Home » Articles » பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்

 
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இன்றைக்கு உலகில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமாக இருப்பினும், குழந்தைப் பருவம் மற்றும் முதுமையில் பிரச்னைகள் அதிகம். இடையில் பிரச்னைகள் குறைவுதான். கரடிக்கு எங்கே பிடித்தாலும் முடி என்பது போல் மனிதனுக்கு பிரச்னை இல்லாத நாட்களே இல்லை என்று கூறலாம்.

பிரச்னைஎன்றால்என்ன?

இந்த கேள்விக்குப் பலரும் பலவிதமாய் பதில் கூறினார்கள்.

பசி, வறுமை, ஞாபக மறதி, நோய், வழிகாட்டல் இல்லாமை, கல்லாமை என ஒரு சிலரும் கோபம், பொறாமை, ஏக்கம், பகைமை, பேராசை, அவசரம், பதட்டம், கடன், எதிர்பார்ப்பு என்பதாக மற்றவர்களும் கூறினர். இவற்றையெல்லாம் தொகுத்தால், பிரச்னை என்பதை  தேவைகளை, விருப்பங்களை அடைய முடியாத சூழ்நிலையும், அதனால் உண்டாகும் மனநிலை தரும் பாதிப்புகளும்  என்று கூறலாம்.

இந்தப் பிரச்னை என்பது விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது போல, ஏழை  பணக்காரன், படித்தவன்  படிக்காதவன், முதலாளி,- தொழிலாளி, ஆண்  பெண், குழந்தைகள்  முதியோர் என எவ்விதமான பாகுபாடுமில்லாமல் எல்லோருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

பிரச்னையை உருவாக்குபவர்கள்

நான்கு பிரிவுகளாக இவர்களைக் கூறலாம். முதலில் வருவது தானாக வரும் பிரச்னைகள். பிரச்னையைத் தேடி நாம் எங்கும் போக வேண்டியதில்லை. எதிர்பாராத போது, திடீரென இது பிரச்னையாக நம்முன் நிற்கும். திடீரென பல் வலிக்கும். எதனால் வலிக்கிறது என்றே தெரியாது. இது மற்ற எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.

இரண்டாவதாக வருவது தானே உருவாக்கிக் கொள்வது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை உங்களுக்கே தெரியுமே இருந்தாலும் விளக்கம் இதோ:

பிள்ளையார் சிலையை மண்ணில் செய்வதற்கு ஒருவர் ஆயத்தம் செய்தார். தலை, வயிறு, கைகள், கால்கள், தும்பிக்கை எனத் தனித்தனியே செய்து வைத்தார். அவைகளை ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். தும்பிக்கை தவிர மீதி எல்லாவற்றையும் சேர்த்து முழு உருவமாக்கிவிட்டார். திடீரென அவர் தன்னைப் பார்க்க வந்த நண்பரைக் காணச் சென்றுவிட்டார்.

அந்த நேரம் பார்த்து அவரது ஐந்து வயது மகன் அங்கே வந்து அந்த சிலையைப் பார்த்தான். ஒரு சிலையும், வாலும் இருப்பதைப் பார்த்த அவன், தும்பிக்கையை வால் என நினைத்துக் கொண்டு, அந்தச் சிலையின் பின்புறம் இடுப்பில் இணைத்து வாலாக்கிவிட்டான். இப்போது அந்தச் சிலை குரங்குபோல் சாட்சி அளித்தது. அந்தச் சிறுவனுக்கோ அடக்க முடியாத மகிழ்ச்சி.

அதற்குள் வெளியே சென்ற அவன் அப்பாவும் வந்துவிட்டார். தன் அப்பாவிடம், “அப்பா இங்கே பாருங்கÐ நான் சரியா வாலை சேர்த்துட்டேன்” என்று சொன்னான். அந்தச் சிலையைப் பார்த்தவர் தன் மகன் மீது கோபப்படாமல், வாய்விட்டு சிரித்தாராம். “மகனே, பிள்ளையாரின் தும்பிக்கையை நீ வால் என நினைத்து இடுப்பின் பின்புறம் வைத்துவிட்டாய். அதை எடுத்து முகத்தில் மூக்கின் மீது வைக்க வேண்டும்” என்று கூறி, எடுத்து வைத்துக் காண்பித்தாராம்.

தும்பிக்கை வாலாக இருந்தபோது குரங்காகத் தெரிந்த அந்தச் சிலை, இப்போது பிள்ளையாராக அழகாகத் தெரிந்தது. இதுதான் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை.

