Home » Articles » திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்

 
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்


செல்வராஜ் என்
Author:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில் வள்ளுவத்தைப் பாமர மக்களிடமும், மாணவ மாணவிகளிடமும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிற வள்ளுவத் தொண்டர் ஒருவர் வாழ்ந்து வருகிறார் என அறிந்த போது அகம் மகிழ்ந்து அவர் முகம் கண்டோம்…

தனது மாணவப் பருவம் முதல் ஊதியம், பரிசுப் பொதி, பயணச்செலவு எதுவும் பெறாமல் கிராமங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிற்குச் சென்று வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறிகளைப் பரப்பும் அறப்பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்று அவர் கூறிய போது இப்படிப்பட்டவர்களால் தானே “தமிழ்” இன்றும் வாழ்ந்து வருகிறது என நெகிழ்ந்தோம்ங!

குறள் நெறி வேந்தர், திருக்குறள் ஞானி, திருக்குறள் பேரொளி, திருக்குறள் தூதர், நடமாடும் அய்யன், திருவள்ளுவர் நூலகம் என பல விருதுகள் பெற்றதுடன், முன்னாள் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும் தன்னால் இன்று பல நூறு மாணவ-மாணவிகள் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து, அதன் பொருள் அறிந்து வாழ்வில் உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதே எனக்கு எல்லாவற்றையும் விட உயர்வு தருகிறது என்பதை அவர் சொல்லக் கேட்கும் போதே நாம் வியப்படைந்தோம்!

திருவள்ளுவப் பெருந்தகையாரே எனக்கு வழிபடும் தெய்வம்; திருக்குறளே வழிபடும் நூல் என்றபோது,

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்”

என்ற வள்ளுவரின் குறள் நம் முன்னே வந்தது. “தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்று இருந்தாலும், அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தோம். வள்ளுவர் புகழ் பரப்பும் சாமியை ‘திருக்குறள் பாலுசாமியை’ நாமும் வணங்கி நின்றோம்!

திருக்குறள் பாலுசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், செல்லப்ப கவுண்டன் புதூரில் திரு. கு. குப்பணகவுண்டர் – திருமதி. கு. மயிலாத்தாள் தம்பதியர்களின் ஒரே மகன். ஐந்து தலைமுறைகளாக பாடசாலைக்கு சென்றிராத உழவுத்தொழிலை உயிர்த் தொழிலாக கொண்ட குடும்பத்தில் முதன் முதலாகப் பாடசாலைக்குச் சென்றவர்.

சொந்தக் கிராமத்தில் ஆரம்பப் பள்ளிப்படிப்பையும், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையும் படித்தவர். அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் வேதியியல் துறையில் இளமறிவியல் பட்டப்படிப்பும் (Bsc.Chemistry), தமிழ்த்துறையில் முதுகலைத் தமிழ்ப் படிப்பும் முடித்தவர். மேலும் “குலோத்துங்கன் கவிதைகள்” (வா.செ. குழந்தைசாமி)  ஓர் ஆய்வு என்றதலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும், பாரதியார் பல்கலைக் கழகத்தில் வா.செ. குழந்தைசாமியின் “வாழ்வும் தமிழப்பணியும்” என்றதலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் அறிஞர் (Ph.D) பட்டமும் பெற்றவர்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. காடுகளிலும், மலைகளிலும் இரண்டாண்டுகள் வெள்ளாடு மேய்த்து வருந்திக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். மனப்புண்ணை ஆற்றி மனதைப் பக்குவப்படுத்தியது. வழிகாட்டுதல் இல்லாத நிலையில் வலிபோக்கி வாழ்வில் ஒளி கூட்டியது திருக்குறளே என்றவரிடம்… உங்கள் பெயருடன் திருக்குறள் இணைந்தது எப்படி என்றோம்…

“மாணவப் பருவத்திலிருந்தே திருக்குறளின் மீது இருந்த ஈடுபாடு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும், உடன் பயின்ற மாணவர்களையும் ‘திருக்குறள் பாலுசாமி’ என்று அழைக்க வைத்தது. அது பிடித்திருந்தது. வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி வாழ அப்படி அழைப்பது உதவும் என்று அப்படியே வைத்துக் கொண்டேன்” என்றார்.

 வேதியியல் துறையில் கால் பதித்து தமிழ்த்துறைக்கு எப்படி வந்தீர்கள் என்றபோது, “பொருளாதார பின்புலமின்மை தான் காரணம். இளமறிவியல் பட்டப்படிப்பு முடித்து முது அறிவியல் பட்டப்படிப்பு படிக்க வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. தங்கிப் படிக்குமளவு வசதி இல்லை. ஆனாலும் மேலே படிக்க வேண்டும் என்றவெறி அதே பழனி ஆண்டவர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் எடுத்தேன். தொடர்ந்து தமிழோடு பயணப்பட்டு ஆய்வியல் அறிஞர் பட்டத்தையும் பெற்று தற்பொழுது கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைவிரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன்” என்றார்.

தனது அயராத உழைப்பால் இன்று நீர்வளத் துறையில் (Hydrology) உலகிலுள்ள ஐந்து தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக, எட்டுப் பல்கலைக்கழகங்களிடமிருந்து மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவராக, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், சாகித்ய அகாடமி, திருவள்ளுவர், பாவேந்தர் விருதுகளுக்கு சொந்தக்காரராக வாழும் வா.செ. குழந்தைசாமி அவர்களே எனக்கு முன்மாதிரி என்கிற திருக்குறள் பாலுசாமி அவர்களிடம், “தங்களுக்குப் பிடித்த குறட்பா” எதுவென்று கேட்டபோது…

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு

(குறள்: 595)

(நீர் நிலையிலுள்ள நீர்ப்பூக்களின் தண்டின் நீளம் தண்ணீரின் அளவைப் பொறுத்தது. அதுபோல மனிதர்களின் உயர்வு அவர்களின் மனதைப் பொறுத்தது) என்றார்.

கணினியை வென்ற சிறப்பு உங்களுக்கிருக்கிறதே என்றபோது… “ஆம், கணினித் திரையில் குறள் படிக்க வேண்டுமென்றால் விசைப்பட்டினை அழுத்தி சில நொடிப் பொழுதுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் 1330 குறட்பாக்களில் எந்த எண்ணைக் கூறினாலும் அடுத்த நொடிப் பொழுதில் நான் சொல்லி விடுவேன். இந்தச் சாதிப்பிற்குக் காரணம் எனது தன்னம்பிக்கை தான்” என்றார்.

தெய்வம் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை; மனிதன் தெய்வத்திற்குச் சொன்னது திருவாசகம்; மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு இளம் பருவம் முதல் வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்பித்தால் எதிர்காலத்தில் அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர்களாக விளங்குவார்கள். அதற்காக திருக்குறளை உலகமெல்லாம் பரப்பும் அறப்பணியில் என்னுடைய வாழ்நாள் முழுவதையும் ஈடுபடுத்துவேன் என்றவரிடம்,

திருக்குறளுக்கு உரை எழுதுவீர்களா? என்றபோது, “எளிய உரையெழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எல்லோரும் பயனடையும் விதமாக அதனை மிகச்சிறந்த நூலாக குறைந்த விலையில் வழங்கவும் முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.

தனது வாழ்வின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் உறுதுணை நின்றவர்களை தவறாமல் நினைவு கூறுவதிலாகட்டும், பணியாற்றி வரும் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் ‘திருக்குறள் பேரவையின் செயல்பாடுகளை விவரித்து மகிழ்வதிலாகட்டும், நட்பு பாராட்டி நலிந்தோர்க்கு உதவுவதிலாகட்டும், தன்னிடம் பாடம் படிக்கும் மாணவ மாணவிகள் வியந்து தன்னைப் பாராட்டியதை உயரிய விருதாகவே கருதுவதிலாகட்டும், இவரை யாரும் மிஞ்சிட முடியாது என்றேநாம் எண்ணுகிறோம்.

உயர்ந்த நோக்கத்தோடு நல்லதே நினைத்து, நல்லதே செய்து வாழும் திருக்குறள் பாலுசாமி என்கிறஇந்த வள்ளுவத் தொண்டரின் எண்ணம் எல்லாம் குறள் வழி சமுதாயம் மலர வேண்டும் என்பது தான்… அவரின் எண்ணம் நிறைவேறட்டும். தமிழும்  வள்ளுவமும் உலகமெங்கும் பரவி ஆளட்டும்!

அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்!!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை