Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

மகிழ்ச்சி – துக்கம் மனிதனுக்கு எங்கிருந்து வரும்?

எம். கோதை, ஒப்பிலிபாளையம்

இன்பம் – துன்பம் என்றஇரண்டு உணர்வுகளால் மனிதன் ஆளப்படுகிறான் என்று சொல்லலாம். மனிதன் ஆனந்தத்தைத் தேடுகின்றான்; துன்பத்தைத் தவிர்க்கிறான். நாம் அனைவருமே மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறோம், வேதனைகள் நமக்கு வேண்டாம் என்கிறோம். ஆனால் வேதனைகளும், துன்பங்களும், துக்கங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் அடிக்கடி நம்மை சூழ்ந்து கொள்கின்றன. அவற்றை ஏற்க முடியாமல் சிலர் மனம் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே இந்த துன்பத்தைக் கடந்தால் தான் இன்பமான வாழ்வை எட்டிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்; முயன்று முன்னேறுகிறார்கள்.

ஒரு வகையில் பார்த்தால் இன்பங்களும், துன்பங்களும் மாறிமாறி வரும்போது தான் வாழ்க்கை சுவை உள்ளதாக இருக்கிறது. கடுமையான பசியை அனுபவிப்பவனுக்குத் தானே விருந்தில் கிடைத்த உணவின் அருமை புரியும். சைக்கிள் கூட வாங்க வழியில்லாதவனுக்குத் தானே மோட்டார் சைக்கிளின் அருமை புரியும். வாடகை வீட்டில் குடியிருக்கும் இளைஞனுக்குத் தானே சொந்த வீடு கட்டிய பிறகு அதில் குடியேறிய அருமை புரியும். ஆக, ஒரு துன்பம் வரும்போது அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளைச் சமாளித்தால் தான் வாழ்ந்துகாட்ட முடியும், வாழ்க்கையில் சரியான அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள முடியும், அனுபவசாலியாகவும் முடியும்.

சில துன்பங்கள் தானாகவே வந்துவிடுகின்றன. டாக்ஸியில் பயணம் செய்யும் போது, விபத்து ஏற்பட்டு கால் முறிந்து விடுகின்றது அல்லது தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. என்ன செய்ய முடியும்? பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ந்து நல்ல டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டியது தான். சிறுநீரக கோளாறு என்றால் அது கொடுமையான நோயல்லவா? வேதனை அல்ல அது சோதனைஙு வராமல் இருந்தால் நல்லது; சரி, வந்துவிட்டால்? அவஸ்த்தை தான். வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவன் வீட்டைக் காலி செய்ய மாட்டேன் என்கிறான். என்ன செய்வது? சேர்த்து வைத்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒருவரை நம்பி முதலீடு செய்த பின், அவன் அதை அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது? திருமணமான தங்கையை திருப்பி அனுப்பிவிட்டான் மச்சான், என்ன செய்வது? பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தால் யாரிடம் போய் அழுவது? மழை இல்லாமல் எல்லா தென்னை மரங்களும் காய்ந்து விட்டால் என்ன செய்வான் ஒரு விவசாயி? இவற்றில் ஏதாவது ஒரு பிரச்சனையாவது இல்லாத குடும்பம் ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். சில துன்பங்களும் அதனால் ஏற்படும் துக்கங்களும் எளிதில் தவிர்த்துவிட முடியாது தான். அந்த சோக நிகழ்வு உங்களை உலுக்கிவிடும். உடலால், மனதால், எண்ணத்தால், பொருளாதாரத்தால் உங்களை நோகடித்துவிடும். சில வேளைகளில் உறவினர்கள் கூட உதவ மாட்டார்கள். நீ உதவிய நண்பன் கூட விலகி நிற்பான்.

வருமுன் காத்தல்:

ஆனால், பல துன்பங்களைத் தவிர்த்து விட முடியும் என்று நம்புகிறேன். அப்படி தவிர்த்தால் அது பேரின்பத்திற்கு வழிவகுக்கும். அளவுடன் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தாலே சர்க்கரை வியாதி, இருதய வியாதி இல்லாமல் மகிழ்ச்சியுடன் உயிர் வாழலாம். புகைப் பழக்கமும், மது பழக்கமும் இல்லாமல் வாழ்ந்தாலும் கேன்சர், கல்லீரல் கோளாறு போன்றவற்றைத் தவிர்க்கலாம். மோசடி மன்னர்களிடம் நிலம் வாங்க, அரசு வேலை வாங்க, மருத்துவ கல்லூரியில் இடம் வாங்க, பணம் விடாமல் இருந்தால் பெரிய மனஉளைச்சல்களில் இருந்து தப்பித்துவிடலாம். கைபேசியில் வரும் லாட்டரி டிக்கெட் அடித்த செய்தியை நம்பி அந்த மோசடி அரக்கர்களுக்கு பணம் அனுப்பாமல் இருந்தாலும் பின்னர் வர இருக்கும் துன்பங்களில் சிக்காமல் இருக்க முடியும். மற்றவர்களுடன் எச்சரிக்கையாக பழகி, அதிக கைக்கடன் தராமல் இருப்பதால், சில வித துன்பங்களுக்கு ஆளாகாமல் விடுபடலாம். நமது தகுதிக்கேற்றவாழ்க்கை; அதாவது வரவிற்கேற்ற செலவு என்று வாழ்க்கை நடத்தினாலும் கூட சில துன்பங்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். கடன் தொல்லை மிகப்பெரிய உயிர்க்கொல்லி என்பதையும் கந்துவட்டி வாங்கினால் மிகப்பெரிய கடனாளி ஆகிவிடுவீர்கள் என்பதை உணருங்கள். பேராசை மனிதனுடைய பல துன்பங்களின் இருப்பிடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

துன்பம் வந்தால் என்ன செய்வது:

இப்படி ஏதாவது ஒரு துன்பம் வந்தபோதும் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளுங்கள். சோகத்தில் புதைந்துவிடாதீர்கள். எனக்கு கைப்பந்து பயிற்சி அளித்த ஒருவர் என்னைச் சந்தித்தார். தனது பணம், உறவினர் பணம், ஒட்டு மொத்தமாக ஒரு மோசடி பேர்வளியிடம், வங்கியை விட அதிக வட்டி தருவான் என்று நம்பி முதலீடு செய்து ஏமாந்து நிராயுதபாதியாய் நிற்பதாய் கூறினார். சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, தற்கொலை தான் ஒரே முடிவு. எனக்கு யாரும் இல்லை என்று சோகத்தில் சொன்னார். பெருந்துன்பமே வாழ்க்கையாகிவிட்டது, அந்த 60 வயதைக்கடந்த ஒரு நல்ல விளையாட்டு ஆசிரியருக்கு.

அவருடைய பணம் திரும்ப கிடைக்க வேண்டிய வழிமுறைகளை முதலில் ஆராய்ந்தோம். அவர் மீண்டும் மீண்டும் இழப்பை எண்ணி துக்கமாக காணப்பட்ட நிலையில் அவரிடம் நான் சில கேள்விகளைக் கேட்டேன்.

நீங்கள் எல்லாம் இழந்துவிட்டேன் என்கிறீர்களே,

 • உங்களது மனைவி உங்களை நேசிக்கிறாரா? ஆமாம் நேசிக்கிறாள்.
 • உங்களது பிள்ளைகள் உங்களை ஆதரிக்கின்றார்களா? ஆம் ஆதரிக்கிறார்கள். அவர்கள் கூட கவலைப்படாதீங்க அப்பா என்கிறார்கள்.
 • உங்களுக்கு நண்பர்கள் உண்டா? உண்டு, நிறைய உண்டு. அவர்களும் ஆறுதல் கூறுகிறார்கள். வருத்தப்படுகிறார்கள். சிலர் உதவக்கூட முன்வந்தார்கள். நீங்களும் என் நண்பர் தானே.
 • உங்களால் தொடர்ந்து கைப்பந்து பயிற்சி தர முடியுமா? முடியும். சில பிள்ளைகளுக்கு இன்னும் பயிற்சி தருகிறேன். நான் உருவாக்கிய அணி தான் மாநில ஜூனியர் பிரிவில் முதலிடம்.
 • உங்களால் இயல்பாக மூச்சு விட முடிகிறதா? முடிகிறது. அதில் பிரச்சனை இல்லை.
 • இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு உண்டா? இல்லை. இதுவரை இல்லை.
 • நீங்கள் பணம் இழந்தீர்கள் உண்மை, ஆனால் நீங்கள் கடனாளியா? இல்லை.
 • நீங்கள் யாரையாவது ஏமாற்றினீர்களா? இல்லை. இல்லவே இல்லை. உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாதா?

நான் அவரிடம் சொன்னது, ஒரு மனிதனுக்கு என்னென்ன செல்வங்கள் வேண்டுமோ அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் எதையும் இழக்கவில்லை.

அப்படி இருக்கும்போது, நீங்கள் ஏன் துக்கப்பட வேண்டும். நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள், அதற்கு வெட்கப்பட அவசியமில்லை. இழப்பையும், அதனால் ஏற்பட்ட துக்கத்தையும் துன்பத்தையும் மனதில் எண்ணக்கூடாது; அதற்கு பதில் அமைதியாக இருங்கள் என்றேன். சரி என்றார். அவருக்குத் தேவை மன நிம்மதி.

மகிழ்ச்சி எங்கே?

மனிதனுக்கு நிஜமாகவே பல இடங்களிலிருந்தும், பொருள்களிலிருந்தும் மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியின் ஊற்றுக்கு அளவே இல்லை. உண்பது மகிழ்ச்சி; உறங்குவது மகிழ்ச்சி; குளிப்பது மகிழ்ச்சி என்று நாம் செய்யும் அனைத்து செயலிலும் மகிழ்ச்சி உண்டு. ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு எனக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி! இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதும் சுகமே! படிப்பது சுகம்; அதுபோல எழுதுவதும் ஒரு சுகமே! சமீபத்தில் ஒரு புத்தகத்தில் எப்படி எல்லாம் மகிழ்ச்சியை சம்பாதிக்கலாம் என்று படித்தேன்.

மகிழ்ச்சி உள்ளே இருக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ள ஒருவரால் முடியும் என்று சொல்லும் ஒரு சிறந்த புத்தகம் “The Way to Happiness”. எல். ரான் ஹூப்பார்ட் என்ற ஆங்கிலேயர் எழுதிய இந்தப் புத்தகம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ‘ஆனந்தத்தின் பாதை’ என்பது உலக இயக்கமாகவே மாறியுள்ளது.

அவர் தரும் 21 எளிய தத்துவங்களை இங்கே சுருக்கமாக தருகிறேன். இதில் பலவற்றைஎனது ‘உடலினை உறுதி செய்’ என்றநூலில் நானும் குறிப்பிட்டுள்ளேன். எனது நூலினை எழுதும்போது, இந்த நூலினை நான் படித்திருக்கவில்லை!

 1. முதலில் உடம்பை உறுதி செய்யுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
 2. உடனடி சுகத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.
 3. உங்களுடைய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொழில் பங்காளிகளுக்கும் விசுவாசமாக இருங்கள்.
 4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள். அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்.
 5. பெற்றோரை மதியுங்கள், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
 6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்” என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள். முன்மாதிரியாக இருப்பது சிறந்த குணமாகும். அதுவே மிகப்பெரிய பூரிப்பும் கூட.
 7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை. ஏற்றுக்கொள்ளுங்கள்.
 8. யாருக்கும் கெடுதல் செய்யாதீர்கள், வார்த்தைகளில் கூட, மனதால் கூட வேண்டாம்.
 9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி. அது நமது முன்னோர்கள் சொன்னது தான். உலகமே கிடைத்தாலும் அதைச் செய்யாதீர்கள்.
 10. சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள். அதற்காக ஒரு சில செயல்களைச் செய்து பாருங்கள்.
 11. ஒருவர் நல்லது செய்யும்போது, ஏதாவது சொல்லி அவரது நல்ல முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள். இது மிகப்பெரிய ஈனச் செயல் ஆகும்.
 12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள். சில மரங்களை நட்டு பராமரியுங்கள்.
 13. திருடாதீர்கள். எவ்வளவு பணக்கஷ்டம் ஆனாலும் அதைச் செய்யாதீர்கள்.
 14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள். நம்பகத்தன்மை தான் பெரிய சொத்து.
 15. சொன்ன வாக்கை மீறாதீர்கள். மீறினால் நம்பகத்தன்மை பொசுங்கிவிடும்.
 16. “சும்மா இருப்பதே சுகம்” என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அது ஒரு குற்றம். வீட்டிற்கு தண்டம், நாட்டிற்கு பாரம், மொத்தத்தில் சும்மா இருப்பவன் தேசத் துரோகி.
 17. கல்வி முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழ வேண்டும். தொடர்ந்து படியுங்கள். படித்ததையே கூடத் திரும்பிப் படியுங்கள். தவறில்லை.
 18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள். நீங்கள் மதங்களை நம்பாமல் இருந்தாலும் மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
 19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள். இதைத் தான் எல்லா மறைகளும் கூறுகின்றன.
 20. அதேபோல் அவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.
 21. இந்த உலகம் வளமிக்கது. அள்ளி எடுங்கள். உலக அழகைப் பாருங்கள்; ரசியுங்கள்; பருகுங்கள்.

இன்பத்திற்கான, அனைத்து வழிமுறைகளையும் நமது முன்னோர்களும் குறிப்பிட்டுள்ளனர். திருவள்ளுவர், திருமூலர், ஔவையார், நல்லாதனார் (திரிகடுகம்), போன்றவர்கள் மனித குலத்தின் மகிழ்ச்சிக்காக பல தத்துவங்களை கூறியுள்ளனர். அவர்கள் எடுத்துச்சொன்ன மனித சட்டங்கள் இன்றைய ‘இன்டர்நெட்’ உலகத்திற்கும் பொருந்தும். அந்தத் தமிழ் நூல்களை இன்டர்நெட்டிலும் படிக்கலாம். துன்பம் வரும் வேளையிலே சிரியுங்கள் என்றார் உலகப் புலவர் திருவள்ளுவர். துன்பத்தைக் கூட இன்பமாக்கும் வாழ்க்கைத் தத்துவம் அல்லவா அது?

முடிவாக ஒன்று:

உலகின் விசித்திரமான உண்மை என்னவென்றால் மகிழ்ச்சி ஒரு பொருளில் மட்டும் இல்லை. அது நமது மனதிலும் இருக்கிறது. மகிழ்ச்சியை ஏற்படுத்திய பொருள் பின்னாளில் துன்பத்தையும் தரலாம். தந்தையைத் தொந்தரவு செய்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தெருவில் சுற்றியபோது மகிழ்ச்சி. ஆனால் அதே இரு சக்கர வண்டி லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தால் இரண்டு கால்களையும் இழக்க நேரும் போது அது துன்பமாக அமைகிறது. அதிக மகிழ்ச்சியைத் தருகிறது என்று பகலும் இரவும் தொடர்ந்து ‘கம்ப்யூட்டர் கேம்’ விளையாடிய போது மகிழ்ச்சி தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எல்லா பாடத்திலும் தோல்வி என்று அறிக்கை வந்தபோது மகிழ்ச்சி இல்லை. ஆக, எந்த செயல் மகிழ்ச்சியைத் தருகிறது அல்லது எது துன்பத்தைத் தருகிறது என்பதை நீங்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும்.

அப்படி சுயமாக சிந்தித்து, அதன் பின் மகிழ்ச்சியைத் தரும் செயல்களை மட்டும் செய்வது, உங்களுக்கும் பிறருக்கும் (இவ்வுலகில் நமக்கு முன் தோன்றிய செடிகள், மரங்கள், விலங்குகள் அனைத்திற்கும்) நன்மையும், மகிழ்ச்சியும், நிம்மதியும் தருவதாக இருக்கும். நீங்களே கூட பலரின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிடலாம்!

இந்த இதழை மேலும்

 

3 Comments

 1. sivaraman says:

  Really amazing, my best friends are my books only. Really my books are shape my life.

 2. kamali says:

  its true

 3. Praveen kumar Purusothaman says:

  Unmaiyagava ethanai vasikum bothu enudaya valkayail ethil kuripitulavatrai pinthodara vedum enum aval enakul elunthu ulathu. ethai eluthiyavaruku enudaya Nandri kalai samarpikiran.

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்