Home » Cover Story » எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!

 
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!


ஆசிரியர் குழு
Author:

  • வட்டம் போட்டு வாழ்வது அல்ல வாழ்க்கை. காலத்துக்கு ஏற்றாற்போல் திட்டம் போட்டு வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை என்பதை பன்முகத் தொழில் மூலம் சாதித்து வருபவர்.
  • திறமையும், நேர்மையும் கடமையாகும்போது ‘பெருமைகள்’ வந்துசேரும் என்பதற்கு உதாரணமாய் இருந்து வருபவர்.
  •  “நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்ஙு ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கைஙு” என்றசுவாமி விவேகானந்தரின் சிந்தனைக்கேற்ப நொடிப் பொழுதையும் வீணாக்காமல் “வாழ்க்கையைத் திருவிழாக்கால சந்தோசமாக்கி” வாழ்பவர்.
  • தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்றதனியார் வேளாண் கல்லூரிகளில் முக்கிய கல்லூரியாக தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியிருப்பவர்.
  • Dr. A.P.J. அப்துல்கலாம் அவர்கள் இவரது தொழில்முனைப்பைக் கண்டு பெரிதும் மகிழ்வுற்று பாராட்டிய பெருமைக்குரியவர்.
  • இப்படிப் பல்வேறு சிறப்புகளுக்குரிய முனைவர் கே. பலராமன் அவர்களை நாம் சந்தித்தபோது, “பிறர் நம்மால் வாழ நாம் வாழ்வதே வாழ்க்கைக்கு அழகு” என்ற அவருடன் இனி நாம்…

உங்களைப் பற்றி?

தேனிக்கு அருகிலுள்ள லட்சுமிபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். அப்பா கிருஷ்ணசாமி விவசாயம் பார்த்து வந்தார். என் பள்ளி வாழ்க்கை எல்லாமே எங்கள் ஊரில் தான் என்பதால் படிப்பின் மீது ஆர்வம் எனக்கு அதிகம். பள்ளிப்படிப்பை முடித்ததும் பி.யு.சி. படிக்க திண்டுக்கல் சென்றேன்.

எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் (8 சகோதரர்கள், 2 சகோதரிகள்) என்பதால் ஆரம்பத்தில் ஏழ்மைநிலையில் தான் இருந்தோம். ஏழ்மையை வெளிக்காட்டாமல் எனது பெற்றோர்  அனைவரையும் கல்லூரிவரை படிக்க வைத்தார்கள். என் அப்பாவிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நேர்மையான மனிதர். 24 மணிநேரம் வேண்டுமென்றாலும் உழைத்துக் கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு அவரின் அர்ப்பணிப்பு இருக்கும். அவரது வழிகாட்டுதல் தான் என்னை உயர்ந்த பாதையில் வழிநடத்துகிறது.

வேளாண் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்?

பள்ளிப்படிப்பை முடித்ததும் மனதில் பலவாறான சிந்தனைகள்; எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் குழப்பம். மருத்துவம், பொறியியல், வேளாண்மை இம்மூன்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்தேன். வேளாண்மையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றஆர்வத்தில் சில ஐயங்களை வேளாண்மைக் கல்லூரிக்கு கடிதமாக எழுதி அனுப்பினேன். அவர்களும் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில் நேர்காணல், தேர்வு ஆகியவற்றைப் பற்றி முறையாக எழுதியிருந்தார்கள். தேர்வுக் குழுவில் என் பெயரிலேயே பல்ராம்ராஜா என்று ஒருவர் இருந்தார். முதல் தேர்வு முறையில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. வேளாண் தொழிலைப் பற்றி தெரிந்து கொண்டிருந்ததால் படிப்பதற்கும் சற்று எளிமையாக இருந்தது. நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதாலும், சீரான பதில் அளித்ததாலும் இரண்டாவது அட்டவணையில் முதலாவதாக எனக்கு படிக்கும் வாய்ப்பினைக் கொடுத்தார் அவர்.

படிக்கின்ற காலத்திலேயே தொழில் தொடங்கும் எண்ணம் இருந்ததா?

பெரும்பாலானவர்கள் போல் தான் கல்லூரி முடித்ததும் அரசுப்பணியில் சேர வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது.

