Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

N. கபில் சுப்ரமணியம்

“காக்கா கூட்டம்”

கல்விக்கு வயதில்லை, கற்றதற்கு தீங்கில்லை” என்று சொல்வார்கள். எந்த வயதிலும் கல்வி படிக்கலாம், கல்வி கற்றவன் நிச்சயம் வாழ்வில் தோற்க மாட்டான். அந்த வகையில், தான் கற்றகல்வியின் அருமை பெருமைகளை நம்மோடு பகிர்கிறார் ‘பிராண்ட் ஃபேக்டரி’ நிறுவனத்தின் மேலாளர் திரு. N. கபில் சுப்ரமணியம் அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், கீழமுந்நீர் பள்ளம் என்றகிராமம் தான் என் ஊர். பெற்றோர் திரு. நடராஜன், திருமதி. மறைமலைச்செல்வி. அண்ணன் திரு. ஸ்மித்தோன். மனைவி திருமதி. சந்தியா. என் அப்பா அரசாங்கப்பணியில் இருந்தார். ‘சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, பாளையங்கோட்டையில் பள்ளிக் கல்வியைப் பெற்றேன். இந்தப் பள்ளி, பாடத்தைவிட ஒழுக்கத்தை தான் மாணவர்களுக்கு முதலில் கற்றுக்கொடுத்தது. பக்தி, யோகா போன்றவை பள்ளிப்பருவம் முதலே போதிக்கப்பட்டு மனம் பண்படுத்தப்படுகிறது. காலையில் பாடங்களைத் துவங்கும் முன் ஒழுக்கப்பாடல்கள் போதிக்கப்பட்ட பின்னர் தான் பாடங்களை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.

எதையும் அடித்து சொல்லித்தருவதைவிட அன்பால் அரவணைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே நாங்களும் ஈடுபாட்டோடு பள்ளிக் கல்வியை அனுபவித்தோம்.

எனக்கு படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் அதிகம். சான்றிதழ்களும், பாராட்டுகளும் நிறைய பெற்றேன். பாராட்டு எதற்காக வாங்குகிறோம் என்பதைவிட யாரிடம் வாங்குகிறோம் என்பதே முக்கியம் என நினைப்பவன் நான்.

“ஒருவர் தன் காலணியைக் கழட்டி விடுவதிலும் கூட அவரது ஒழுக்கமும், பண்பு நலன்களும் தெரிந்துவிடும்” என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வளர்ந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடனேயே வளர்கிறார்கள். இன்னமும் நான் அதைக் கடைபிடித்து வருகிறேன்.

பள்ளியைப் போலவே ஒழுக்கத்திற்கும், மரியாதைக்கும் பெயர் பெற்ற கல்லூரி பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரி. அங்கு நான் B.Sc. Computer Science பட்டம் பெற்றேன். அக்கல்லூரியில் பெற்ற வாழ்க்கைப்பாடம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வழிகோலியது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களைச் சுற்றுப்புறச் சுகாதாரம் என்று கிராமப்பகுதிகளுக்கு கூட்டிச் செல்வார்கள். அதில் சிறப்பாக பணிபுரியும் மாணவருக்கு சான்றிதழ்கள் கொடுப்பார்கள். அப்படி என் தலைமையிலான குழு வெற்றி பெற்றது. அப்போது நான் ஆற்றிய சமூகப்பணி எனக்கு மிகப்பெரும் திருப்தியை ஏற்படுத்தியது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு மாணவர் தேர்தல் நடைபெறும். அப்பொழுது என் நண்பர்களும், மற்றமாணவர்களும் என்னைத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இந்த தலைவர் பதவி என்னை மிகுந்த பொறுப்புள்ளவனாக மாற்றியதை உணர்ந்தேன். பொறுப்பிற்கு வந்தவுடன் பிரச்சனைகளை அறிந்து அதைச் சரிசெய்ய குரல் கொடுத்தோம். ரத்த தான முகாம், புற்றுநோய் விழிப்புணர்வு போன்றவற்றை நடத்தினோம். பொதுமக்களே எங்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கூறும் அளவிற்கு எங்களது சேவை விரிந்து செயல்பட்டது. இப்படி அணுகியவர்களின் தேவைகளை நாங்கள் சரிசெய்தும் கொடுத்திருக்கிறோம்.

எங்கள் குழுவில் 24 பேர் இணைந்திருந்தோம். ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் இருந்தது. அவை எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் கல்லூரியில் துறைத்தலைவராக இருந்த திரு. ஜோதிகுமார் அவர்கள் மாணவர்களுக்கு சிறந்த ரோல் மாடலாக இருந்தார். மாணவர்களுடன் எப்போதும் நட்புணர்வுடன் பழகுவார்.

“காக்கா கூட்டம்” என்றஅமைப்பை என் நண்பர்களின் உறுதுணையுடன் தொடங்கினேன். இந்த அமைப்பை முதலில் எப்படி தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்றயோசனை இருந்தது. அப்பொழுது பள்ளியிலிருந்து தொடங்குவதன் மூலம் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என அங்கிருந்து ஆரம்பித்தோம்.

“படித்து முடித்த புத்தகங்களை வீட்டிலேயே வைக்காமல் மற்றவர்களுக்கு அதை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் புத்தகங்களை அடுத்தகட்ட மாணவர்கள் பெறுவதன் மூலம் சமூக மாற்றத்திற்கு நல்ல பலனாக அமையும். அப்படி நிறைய சமூக ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களை எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். புத்தகங்களுடன் அவர்கள் கொடுத்த கருத்துக்களும் எங்களை வெகுவாகக் கவர்ந்தன. மாணவர்கள் மேலும் மேலும் நிறைய புத்தகங்களைக் கொடுத்து எங்களது பணியையும் ஊக்கப்படுத்தினார்கள்”.

“காக்கா கூட்டம்” அமைப்பிற்கு ஐந்து முக்கிய அம்சங்கள் உள்ளன.

  •     ஆர்வலர்களும், ஆர்வம் உடையவர்களும் முடிந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த புத்தகங்களைக் கொடுத்து உதவ வேண்டும். இப்புத்தகங்களை மாணவர்கள் படித்த புத்தகங்கள், தேவையில்லாத புத்தகங்கள் என ஒதுக்கும் புத்தகங்களை மட்டும் கூட அனுப்பினால் போதுமானது. புத்தகத்தின் மதிப்பை ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும்.
  •  கல்வியை ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கு உகந்ததாக எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதை அறிய வேண்டும்.
  •  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது.
  •   பசுமை கிராமம்” என்று ஒவ்வொருவரும் நகர்புறங்களில் மரம் வளர்ப்பதைக் காட்டிலும் கிராமங்களில் மரம்                   நட்டால் நல்ல பலன்களும் கிடைக்கும்.
  •   விரும்புகின்ற மாற்றத்தை மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

என்பதே இவ்வமைப்பின் முதன்மையான நோக்கம். இப்பொழுது எங்கள் நோக்கத்தைப் பாராட்டி பலர் தங்களின் புத்தகங்களை எங்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். இப்படிக் கொடுத்து உதவச் செய்வதே எங்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கிறது.

தன்னைப் பார்க்க வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தனது கைவண்ணத்தின் மூலம் சுயமாக தயாரித்த பொருட்களை ஒவ்வொருவரிடமும் கொடுத்து பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினர் எதிர்கால சமுதாயத்தை ஒரு திறமை மிக்க சமுதாயமாக மாற்றவேண்டும். அம்மாற்றத்தின் மூலம் நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும் என்றகுறிக்கோளுடன் எவ்வித விளம்பரங்களோ, ஆடம்பரமோ, எதிர்பார்ப்போ இல்லாமல் இந்த “காக்கா கூட்டம்” அமைப்பை சிறப்பாக நடத்திவரும் திரு. கபில் சுப்ரமணியத்தை வாழ்த்துவோம்.

புத்தகம் கொடுத்து உதவுவோம். நேரடியாக முடியாவிட்டாலும், இந்த அமைப்பைத் தொடர்பு கொள்வோம். தொடர்புக்கு: 97901 22177. www.kaakakootam.blogspot.com. www.facebook.com/kaakakootam.

நல்ல எண்ணங்கள் கொண்ட மக்கள் ஒன்று சேரும்பொழுது நல்லெண்ணம் கொண்ட குழு உருவாகிறது என்பதற்கு இந்த “காக்கா கூட்டம்” அமைப்பு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

இந்த இதழை மேலும்

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment