற்சிப்பதிருந்து தடுத்துவிட்டிருக்கின்றது. எல்லா உணர்வுகளிலும் – அச்ச உணர்வே மிகவும் ஆபத்தானது. சிந்தனையைக் குழப்பி தன்னம்பிக்கையைத் தகர்த்தெறியும் – தன்மை படைத்தவை.

எப்போதெல்லாம் நான் துணிவினால் உந்தப்பட்டு சிரமமான காரியங்களையும் – அச்சமின்றி ஏற்றுக் கொண்டேனோ அப்போதெல்லாம் – வெற்றி பெற்றுள்ளேன். ஊக்கத்துடன் செயல்படும்போது சந்தர்ப்பங்கள் என் எதிர்நீச்சலுக்கு துணை வருவதைக் கண்டிருக்கிறேன்.

துணிவே துணை என நான் கூறும்போது கவனமின்றியும் புத்திசாலித்தனம் இன்றியும் செயல்பட நான் அழைக்கின்றேன் என்று பொருள் அல்ல. துணிவு தெளிவான தீர்மானத்தின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.

வலுவான சக்திகள் என்று நான் குறிப்பிடுபவை நமக்குள்ளேயே உள்ள சக்தி, தெளிவாக சீர்தூக்கும் திறன். புதுமையான கருத்துக்கள், உடல்வலிவு இத்தனையையும் குறிக்கும்.

துணிவு உடல் கூறுகளிலேயே மாறுதல்களை ஏற்படுத்துகின்றது. ஒருமுறை தலைசிறந்த மலை ஏறுபவர் ஒருவர் கூறினார். “சில நேரங்கள் மலை ஏறுபவர் கீழே இறங்க இயலாது. மேலேதான் செல்லமுடியும் – என்ற சூழ்நிலையில் இருப்பார். அவர் மேலும் சொன்னார். பல சந்தர்ப்பங்களில் நான் வேண்டுமென்றே இத்தகைய இடங்களை அடைய முயன்றிருக்கிறேன். அப்போது மேலே தான் சென்றாக வேண்டும். தன்னம்பிக்கையுடன், துணிவுடன் எதிர்கொள்ளும் போது எதனையும் சமாளிக்க இயலும் வாழ்வில் ஏமாற்றங்களும் தோல்விகளும் வரத்தான் செய்யும். தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தின் காரணமாக எந்தமுயற்சியும் செய்யாதிருப்பவரை விட முயன்று தோல்வியடைபவர் எத்தனையோமேல்.”

வணிக உலகில் வெற்றி மாலை சூடியவர்கள் சிறந்த தன்னம்பிக்கை, துணிவு மற்றும் நிலையான முடிவுகளுடன் செயல்படும் ஆற்றல் ஆகிய குணநலன்களைப் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த வணிக வல்லுநர் ஒருவர் முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்? அவர் சொல்வார் குறைந்தபட்சம் என் தவறுகளையாவது நான் உடனுக்குடன் செய்து வருகின்றேன். அவரிடம் கேட்டார்கள் எண்ணித் துணிக கருமம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மகிழ்வுடன் அவர் சொன்னார். அந்தப் பழமொழியில் உள்ள சிரமம் – என்னவென்றால் எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்… எந்த காரியத்தையும் செய்ய முடியாது.

பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் முயற்சியையும் மழுங்கச் செய்து விடுகின்றது. “வாழ்வில் சவால்களை சந்திக்க அஞ்சாதீர்கள் உங்களுடைய சக்திக்கு அதிகமான முறையிலே வாழ முயற்சி செய்யுங்கள். நீங்கள் கனவிலே கூட காணாத அளவு சக்தி உங்களுக்கு இருப்பதை உணர்வீர்கள்”

வெற்றி என்பது ஒரு தந்திரச் செயலோ அல்லது புரியாத புதிரோ அல்ல. அடிப்படைத் தன்மைகளை முறையாகவும் இடைவிடாமலும் பின்பற்றுவதன் விளைவாக இயற்கையாகவே வெற்றியை அடைய முடியும்.

சந்தர்ப்பங்கள்  சராசரி மனிதனையும் – சாதனை மனிதனாக்கும். வேலை தேடித்திரியும் – ஒரு பட்டதாரி இளைஞன் – பத்திரிகை ஆபிஸில் வேலை என்ற விளம்பரம் கண்டு நேரில் செல்கிறான்.

அங்கே மேலும் ஒரு இளைஞன் +2 மட்டுமே படித்தவனும் வேலை கேட்டு நிற்கிறான். இருவரில் யாருக்கு வேலை கொடுக்கலாம் என்று ஆபிஸில் ஆசிரியர் இருவருக்கும் ஒரு அஸைன்மெண்ட் கொடுக்கிறார். துறைமுக கப்பல் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்! – இதுவே அஸைன்மெண்ட் முதலாவதாக சென்ற பட்டதாரி இளைஞன் வந்தான். பத்திரிக்கை ஆசிரியர் அவனை பார்த்து கேட்டார். சுதந்திர தின விழா செய்திகளை சேகரித்தாயா? அதற்கு அவன் கூறினார். என் கெட்ட காலம் நான் மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது! உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது. கப்பலில் எந்த கொண்டாட்டமும் நடக்கவில்லை. எனவே செய்தியை சேகரிக்கவில்லை. காரணம் கப்பல் ஓட்டை விழுந்திருக்கிறது. சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் மும்மரமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. தீடீரென ஓட்டைப் பெரிதாகி கடல் தண்ணீர் குபுகுபுவெனப்புகுந்து கப்பலே மூழ்கும்படி ஆகிவிட்டது. இப்படியிருக்க சுதந்திர தினம் எப்படி கொண்டாடமுடியும் என முடித்தான். பக்கத்திலிருக்கும் அறையில் சிறிது நேரம் உட்காருங்கள் என பத்திரிக்கை ஆசிரியர் கூற, அவனும் உட்கார்ந்து கொண்டான்.

படுவேகமாக +2 படித்த பையன் ஆசிரியரை சந்தித்தான். என்ன தம்பி செய்தி சேகரித்தீர்களா? எனக் கேட்டார். ஆசிரியர் – ‘ஓ! செய்தி சேகரிப்பின் சிலதாள்கள் அடங்கிய கோப்பை – முழுவிபரத்தையும் ஆசிரியரிடம் நீட்டினான். அன்று மாலையே முதல்பக்க செய்தியாக – +2 படித்தவன் கொண்டுவந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. பட்டதாரிக்கு பெரிய பிரச்சனையாக தெரிந்தது  +2 விற்கு தங்கமான வாய்ப்பாக தெரிந்தது – குறைந்த கல்வியை உடைய இரண்டாவதாக அஸைண்ட்மெண்ட் கொடுத்தவனுக்கே வேலையும் கொடுக்கப்பட்டது.

இப்படி சந்தர்ப்பங்களை சாதுரியமாக பயன்படுத்துபவர்களுக்கே வெற்றிமாலை விரைந்து கிடைக்கிறது. சந்தர்ப்பங்கள் தானே வருவதும் உண்டு. பிரச்சனைகளிலும் சந்தர்ப்பங்களை உற்றுப்பார்த்து உள்வாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் காண்பவர்களும் உண்டு. அவரவர் பார்க்கும் பார்வையிலும், நோக்கும் திசையிலும் சந்தர்ப்பங்கள் என்னும் தைரியத்தின் மீது சவாரி செய்பவர்களையே வெற்றித் திருமகள் ஆரத்தழுவி – அகமகிழ்கிறாள்.

சந்தர்ப்பங்களை சாதகமாக்கும் துணிவு எவனிடமிருக்கிறதோ அவனே சாதனையாளன். வெள்ளப் பெருக்கில் ஒரு ஊர் சிக்கிச் கொள்கிறது. அந்த ஊரில் கடவுள் காப்பாற்றுவார் என்று ஒரு மனிதரும் வசித்து வந்தார். ஊர்களில் மக்களை ஏற்றிக்கொண்டு பாதுக்காப்பான இடத்திற்கு கொண்டு செல்கிறது. அரசு வாகனம் தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. நம் கதைநாயகரை அதிகாரிகள் ஏறச்சொல்ல, அவரோ ‘என்னைக் கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார்.’ நீர்மட்டம் உயர்ந்து வீடுகளுக்குள் புக ஆரம்பிக்கிறது. அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக படகுகளை அனுப்புகிறது. காப்பாற்ற வந்த படகை நோக்கி, என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என அனுப்பிவிடுகிறார். அந்த மனிதர் நீர்மட்டம் உயர்ந்து வீட்டின் மாடியை அடையும்போது நம் நாயகரும் மாடிக்கு சென்று விடுகிறார். ஊர்மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எஞ்சியிருக்கும் சிலரைக் காப்பாற்ற அடுத்த நடவடிக்கையாக ஹெகாப்டர் – வானூர்தியை அரசு அனுப்புகிறது. ஊரில் இருக்கும் ஒருசிலரும் காப்பாற்றப்பட்டார்கள் இவரைத் தவிர அவர் ஹெகாப்டரில் வந்து அழைத்தவர்க்கும் ‘கடவுள் காப்பாற்றுவார் நீங்கள் செல்லுங்கள் என அனுப்பிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக நம்நாயகரையும் தண்ணீர்மட்டம் மூழ்கடித்தது.

கடவுள்மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்த நம்நாயகர் கடவுளிடம் கேட்டார். “கடவுளே! உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். என்னை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்களே சரிதானா? என்று அனுப்பினேன். நீ உதறி தள்ளிவிட்டாய் அடுத்துப் படகை அனுப்பினேன்.

நீயோ தொடவே மறுத்துவிட்டாய். அடுத்து வானூர்தியை அனுப்பினேன். அதையும் நீ உதாசீனப்படுத்திவிட்டாய். எத்தனை சந்தர்ப்பம் கொடுத்தேன்? என்னை குற்றம் சொல்கிறாயே? என்ன நியாயம்? என்று கடவுள் பதிலுரைத்தார்.

இப்படி எண்ணிப்பார்க்கும் எல்லாவற்றிலும் – ஏதோ ஒன்று – எதற்கூடவோ ஒட்டிக்கொண்டு, எதை நோக்கியோ பயணப்பட்டு சேரும் திசையிலும் தேன்கூட்டுச் செய்திகள் – சிகர சிம்மாசனத்திலும் பேரதிசயம் பிரமிப்பாய் கண் சிமிட்டுகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment