Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஒருவரால் சாதிக்க முடியுமா?

 ஜெ. ஜெயப்பிரியா, சேலம்

அதிர்ஷ்டம் இருந்தால் தான் ஒருவரால் சாதிக்க முடியும் என்பது உண்மை அல்ல! சாதித்து முடித்தவனை அதிர்ஷ்டம் உள்ளவன் என்கிறோம் என்பது உண்மை. எனவே எடுத்த காரியத்தை நடத்திக் காட்டுங்கள்; நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவீர்கள்.

ஒருவர் படிப்பில், தொழிலில், பொருளாதாரத்தில் அல்லது குடும்ப வாழ்க்கையில், அரசியலில் வெற்றிபெற்று விட்டால் அவரை அதிர்ஷ்டசாலி என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்ததால் இவருக்கு இது கை கூடியது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த வெற்றியாளர் அந்த இலட்சியத்தை அடைய எவ்வளவு முயற்சி எடுத்திருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மாணவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அவன் அதிர்ஷ்டசாலி, இடம் கிடைக்காதவன் அதிர்ஷ்டமில்லாதவன். ஆனால் இந்தப் படிப்புக்கு இடம் பெற்ற மாணவன், எத்தனை ஆண்டுகளாக திட்டமிட்டு படித்திருப்பான் என்று யோசித்தீர்களா? நீளம் தாண்டும் போட்டியில் எவருமே வெற்றி பெற கோட்டிலிருந்து தாவுவது இல்லை. 20 மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று ஓடி வந்து பின்னர் தாவுவார்கள். அதுபோல இம்மாணவனும் முதலாம் வகுப்பிலிருந்தே திட்டமிட்டு படித்து மதிப்பெண் வாங்குவதை ஒரு பழக்கமாகவே கொண்டு பிளஸ் 2 தேர்விலும் அதே வேகத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளான். இதில் அதிர்ஷ்டம் எங்கே இருக்கிறது? “நீ எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறாயோ அந்த அளவிற்கு உனக்கு அதிர்ஷ்டம் உண்டு” என்று கேரி பிளேயர் (Gary  player) சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

எந்த மனிதனும் பிறக்கும்போது அதிர்ஷ்டசாலியாகவோ, துரதிர்ஷ்டசாலியாகவோ பிறப்பது இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களாகவும், வித்தியாசமான அறிவு மற்றும் திறமைப் பொக்கிஷங்களுடனும் பிறந்துள்ளோம். அந்த வகையில் எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு தனி ஆற்றலும் இல்லாதவர் அல்ல. இதை முடிவு செய்வது டி.என்.ஏ. இது நமது உடலிலுள்ள பல கோடி செல்களிலும் இருக்கிறது. நம் முன்னோர் செய்த மிகப்பெரிய தவறு, “ஒருவர் பிறக்கும்போது இவர் அதிர்ஷ்ட நட்சத்திரத்துடன் பிறந்துவிட்டார்; இவர் துரதிர்ஷ்ட நட்சத்திரத்துடன் பிறந்துவிட்டார் என்று தீர்மானித்தது தான். அதில் எந்த உண்மையும் இல்லை என்று விஞ்ஞானம் நமக்கு பகல் நேரத்து சூரிய ஒளி போல நிரூபித்துவிட்டது. என்றாலும் நாம் அவற்றை நம்பி, எனக்கு அதிர்ஷ்டம் இல்லை, நான் மோசமான நட்சத்திரத்தை உடையவன், ராகு காலத்தில் பிறந்துவிட்டேன் என்று நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்கிறோம். நமது பிள்ளைகளைத் தாழ்த்துகிறோம். எனக்குத் தெரிந்த மாணவன் ஒருவனை, தனது தந்தை நீ மோசமான நேரத்தில் பிறந்ததால் தான் எனக்கு இருதய நோய் வந்துவிட்டது என்று கூறி அவனைப் பார்க்கும்போதெல்லாம் திட்டுவார். அவர் மாமிசமும், கொழுப்பும், நெய்யும், இனிப்பும் தின்றதால் உடல் பெருத்ததும், இருதய இரத்தக்குழாய் அடைத்ததும் அவருக்குப் புலப்படவில்லை. மகன் பிறந்த நட்சத்திரம் தான் காரணமாம். இவர்கள் விஞ்ஞானத்தை கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் படித்து என்ன பயன் என்பது தெரியவில்லை.

எனது உறவினர் ஒருவருக்கு 5 பெண் பிள்ளைகள். எல்லோரும் அவரை துரதிர்ஷ்டசாலி என்று வசை பாடினர். அனுதாபம் தெரிவித்தனர். இன்னொரு உறவினருக்கு 5 ஆண்பிள்ளைகள். அந்த பெற்றோர் மற்றவரால் பாராட்டப்பட்டனர். அவர்களும் கவுரமாக தலைநிமிர்ந்து நடந்தனர். 5 ஆண்மக்களின் தாய் தந்தையராயிற்றே அதிர்ஷ்டசாலிகள் அல்லவா அவர்கள். இன்று 30 ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த பெண் பிள்ளைகள் அனைவரும் உயர்ந்த பதவிகளில் உன்னத வாழ்க்கை வாழ்கிறார்கள். அதேவேளையில் அந்த 5 ஆண்பிள்ளைகளில் ஒருவர்கூட உருப்படியான வேலையைப் பெறவில்லை. அதிர்ஷ்டசாலி தகப்பனுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆண்பிள்ளைகளாக பிறந்ததால் அதிர்ஷ்டம் என்றது தவறாகிப் போனது. பெண் பிள்ளைகள் தங்கள் நிலையறிந்து அல்லது உணர்ந்து, நல்ல செயலில் தங்களை ஈடுபடுத்தி, உழைத்து முன்னுக்கு வந்தனர். இன்று சாதனை படைத்த அவர்களை யாராவது துரதிர்ஷ்டசாலிகள் என்று கூறமுடியுமா? சாதனை படைப்பதற்கும், அதிர்ஷ்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதனை படைப்பவன் அதிர்ஷ்டசாலியாகிறான்… அவ்வளவு தான்.

நீங்கள் இன்று அதிர்ஷ்டசாலி என்பவர்கள் எல்லாம் மற்றவர்கள் தூங்கும் போது விழித்திருந்தவர்கள். மற்றவர்கள் முயற்சியை கைவிட்டபோதும் தொடர்ந்து முயன்றவர்கள். மற்றவர்கள் அலுவலகம் வரும் முன்பே வந்து, அவர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் வேலை செய்து தனது வேலையை முடித்து விட்டுச் சென்றவர்கள். மற்றவர்கள் தங்களது பிறந்த நேரத்தையும், நட்சத்திரத்தையும் நம்பிய போது அவர்கள் தனது திறமையையும், செயலையும் பொன்னான நிகழ்காலத்தையும் நம்பியவர்கள். சாதனைகள் படைத்த மக்கள் எவரும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருப்பதாக நம்பவில்லை. சந்திரனில் கால் பதித்ததும், விமானம் படைத்ததும்,  டி.வி. கண்டுபிடித்ததும், போலியோ நோய்க்கு மருந்து கண்டுபிடித்ததும் அதிர்ஷ்டத்தால் அல்ல. நீங்களும் அதிர்ஷ்டம் என்ற ஒன்றுள்ளது என்று நம்பாதீர்கள். ஏனெனில் உலகில் எவருக்கும் அதிர்ஷ்டம் என்று கிடையாது. பலவீனமானவர்கள், நம்பிக்கை சிறிதும் இல்லாதவர்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று திருப்திபட்டுக் கொள்ளட்டும்.

சரி சார், அப்படியானால் ஒருவருக்கு 1 கோடி ரூபாய் லாட்டரி அடித்தால் அவன் அதிர்ஷ்டசாலி இல்லையா? என்று கேட்பீர்கள். அவன் அதிர்ஷ்டசாலியாக இருக்கவில்லை. அவனுக்கு அந்த லாட்டரி அடித்ததால், அதாவது மிஷின் அல்லது குலுக்கல் சீட்டு எடுத்தவன், எடுத்த சீட்டு அவனுடையதாக இருந்ததால் அவனுக்கு ஒரு கோடி கிடைத்தது. அதனால் அவன் அதிர்ஷ்டசாலியாக ஆனான். ஆனாலும் ஒன்றைச் சொல்லவில்லை. அவனும் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. சீட்டு எடுத்திருக்கிறான். அந்த முயற்சியின் பயன் தான் ‘லக்’ என்று கூறலாம். அல்லது லாட்டரி எடுக்கவில்லை என்றால், அவனுக்கு அந்த 100 ரூபாய் நட்டம் என்கிறபோது ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறான். அந்த ‘ரிஸ்க்’கிற்கு கிடைத்த பலன்.

ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவது ஒரு ஆபத்தான முதலீடு . அதாவது பரிசு கிடைப்பது என்பது அரியதானது. லட்சம் பேர்களில் ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுவான். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீயாகவும் இருக்கலாம். அது ஒரு Probability theory  என்று சொல்லலாம். ஒரு விஞ்ஞான வாய்ப்பு, குறைவான வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒருவருக்குக் கிடைக்கும் அவ்வளவு தான். அதற்காக கிடைத்தவனுக்கு முதலிலேயே ‘லக்’ இருந்தது என்று எப்படி சொல்வது. அப்படி ‘லக்’ இருந்திருந்தால் அவனுக்கு முன்பே 1 கோடி விழுந்திருக்க வேண்டாமா!

இதை எல்லாம் மீறி உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும், அப்படித்தான் சாதிக்க முடியும் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு ஒரு யோசனை. நீங்கள் அதிர்ஷ்டத்தை சம்பாதிக்கலாம். அதற்கு படுக்கையை விட்டு 5 மணிக்கு எழுந்திருங்கள். செய்யும் செயலை நேசியுங்கள். ஈடுபாட்டுடன் கடமையை ஆற்றுங்கள். மகிழ்ச்சியாக காணப்படுங்கள். உங்கள் தொழிலில் உங்களை மீறி எவரும் இல்லை என்ற தோற்றத்தை பள்ளியிலும், கல்லூரியிலும், தொழிற்சாலையிலும், உறவினர் மத்தியிலும் ஏற்படுத்துங்கள். ஒருநாளைக்கு 1 மணிநேரம் உடற்பயிற்சியை செய்யுங்கள். ஒரு மணிநேரம் செய்தித்தாள் படியுங்கள். ஒன்றன்பின் ஒன்றாக உங்களது வாழ்க்கையில் சாதனைகள் வந்து சேரும். உங்களுக்கும் நிறைய அதிர்ஷ்டம் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் உங்களுக்கு எது உண்மை என்று தெரியாமல் போகாது!

உழைப்பிற்கு கிடைக்கும் கூலி தான் அதிர்ஷ்டம்

வியர்வை தரும் லாபம் தான் அதிர்ஷ்டம்

வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் பக்குவம் தான் அதிர்ஷ்டம்

தோல்வியடைந்த பின்பும் தொடர்ந்து போராடும் பிடிவாதம் தான் அதிர்ஷ்டம்

வேலை கிடைத்த பின்னரும் தொடர்நது கற்கும் கல்வி தான் அதிர்ஷ்டம்

உனக்கு நீயே எழுதிய தலைவிதி தான் அதிர்ஷ்டம்

உனது அதிர்ஷ்டத்தின் ஆசிரியனும் நீயே!

உனது தலைவிதியின் தலைவனும் நீயே!!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை