Home » Articles » நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்

 
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்


வனிதாமணி பெ
Author:

சுவரிருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். உடல் நலனிருந்தால் நல்ல பல காரியங்கள் செய்திட முடியும். இன்று அனைவரும் உடல் நலம் கையில் இருக்க அதனைத்தேடி எங்கெங்கோ ஓடுகிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் உடல் நலத்தை நாடி அப்படி ஓடுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. தேவையற்றசெயல்பாடுகளும், மனஅழுத்தமும், உணவு பழக்கவழக்கங்களும், தொழில்நுட்ப மேம்பாடும், உடல்நலனை நலிய செய்து கொண்டிருக்கின்றன. அனைவரும் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தேடி ஓடிக்கொண்டு உடல்நலத்தில் பின்னேற்றத்தையே காண்கின்றனர். உடல் நலன் எங்கே! உடற்பயிற்சி கூடத்திலா? யோகக் கல்வியிலா? உணவுப் பழக்கத்திலா? பழரசத்திலா? பாக்கெட் உணவிலா? எங்கே கிடைக்கும்? நேரம் எங்கே? ஓய்வு எங்கே? பணம் இங்கே! என் உடல் நலம் எதிலே? என்று விடை தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நலம் பெற உடல்நலம் சார்ந்த இந்த பத்துக்கூற்றுகளைப் பகிர்ந்து கொள்வோமானால் நலன் நம்மைத் தேடி வரும்.

நேர்மறையாக சிந்தித்தல்

நல்லனவற்றை நினைத்து நல்ல செயல்களைச் செய்து நல்லவனாக இருந்தால் நல்லதே நடக்கும். எனவே நற்சிந்தனை, நற்செயல், நல்லெண்ணம் கொண்டு நடந்தால் வாழ்வு வளமானதாக அமையும்.

மகிழ்ச்சி (சந்தோஷம்)

புன்னகைக்கும் முகத்தோடு இருக்க முயல்வோம். நம் புன்னகை மற்றவரை புன்னகைக்கச் செய்யும். நம் மனமும், அடுத்தவர் மனமும் இதமாகும். உதவி புரிந்தால் மகிழ்ச்சி, செயல்களைச் செவ்வனே செய்தால் மகிழ்ச்சி, மகிழ்ச்சியினை அடைய நம் செயல்களே காரணம். வேலையைக் குறித்த நேரத்தில் செய்வோம். குறிப்பறிந்து செய்வோம். மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும்.

நேரம் தவறாமை

குறித்த நேரத்தில் குறித்த வேலைகளைத் திட்டமிட்டு தவறாமல் செய்தால் வாழ்க்கை வளமாகும். காலச்சக்கரத்தோடு போட்டி போட்டு கடமைகளை கனநொடி தவறாமல் செய்தல் வேண்டும்.

சுயமேம்பாடு

நாள்தோறும் நாம் செய்யும் வேலைகளில் தன்னம்பிக்கையும், தன்னடக்கமும் வேண்டும். தன்னம்பிக்கையோடும், சுய சிந்தனையோடும் செய்யும் செயல்கள் சுயமேம்பாட்டிற்காக உறுதுணையாக அமையும்.

சமூகத்துவம் சமூகத்தில் அனைவருடனும் நல்லுறவு பாராட்ட வேண்டும். மரியாதையுடன் பழக கற்றுக்கொள்ள வேண்டும். சிறிய செயல்களுக்கும் பெரியளவில் பாராட்டும் தன்மை வேண்டும். ஒவ்வொருவரின் நலனுமே சமூக நலம்! ஒவ்வொருவரும் நலமும் வளமும் பெற்றால் சமூகம் வளப்படும். அதனால் நாட்டின் நன்மைக்காக எல்லோரும் சமூக நலத்தினைப் போற்றுவோம்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கையும் செய்யும் செயல்களில் மனம் ஒன்றிய ஈடுபாடும் இருந்தால் வாழ்க்கை பயணம் சிறக்கும். பயம் சார்ந்த பக்தி, கடவுளை நம்பி ஏற்றுக்கொள்கிறசெயல்கள் நேர்மையுடனும், மனசாட்சியுடனும் நடத்திட வழிவகுக்கும்.

நடைப்பழக்கம்

நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் நடைபயணம் நலம் தரும். இரு சக்கர வாகனத்தைத் தவிர்த்து இரு கால்களை நம்பி நடைபயின்றால் இறுமாப்புடன் நோய் நொடியில்லாமல் வாழலாம்.

உணவு

காலையில் அரசனைப்போன்று முழுவயிறுடனும், மதியம் அரசியைப் போன்று அளவாக உண்டும், இரவில் பிச்சைக்காரனைப் போன்று அரைவயிறு உணவும் உண்டால் உடல் பருமனாகாது. உணவிற்கு இடையே திண்பண்டங்களை தவிர்த்தால் திடமாக வாழலாம். வாழ்வதற்காக உண்ண வேண்டும். உண்பதற்காக வாழக்கூடாது.

ஓய்வு

ஓய்வு என்பது ஊக்கமருந்து போன்றது. ஒரு வேலையைச் செய்யும்பொழுது அதைத் தொடர்ச்சியாக செய்யாமல் இடையே வேறு வேலையை ஒரு சில நேரம் செய்யும்பொழுது தொடர்ச்சியான வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கிறது. வலுவான வேலைக்கிடையே பாடல்களையோ! இசையையோ!கேட்பது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரும். கணநேர ஓய்வு கூட வேலைகளை செவ்வனே செய்ய வழிவகுக்கும்.

உறக்கம்

ஆழ்ந்த உறக்கம் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. நிம்மதியான, நிறைவான உறக்கம் மனதையும், உடலையும் புத்துணர்வாக்கும். நலம், செல்வம், அறிவுக்கூர்மை மூன்றும் பலப்படும்.

நமக்கான பிரச்சனைகள் உருவாவதற்கு காரணம் நாமாகாத்தான் இருக்க முடியும். மேற்சொன்ன பத்துக் கூற்றுகளையும் ஒரு மனிதன் தன் வாழ்வில் தவறாமல் பின்பற்றுவானேயானால் பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு காண முடியும். உடல் நலம் பேண நினைப்பவர் உடற்பயிற்சியுடன் மனப்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். உடல் நலனைத் தேடி கடினமான பயிற்சியையோ, மாத்திரையையோ, உணவுப் பழக்கத்தையோ மேற்கொண்டால் அது அந்தரத்தில் நிற்பதாகிவிடும். ஆயுள் முழுக்க முழு உடற்பயிற்சி, சரியான உணவு, தேவையான ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை இவை உடல்நலனைப் பராமரிக்கும். ஒரு தனிமனிதனின் நலன் ஒரு வீட்டின் நலன்! பல வீடுகளின் நலன்! ஒரு ஊரின் நலன்! ஒரு நாட்டின் நலன்!

பத்துக் கூற்றுகளையும் பின்பற்றுவோம்!

நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!

நாட்டின் நலம் காக்க! வளம் காக்க!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment