Home » Cover Story » தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!

 
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!


ஆசிரியர் குழு
Author:

ஜே. சதக்கத்துல்லா

மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

  • உயரம் அவருக்கு உழைப்பினாலும், உயர்வு அவரது உள்ளத்தாலும் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒளிர்கிறவர்.
  • தன் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக்கி இன்றைக்கு பலரும் போற்றும் வகையில் உயர்ந்தவர்.
  • இலக்கியம், மொழிசார்பு ஆர்வலர், ஆளுமை வளர்ச்சி நிபுணர், பொருளாதார வல்லுநர் என்று பல்வேறு துறைகளில் பன்முகத்திறமை கொண்டவர்.
  • தன்னைத்தானே செதுக்கி செதுக்கி சிற்பமாக வடித்துக்கொண்ட ஒரு தனித்துவம் மிக்க மனிதர்
  • செப்பிடு வித்தை அல்ல வாழ்க்கை, அது செப்பனிட்டுச் செப்பனிட்டு சீரமைக்க வேண்டிய நுட்பமான பணி என்பதை நிரூபணமாக்கியிருப்பவர்.
  • புதிய எல்லைகளைத் தொட முடியும் என்பதற்கான நம்பிக்கையாக இளைஞர்கள் நினைவில் வைக்கத் தக்கவர் இவர்.
  • வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப்பார்ப்பதை விட, நாம் வாழும் காலத்திலேயே நம்மோடு காணப்படும் ஒரு வெற்றியாளரைத் தெரிந்து கொள்வது நல்லது என்று பிறரால் அடையாளம் காட்டக் கூடியவர்.
  • அறிவுத்திறனும், ஆளுமைத்திறனும் மனிதநேயமும் ஒருங்கே அமையப்பெற்ற அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
  • கீரை விற்று படிக்க வைத்த தந்தைக்கு, நல்ல பெயரை வாங்கித்தந்த தனயன்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர்,  ஜெ.சதகத்துல்லா அவர்களுடன் இனி  நாம்.

உங்களின் இளமைக் காலம் குறித்து…?

மதுரையிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புவனம் என்னும் குக்கிராமத்தில்தான் பிறந்தேன். பெற்றோர் ஜனாப் கே.எஸ் ஜெயின் அலாவுதீன், தாயார் ஜெ. பசீரா பீவி.

அப்பா திருப்புவனத்திலிருந்து கீரையை அறுத்துப்போய் மதுரையில் மொத்த சந்தையில் அதனை விற்கும் வியாபாரம் செய்து வந்தவர். நான் படித்தது மதுரையில் உள்ள புகழ்பெற்ற டி.வி.எஸ். பள்ளிக்கூடம். டி.வி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பள்ளிக்கூடம் அது. அவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. டி.வி.எஸ். பள்ளிக்கூடத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்குவார்கள். அதன் அடிப்படையில்தான் அந்தப்பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்றைய மாணவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், ‘எந்தச் சூழலில் இருந்தாலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் வெற்றியடைய முடியும்’.

உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது…

என்னுடைய தந்தை மிகவும் கண்டிப்பு, ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, அதற்கேற்றார் போல் வாழ்க்கையை வாழ்ந்தவர்.  எவரிடமும் கைகட்டி அடிமையாக வேலை பார்க்கக் கூடாது என்று நினைத்தவர். பொய் பேசினால் அப்பாவிற்குப் பிடிக்காது, எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டார், அதேசமயம் பிரச்சனைகளை சொல்லி விடுவார். அதற்கான தீர்வை எங்களிடமே கொடுத்து விடுவார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த சகோதரருக்கு வயது 5, பள்ளியில் சேர்ப்பதைப்பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய இளைய தம்பி அப்பொழுது பிறந்த 8 மாதக்குழந்தை.

அப்பொழுது எனக்கு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த நேரம், தேர்வுக் கட்டணம் செலுத்த பள்ளியில் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இதை நான் வீட்டில் சொன்னேன், என் தந்தை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கு பணம் கொடுத்தார்.  உனக்குப்பிறகு, இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள், இப்பொழுது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. என்னுடைய உடம்பும், மிகவும் மோசமாக இருக்கிறது. படிப்பை இப்படியே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றப்போகிறாயா…? அல்லது இந்தக் கட்டணத்தைக் கட்டி பள்ளியில் சேரப்போகிறாயா…? என்று என்னிடம் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார்.

அப்பா என்னிடம் சொல்லிய வார்த்தை இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.. நானும் அந்தக் கட்டணத்தை  பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். இன்றுதான் நான் பள்ளிக்கு வருகின்ற கடைசி நாள் என்று என் மனம் சொன்னது. கடைசியாக படிப்பை விட குடும்பம்தான் முக்கியம் என்று கட்டணத்தைக் கட்டாமல் பணத்தை அப்படியே திருப்பிக்கொண்டு வந்து அப்பாவின் கையில் கொடுத்து விட்டேன். பணத்தைப் கையில் கொடுத்ததும், அப்பாவிற்கு மிகுந்த அதிர்ச்சி. என் வருந்திய முகத்தைப் பார்த்து என் அப்பா, மீண்டும் பள்ளிக்குச் செல், பள்ளிக்கட்டணத்தை நான் செலுத்துகிறேன் என்று ஆறுதலாக சொன்ன வார்த்தைதான் என்னை, இந்த இடத்திற்கு  கொண்டு வந்தது என்று சொல்வேன்.

படிக்கும் காலத்தில் தங்களின் எந்தச் செயல்பாட்டை பெருமையாக கருதுகிறீர்கள்? 

நான் கல்லூரி படிக்கின்ற காலத்தில், கல்லூரிக்கு அருகில் பூசாரிபாளையம் என்ற கிராமம் இருந்தது.  அங்கு ஒரு இரவுப்பள்ளி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப்பள்ளியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஏழை மாணவர்கள் நிறையப்பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக நான் வகுப்பு எடுத்தேன். படித்த நான்காண்டுகளும் இரவில் இலவசமாக வகுப்பு எடுத்து வந்தேன். இதன் மூலம் நிறைய மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி விளக்கை ஏற்றிய பெருமையை நான் பெரிதாக நேசிக்கிறேன்.

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

அன்று கல்லூரியின் கடைசி நாள், பல்கலைக்கழக விழா நடைபெற்றது. மேடையில், பரிசு கோப்பைகள் பல இருந்தன. பல்வேறு விளையாட்டு, வினாடி – வினா போன்ற போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் நிறைய மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுச் சென்றனர்.

இறுதியாக பெரிய பரிசுக் கோப்பை மட்டும் இருந்தது. துணைவேந்தர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார், மேடையிலிருந்த அனைத்து பரிசுக் கோப்பைகளும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த பெரிய கோப்பை மட்டும் மேடையில் இருக்கிறது என்றும் , யாருக்கு கொடுக்க போகிறோம் என்றும் குழப்பம் இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆண்டுக்காண்டு திரு.வி.க., நினைவுப் பரிசு ஒன்று வழங்குவோம், ஆனால் இந்த விருது ஏதேனும் ஒரு வித்தியாசமான சாதனை செய்த மாணவர்களுக்குத்தான் இந்த விருது வழங்கப்படும்.  அந்த வகையில் இந்த நான்காண்டுகளாக எவ்வித உதவியும் எதிர்பார்க்காமல், கஷ்டப்படும் மாணவர்களுக்கு இரவு வேலையில் பாடம் கற்பிக்கப்பட்ட காரணத்திற்காக எனக்கு இந்த விருதை துணைவேந்தர் வழங்கினார். இவ்விருதை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மறக்க முடியாத தருணமாகவும் இது அமைந்தது.

ஏற்றம் தந்த மாற்றம் இது எனக்கு என நீங்கள் சொல்ல விரும்புவது?

எனது தந்தை மறைவிற்கு பின்னர், எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர், அக்பர் என்னும் மருத்துவர். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னால், அம்மாவுடன் டாக்டர் அக்பரும் துணையாக இருந்தார். ஒரு நாள் நான் என் வேலையை முடித்த பின்னர் அவரை சந்தித்தேன், அப்பொழுது முதுகலை வேளாண்படிப்பை படிக்கும்படி என்னிடம் ஆலோசனை கூறினார்.

குடும்ப சூழ்நிலை ஒருபுறம், அவர் சொல்லியது மற்றொரு புறம் என்று இருவேறு மனநிலை ஏற்பட்டது. எனினும், அவர் என்மீது வைத்துள்ள அக்கறையை  என்னால் மீறமுடியவில்லை. வேலைக்குச் சென்ற மகன் சம்பாதித்து வருவான் என்று என் தாய் எண்ணும்பொழுது, மீண்டும் படிக்கிறேன் என்று அவரிடம் சொன்னால், அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று மனதில் குழம்பிக்கொண்டு, என்தாயிடம் சொன்னேன்.

அதற்கு, வாழ்க்கையில் கஷ்டத்தை பழகிக்கொண்ட என்னால், இன்னும் இரண்டு வருடம் நிச்சயம் சமாளிக்க முடியும் என்று என் தாய் என்னிடம் சொல்லிய வார்த்தை ஒரு ஏணிப்படியைப்போல் ஏற்றம் கொடுத்தது. என் உறவினர்கள்     என் மேற்படிப்பு படிக்க மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள், அவர்களின் ஊக்கம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

மேற்படிப்பு படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் சற்றும் என் மனதில் எழவே இல்லை. இருந்தாலும், டாக்டர் அக்பரும், எனது பெற்றோரும் சொல்லியதால் மேற்படிப்பை படிக்க எண்ணினேன். ஆனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது விண்ணப்பம் வாங்குவதன் இறுதிநாள் முடிந்து விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது, கோயமுத்தூரிலிருந்து என்னுடைய அறை நண்பன் திரு. சதாசிவம் என்னைப்பார்க்க வந்திருந்தார். முதுகலைப்பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையை அவரிடம் சொன்னேன். தமிழ்நாட்டில்தான் வேளாண்மை படிப்பிற்கான விண்ணப்பங்கள் முடிந்து விட்டன. ஆனால், டெல்லியில் உள்ள பூசா கல்விநிலையத்தில் சேர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று என்னிடம் சொல்லிய பின்னர், அக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை வாங்கி அனுப்பினார்.

அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து 10 பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்தார்கள்.  ஆனால், அந்தக் கல்வி நிலையத்திலிருந்து எனக்கு மட்டும்தான் சீட்டு கிடைத்தது. இது எனக்குப் பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அந்தக் கல்வி நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால்,  சீட் கிடைத்து விட்டாலே போதும் மாதம் தோறும் சம்பளம் போல் உதவித்தொகை கொடுப்பார்கள். இத்தொகை எனது செலவிற்குப் போக, வீட்டிற்கும் அனுப்பி வைக்க உதவியது. இக்கல்லூரியில், முதுகலைப்படிப்புக்கு சென்று விட்டால் பி.எச்.டி., முடித்து விட்டுதான் வெளியில் வரமுடியும். ஆனால், இந்த முறைஎனது குடும்பத்தின் வறுமையின் காரணமாக நிச்சயம் மேற்படிப்போடு திரும்ப வேண்டும். குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன்.

அங்கு துறைத்தலைவராக இருந்த டாக்டர் ஓய். பி. சிங், என்னை பி.எச்.டி., படிப்பில் சேரச்சொன்னார். ஆனால், அவரிடம் என் குடும்ப சூழலைச் சொன்னேன். அதற்கு அவர் பணம் ஒரு காரணமாக இருந்தால், இப்பல்கலைக்கழகத்தில் ஏராளமான கல்வி உதவித்தொகை கிடைக்கும், அதை வைத்து குடும்பத்தை நன்றாக கவனிக்க முடியும் என்று என்னிடம் கூறினார்.

கிராமப் புறத்தில் பிறந்த நீங்கள், ரிசர்வ் வங்கித் தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து…

மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலம் அது. சிவில் சர்வீஸ் தேர்வும்  மற்றும் ரிசர்வ் வங்கித்தேர்வும் எழுதியிருந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வில் எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டேன். ஆனாலும்,  இறுதிப்பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.  மனது கனத்துப்போன அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கித்தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இத்தேர்வில், நான் வெற்றி பெற்றேன். இதன் மூலம் சென்னையில் பணியில் சேர ஆணை வந்தது. அதே நேரத்தில் சிவில் சர்வீஸ் பணிக்கும் ஆணை வந்தது. எதில் சேர்வது என்று தடுமாற்றம். இறுதியில், ரிசர்வ் வங்கியில் சேர்வது என்று முடிவெடுத்து, சென்னையில் ரிசர்வ் வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன்.

இலக்கியங்கள் மீது ஈடுபாடு எழக் காரணம்?

என் தந்தைதான் இதற்கு முழுமுதல் காரணம் நான் பள்ளி படிக்கின்ற காலத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை என்னிடம் கொடுத்து முழுவதுமாக படிக்கச் சொன்னார். இதன் மூலம் அடிப்படையிலேயே நிறைய இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

மதராஸா கல்வியில் சேர்ந்ததால், அடிப்படையில் ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு எனக்குள் ஏற்பட்டது. அதன்பிறகு, “விவேக சிந்தாமணி’ என்கின்ற அற்புதமான நூல் ஒன்றினை அப்பா பரிசளித்தார். இது மிகவும் அற்புதமான நூல், இதிலுள்ள அனைத்துப்பாடல்களும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்தளவிற்கு இலக்கியங்கள் மீது உயர்ந்த நெறியும், பற்றுதலும் ஏற்பட்டது.

இன்று நான்,  3000  நூல்களுக்கு மேல் சேர்த்து வைத்திருக்கிறேன்.  இலக்கியத்தைப் போலவே, இசையின் மீதும் எனக்கு மிகுந்த ஆர்வம். ஒருமுறை பாஸ்டன் நகருக்கு சென்றிருந்தேன், அப்பொழுது “பசுமை நிறைந்த நினைவுகளே” என்கின்ற பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, நான் பாடியபொழுது அனைத்து நாட்டு நண்பர்களும் கண்கலங்கி நின்றார்கள். அது இன்றும் என் வாழ்வில் பசுமையான நினைவாக நீடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் அடிப்படையான பண்பை வளர்ப்பதற்கு இலக்கியம் ஒரு உந்துக்கருவியாக செயல்படுகிறது என்றேசொல்வேன்.

எப்படிப்பட்ட செயல்பாடு நேரத்தை சரியாக கையாள வைக்கும்?

எந்தவொரு செயலுக்கும், திட்டம் என்பது அவசியம். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டுத்தான் வாழ்கிறேன். அன்றாடப் பணிகளை செம்மையாகச் செய்யும்பொழுது நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடியும். அதுபோலதான் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பது, அச்செய்தித்தாளில் வரும் பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதில் கலந்து கொள்வேன்.

திட்டமிட்ட வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது என் தந்தை. எனக்குள் இருக்கிற மதசார்பின்மைத் தன்மையும், ஜனநாயகத் தன்மையும் எல்லோரிடமும் என்னை கொண்டு சேர்த்த அடையாளம் ஆகும். நேரத்தை திட்டமிட்டாற் போல் வாழ்வதால் குடுபத்துடன் என்னால் நேரத்தை முறையாக செலவிட முடிகிறது.