இதுபோல் நாம் பல சமயங்களில் நல்லது என நினைத்துக் கொண்டு பேசுவதும், ஏதேனும் செய்வதும், முடிவில் நமக்கே பிரச்னைகளைக் கொண்டு வந்துவிடுவது சகஜமாகிவிட்டது. வெயில் காலம்; வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடனே, தாகத்தின் காரணமாக 2 டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்துவிட்டீர்கள். 10 நிமிடத்திலேயே அடுக்கடுக்காய் தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல் எல்லாம் வந்துவிட்டன. இது நாமாக உருவாக்கிக் கொண்ட பிரச்னை. இதுபோல் அவரவர் வாழ்வில் பல பிரச்னைகளை உருவாக்கியதை நினைத்துப் பாருங்கள்.

மூன்றாவதாக மற்றவர்கள் உருவாக்கும் பிரச்னைகள். நம் வீட்டிலோ, வெளியிலோ, மற்றவர்களால் நமக்கு வரும் பிரச்னைகள் தான் இவை. புத்திசாலி மனைவி, மாதச் செலவுக்குத் தரும் பணத்தில் சிக்கனமாய் செலவு செய்து, மாதம் ரூ.500 என மீதப்படுத்தி, பக்கத்துத் தெருவிலுள்ள நகைக்கடையில் சீட்டு போட்டார். வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாது, திடீரென ஒருநாள் அந்தக் கடை திறக்கவில்லை. விசாரித்தால், கடன் தொல்லை அதிகமாகி, அந்தக் கடைக்காரர் இரவோடிரவாக, ஊரைக்காலி செய்து சென்றுவிட்டதாய் தகவல். 10 மாதம் சீட்டு போட்டதால் ரூ.5000 போய்விட்டது. அவர் மனைவிக்கோ மிகப்பெரிய இழப்பு, சோகம். அதோடு கணவனுக்குத் தெரியாமல் போட்டதற்குத் திட்டுவாரே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ரூ. 5000 இழப்பு என்பது அவருக்குப் பெரிய பிரச்னை தான். இது அவர் மனைவியால் வந்தது.

இதுபோல் வேறு பலராலும் அவ்வப்போது பல பிரச்னைகள் வரும்.

நான்காவது, இயற்கையால் வரும் பிரச்னைகள். மழையே இல்லை; கடும் வறட்சி. குடிநீருக்கே தட்டுப்பாடு. விவசாயம், வேறு வேலை எதுவுமே நடைபெற முடியாத நிலை. இந்தப் பிரச்னை இயற்கையாக வந்தது. இதுபோலவும் பிரச்னைகள் பல வரும்.

பிரச்னைகளைப் பிரியுங்கள்

நமக்குள்ள பல பிரச்னைகளையும் முதல் பட்டியலிட வேண்டும். அவைகளை மேற்கண்ட நான்கு பிரிவுகளின் கீழ் கொண்டு வரவும். இப்போது நமது பிரச்னைகளுக்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும். இனிமேல், இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வதோ, நம்முடைய செயல்பாடுகளைத் திருத்தியமைப்பதோ, எது தேவையென்பதைத் தேர்வு செய்து செயல்படலாம்.

பிரச்னைகள் எதுவானாலும் இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

நம்மால் தீர்க்கக் கூடியவை

நம்மால் தீர்க்க முடியாதவை

நம்மால் தீர்க்கக்கூடிய பிரச்னைகள்

இதை ஆங்கிலத்தில் AOC (Area of Control) என்று சுருக்கமாய் சொல்லலாம். திடீரென மருத்துவச் செலவு வந்துவிட்டது. உங்களுக்கு உதவக்கூடிய நண்பர் சிலர் உள்ளனர். அவர்களிடம் விபரம் கூறி, பணம் பெற்றுச் செலவு செய்யலாம். உங்கள் அலுவலகத்தில் அல்லது நகையை வங்கியில் வைத்து கடன் பெற்று, நண்பருக்கு கொடுத்துவிடலாம். இதுபோல் நம்மால் தீர்க்கக்கூடிய பிரச்னைகளைத் தனிப் பட்டியடலாம்.

தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தெளிவாகப் பின்னர் பார்ப்போம்.

நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள்

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இது நம்மால் தீர்க்க முடியாத பிரச்னை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பஸ் பயணம் என்பது தவிர்க்க முடியாததால், இதற்கு முன்னுரிமை கொடுத்து, பிறசெலவுகள் சிலவற்றைக் குறைக்க முயற்சிக்கலாம். இப்படி ஏற்றிவிட்டார்களே என அங்கலாய்த்துக் கொள்வதாலோ, புலம்புவதாலோ பிரச்னை தீராது. இந்த எண்ணம் மனதிலே இருந்தால், வேறு செயல்களில் முழுமையாக ஈடுபட முடியாது.

குடிநீர் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம் இதுபோன்ற பொதுவான பிரச்னைகளை நம்மால் தீர்க்க முடியாது. எப்போது ஒன்றை ஏற்றுக் கொள்கிறோமோ, அப்போதே அது நமக்கு நட்பாகிவிடுகிறது. இதனால் பொருந்தா உணர்வு வராது. அடுத்து, அதனால் வரும் சிரமங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நம் அறிவே நமக்குச் சொல்லிவிடும்.

எனவே, பிரச்னைகள் என்று சொல்லிப் புலம்புவதால் பயனில்லை.

பிரச்னைகளுக்கான காரணம்

பிரச்னைகள் தானாகவும், நம்மாலும், மற்றவர்களாலும், இயற்கையாலும் வருகின்றன என்றாலும், அவைகள் வருவதற்கான காரணங்கள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால், அவைகளிலிருந்து சுலபமாக விடுபடும் வழிகள் எளிதில் கிடைத்துவிடும்.

பசி ஒரு பிரச்னை என்று பார்த்தோம். பசி, ருசி அறியாது என்ற பழமொழியும் உள்ளது. பசிக்கிறது என்பதற்காக நமக்கு விருப்பமில்லாத, சுகாதாரம் இல்லாத உணவை நாம் உட்கொள்ளலாமா?

இந்த உணவு நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று தெரிந்த நிலையில், அறிந்த நிலையில், சாப்பிட்டுவிட்டால், அதற்கு அலட்சியம் என்று பெயர். அந்த உணவு உடலுக்குள் சென்று பாதிப்புகளைத் தரத்தானே செய்யும். பல சமயங்களில் ஞாபக மறதியால் ஏதாவது செய்துவிடுவார்கள். இதனால் உண்டாகும் பிரச்னை அறியாமை என்பதால் வந்தது எனக் கூறலாம்.

பக்கத்து வீட்டுக்காரர், கோபமாக நம்மிடம் ஏதோ பேச, நாமும் உணர்ச்சி வயப்பட்டு, கோபத்தில் ஏதோ பேசிவிடுகிறோம். என்ன பேசினோம் என்பது கூட நினைவில் இல்லை. பிறகு, அவரே நம்மிடம் வந்து, “என்ன சார்? நான் தான் உங்களை விட சிறியவன். கோபத்தில் பேசிவிட்டால் நீங்களும் இதுபோல் பேசி விட்டீர்களே” என வருத்தப்பட்டுக் கூறினால், நமக்கு “இதுபோல் நான் பேசினேனா?” என்று நினைக்கத் தோன்றும்.

எனவே, பிரச்னைகள் வருவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவைகளையெல்லாம் தொகுத்து மூன்று பிரிவுகளுக்குள் கொண்டு வரலாம். அவை, அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம். எந்த நிலையிலும் நம் பேச்சோ, செயலோ என்ன விளைவைத் தரும் என எச்சரிக்கையாக இருந்தால் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

பிறஉயிர்களும், மனிதனும்

மழை பெய்யாவிட்டால் மனிதனுக்கு மட்டுமா பிரச்னை; மற்ற உயிரினங்களுக்கும் ஏன்? தாவரங்களுக்கும் கூடப் பிரச்னைதானே! மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்ந்து நிற்பதற்குக் காரணம், பகுத்தறிவு தான். இதுதான் பல பிரச்னைகளுக்கும், அதன் வழியான துன்பங்களுக்கும் காரணமாகின்றன. தன் அறிவைப் பயன்படுத்தி, இயற்கை வளங்களை வாழ்க்கை வசதிகளாக மாற்றி அனுபவித்து மகிழ்கிறது மனித இனம்.

மற்ற உயிரினங்கள், இயற்கையில் என்ன கிடைக்கிறதோ, அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. எனவே, அவற்றுக்குத் தானாக வரும் பிரச்னைகள், தன்னால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் பிறரால் உருவாகும் பிரச்னைகள் இல்லை. ஆனால் இயற்கையால் உண்டாகும் பிரச்னைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

சமீபகாலங்களில் மனிதர்களால், மற்றஉயிரினங்களுக்கு மறைமுகமாகப் பல பிரச்னைகள் உருவாகி வருகின்றன. காடுகளை அழிப்பதாலும், இயற்கையிலிருந்து விலகி வாழ்வதாலும், குளிரூட்டப்பட்ட வாகனம், வீடு என வாழ்ந்து, புவியை வெப்பமாக்குவதாலும் பல பிரச்னைகளை உருவாக்குகிறோம்.

(தொடரும்)

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment