Home » Articles » சிரிப்பு

 
சிரிப்பு


அனந்தகுமார் இரா
Author:

சிரிப்பு என்ற தலைப்பை பார்த்தவுடன் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வந்து சேர்ந்தது மனதில்…

“ஒருத்தி சிரிக்க கூடாத இடத்தில்

சிரித்துத் தொலைத்தாள்

அதுதான் மஹாபாரதம்”,

“ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில்

சிரிப்பை தொலைத்தாள்

அதுதான் இராமாயணம்”

ஆக, இந்திர பிரஸ்தத்திலே தங்களது மாளிகைக்குள் கால் தடுமாறிய துரியோதனனை கண்டு சிரித்த, பாஞ்சாலியைப் பாடியது பாரதம். இராமனுக்கு முடிசூட்ட ஊரே மகிழ்ந்து இருக்க கண்டும், சிரிக்க வேண்டிய நாளில் கைகேயி வருத்தப்பட்டுப் போனதால் பிறந்தது இராமாயணம். இவ்வாறு பல காவியங்களுக்கு சிரிப்பு காரணமாக இருக்கின்றது.

சிரிப்பு ஒரு மனநிலையின் வெளிப்பாடு என அடையாளம் காணப்படுகின்றது.  மனதை கட்டுப்படுத்துபவர்களால் துன்பத்திலும் சிரிக்க முடியும். இரமண மஹரிஷி, “இடையறாத மகிழ்வான நிலையே இயற்கை. அதைத்தவிர துன்பம் அழுகை எல்லாம் மனதில் வந்துபோகும் ‘பிரமை’ யின் வெளிப்பாடே” என்கின்றார்.

நண்பர்களோடு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியா மூன்று தங்கங்கள் சென்ற போட்டியைக் காட்டிலும் குறைச்சலாகவே பெற்றிருக்கின்றது. மொத்தம் 11. ஆனால்  கபடிப் போட்டி மற்றும் ஹாக்கிப் போட்டிகள் தொலைக்காட்சியில் கண்டபோது மகிழ்ச்சியின் எல்லைக்கே எடுத்துச் சென்றன.

ஆண்கள் கபடி அணி ஒரு கட்டத்தில் எதிர் ஈரான் அணியை விட, ஏழு புள்ளிகளுக்கும் கீழே தாழ இருந்தது. இந்திய அணியினர் வயது கூடி தெரிந்தனர். ஈரான் அணியினர் இளைஞர்களாக இருந்தனர். இறுதியில் இந்திய அணி கடுமையாக போராடி வென்றது. அணித் தலைவர் இராகேஷ் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தது. ஒவ்வொரு முறையும் பாடிச் செல்லும் வீரரும் ஈரானிய கோட்டுக்குள் செல்லும்பொழுது நாற்காலிக்குள் இருப்பு கொள்ள முடியவில்லை. அனுப் என்றொரு ஆட்டக்காரர் தன் தொடையைத் தட்டியபொழுது தரையின் மேல் கால் பரவி நிற்காமல் துள்ளிக்குதித்தது மனதும் உடலும். நமக்குத்தான் என்றில்லை, 72 வயதான மற்றொரு பார்வையாளரும், எல்லோரையும் விட வேகமாக கைதட்டலும்  வயதை தாண்டி பரபரப்பாக துடித்து வெடித்து சிரித்தார்.

அறிமுகப்படுத்தப்பட்ட 1998 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கபடியில் இந்திய அணி தோற்றதில்லை என்கின்ற செய்தி வேறு அதிக புன்னகைக்கு ஆதாரமானது. முன்னதாக மகளிர் அணியிலும் தங்கத்தைப் பெற்றிருந்தது இந்தியா. எமிலி டிக்கென்ஸ்னின், “வெற்றி என்பது கரகோஷமும், உற்சாகமும் நிறைந்த போட்டி மகிழ்ச்சிக்குரியதாக கருதப்படுகின்றது என்று  தொடங்கும் பாடலில் “ஜெயிப்புடைய அருமை தோற்றுப் போனவனுக்குத்தான் நன்றாக தெரியும்” என்று சொல்லி இருப்பார்கள். அந்த எழுத்தாளரின் மனது அப்படி. எட்கார்ட் டல்லி, சொல்லி வருகின்ற“வலியுடல்” மனதுக்குள்ளே நிறைந்து போய்விடுகின்றது போல… அதாவது, மனதில் (அது உருவாகும் பொழுதே) சந்தோசம், சோகம், துக்கம், கிண்டல், துடிதுடிப்பு, சுறுசுறுப்பு, சோம்பல், மகிழ்ச்சி, ஆச்சரியம், அளப்பறை, பெருமிதம், கர்வம், கோபம், கரிப்பு, பொறாமை, கருணை, கண்ணோட்டம், கண்டிப்பு, பெருந்தன்மை என கலவையான சமாச்சாரங்களைக் கிலோ கிராம் கணக்கில் கலந்துகட்டிக் கொள்கின்றோம் போல. உடல் வளர்ந்து ஒரு பருவத்திற்கு அடைந்து மூப்படைவது போல மனம் வளர்ந்து அப்படியே உச்சநிலையை அடைந்து பிறகு தேய்மானம் அடைவது போல தெரியவில்லை. எல்லா உடல்களுக்கும் மேக்கப்போட்டு அழகாக்கி கூட்டி குறைப்பது போல மனதை ஃபேர் அண்ட் லவ்லி போட்டு சிவப்பழகை கூட்டுகின்ற குறைக்கின்ற கீரீம்கள் வெகுஜன மார்க்கெட்டிலே விற்பனைக்கு காணோம். இப்படி நிலைமை இருக்க, இன்றைக்கு நான் நல்ல மூடில் இல்லை என்று நிறைய பேர் முடிவு செய்துவிட்டால் பிறகு சிரிப்பாய் சிரித்துவிடுகின்றது அந்த சுற்று வட்டாரமே. உடனே தெர்மா மீட்டர் வெச்சு, சூடு பார்ப்பது போல ஒரு கம்ப்யூட்டரைக் கனெக்ட் செய்து ‘மூடு’ பார்த்துவிட்டால், அதற்கு தகுந்தாற்போல சுற்றியுமிருப்பவர்கள் சுதாரித்துக்கொள்ள முடியும்.

ஆக, மகிழ்ச்சியின் அளவை நிர்ணயித்துவிட்டால் பிறகு அந்த ஃப்ரபோர்ஷனில் (ல்ழ்ர்ல்ர்ழ்ற்ண்ர்ய்) மாற்றம் எதுவும் வராதா? என்று கராராக கேட்பவர்களுக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்திலிருந்து ஒரு வரி, பால் திரியுறநேரம் பாத்திரத்திற்கு தெரியாது என்பது போல… மனித மனம் மாறுகின்றநேரம் வாழ்பவருக்கே தெரியாதாம்.

பிறகு திருவள்ளுவர் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொன்னதுக்கு என்ன அர்த்தமாம்? சமீபத்தில் கால்பந்துப் போட்டி ஒன்றில், 62 வயதுக்கார அனுபவ ஆட்டக்காரர்களோடு (“வயது… மனசில’ இருக்குங்க தம்பி”  – அந்தோணி – அறுபத்திரண்டு) மோத நேர்ந்தது. முப்பதுகளிலும் ஆட்டக்காரர்கள் இருந்தனர். பந்து நெஞ்சளவு வந்தபோது (உலகக்கோப்பை 2014 இறுதிப்போட்டியில் கோட்ஸி அடித்தது போல) உயர எழும்பி தொடையில் வாங்கி அது தரையைத் தொடும் முன்பு மடக்கி வளைத்து அடித்து, கோல் கீப்பரின் கற்பனை சாம்ராஜ்ய சம்பந்தமே இல்லாத கோணத்தில் பந்து கோலாக மாற்றப்பட்டது. அதன்பிறகு இரண்டு மூன்று வாரமானாலும் நினைக்கும் பொழுதெல்லாம் எங்கே இருந்தாலும் புன்னகைக்க வைக்கின்றதே இது… அதுபோல…

முன்கள ஆட்டக்காரர்கள் போல வாழ்க்கை சிக்கல் வடிவில் பந்து சப்ளை ஆகிறது. அதற்குத் தகுந்து குதித்து, குமுறித்தான், ரிசீவ் செய்ய வேண்டியிருக்கின்றது பிரச்சனைகளை, அதற்கு தினந்தோறும் ஐந்து கீலோமீட்டர் ஓடி வலுவாக வைத்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது, உடலை. மனதோ… இன்னும் இன்னும் அலெட்டாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்பது பேருடைய உழைப்பால் முன்னேறி வரும் பந்து கோலாக்கப்படாவிட்டால், பாழாக்கப்பட்டு விடுகின்றது. அப்புறம் பால்தான்… அடுத்த… ஆஹ தான்… எதற்கு வம்பு என முன்னேறி ஆடாமல்… பெஞ்சில் அமர்ந்துவிடக் கூடாது… அதனால்தான்… இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லியிருக்கின்றார் பொய்யா மொழியார். உண்மையில் அதுதான் கோலாக மாறும் வாய்ப்புள்ள விஷயம்.

ஆசிய ஆண்கள் ஹாக்கி போட்டியிலும் தங்கம் வென்றது இந்தியா. அது டை பிரேக்கர் வரை எடுத்துச் செல்லப்பட்டது. 1998-க்கு அப்புறம் ஆசிய சாம்பியன் ஆகின்றோம். கட்டுரையை எழுதுபவர் கல்லூரியிலிருந்த காலம். இராஜீவ் காந்தி கேல் ரத்னா (1999-2000) மற்றும் அர்ஜினா விருது பெற்றதமிழர் (1985) தன்ராஜ் பிள்ளை சாதித்தது. எவ்வளவு மாற்றங்கள். (ஏமாற்றங்கள் கூட) இப்பொழுதெல்லாம் விளையாட்டில் டைம் குறைத்து விட்டார்கள். இருபது நிமிடங்களாக நான்கு கால் பங்கு விளையாட்டாக (கால் வலிக்காதிருக்கவோ?) ஆடிய பின்னர் டை பிரேக்கர்… பெனால்டி அடிப்பதும் நேருக்கு நேராக கோலியை நோக்கி ஒற்றை ஆட்டக்காரர், பந்தை மட்டையால் டிரிப்பிள் செய்து சென்று கோலடிக்க முட்படுகையில் கோலி ஆக்ரோஷமாக நின்று விழுந்தும் தடுக்கின்றார். இந்தியா ஜெயித்த பொழுது எல்லார் முகத்திலும் சிரிப்பு தான். இருபத்தெட்டு வருசத்து சிரிப்புங்க…

இதனுடைய வீடியோ பதிவு கிடைக்கும், பார்க்கலாம். ஆனால் முன்பு சொன்ன சொந்த கால்பந்து நிகழ்வு மனசுக்குள்ளே வார்த்தைகளாக மட்டுந்தான் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அதுமாதிரி முன்பு நடந்த சந்தர்பங்களோடு… கடைசி ஓவரில் கடுமையாக அடிக்கனும், டைபிரேக்கரில் கோல் அடிக்கனும் என்கின்றபோது பசங்க கண்ணுல சிரிப்பு தெரியுதாண்ணு… பாருங்க… இருக்கறதில்ல… இருந்தா எப்படியிருக்கும்…

தசையினை… தீச்சுடினும்… சிவ சக்தியை… பாடும் நல் அகம்… கேட்டேன்னு பாரதியார் சொல்றது இதுதான். நம்பிக்கை நிறைய இருந்தால் முகத்தில சிரிப்பு வந்தாகணுமே. அப்புறம் வெற்றிச்சிரிப்புதான். தன்செயல் என்று நினைத்து தவிப்பது தீர்ந்து போனபிறகு பாரதி சொல்றாரு, தோற்றாலும் சிரிப்புதான்.

இராபின் சர்மா தனது Greatness Guide புத்தகத்தில் MANA’S என்கின்ற இசைத்தட்ட சிலாகிச்சு எழுதியிருந்தார். மெக்ஸிகன் இலத்தீன் மொழியில்… Amar Es Combatir என்கின்ற ஆல்பம். கேட்டுப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கின்றது. காதல் ஒரு போர் என்பது தலைப்பின் பொருள். ஆமாம், ஆமாம், அது போக, சிரிக்கவும் துணிச்சல் தேவைப்படுதே. கண் தெரியாத முகங்கள், மாற்றுத்திறனாளிகளோட முகங்கள் பெரும்பாலும் மலர்ந்தே இருக்கின்றதை கவனிச்சிருக்கோமா? எதையாவதொன்றை நினைச்சுப் பார்த்து சிரிச்சிக்கிட்டோம்னா? மனசும் முகமும் பூத்திடாதா?

அரைச்ச மாவையே அரைக்காத வாழ்க்கை அன்னிக்குப் பூத்த மல்லிப்பூ மாதிரிங்க. எங்கேயோ கேட்ட நல்ல விஷயம் நாலு… எடுத்து மனசோட பாக்கெட்ல போட்டு வெச்சிக்கிட்டம்னா… திட்டு வாங்குகின்ற சமயங்கள்ள புத்திய தீட்டி வச்சுக்க யூஸ்  பண்ணிக்கலாம். பியூஸ்  புடுங்கினா கூட பீஸ் ஃபுல்லா இருக்கலாம்.

சந்திரபாபு, சார்லி சாப்லின், எம்.ஆர். ராதா எல்லாம் நெச வாழ்க்கையில சிரிப்பை மிக்ஸ் பண்ணி அடுத்தவங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தாங்க. நிறைய ஆச்சரியப்படற விஷயம் என்னன்னாக்க, தூங்கிகிட்டிருக்கிற குழந்தைங்க கூட எதையோ நினைச்சு சிரிச்சிக்குது. மலர்ந்த முகமா மணம் பரப்பி தூங்குது. ஆனா பெரியவங்க கனவு கூட நினைப்புக்கு தகுந்தா மாதிரி காணுறாங்க, கண்ணாலேயே. எல்லாரும் காவல்துறையினர் மாதிரியே ஆராய்ச்சி பண்ணியே குத்திக் கிழிக்கிறாங்க. பயப்பட்டு பயப்பட்டு பயங்கரமா பாக்கிறாங்கோ. பேசும் முன்னாடியே பேயறைஞ்சா மாதிரி ஆகிடறாங்கோ. வொய்… திஸ்… கொலவெறிங்கறேன்…

சிரிப்பு ஒரு ஆஃக்ஸ்  டி-ஒடோரன்ட்  மாதிரிதான். சட்டுன்னு பத்திக்க வைக்க தெரியனும். ஒருத்தனை கண்ணீர் விடவைக்க கண்ணிமைக்கும் நேரம் போதும். ஆனா புன்னகைக்க வைக்க நிறைய ஃஸ்பிரே  பண்ணா பத்தாது. நெசமாவே ப்ரே பண்ணியாகனும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம கொடுக்கிற அளவுதான் முக்கியத்துவம் இருக்குன்னு சொல்றாங்க. ஓஷோ, சந்தோஷத்துக்குள்ளே சாமி இருக்கிறார்னு சொல்றார். ஜன்ஸ்டீன் நம்ப பூமியே ஒரு ஆவரேஜ் கோள்ன்னார். அட, மங்கள்யான் விட்ட நாடு நம்மது. பெரிசா யோசிச்சாக்க சிரிப்பு நிரந்தரமாயிடும். அப்புறம் சிரிச்சாலும் தொலையாது! சிரிப்பும் தொலையாது! அடுத்து நாம யாரையாவது பார்க்கையில் முதல் சிரிப்பு நம்மதாக இருக்கட்டும்!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்