நீங்கள் பெற்றபட்டங்களும், பாராட்டுக்களும்…

மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தேர்வு மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வு இரண்டிலும் வெற்றி…

ரிசர்வ் வங்கி அலுவர்கள் வெளிநாடு சென்று படிக்க, அதன் பொன்விழா ஊக்கத்தொகை (Golden Jubilee Scholarship) பெற்றவர்களில் நானும் ஒருவன்.

எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் இருப்பதால், ரிசர்வங்கிப்பணியில் இருந்து கொண்டே, புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்( பி.எச்.டி., ).

அமெரிக்காவில் உள்ள ஆர்தர் டி. லிட்டில் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்விக்கூடத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றேன். ரிசர்வ் வங்கிப்பணியில் இருந்து கொண்டே 5 ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்கியிருந்து அந்நாட்டு மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப்பயிற்சி அளித்துள்ளேன்.

வங்கிக்கடன்கள் குறித்து மட்டுமல்ல பல்வேறு ஆய்வுகளையும் செய்து கட்டுரைகளை எழுதியும், நிதி மனிதவளம் போன்ற பல்வேறு துறைகளில் தனக்குள்ள பரந்த  அனுபவத்தையும், ஞானத்தையும் பலப்படுத்தியுள்ளேன். இக்கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளியாகி உள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபொழுது, என்னை நேரில் சந்தித்து பாராட்டியது, எனக்கு மிகுந்த பெருமையை அளித்தது.

நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் சொல்ல விரும்புபவர்கள்…

இத்தருணத்தில் மட்டுமல்ல, எப்பொழுதும் எனக்கு பெரிதும் நன்றிக்குரியவராக இருப்பவர்கள் எனது பெற்றோர்கள்.

நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், தேசிய உதவித்தொகை கிடைத்த போது என்னை ஊக்குவித்த தலைமை ஆசிரியர் திரு. எஸ். இராமசாமி ஐயங்கார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தைக்குப்பின்னர் எனக்கு பெரிதும் ஊக்கம் கொடுத்த டாக்டர் அக்பர் அவர்களுக்கும், என்னுடைய கல்லூரி முதல்வர் பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், அறைத்தோழர் சதாசிவம் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைக் கூறவிரும்புகிறேன்.

வங்கித்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

1969ம் ஆண்டுதான் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது. அப்பொழுது வங்கிப்பணியில் சேர்ந்தவர்கள் தற்போது ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார்கள். ஆகையால், இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் நிறைய பேர் பணி ஓய்வு பெறுவார்கள். இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் வங்கிப்பணிகளில் ஏற்படப் போகிறது. இதனை முறையாக உணர்ந்து கொண்ட இளைஞர்கள் இப்போதிலிருந்தே இதற்கான பணிகளைச் சரியாக செய்து கொள்ளுங்கள்.

திறன் தேர்வு, பள்ளிக்கூட கணித அறிவு, அடிப்படை ஆங்கில அறிவு, கணினி அறிவு, பொது அறிவு போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேட் வங்கியைத்தவிர, இதர வங்கிகள் அனைத்திற்கும் ஐ.பி.பி.எஸ்., (IBPS) என்றவாரியம்தான் தேர்வுகள் நடத்தும். இத்தேர்வு எழுதுபவர்கள் www.ibps என்ற இணைய தளத்தைப் பார்த்தால், இந்தத் தேர்வு குறித்த முழுமையான தகவலைப் பெறமுடியும்.

தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

வாய்ப்பு கிடையாது, வசதி கிடையாது என்று புலம்புவதற்குப் பதிலாக, வாய்ப்பையும் வசதியையும் நாம் தேடிச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம். செய்யும் செயலில், உண்மை, ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகியவை இருந்தாலே வெற்றி என்னும் எல்லைக்கோட்டைத் தொட்டு விடலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment