Home » Articles » உரிமையும்! கடமையும்!!

 
உரிமையும்! கடமையும்!!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

பஸ் பயணம்

முன்பு பஸ்களில் பயணம் செய்யும்போது, நாம் அமர்ந்துள்ள இருக்கைக்குப் பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பவர், தன் கால்களைத் தூக்கி, நமது இருக்கையின் பின்புறம் பாதங்களை வைப்பார். அவர் பாதம் நம் உடலின் பின் பகுதியில் படும். இது உதைப்பது போலிருக்கும்.

பின்புறம் திரும்பி, கோபமாகப் பார்த்து, “காலைக் கீழே போடு” என்று சப்தம் போட்டால், கீழே வைத்துக் கொள்வார். எனக்கு இதுபோல் பலமுறை நடந்துள்ளது. உங்களுக்கும் நடந்திருக்கலாம். இப்போது அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் பஸ்களில் இருக்கை அமைக்கும் போதே, பின்புறம் முழுமையாக மூடிவிடுகின்றனர். பின்புறம் அமர்ந்துள்ளவர் பாதம் நம்மீது படாது. எனவே பிரச்னையில்லை.

ரயில் பயணம்

ரயில் பயணங்களில் இதைவிட மோசமாகப் பயணிகள், படித்தவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடில்லாமல் நடந்து கொள்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் நீங்கள் வாசிப்பது.

எதிரெதிர் இருக்கைகள். எதிர் இருக்கையில் உட்கார்ந்திருப்பவர், தன் எதிரிலுள்ள இருக்கை மீது (Seat & Berth) தன் கால்கள் இரண்டையும் நீட்டி வைப்பதுதான் கெட்ட பழக்கம். ஆட்கள் அமர்ந்திருக்கும்போதே, உள்ள இடைவெளியில் (Gap) எதிரிலுள்ளவர்கள் தன் காலை வைப்பார்கள். எழுந்து பாத்ரூம் வரை சென்று வருவதற்குள், தம் கால்களை நீட்டி வைத்துக்கொள்வார்கள்.

அமரும் இருக்கையில் தம் கால் பாதங்களை வைத்து அசுத்தப்படுத்துகிறோமே என்ற உணர்வு கொஞ்சமும் அவர்களிடம் இருக்காது. ஒருமுறை எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை சப்தமும் போட்டேன். உட்காரும் இடத்தில் இப்படிக் காலை வைக்கலாமா? என்று.செவிடுபோல் கண்டும் காணாமல் இருந்துவிட்டார். ஒவ்வொருமுறை இரயில் பயணத்தின் போதும் இந்தக் காட்சிகள் நடந்து கொண்டே உள்ளன. அதிலும் குறிப்பாக மாணாக்கர்கள், இளைஞர்கள் – இவர்களிடம் இந்தக் கெட்ட குணம் அதிகமாக உள்ளது.

இதன் உச்சகட்டம் சமீபத்தில் நான் கண்டது. அரக்கோணம் தனியார் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஐந்து பேரை ஓர் ஆசிரியர் திருப்பூருக்கு ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். அனைவருக்கும் பயணம் செய்ய இருக்கை கிடைக்கவில்லை. கிடைத்தவற்றில் மாணவ, மாணவிகள் முந்திச்சென்று உட்கார்ந்து கொண்டனர்.

உடன்வந்த ஆசிரியர் தொலைவில் நின்று கொண்டார். ஒருசில சமயம் அருகில் வந்தபோதும், அமர்ந்திருந்தவர்கள் மரியாதையின்றியே அமர்ந்திருந்தனர். ஆசிரியர்களுக்கு மரியாதை தருவதைக் கடமையாக அல்லவா செய்ய வேண்டும் மாணவ சமுதாயம்? ஆனால், உரிமை என்றல்லவா இன்று செயல்படுகின்றனர். இதைப்பார்த்து மனம் பொறுக்காமல் ஈரோடு வந்தவுடன் அந்த மாணவர்களிடம் அவர்களது தவறை சுட்டிக் காட்டினேன். வருத்தம் தெரிவித்து, எழுந்து ஆசிரியருக்கு, அமர்வதற்கு இடம் கொடுத்தனர்.

இளம் வயதிலேயே உரிமை, கடமை இவற்றைத் தெளிவாகச் சொல்வது சமுதாயத்தின் கடமை. சமுதாயம் என்பது வீட்டிலுள்ள பெற்றோர் மற்றும் பெரியவர்களும், கல்விக்கூடங்களிலுள்ள ஆசிரியர்களும் தான். ஆசிரியர்கள் சொல்வதைவிட பெற்றோர் இப்பொறுப்பை அடிப்படைக் கடமையாகச் செய்ய வேண்டும்.

ஆனால் எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுகின்றனர். நல்ல பண்புகள், பழக்கங்களைச் சொல்லித் தருகின்றனர். அல்லது நல்ல உதாரணமாய் வாழ்ந்து காண்பிக்கின்றனர்.

நீங்களே யோசியுங்கள்!

இரயில் பயணத்தில் தலைமை அலுவலக (Head Office) EQ ஒதுக்கீட்டில் (எமர்ஜன்ஸி கோட்டா) இருக்கை பெற்ற ஒருவர், தாமதமாய் வந்து வேறு பெட்டியில் ஏறிக்கொண்டார். ஒரு மணி நேரமானது, குறிப்பிட்ட பயணி வரவில்லையென டிக்கெட் பரிசோதகர் (TTE) அந்த இருக்கையை வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டார்.

அதன்பின்னும் அரை மணிநேரம் கழித்து, அந்த எண்ணுள்ள இருக்கைக்குப் பதிவு செய்தவர் வருகிறார். இப்போது TTE-யின் நிலை என்ன? அவர் கேட்டார். “ஏன் இவ்வளவு நேரம் வரவில்லை”. இவர் பதில், “ரயில் புறப்படும்போது அவசரமாய் ஏறினேன். வேறு பெட்டியில் ஏறி, இந்தப் பெட்டிக்கு இப்போதுதான் வந்தேன்”. வேடிக்கையாக இருந்தது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? அந்தப் பயணி ஒரு மாணவி. இளம் வயதிலேயே ஒரு சோம்பேறித்தனம் தான் வெளிப்பட்டது.

இன்னொரு சம்பவம். குறிப்பிட்ட இருக்கையில், உரிய டிக்கெட்டுடன் பயணம் செய்பவர் அமர்ந்து கண் அயர்ந்துவிட்டார். TTE வந்தவர், அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. எழுப்பவும் இல்லை. சுமார் ஒரு மணிநேரம் கழித்து, வேறு ஒருவர் வந்து, இவரைத் தட்டி எழுப்பி, இந்த சீட் எனக்கு TTE வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கிறார். அமர்ந்திருந்தவர் பேந்தப் பேந்த விழித்தார். எதிரிலிருந்த நான் விபரம் கூறியவுடன் அவர் சொன்னார். TTE என்னிடம் டிக்கெட்டை சோதிக்காமல் சென்றது தவறல்லவா? தவறு தான். அவரது கடமையே, பயணிகளிடம் கேட்டு, சீட்டை வாங்கிச் சரிபார்ப்பது தான். இங்கு TTE கடமையிலிருந்து தவறிவிட்டார். இவர் சென்று டிக்கெட்டைக் காண்பித்து வந்தவுடன் பிரச்னை முடிந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, உரிமையும் கடமையும் என்ன என்று மிகப்பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.

உரிமை

நாம் ஒவ்வொருவரும் பிறந்தது முதல் வாழும் காலம் முடியுமட்டும், நம் வாழ்க்கைக்குத் தேவையான அவசியமான அனைத்தையும் காலாகாலத்தில் பெற்று, அனுபவிப்பதற்கான சுதந்திரமே உரிமை ஆகும். இந்த உரிமை நமக்கு கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை தான்.

என்ன செய்வது? பொருளாதார ஏற்றத்தாழ்வு; ஜனநாயகம் என்ற பெயரில் அன்பளிப்புக்கு, இலவசத்துக்கு ஆசைப்பட்டு, வாக்கின் மகிமை தெரியாமல் ஓட்டளிக்கும் அப்பாவி மக்கள்; அதிகாரம் என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை என ஒதுங்கிவிட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற இன்றைய நிலையில் உரிமை முழுமையாக இல்லை தான்.

அதற்காக எதிர் சீட்டில் பயணிகள் அமர்ந்துள்ள போதும், எழுந்து திரும்பி வரும் இடைவேளையிலும், தம் பொன்னான பாதங்களை வைப்பதை உரிமை என்று செய்வது தவறே.

கடமை

நாம் வாழத் தேவையான அனைத்தையும் பெறுவதுடன் அவைகளை அளவுமுறையோடு அனுபவிப்பது இவற்றோடு, அறியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் உதவி செய்வது கடமை தான்.

நீங்கள் சிந்தியுங்கள். அவரவர் சம்பாத்தியத்துக்கேற்றவாறு தேவைகளைப் பெறுகிறோம். அவைகளை அளவுமுறைமீறாமலா உபயோகிக்கிறோம்? எல்லாவற்றிலும் முரண்படுகிறோமேÐ இன்றைக்கு நம் பாரம்பரிய உணவுப்பழக்கத்தைத் தொலைத்துவிட்டு, நோயாளிகளாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் பலர்.

புதுப்புதுக் கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்கி, அளவுக்கு மீறி உபயோகித்து, அதன் பாதிப்பால் கண், காது என்ற உறுப்பெல்லாம் கெட்டு, மின்விசிறி, ஏ.சி., என்ற நிலைக்கு அடிமையானவர்கள் பலர்.

சிறு உதாரணம்

இரு சக்கரவாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் (Helmet) அணிவது சட்டபூர்வமான கடமை. இன்று இரு சக்கரம் ஓட்டுபவர்களில் 10% கூட அணிவதில்லையே. இது தான் கடமையா?

இதை அணிந்தால், தனக்குத்தான் பாதுகாப்பு என்பதை ஏன் பலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். சட்டத்துக்கு கீழ்படிதல் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது தான் காரணம்.

மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் நன்மையா செய்கிறது? உடல், வீடு எல்லாவற்றுக்கும் பாதிப்புதான். நாட்டுக்கு வருமானம். இந்த வருமானம் தேவையில்லை என்று தானே முன்னோர்கள் கூறியுள்ளனர்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில்,

திருவள்ளுவர்

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானத் தீந்துரீஇ யற்று – குறள் 929

என்றார். நீருக்குள் ஒருவன் மூழ்கிவிட்டான். அவனைத் தேடுவதற்குத் தீவிளக்கு ஏந்திச் சென்றால் என்னாகும்? நீர் பட்டவுடனே நெருப்பு அணைந்துவிடும். அதுபோன்றதே மதுவால் வரும் வருவாயும், அதனால் பெறும் பயன்களும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நாட்டில் நடந்த நிகழ்ச்சியைப் பாருங்களேன்.

கோவையில் ஒரு பகுதியில் பள்ளி மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் புதிதாக அரசு அனுமதியுடன் துவங்கிய மதுக்கடையை அங்கு வசிக்கும் பெண்கள் பூட்டிவிட்டு அந்தக்கடையை உடனே அகற்றவேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் சாவியை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைத்ததாய் பத்திரிக்கைச் செய்தி.

மேற்கு வங்கத்தில் மது போதையால் மதி மயங்கி குடும்பத்தை மறந்த கணவர்களது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து, மதுக்கடையை சமீபத்தில் அடித்து நொறுக்கியதும் செய்தியாக வந்ததை எத்தனை பேர் படித்தோம்? பெண்கள் திரண்டால் மட்டுமே மது எனும் அரக்கனை அடியோடு அகற்றமுடியும். இதுவல்லவா கடமை.

கடமைகள், உரிமைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

குழந்தைப் பருவத்தில் பசித்தால் உணவு, சோர்ந்தால் தூக்கம், வளர்ந்த மாணவப் பருவத்தில் உடலளவில் தற்சார்புடன் இருந்தாலும், சிந்தனையில், அறிவில் முதிர்ச்சி பெறாததால் பெற்றோரைச் சார்ந்தே உள்ளனர். எனவே நல்ல கீழ்படிதலான பண்புகளை அவசியம் கடமையாகச் செய்ய வேண்டும். வாலிபப் பருவத்தில் பொருளீட்டி, பெற்றோரிடம் தருவது கடமை. அத்தியாவசியச் செலவுக்குப் பணம் பெறுவது உரிமை. அதிகச் செலவு செய்வதும், பிறர் மனதில் மாயையான தோற்றத்தை உருவாக்குவதும் தவறே.  இல்லறத்தில், திருமண வாழ்வில், கணவன், மனைவி இருவரும் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதும் மனம் புண்படுமாறு பேசாமலிருப்பதுமே அவசியம்.

பணியாளராக, தொழில் நிபுணராக, தாம் பார்க்கும் பணியை முழுமையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். அதனால் பெறும் ஊதியம் தான் உயர்ந்தது. முதியோராக, உலக மக்கள் அனைவருமே உடன் பிறவாச் சகோதர, சகோதரிகள் என்ற எண்ணத்துடன் உதவும் மனப்பான்மையுடன், ஒத்தும், உதவியும் வாழ வேண்டும். தனியாக ஒருவன் சப்தம் போட்டால் 2 காரணம் தான். ஒன்று பைத்தியம். மற்றது மதுபோதை. ஆனால் பலர் குழுவாக இணைந்து, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக காரியங்கள் செய்வது இன்று அதிகரித்து வருகிறது. இந்நிலை தவிர்க்கப் பட வேண்டும். நாம் பைத்தியமாகவும் வாழ வேண்டாம்; மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் வாழ வேண்டாம். இதுவே உரிமையுமாகும், கடமையுமாகும்.

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்