Home » Articles » உறவுகள் அமைவதெல்லாம்…

 
உறவுகள் அமைவதெல்லாம்…


கோவை ஆறுமுகம்
Author:

வாழ்க்கையே உறவுகள் தான்’ என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுதல் அவசியம். உறவுமுறைகள் சரியில்லாத நிலையில் சரிப்படுத்தாத வரையில்… வாழ்க்கை சரியாகும் என்று எதிர்ப்பார்ப்பது நடக்காத ஒன்று.

‘சுவர் எப்படியோ சித்திரம் அப்படியே’ வளைந்து குவிந்த சுவரில் எவ்வளவு அழகான உருவத்தை வரைந்தாலும் ரசித்து வரைந்தாலும் முடிவில் ரசிக்க முடியாமல்தான் அமையும். இங்கே சீர்படுத்த வேண்டியது ஓவியத்தையல்ல; சுவற்றைத் தானே.

அதுபோல வாழ்க்கையில் சீர்ப்படுத்துதல் என்பது உறவுமுறைகள்

எனும் சுவர்களை வளப்படத்துதலே!

ஆனால் உறவுகளை சரிப்படுத்துவதென்பது சிரமமான காரியம். ஏனென்றால் ‘சரி செய்வது’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது. மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது’ என்பதுதான். ஆனால் அப்படியல்ல. புரிந்து கொள்ளுங்கள்!

ஒரு வெங்காயத்தை உரித்துக் கொண்டே போனால் முடிவில் ஒன்றுமே இருக்காது. ஒருவரை புரிந்து கொள்ளும் முயற்சி என்பதும் அது போலத்தான். ஒரு கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் விமர்சிக்கவும் நிர்ணயம் செய்யவும்  மாற்றவும் ஜெயிக்கவும் போராடுகிறார்கள். முடிவு, பிரச்சனை, சண்டை. உதாரணமாக…

கணவன் அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் அவனின் சந்தேகம் கொண்ட மனைவி அவனை ஆராய்கிறாள். அவன் சட்டையில் ஒரு நீளமான தலைமுடியை  கண்டெடுத்தவள் கோபமாக கேட்டாள்.

இத்தனை நேரம் எவளை கெஞ்சிட்டு வர்றீங்க? என்றாள். கணவன்  சொன்னதை  கேட்க  மறுத்து  சண்டையிட்டாள்.

மறுநாள்… சட்டையில் வெள்ளை நிறதலைமுடி கண்டெடுத்து கத்தினாள். ச்சே…கிழவியைக்கூட விட்டு வைக்க மாட்டிங்களா? என்றாள்.

மறுநாள் அலுவலகத்திலேயே சட்டையை சுத்தமாக உதறிவிட்டுக்கொண்டு வந்தான். வழக்கமாக ஆராய்ந்தாள். தலைமுடி எதுவும் இல்லை. ஆனாலும்  ஆவேசமாக, அடப்பாவி மனுஷா… மொட்டையடிச்சவளையும் விடமாட்டியா? என்றாளாம். ஒன்று சேர்ந்து வாழும் குடும்பவாழ்க்கையில் சந்தோஷம் வராமல் சந்தேகமும் சங்கடமும் வரக்காரணம், நம் மனதில் இருக்கும் நம் சொந்த கருத்துக்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் விலகாத வரை சந்தோஷம் சாத்தியம் இல்லை. நாம் மாய உலகில் கற்பனையில் வாழ்கிறோம் என்பதை அறியாமல் நிஜத்திற்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத தெளிவல்லாத மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கை உறவுகளில் குழப்பங்கள், குதர்க்கங்கள், பிரச்சனைகள். நம் பயம், எரிச்சல், சந்தேகம், துக்கம் எல்லாமே யாரையோ எதையோ ஒன்றைசுற்றி உருவான கற்பனைகளால் உருவானவை. நடந்த அல்லது நடக்கப் போகிறஒரு காரியத்தை நாம் கற்பனை செய்யும் கோணத்தைப் பொருத்து நிம்மதியும் போராட்டமும் நிர்ணயமாகிறது.

மற்றவர்களை முழுமையாக புரிந்து கொள்ளும் ‘முயற்சியால்’ எந்த பலனும்  இருக்காது. ஒருவேளை மன்னித்து மறந்து சரி செய்தாலும் அது நிரந்தர தீர்வாக இருக்காது. மீண்டும் வேறுவகையில் உறவு முறிவு ஏற்படும். இதற்கு காரணம் புரிந்து கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சி தான். அப்படியென்றால் நிரந்தரமாக உண்மையாக சீர்படுத்துவது எப்படி?

ஒன்றைநினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே ‘நாம் பதிவுசெய்யப்பட்ட கணினிகள் என்பதையும் இன்னும் நம்மால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது.என்பதையும் கற்றுக் கொள்ளவேயில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.

கருவில் தொடங்கி, பிறப்பில் ஏற்பட்ட பாதிப்புகள், பருவம், படிப்பு, கலாச்சாரம் மற்றம் நிர்ணயங்கள் ஆகியவை நம்மிடம் பதிவாகியுள்ளது. இதை பொருத்துதான் நம் வாழ்க்கையும் அமையும். சிறு உதாரணம், சினிமாவில் கதாநாயகன் முடிவில் மரணமடைவதாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவை நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் மறுநாள் முடிவு மாறும் என்று  ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பது போலத்தான். முடிவு மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது யார் தவறு? இந்த தவறைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டே இருக்கிறோம். முடிவை புரிந்து ஏற்றுக்கொண்டால்  முடிந்து விடும் பிரச்சனை.

ஆக, மற்றவர்களை மாற்றவும் புரிந்து கொள்ளவும் எடுக்கும் முயற்சி என்பது ஒரு குரங்கு இன்னொரு குரங்கை மாற்றும் முயற்சி போல!

நாம் புரிந்து கொள்ளவேண்டியது,

1.மற்றவர்களை மாற்றமுடியாது

2.அவர்கள் அப்படி நடந்து கொள்ள உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

3.அவர்களை புரிந்து கொண்டு அனுபவப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்வது என்றால் எப்படி?

ஒரு இனிப்பை சுவைக்கும் போது அதன் சுவையை அப்படியே அனுபவிப்போம் இல்லையா? அதைவிட்டு விட்டு அதைப்பற்றி ஆராய்ச்சியில் இறங்கி புரிந்துகொள்ள முயற்சி செய்ய மாட்டோம் அல்லவா! அதைப்போலத்தான்.

வீட்டில்  உள்ள உறவுகள்  தேவையின்றி புலம்பிக் கொண்டிருந்தால் செய்ய வேண்டியது அந்த சூழ்நிலையை அப்படியே சாதாரணமாக எடுத்துக்கொண்டு மனவலியை அனுபவிக்க வேண்டும். இது கஷ்டமான காரியம்தான் “ஏன்… இப்படி நடந்து கொள்கிறார்கள்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்றகுழப்பக் கேள்விகளுக்கு பதில் கிடையாது. எனவே அதைத் தவிர்த்திட வேண்டும்.

குறைசொல்லல்; அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நமக்குள்  ஏதோ ஒரு குறைஉள்ளது என்று அர்த்தம். அது… அகங்காரமாகவும் இருக்கலாம். அல்லது ஜெயிக்க வேண்டும் என்றஎண்ணமாகவும் இருக்கலாம். தன் ‘இமேஜ்’ எங்கே ‘டேமேஜ்’ ஆகிவிடுமோ என்றபயமாகவும் இருக்கலாம். இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க  மற்றவரை எடை போடாமல் குறைசொல்லாமல் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. இந்த அனுபவம் எந்த பிரச்சனையிலிருந்தும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை  எளிதாய்  கற்றுக்கொடுக்கும். ஒரு காரியம் நடந்து முடிய பல காரணங்கள் உண்டு. இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல இயலாது என்பதை அறிவோம்.     பின்னர்  ஏன் வீண் முயற்சியும் ஆராய்ச்சியும் செய்ய  வேண்டும்? கல்யாண வாழ்க்கை கசந்து விட்டது யார் காரணம்?

பெண் பார்த்ததிலிருந்து பந்தல் போட்டு, பந்தி போட்டது வரை குறைசொல்லிக் கொண்டே போகலாம். இந்த முடிவில்லாத விளையாட்டைத்தான் தினமும் விளையாடிக் கொண்டே இருக்கிறோம். இது தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. பூமியில் நல்லன வாழ நல்லதொரு அனுபவம் அவ்வளவுதான். ஏற்றுக்கொள்வதற்கான மனப் பயிற்சி

1.மற்றவர்களின் சுபாவம்

2.செயல்

3.உணர்வு

இவைகளை நம் ஒவ்வொரு உறவுகளிலும் புரிந்து  ஏற்றுக்கொண்டால் இதயத்தில் கருணை என்பது தானாக சுரக்கும். அன்பு மலரும். உறவு முறைகள் சீராக அமையும்.

எண்ணப்படி வாழ்வு!

இன்று… வாழ்க்கையில் உயர்ந்து ஜெயித்தவர்களின் பிண்ணனி

வெற்றியின் இரகசியமும் இதுதான்

வாழ்க்கையில் ஜெயிப்பதை விட

வாழ்க்கையை ஜெயிப்பதே சிறந்தது!

நாமும் வாழ்க்கையை ஜெயிப்போமே!

இந்த இதழை மேலும்

 

1 Comment

  1. கீதா says:

    சார் உங்களது இந்த பதிவு என்னுடைய பல பிரச்சனை க்கு தீர்வு ஆகிவிட்டது நன்றி.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை