Home » Articles » கண்ணா மூச்சு

 
கண்ணா மூச்சு


அனந்தகுமார் இரா
Author:

தென் ஆப்பிரிக்காவில் கடலோர அலைகளில் தவழ்ந்து விளையாடும் சர்ஃபிங் செய்யும் விளையாட்டு குறித்து. கதிரேசன் செய்திதாளில் தகவல் ஒன்றை படித்தான் தென் ஆப்பிரிக்கா அருகில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல், ஏராளமான ‘பெரிய வெள்ளை’ என்றழைக்கப்படும், வெள்ளைச் சுறாக்களைக் கொண்டது. சுறாமீன்கள் இருக்கின்றகடல் ஓரத்தில் எழும் அலைகளில் சறுக்கி, அலைச்சறுக்கு விளையாடுவது; விதியோடு கண்ணாமூச்சி விளையாடுவது; இரண்டும் ஒன்றுதான் என்று கதிரேசன் நினைத்தான். வாழ்க்கை வழக்கம்போல் சென்று கொண்டிருக்க, விளையாட்டிற்காக? இப்படி ஏன் உயிரை பணயம் வைக்க வேண்டும்? என்று ஆச்சரியப்பட்டான் கதிரேசன்.

மூச்சு நின்று போகுமளவு அபாயம் இருந்த போதிலும், அதிலும் நிறைய பேர் ஈடுபாடு காட்டுகின்றார்கள். பாதுகாப்பிற்காக, நிறைய அலுவலர்கள், வைத்த கண் வாங்காமல் கடலை பைனாகுலர் மூலமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் “சார்க் ஸ்பாட்டர்ஸ்” எனப்படும் சுறாமீனைக் கண்டுபிடிக்கின்றவர்கள். ஒரு வருடத்தில் ஆறுவிளையாட்டுவீரர்களேனும் சராசரியாக, சுறாவால் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதனால் சுற்றுலாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கையாக, “சார்க் ஸ்பாட்டர்ஸ்” எதாவதொருசுறாவைப் பார்த்துவிட்டால் சைரன் ஒலிக்கச் செய்து, வெள்ளைக் கொடியையும் ஏற்றிவிடுகின்றனர். அதனையடுத்த ஓரிருநிமிடங்களில் கடற்கரையோர நீரிலிருந்து அனைவருமே கரையேறிவிடுகின்றனர். தற்பொழுது, விபத்தைக் குறைப்பதற்கான மின்சார வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குறை வழுத்த மின்சாரத்தால் சுறாவிற்கோ, மனிதர்களுக்கோபெரிய ஆபத்து ஏதும் இல்லை. சுறாக்களின் மூக்குநுனி மின்சாரத்திற்கு ஒவ்வாமை கொண்டது. எனவே அவை விலகிச் சென்று விடுகின்றன. மனிதர்கள் தொட்டால் லேசான சுறுசுறு, எனும் உணர்வே வருகின்றது என்று செய்தித்தாள் சொல்லியது.

உயிர் மூச்சு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சக மனிதரின் கண் பார்வையை நம்பி, எல்லாவற்றையும், பணயம் வைத்து, கண்ணா மூச்சு, ஆடிக்கொண்டிருக்கின்றார்களே, என்று கதிரேசன் ஆச்சரியப்பட்டான். விளைவு இக்கட்டுரைத் தலைப்பு.

கண்கள் உலகின் அபாயங்களை அடுக்கடுக்காக தேடிக்கண்டுபிடிக்க பழக்கப் படுத்தப்படுகின்றன. சுறாக்கள் எத்தகைய சூழல் வரும், எத்தகைய சுழலுக்கு இழுக்கும்? என்று யாராலும் கணிக்க முடியாது. அந்தச் செய்திக்கட்டுரையிலேயே ஸ்பீல்பெரிக்குடைய என்னும் திரைப்படத்து த்ரில் குறித்து பேசியிருந்தார்கள். வாழ்க்கை அப்படிப்பட்டதுதான். சுறாக்கள் வருவதைப்பார்த்தால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக விளையாட முடியாது. கலந்துகொள்ள பெயரே கொடுக்காமல் அச்சப்பட்டால், அவ்வளவுதான் வாழ்க்கை; அலைகளின் மீது சறுக்கி விளையாடும் வாய்ப்பே இல்லாமல் போகின்றது. சுறா வருமா? வராதா? என்கின்றகவலையை விலக்கி வைத்தால் தான் விளையாட்டே ஆரம்பிக்கும்.

‘மோபி டிக்’ என்கின்ற’ஹெர்மன் மெல்வில்’ புத்தகமும் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை குறித்தே பேசியிருந்தது. அதில் ஒரு திமிங்கலம் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும் என்று கண்ணா மூச்சு காட்டி கடைசியில் ஒருவரைத் தவிர எல்லோரையும் அது அழித்துவிடுவதாக தத்துவம் பேசியிருப்பார்.

கதிரேசன் அலுவலகத்தில் நிறையப்பேர் பணிபுரிகின்றனர். வங்கியில் சிலபல கணக்குக்களை வாடிக்கையாளர்களின் இ-மெயில்களைப் பகிர்ந்து பாஸ்வேர்டு வைத்துப் பார்த்து பதில் சொல்வது வழக்கம். முன்பு ஒருநாள், சக அலுவலர், சுப்பிரமணியம் தனது மகளின் திருமணத்திற்காக கதிரேசனிடம் உதவி கேட்க, அவர், ‘உடனடியாக உதவிசெய்ய இயலவில்லை’ என்று கூறி நேர அவகாசம் கேட்டிருந்தார். சுப்பு பலமுறை கேட்டும் பார்த்துவிட்டார். கதிரேசன் பிடி கொடுக்கவில்லை. உதவி செய்ய முடியாது என்றில்லை, ஆனாலும் கதிரேசனின் மற்றபணிகளுக்கிடையே, சுப்புவின் மகள் திருமண விசயமாக சிந்திக்க முடியாமல் போனது. ‘சுப்பு மகளுக்கு அமைந்த வரன் குறித்து விசாரித்து சொல்வது’ என்பது அந்த உதவியின் சாரம்.

இதில் சிக்கல் கூட இருக்கிறது பால் திரியரது எப்போ? என்று பாத்திரம் அறியுமா? என்று கள்ளிக்காட்டு இதிகாசத்தில் மேற்கோள் காட்டியுள்ளவாறு மனித மனம் எப்பொழுது மாறும்? என்பது தெரியாமல் இருக்க? எதிர்கால மருமகன் குறித்து ஏடாகூடமாய் ஏதாவது சொல்லி வைக்க, அது சரியாகவோ, தவறாகவோ? போனால் இருபுறமும் சங்கடம் என கதிரேசன் தயங்க…

இந்தச் சூழ்நிலையில், தினமும் பணிபுரியும் கணினி, பாஸ்வேர்டு தவறு என்று கதிசேரனை முறைத்தது. உடனே கணினி துறையை அணுகிய கதிரேசன், ஒரு வேளை, சுப்பு பாஸ்வேர்டை மாற்றி இருக்கலாம், கம்ப்யூட்டரில் Re-set செய்து கொடுங்கள் என்று சொன்னார். இடையில் ஒருநாள் போய்விட்டது. சுப்பு, தான், உதவி செய்யாத, கோபத்தில்தான், தனக்கு எதிராக இப்படி பாஸ்வேர்டை எல்லாம் மாற்றி குழப்பம் விளைவிக்க நினைப்பதாக, நினைத்துக்கொண்டார். அதனால், சுப்புவோடு நேருக்கு நேர் பேசவும் தயங்கினார். சுப்புவை பார்க்கும் பொழுதொல்லாம், இவன் இன்னும் ஏதோ, தீங்கு செய்துவிடப் போகின்றான் என்றும் அஞ்சினார்.

அலைச்சறுக்கு விளையாட்டில், சுறாக்களின் வருகை போல, சுப்புவை ‘சுறா’ ஆக்கி, அச்சக் கடல் நீந்தினார் கதிசேரன். தயக்கம் மற்றும் பயம் அவர் மூச்சை மிரட்டியது. கணினியில் முக்கியமான தகவல்களை எடுக்க முடியாமல் போய்விடுமோ? என்கின்ற குழப்பம் சேர்ந்து கொண்டது. இடையில், தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த பாஸ்வேர்டை சரிபார்க்கலாம் என்று எதேச்சையாக எடுத்துப் பார்த்தவர் தூக்கி வாறிப் போட்டு அதிர்ந்தார். ஆம், பாஸ்வேர்டு, 63 என நினைத்தது 66 என்று சரியாக இருந்தது. இவராக மாற்றி நினைத்துக்கொண்டார். ஆனால் யாரும், குறிப்பாக சுப்பு, மாற்றிவிடவில்லை என்பதையும் புரிந்து கொண்டார். அதன்பிறகு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. இடையில் சுப்பு வேறு துறைக்கு மாறுதலாகி, மும்பை சென்றுவிட்டார்.  கதிரேசன் தனக்குள்ளே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்ததை எண்ணி மூச்சுக்கு மூச்சு வருத்தப்பட்டு, திருத்தப்பட்டார். இது மனசுக்குள்ளேயே நடந்த மாற்றம். வேறு யாராலும், ஏன் சுப்புவால் கூட இவ்வளவு தெளிவான சிந்தனையை தோற்றுவித்திருக்க முடியுமா? என்பது சந்தேகமே.

கண்களை மூடிக்கொண்டு எடுக்கப்படும் சில முடிவுகள் மூச்சுள்ள வரை தவறானவைகளாக போய்விடுகின்றன. மூச்சை சுவாசிக்கும் பொழுதே அச்சம் தவிர்க்கும் வண்ணம் அது அமைய வேண்டும். சிலபல முடிவுகளுக்கான அடிப்படைகளை உணர்ச்சி வசப்படாமல் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அதற்கு தியான வழிமுறைகள் உதவலாம். மூச்சுப்பயிற்சியை தியானம் செய்யும் பொழுது சொல்லித்தருகின்றனர்.

கதிரேசன் தன் வாரிசுகளுக்கு நீச்சல் பயிற்சியளிக்கும் கோச் செல்வேந்திரன் சொல்லக் கேட்டது நினைவிற்கு வருகின்றது. நீச்சல் ‘இராஜ யோகம்’ என்கின்ற பயிற்சியாம். சின்ன வயதில் மிக ஆழமாக இருக்கின்றகிணற்று நீரின் சில்லென்ற குளியலும் சேர்த்து ஞாபகம் வந்தது. கதிரேசனின் மாமா, ‘நெட்டை சதாசிவம்’ கிணற்றில் தூக்கி வீசிவிடுவார் என்கின்ற பிரசித்திக்கு அஞ்சி சோளக்காட்டிற்குள் அறுத்துவிட்ட, கட்டைகள், வெறுங்கால் குத்தி விடாமல், இலாவகமாக, யார் கையிலும் சிக்காமல் தப்பி ஓடினான். சின்னக் கதிரேசன் அந்தக் காலத்தில் அதன் பின்னர் தன்னைவிட சின்னப் பையன்களோடு போய் பல்லடம் பகுதியில் பாயும் பி.ஏ.பி வாய்க்கால் பாய்ந்து கத்துக் கொண்டது. கடப்பாறைநீச்சலுக்கு கொஞ்சம் மூத்த வகை நீச்சல். அதில் கழுத்து நீர்ப்பரப்புக்கு மேலேயே எப்போதும் தொன்னூறு டிகிரியில் இருக்கும். ஆனால் செல்வேந்திரன் சார் சொல்லித்தந்த நீச்சல் தொலைக்காட்சியில் மைக்கேல் பெல்ப்ஸ் நீத்தும் வகை சார்ந்தது. பெல்ப்ஸ் நீச்சல், மூச்சுப்பயிற்சி மூலம் உடல் மட்டத்தில் தலை ஒரே நேர்கோட்டில் வைக்கப்படுகின்றது. நீந்துகையில், சற்றே சாய்ந்து மேலேழும்பி காற்றை உள்வாங்கிக் கொண்டு அடுத்து உள்ளேயே முங்கியவாறு ஊதிக்கொண்டே முன்னேறி கைகால்களை இயக்க வேண்டி உள்ளது. நீச்சல் போட்டி வீடியோ பதிவொன்றை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்ற தல்லவா?  பாருங்களேன் என்று கதிரேசன் சொல்கின்றார்.

அவ்வாறு நீந்துகையில் நுரையீரல் முழுக்க முழுக்க காற்று நிறைகின்றது பின்னர் கையசைவு கால் அசைவில் உள்ளம் கவனிக்கின்றது. இந்தத் தருணத்தில் மூச்சை மட்டுமே மனம் கவனிக்கின்றது. ஒருமுகப்படுகின்றது. கண்ணாமூச்சி ஆடி தவறான முடிவுகளெடுக்கும் மனதை மூச்சுப்பயிற்சி மூலம் சுயபரிசோதனை செய்து பழக்க முடிகின்றது. நீண்ட நெடுநாட்களாக எடுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட மனப் பிரமைகள் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டி இருக்கலாம். ‘பயம் என்னும் தலைப்பில் புதுமைப்பித்தன் எழுதிய கதை அற்புதமானது. இங்கே, பொருத்தமானது. கண்ணா மூச்சிகள் கண்ணா மூச்சுகளாக மாற்றப்பட வேண்டும்.   தென்ஆப்பிரிக்க கடல் அலைச்சறுக்கும் சாகசவிளையாட்டாகட்டும். அதற்கு கொஞ்சம் குறைந்த நேரு விளையாட்டரங்கில் கால்பந்தாட்டமாகட்டும். அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் உயிரைப் பணயம் வைக்கும் அபாயகரமான விளையாட்டுக்கள் அந்தந்த கணத்தில் அதில் ஈடுபடுபவர்களை வாழச் செய்கின்றன. இதையே நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்றும், தத்துவஞானிகள், ஜென் தத்துவக் கதைகளில் சொல்லியுள்ளனர். ‘பவர் ஆஃப் நவ்’ என்கின்ற ‘எட்கார்ட் டல்’ உடைய புத்தகத்தை ஏராளமான முறைகள் கதிரேசன் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கின்றார். கதிரேசனுக்கு தத்துவக் கதைகள் தடுமாற்றத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்து வந்துள்ளன. ஜென் கதைகள் என்னும் பட்டியலிலுள்ள பல பேரின் லோக்கல் கதைகளையும் சேர்த்து, கதைகட்டி விட்டார்களோ? யார் இது ஜென்; இது ஜென் அல்ல; என்று ஜப்பானியர்களிடம் சென்று அக்மார்க் முத்திரை பெற்று வருவது? கதிரேசனுக்கு கோடிக்கணக்கில் விற்பனையாகின்றது என்று செய்தித்தாளில் பிரசுரமாகும் பிரபல ஓவியங்களைப் பார்க்கும் பொழுது உலகின் லாஜிக் காலடியில் நழுவுவது போலத் தோன்றும்.

கண்ணாமூச்சிதான் அது. ஓவியங்களின் விலையைக் கேட்டால் மூச்சடைத்துப் போகும். சில ஜென் என்று கூறப்படும் கதைகளும் அதே ஸ்டில்தான். புரிந்துகொள்ள முடியாததெல்லாம் ஒரு பிரமிப்பு எஃபக்ட் கொடுத்து கலைக்கண்கள் வேண்டும் என்று வேண்டவைத்து விடுகின்றன. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்னும் பழமொழி நிகழ்கால வாழ்க்கையைச் சொல்கின்றது.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்                                

                              – குறள் 484

தூங்குக தூங்கிற் செயற்பாலக என்பன பேன்றதிருக்குறள்கள் அந்தந்த நேரத்தில் அந்தந்த செயல்களைத் தவிர மற்றசெயல்களைப் பற்றி எண்ணத்தேவையில்லை என்றும் ஆணித்தரமாக சொல்கின்றன எனலாம். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கிறது என்று கண்கள் முன்பு பூச்சி பறக்க படிப்பதாக கதிரேசன் கேள்விப்பட்டார்.

முப்பது நாட்களுக்கும் மேல் இருக்கும் பொழுது கண்ணாமூச்சி விளையாடாமல் ஒரு கால அட்டவணை போட்டு அதை அவ்வப்போதே திருப்புதல் செய்து படித்தல் நன்மை பயக்கும். “கதிரேசன், எதுக்கும் ஒருமுறைநீங்க நேரில் வந்து எங்க எதிர்காலமே, அவனோட / அவளோட தேர்வெழுதப்போகும் கையில்தான் இருக்கு “அப்படின்னு சொல்லிட்டுப் போங்க” என்று உறவினர்கள் அழைத்தனர். தன் மகன், மகள்களின் பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சைக்காக கதிரேசனுக்கு, இவ்வளவு அழுத்தம் கொடுப்பதுகிரிக்கெட் மேட்சின் பொழுது ஓவராக எதிர்பார்த்துசொதப்புவது மாதிரி ஆகிவிடக்கூடாதே! என்றுதான் தோன்றுகிறது.

தேர்வு முடிவுகள் முக்கியமானவைதான்; ஆனால் அவற்றோடே முக்கியமானவை முடிந்து போகின்றன என்று முடிவு செய்துவிட வேண்டியதில்லை‘ கல்லூரிகளின் தேர்வு அவசியமானதுதான். ஆனால் அத்தோடு தேர்வுகள் அஸ்தமிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் விசித்திரங்களால் விரவப்பட்டுள்ளது. கண்களில் கனவுகளை நிரப்புபவர்களுக்கும் மூச்சுப்பயிற்சி செய்பவர்களுக்கும் கண்ணாமூச்சு  விளையாடுபவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் திருநாளே! கண்ணுக்குத் தெரியாத, ஆனால் வந்துவிடுமோ என்று அச்சமூட்டுகின்ற ‘சுறாமீன்’ கவலைகள் பல வகைப்படும். அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. மூச்சுப்பயிற்சி போல, பாஸிடிவ் எண்ணங்களை சுவாசித்து கண்ணாமூச்சியை, கண்ணா மூச்சு ஆக்குவோமாக.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2015

என் பள்ளி
பயப்படாதே
வரலாற்றில் ஒளிவீசும் தைரியத் திலகங்கள்
நாளைய விடியலுக்கான நம்பிக்கைக் கதவுகள் திறக்கப்படும்!
படித்தால் பெரியாளாகி விடுவாய்
யாரிடம் வேலையை ஒப்படைப்பது
தன்னம்பிக்கை விஞ்ஞானிகள்
பன்றிக்காய்ச்சல்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
வெற்றி எங்கே?
பிராணயாமம்
கண்ணா மூச்சு
உழைக்க உறுதி எடு! உலகம் போற்றப் பெயரெடு!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்