முதலில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்றஆசை மட்டும் தான் இருந்தது. காரணம் பசுமை சூழல், பெரிய கட்டிடங்கள் போன்றவை என்னை பெரிதும் கவர்ந்தன.

பி.எஸ்.சி. அக்ரி முடித்தவுடன் தஞ்சாவூரில் பணி கிடைத்தது. மேற்கல்வி படிக்கும் ஆர்வமும் இருந்தது. எனவே எம்.எஸ்.சி. முடித்தவுடன் ஓராண்டு கல்லூரிக்குள்ளேயே ஆய்வகத்தில் வேலை செய்தேன். அப்போது தான் Ph.D. படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரில் உள்ள கல்லூரியில் UNDP Fellowship (United Nations Development Programme Fellowship) உடன் படித்தேன். என்னுடைய எம்.எஸ்.சி. நெறியாளர் Dr.K. ராமகிருஷ்ணன் (Dean, Tamil Nadu Agricultural University Coimbatore ) அவர்கள் பெங்களூருக்கு டீன்-னாக வந்தார். அவரின் கீழ் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

1976ல் IAAS (Indian Agriculture Administration service ) என்றபுது தேர்வுமுறைஇருந்தது. இதில் நான் தேர்வு எழுதி முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். முதலில் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்று வந்தேன். நிர்வாக பயிற்சியாக இது 3 மாத காலம் அமைந்தது. பின்னர் டெல்லியில் ஜவஹர்லால் நேரு சிறந்த வேளாண் ஆய்வாளர் விருதைப்  பெற்றேன். படிக்கும் பொழுதும் கூட தொழில் தொடங்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை.

IAAS-யில் பணியாற்றிய அனுபவம் குறித்து?

முனைவர் பட்டம் முடித்ததும் பெரியகுளத்தில் பணியாற்றினேன். அப்பொழுது G. ரங்கசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்தார். என்னுடைய Ph.D. ஆய்வைப் பாராட்டி கோவையில் வேலையைத் தொடரும்படி அறிவுறுத்தினார். ஆனால் பெரியகுளத்தில் கொஞ்ச நாள் வேலைசெய்த பின்னர் சொல்கிறேன் என்றேன். அவரும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

அப்பொழுது IAAS-யில்  (Indian Agriculture Administration service ) pool officer என்றஒரு பணி இருந்தது. இது அசோசியேட் பேராசிரியருக்கும் மேலான பணி என்பதால் நானும் சேர்ந்து கொண்டேன். அங்கு Dr. அப்துல்காதர், Dr. சத்தியமூர்த்தி, Dr. அழகிய மனவாளன் போன்றோர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பிளாண்டிங் பணியை பெரியகுளம் பண்ணையில் செய்தோம். நிறைய மாறுதல்களை உட்படுத்தினோம்.

அரசுப்பணியை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பொழுது குடும்பத்தின் எதிர்பார்ப்பு எந்தளவில் இருந்தது?

இதை அறிந்ததும் அனைவரும் சற்று தயக்கம் கொண்டார்கள். நல்ல அரசுப்பணியை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது எந்த அளவில் சாத்தியம் என்று எண்ணினார்கள். ஆனால் எனது நம்பிக்கையைப் பெரிதும் மதித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

என் பதவி விலகலைக் கேட்டவுடன் எனது புராஜெக்ட் இயக்குனர் முதல் அனைவருமே வருத்தம் தெரிவித்தார்கள். பதவி விலகுதலின் போது மனைவி மற்றும் என் இரு குழந்தைகள் என முழு குடும்பப் பொறுப்பையும் ஏற்று வந்திருந்த நான், தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கினேன்.

அந்த முயற்சி சாதாரணமாக இல்லாமல் ஏதேனும் பெரிய நகரமாக இருக்க வேண்டும் என விரும்பி பெங்களூரில் தொடங்கினேன். அங்கு தொழிலுக்கு ஏற்றவகையில் ஒரு சிறுநிலத்தை லீசுக்கு எடுத்தேன். நான் வேலை செய்த இடத்திற்கு அருகில் பால் பண்ணை வைத்திருந்த ஒருவர் அறிமுகம் ஆனார். அவரிடம் நன்கு பழகிய போது, அந்த பால் பண்ணைத் தொழிலை நான் எடுத்து செய்யட்டுமா எனக் கேட்டேன். அவர் முதியவர் என்பதால் மகிழ்வுடன் சம்மதித்து அதை முழுவதுமாக என்னிடம் லீசுக்குக் கொடுத்துவிட்டார். ஆண்டிற்கு ஒருமுறைபணத்தைக் கொடுத்தால் போதும் எனக் கூறி, அவர் அந்த பண்ணையை என்னிடம் கொடுக்கும் பொழுது எட்டு கால்நடைகள் இருந்தன. நாளடைவில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நல்ல வளர்ச்சியும் அடைந்தது அப்பண்ணை.

தரம் சரியாக இருந்ததால் வியாபாரமும் நல்ல வளர்ச்சியை அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும், முறையாக மருத்துவம் பார்க்கவும் இயலாமல் போய்விட்டது. இதனால் கால்நடைகளை எல்லாம் எனது தந்தையைப் பராமரிக்கச் சொல்லி அனைத்தையும் எனது சொந்த ஊருக்கு என் தந்தையின் கண்காணிப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டேன். அவரும் அவைகளை முறையாக பராமரித்து அடுத்த ஐந்தாண்டுகளில் நன்கு வளர்ச்சியை மேம்படுத்தினார்.

நர்சரி தொழிலுக்கு வருவதற்குக் காரணம்?

பால் பண்ணையை தந்தையிடம் ஒப்படைத்த பின்னர் மாற்றுத் தொழில் தொடங்க எண்ணினேன். அப்போது திரு. G. நாகராஜ், நாகராஜ் நர்சரி கார்டன்ஸ், திருப்பத்தூர், தமிழ்நாடு, என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் இந்த நர்சரி தொழிலை தமிழகம் முழுவதும் பரவலாக செய்து வந்தவர். அவருடன் இணைந்த நானும் பழங்கள், காய்கள் போன்றவற்றைஉற்பத்தி செய்தேன். சிம்லா, கோவா போன்றஇடங்களுக்கு உற்பத்திப் பொருள்களை அனுப்பினோம். தரம் சிறந்ததாக இருந்ததால் அங்கிருந்த பலரும் நேரடியாக வணிகத் தொடர்பு கொண்டார்கள்.

தொடர்ந்து சாங்கிலி, சோலாப்பூர் (மஹாராஷ்டிரா), ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா போன்றஇடங்களிலில் இருந்தும் நிறைய ஆர்டர்கள் வந்தன. சிலரின் வேண்டுகோளுக்கு ஏற்ப பூக்கள், திராட்சை போன்றவற்றையும் எங்களது நர்சரியில் அறிமுகம் செய்தோம்.

அப்போது டென்டர் கான்ட்ராக்ட் (Tender Contract in DRDO ) DRDO-வில் இருந்து டெல்லி, பம்பாய், ஹைதராபாத், கொச்சின் போன்றபகுதிகளில் கான்ட்ராக்ட் வந்தது. முதல் கான்ட்ராக்ட் ஹைதராபாத்தில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் வந்தது. அக்காலத்தில் இது மிகப்பெரும் தொகை.

இந்த கான்ட்ராக்ட் மரம் நடுதல் தொடர்பானது, இதை வெற்றிகரமாக செய்து கொடுத்தோம். எங்களது இந்தத் தொழில் முனைப்பைப் பார்த்த Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் பெரிதும் மகிழ்வு கொண்டார். சிறப்புடன் செய்து முடித்ததைக் கண்ட அவர் அடுத்த கான்ட்ராட்டையும் எங்களுக்கே வாங்கிக் கொடுத்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தொழில் ரீதியில் ஏற்படுத்திக் கொடுத்தது.

அப்போது Dr. வெங்கடராமன் அவர்கள் டிபன்ஸ் அமைச்சராக இருந்தார். Dr. A.P.J. அப்துல்காலம் அவர்கள் அக்னி செயற்கைகோள் செலுத்தி வெற்றி பெற்றசமயம் அது. ஒரு விழாவின் போது அவர் என்னிடம் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அது ஒரு மறக்க முடியாத தருணம்.

இந்தியாவில் DRDO உள்ள இடங்களில் எல்லாம் எங்களுக்கு கான்ட்ராக்ட் கிடைத்தது. அது தொழில் ரீதியில் நம்பிக்கையையும், கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

உற்பத்தியில் தரம் என்பதை எப்போதும் குறையாது காப்பதில் தனிக்கவனம் வைத்திருப்பேன். தரமே வெற்றியின் சூத்திரம்!

வேளாண் கல்லூரி தொடங்கியதன் நோக்கம் குறித்து?

நாகரிகம் வளர்ந்துவரும் இக்காலத்தில் திரும்புகின்றஇடங்களெல்லாம் பள்ளிகளும், கல்லூரிகளும் தான். ஆனால் இக்கல்வி படிப்பவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருந்தாலும், வேளாண்மை, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விவசாயத்தின் எதிர்காலம் இனிவரும் காலத்தில் சற்று அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் தான் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் வரும் குழந்தைகளுக்கு இதன் முக்கியத்துவம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இக்கல்லூரியைத் தொடங்கினேன்.

அது மட்டுமின்றி அடிப்படையில் 35 ஆண்டுகாலம் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தொடர்ந்து பெரிய வேளாண் விஞ்ஞானிகளுடன் ஏற்பட்ட தொடர்பில் “இந்தியன் ஆர்டிக்கல்சர் கன்சல்டன்சி சர்வீஸ்” என்றதிட்டத்தைத் தொடங்கினேன். Dr.V.N. மாதவராவ் (Dean, Horticulture, Tamil Nadu Agricultural University, Coimbatore), Dr.G.S. ராந்தவா (Director, Indian Institute of Horticultural Research, Bangalore) போன்றோருடன் சேர்ந்து இத்திட்டத்தைத் தொடங்கியதும் இதன் சிறப்பம்சமாக அமைந்தது.

ஆரம்பத்தில் ஒரு டிப்ளமோ பிரிவை மட்டும் தொடங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்பினைக் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. என்னிடம் பல மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வருகிறார்கள். வேளாண்மையின் தேவை மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.

பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கை அதிகளவில் இருந்த காலகட்டம் அது. அந்தப் படிப்பிகளில் மாணவர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே அளவு ஆர்வம் இந்த வேளாண்மைப் படிப்பிலும் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சியின் முயற்சியே இந்த கல்லூரியின் துவக்கம்.

வேளாண்மைக் கல்வியின் தேவை அதிகரித்ததன் காரணம் என்ன?

ஆரம்ப காலத்தில் வேளாண் கல்வியில் ஆர்வம் குறைந்திருந்தமைக்குக் காரணம் எதிர்காலத்தில் நினைத்தாற்போல் பணி கிடைக்காது என்றமனநிலை இருந்திருந்தது. அதோடு இதுதொடர்பான வேலைகள் கடினமானதாக இருக்கும் என்றும் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது இக்கல்வி பரவலாக பல இடங்களில் பரவியுள்ளது.

மகாராஷ்டிரா போன்றமாநிலங்களில் வேளாண்மைக் கல்வி என்ற ஒரு குழுவை வரையறுத்து, அதன்மூலம் புதிதாக வரும் தொழில்நுட்பக் கருவிகளை வாங்கி அதில் பல தயாரிப்புகளைச் செய்து வருகிறார்கள்.

தேவையான வேளாண் கருவிகள், அவர்களுக்கென்று வீடு என்று தனித்தனியாக இருப்பதால் ஆர்வமாக வேளாண் தொழிலைச் செய்து வருகிறார்கள். அவர்களாகவே அனைத்து வேலைகளையும் செய்து உற்பத்தி செய்வதால் நல்ல வருமானமும் கிடைக்கப் பெறுகிறார்கள்.

அன்றாடம் தேவைப்படும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை முறையாக பயிரிடுகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவகையில் பயிர்களைப் பயிரிடுகிறார்கள். இத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தவர்கள் அனைவரும் சுயதொழில் செய்வதால் விரும்பிப் படிக்கும் பாடமாக இந்த வேளாண்மைக்கல்வி இருந்து வருகிறது.

இக்கல்லூரியைத் தேனி மாவட்டத்தில் தொடங்கியதன் காரணம்?

நான் பிறந்த ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய விரும்பியே வேளாண் கல்லூரியைத் தேனியில் நிறுவினேன். கல்லூரி தொடங்க பரந்துவிரிந்த நிலப்பரப்பு தேவை. அது சொந்த மண்ணில் கிடைத்ததும் ஒரு காரணம். மேலும் கிராமப்புறங்களில் வேளாண்மைக் கல்லூரியைத் தொடங்குவதால் அதன் நோக்கம் முழுமையாகக் கிடைக்கப் பெறும் என்பதும் எனது நம்பிக்கை.

உங்கள் கல்லூரியின் தனித்தன்மைகளாக கூறுவது?

நமது மரபுகளில் ஊரிப்போன பல்வேறு நுட்பங்களிலும், பல்வேறு அறிவியல்களிலும் விவசாயமும் ஒன்று. அத்தகைய விவசாயப் படிப்பை தற்போதைய இளம்தலைமுறைகள் படிக்க பெறும் ஆதரவு காட்டி வருவது மிகவும் முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இச்சமயத்தில் இக்கட்டுரையின் வெளியீடும் அவசியமான ஒன்றாகும்.

விவசாயப் படிப்பை படிப்பதற்கு தற்போது நிறைய கல்லூரிகளில் பெருவாரியான வாய்ப்பை தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், அதில் சில, சிறப்பு பெற்றகல்லூரிகளாக தமிழகத்தில் திகழ்கின்றன. அதில் முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக திகழ்வது தேனியில் அமைந்துள்ள வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி.

கடந்த 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் குறுகிய காலகட்டத்திலேயே பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்றதனியார் கல்லூரிகளில் முக்கிய கல்லூரியாகக் கருதப்படும் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியின் பரப்பளவு கிட்டத்தட்ட 600 ஏக்கர் கொண்டது. பரப்பளவில் மட்டுமல்ல இக்கல்லூரியின் பிரம்மாண்டம்; கல்வி, விளையாட்டு, செய்முறைக் கல்வி, கலை என பல்வேறு நிகழ்வுகளில் தனது வெற்றிக்கொடியை நாட்டி சாதனை படைத்துள்ளது. இரண்டு தொகுதி மாணவர்களை மட்டுமே வெளியேற்றியுள்ள இக்கல்வி நிறுவனம் கண்டுள்ள சாதனைகளும் பெற்றுள்ள விருதுகளும் எண்ணிலடங்காதவை. குறிப்பிடத்தக்க வெற்றிகளாக, ICAR எனும் அகில இந்திய அளவில் முதுகலை வேளாண்மைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் இதுவரை 2010-11ம் ஆண்டு மாணவர்கள் 14 பேரும், 2011-12ம் ஆண்டு மாணவர்கள் 16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்லூரி பெற்றுள்ள விருதுகள் குறித்து?

வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடத்தும் பிரபந்தாஸ் Cultural போன்ற பல்வேறு போட்டிகளில் தங்கள் மாணாக்கர்களைக் கொண்டு தனது பலத்தை நிரூபித்துள்ளது. இதை நினைவூட்டும் விதமாக இந்த ஆண்டு ICT எனும் மாநில அளவில் அனைத்து வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான, மதுரையில் நடைபெற்றகால்பந்து விளையாட்டுப் போட்டியிலும், திருச்சி வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி இணைந்து நடத்திய Freedom எனும் கலை இலக்கிய விழாவிலும் ஒட்டுமொத்த வெற்றிக்கோப்பையை (Over All Championship) வென்றது குறிப்பிடத்தக்கது.

கல்வி மட்டுமல்லாது, மாணவர்களின் திறன்மேம்பாட்டிற்குத் தகுந்த பயிற்சிகளும் வாயப்புகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஆட்சி ஆணையர் (IAS) பயிற்சியை மாணவர்களின் நலன் கருதி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் ஈஷா யோக பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள வேளாண் கல்லூரிக்கும், கிராமப்புறத்தில் உள்ள கல்லூரிக்கும் உள்ள வேறுபாடு?

வேறுபாடு அதிகளவில் இருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக ஒரு கிராமத்தில் நிலம் வாங்குவதற்கும், நகரத்தில் நிலம் வாங்குதவற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா போன்றபகுதிகளில் கிராமப்புறங்களில் தான் அதிகளவு வேளாண் கல்வி நிறுவனங்கள் இருக்கும். காரணம் கிராமப்புறத்தில் விவசாயம் தான் முதன்மைத் தொழில் என்பதால் வேளாண்மையைப் பற்றி மாணவர்களிடம் விளக்குவதற்கும் எளிமையாக இருக்கும்.

இயற்கை சூழ்நிலை கிராமப்புறங்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் நகரத்தைக் காட்டிலும் கிராமம் தான் வேளாண்மைக் கல்விக்கு ஏற்றசூழல் என்று நம்புகிறோம்.

பன்முகத் தொழில் செய்யும் உங்களுக்கு எந்தத் தொழில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது?

எந்தத் தொழிலைச் செய்தாலும் மனதிற்கு நிறைவாக இருந்தால் தான் அதில் வெற்றி பெறமுடியும். ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு தொழிலும் மனதிற்கு நிறைவைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஆர்வம் இருந்தால் மனநிறைவு தானாகவே வந்துவிடும். நான் எல்லா தொழிலையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் எல்லாவற்றையும் ஒரே அளவில் நேசிக்கிறேன்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் வேளாண் கல்வியைப் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பள்ளிப்படிப்பை முடித்த குழந்தைகள் அதிகளவில் பொறியியல் கல்லூரியைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் கல்லூரியின் எண்ணிக்கை இப்பொழுது பலமடங்கு உயர்ந்துள்ளது.

பொறியியல் படித்தால் உடனே வேலை கிடைத்துவிடும் என்றகாலம் மாறிவிட்டது. பொறியியல் படிப்பைவிட வேளாண் கல்வியின் மூலம் வேலைவாய்ப்பு அதிகளவில் இருக்கிறது என்பதை பெற்றோர்களும், மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

வேளாண்மைக் கல்வி வாழ்க்கைக்கு உகந்த கல்வி என்பதை உணர வேண்டும். உழைப்பதற்கு நம்மிடம் கைகள் இருக்கிறது என்பதால் எதிர்கால வாழ்விற்கு ஏற்றகல்வி வேளாண் கல்வி.

பிடித்த புத்தகம், பாதித்த மனிதர்கள் பற்றி?

வாழ்க்கையை எப்படி வாழ்வது போன்றதன்னம்பிக்கை புத்தகங்களையும், வரலாற்று சிறப்புமிக்க சில புத்தகங்களையும் படிக்க பிடிக்கும்.

என்னுடைய நெறியாளர் Dr.K. ராமகிருஷ்ணன் அவர்கள் எனக்கு பலவகையில் உதவி செய்திருக்கிறார். எந்த வேலை செய்தாலும் நேர்மையாக இருந்தால் போதும் வெற்றி பெற்றிடலாம் என்று அடிக்கடி என்னிடம் கூறுவார். அதையே இன்று வரை நான் பின்பற்றி வருகிறேன்.

சுயதொழிலில் என்னை ஊக்குவித்த கோவை தொழிலதிபர் எல்.ஜி. பாலகிருஷ்ணன் எனது ‘காட்ஃபாதர்’ (God Father) என்றே சொல்லலாம்.

எதிர்காலத் திட்டம் குறித்து?

கல்லூரியை ஒரு பல்கலைக்கழகத்திற்கு இணையாக கொண்டு செல்ல வேண்டும். வேளாண் தொடர்பான எல்லா துறைகளும் ஒரே வளாகத்திற்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். படித்தவுடன் வேலை கிடைப்பதற்கு ஏதுவாக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய துணைபுரிய வேண்டும்.

தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

உண்மை, நேர்மை, கடின உழைப்பு இவை மூன்றையும் முறையாகப் பின்பற்றினால் போதும், வெற்றி பெறலாம்!

இந்த இதழை மேலும்

 

1 Comment

  1. D.Sathiyaraj says:

    Very nice sir.. engala mari yooths ku unga life story rompa helpfula erukum sir..

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்