Home » Cover Story » அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!

 
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!


ஆசிரியர் குழு
Author:

நோபல் பரிசாளர் கைலாஷ் சத்யார்த்தி

2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி, அன்னை தெரசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் விதிஷாவில் பிறந்தவர். இஞ்ஜினியராக, சராசரி மனிதராக இருந்தவர் 1983ம் ஆண்டு ‘பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ என்ற குழந்தைத் தொழிலாளர் மீட்பு தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி காந்திய வழியில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்க அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி இதுவரை 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இவரின் தன்னலமற்ற அயராத பணிக்காக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது தான், “வேலையில்லா திண்டாட்டம்”, நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை, குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது என்கிறார் இவர்.

ஆசிஃப் என்ற சிறுவன் இவரிடம் வேலைக்கு செல்லும் இடத்தில் ‘வலியால் அழுது எங்களை விட்டு விடுங்கள் என்றால் முகத்தில் அறைவார்கள்’ என்றும், காலை 8 மணிமுதல் அடுத்த நாள் காலை 1 மணி வரை நாள் முழுவதும் என் கால்களை ஒரு அங்குலம் அளவும் நகர்த்தாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே தைத்துக் கொண்டிருந்து ஒரு காலை சற்றே அசைத்தால் கூட அடிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறான். இச்சம்பவத்தை கேட்டதிலிருந்து உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்கிற நோக்கத்துடன் இவரால் உருவாக்கப்பட்டதுதான் “பச்பன் பச்சாவ் ஆந்தோலன்” என்ற இயக்கமாகும்.

30 வருடமாக குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைவருக்கும் கல்வி என்கிற உரிமைக்காகவும் போராடி வரும் இவர், ‘ரக்மார்க்’ என்ற ஒரு புதிய முத்திரையை ஏற்படுத்தி வடமாநிலங்களில் கார்பெட் எனப்படும் தரைவிரிப்பு தயாரிப்பில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை அறிந்து, அதை தடை செய்தார். தரைவிரிப்புகளில் இருந்த விரிப்பான் குழந்தைகளால் தயாரிக்கப்படவில்லை என்று ரக்மார்க் முத்திரை குத்தி உலக நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பச் செய்தார். இதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான இயக்கங்கள் இவருடன் சேர்ந்து, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கப் பாடுபட்டது. குழந்தையை வேலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெறும் இன்னல்களை நேரடியாக கிராம மக்களிடம் சென்று விழிப்புணர்வு சார்ந்த படங்கள், துண்டுச்சீட்டுகள் மூலம் விளக்கப்பட்டது. அதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது.

இவரின் இயக்கத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் சிறு வயதிலேயே சில குழந்தைகள் வாழ்க்கையில் பாதை மாறிப்போய்விடுகிறார்கள். இதனால் திருட்டு, சுரண்டல், முறைகேடு, கடத்தல் போன்ற தொழில்களில் இருப்பவர்களை இனம்கண்டு அவர்களை மீட்டுதல் பணி செய்து வாழ்க்கையில் ஒளிமிக்க கல்வியை பலருக்கு இன்று கொடுத்துள்ளார்.

 “வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தாமல் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

வயது அடிப்படையில் தான் சிறுவர்களை வேலைக்கு அனுப்ப வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குழந்தைத் தொழிலாளர்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தனியார் நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் இங்கு குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்று அரசாங்கத்திடம் சான்றிதழ் பெறவேண்டும்” என்றெல்லாம் வலியுறுத்தி வருகிறார்.

நோபல் பரிசு அறிவிப்பு குறித்து கைலாஷ் சத்யார்த்தி அவர்கள்…

“நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில் கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல் அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது. குழந்தைகள் நலன் பேண தொடர்ந்து போராடுவேன் என்றும், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இவ்விருதை சமர்பிப்பதாகவும் அறிவித்தார். 60-வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி தற்போது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

மலாலா யூசப்சாய்

மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அங்கோராவில் 1997, ஜூலை 12ல் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதின் யுசப்சாய், தாயார் தூர்பெகாய் யுசப்சாய். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலிபான்கள் தடைவிதித்தனர். இதனை எதிர்த்து மலாலா பள்ளி சென்று வந்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் கல்விக்காக சிறுவயதிலேயே போராட துவங்கினார். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்ந்து இணையதளத்தில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். இதனால் 2012, அக்டோபர் 9ல் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானார். தலையில் குண்டடிபட்ட மலாலாவுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வசித்து வருகிறார்.

2013ம் ஆண்டு ஜூலை 12ல் மலாலா தனது 16வது பிறந்த நாள் விழாவில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கோரிக்கையை வைத்தார். அதில் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்று நேரடியாக விவாதித்தார். இந்த நிகழ்வைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை மலாலா தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதன்பின்னர் கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் அமைதிக்கான 2014ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் அமைதிக்கான நோபல்பரிசை வாங்கும் முதல் பெண் மலாலா தான். மிகச்சிறிய வயதில் விருது பெற்றவரும் இவரே..

அமைதிக்கான நோபல் பரிசு குறித்து நார்வே நோபல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பணத்துக்காக குழந்தைகள் சுரண்டப்படுவதை எதிர்த்து காந்திய வழியில் பல்வேறு அமைதிப் போராட்டங்களை நடத்தியது. பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஓர் இந்து ஓர் முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் இருவரும் ஒரே மாதிரியாக கல்வி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000ம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்காமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் லட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலாலா பெண் குழந்தைகள் கல்விக்கான அடையாளமாக மட்டுமின்றி உலக அமைதிக்கான அடையாளமாகவும் திகழ்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

பெற்ற விருதுகள் விபரம்

சத்யார்த்தி அவர்கள் சேவையைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் கொடுத்து கௌரவித்துள்ளன.

 •         தி ஆக்னெர் சர்வதேச அமைதிக்கான விருது
 •         தி ட்ரம்ப்டர் விருது
 •        தங்க கொடி விருது
 •        விடுதலை விருது
 •        இத்தாலிய செனட் பதக்கம்
 •          ஜனநாயக பாதுகாவலர் விருது

போன்ற விருதுகள் பெற்று தனது சேவையின் மகத்துவத்தை உலகம் போற்றும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆல்பிரட் நோபல் யார்?

இவர் ஸ்வீடன் நாட்டில் அக்டோபர் 21, 1833ம் ஆண்டில் பிறந்தார். பெற்றோர் இமானுவேல் நோபல், கரோலினா அன்ரியெட்டே நோபலுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார்.

இளம் வயதில் பொறியாளராக பணியாற்றினார். அதன்பிறகு வெடிமருந்து பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் வேதியியாளராகவும், பொறியாளராகவும், ஆயுதத் தயாரிப்பாளராகவும் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தார். ஆயுதப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கி அதன் பொறுப்பாளராக பணியாற்றினார். அதன்மூலம் பெரிய செல்வந்தரானார். தனது இறுதி காலத்தில் தான் பெரும் மதிப்பு மிக்க சொத்தைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். டிசம்பர் 10, 1896ம் ஆண்டு இத்தாலியில் மறைந்தார். இவர் நினைவாக ஆண்டுதோறும் பல்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவம் செய்யப்படுகின்றது.

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இப்பரிசு பல பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அவை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், உலக அமைதி ஆகிய பிரிவின் கீழ் வழங்கப்படும். இதுவரை இந்திய அளவில் நோபல் பரிசு பெற்றவர்களின் விபரங்கள்.

 •       இரவீந்திரநாத் தாகூர் – இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1913ம் ஆண்டு பெற்றார்.
 •       சர்.சி.வி. இராமன்  இயற்பியலுக்கான நோபல் பரிசை 1930ம் ஆண்டு பெற்றார்.
 •       ஹர்கோவிந்த் கொரானா  மருந்தியலுக்கான நோபல் பரிசை 1968ம் ஆண்டு பெற்றார்.
 •       அன்னை தெரசா  உலக அமைதிக்கான நோபல் பரிசை 1979ம் ஆண்டு பெற்றார்
 •       சுப்ரமணிய சந்திரசேகர்  இயற்பியலுக்கான நோபல் பரிசு 1983ம் ஆண்டு பெற்றார்
 •      அமர்த்தியா சென்  பொருளியல் துறைக்கான நோபல் பரிசை 1998ம் ஆண்டு பெற்றார்
 •       கைலாஷ் சத்யார்த்தி – அமைதிக்கான நோபல் பரிசு 2014ம் ஆண்டு பெற்றார்.

2014ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்

ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதான நோபல் பரிசு 2014ம் ஆண்டு பெற்றவர்கள்,

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எரிக்பெட்சிக், வில்லியம் ஈமோர்னர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் உடலியல் துறைசார்ந்த விருதினை நார்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் மோசர், மே-பிரிட் மோசர் ஆகியோருக்கும், அமெரிக்காவைச் சார்ந்த ஜான்ஓகீஃப்-க்கும் வழங்கப்பட்டுள்ளது

இயற்பியலுக்கான நோபல் பரிசு இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ ஆகியோருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த சுக்கி நாக்காமுரா என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொருளியலுக்கான பரிசை சோலன் திரோல் என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மொதியானோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்