Home » Articles » நாமாக நாம்

 
நாமாக நாம்


சித்ரகலா S
Author:

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், “நாமாக நாம்’ இருக்க வேண்டும். சுயமதிப்பு, சுயசிந்தனை, சுயக்கட்டுப்பாடு போன்றவற்றிற்கு மரியாதை கொடுத்தால் தாமாகவே மற்ற எல்லாவற்றின் மீதும் மரியாதை வந்துவிடும். நமது வாழ்வில் முக்கிய முடிவு எடுக்க வேண்டுமென்றால் எல்லோரிடமும் கருத்தாலோசனை பெறலாம். ஆனால் எடுக்கும் முடிவு நம்முடையதாக மட்டுமே இருக்க வேண்டும். நம்மைப் பற்றிய சொந்த முடிவுகளை நாமே எடுக்க முடியவில்லை எனில் நமது பிரச்சனைகளை, நமது வாழ்வை மற்றவர் எப்படி அறிந்திருக்க முடியும்.

          அவர் சொன்னார்;

          இவர் சொன்னார் – என்று

          பிரச்சனைகளை எண்ணி

          நம்மை நாமே வருத்திக் கொள்ளாமல்

          எவர் சொன்னாலும் – உன்

          பகுத்தறிவால் பகுத்துப் பார்

என சான்றோர் கூறியுள்ள படி வாழ்வை நடத்தி வாழ்வாங்கு வாழ்வோம்.

மகிழ்ச்சியையும், கவலைகளையும் அறிந்து கொள்ள நம் மனதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மனம் நம்முடையது; அதை மணம் பரவச் செய்வதும், கசக்கிப் பிழிந்தெடுப்பதும் நாமே, தவிர மற்ற எவரும் இலர். இவ்வுலகில் எல்லாம் எதார்த்தமே. எதார்த்தங்களை எதார்த்தமாக நேசிப்போம்.

எவர் ஒருவர் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதுவாகவே அவர்களாக வேண்டும். நாம் மதிப்பவர்கள், நம்மை நேசிப்பவர்கள் நம்மை நல்ல விதமாகவும், உயர்வாகவும் எண்ணினால், அவர்களது எண்ணங்களை உண்மையாக்குவதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கை ஒரு திறந்த வெளி மைதானம். போட்டிகள் பல, வாய்ப்புகள் சில. போராடி தான் முன்னுக்கு வர முடியும். அன்றி, முன்னுக்குச் செல்பவர்களைக் கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால் இன்னும் நிலைமை பின்னுக்குத்தான் போகும். இலக்குகளை அடைய இன்னும் கொஞ்ச தூரம் தான் என்று மனதைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கப் பழகினால் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகளில் சலிப்பு தெரியாது.

“அதைச் செய்தது நானல்ல; எனக்குத் தெரியாது; நான் அதற்குப் பொறுப்பல்ல’ என்பதற்கும், “தவறு என்னுடையது தான், நானே அதை சரிசெய்து விடுகிறேன்’ என்பதற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. முதலில் பிரச்சனைகளிலிருந்து நழுவுபவர்கள் பலவீனர்கள். அடுத்தவர் மீது தனது பொறுப்புகளை திணித்துவிட்டு ஒதுங்கி ஒழியும் நல்லுள்ளம் கொண்ட நன்மக்கள் அவர்கள். ஆனால் பொறுப்புகளைத் தனதாக்கி, அனைத்தையும் சரிப்படுத்தி “நான் தான்’ என்று நிற்பவர்கள் தனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னோடி (Role Model) என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பலவீன ராஜாக்களுக்கான ஒரு சிறிய கதை. கதை என்றதும் கதைவிடப் போகிறார் என அடுத்த பக்கம் செல்ல வேண்டாம். நிஜமாகவே சிறிய கதை தான்.

ஒரு காட்டில் வாழ்ந்த சிங்கம், காட்டில் வாழும் மற்ற மிருகங்களிடம் சென்று, தானே “பலம் மிக்கவன்’ என்னும் பட்டம் வாங்க முயற்சித்ததாம். முதலில், அச்சிங்கம் மான் இடம் சென்று இக்காட்டிலே அதிக சக்தி வாய்ந்தவன் யார் என்று கேட்டதாம். மானும் பயத்துடன் “தாங்கள் தான்’ என்றதாம். பிறகு அது வரிக்குதிரையிடம் சென்று, இங்கு பலம் படைத்தவன் யார் என்று

தெரியுமா? எனக் கேட்டதாம். வரிக்குதிரையும், “இதிலென்ன சந்தேகம், உங்களுக்கு நிகர் நீங்கள் தானே’ என்றதாம். இப்படியாக குரங்கு, முதலை, ஓநாய் என்று எல்லா மிருகங்களிடமும் கேட்டு பெருமிதம் கொண்டதாம். கடைசியாக, அந்த கர்வத்தில் சற்றும் குறையாது யானையிடம் கேட்டதாம். கேட்ட சிங்கத்திடம் யானை, “கொஞ்சம் பக்கமா வாயேன்’ என்று சொல்லி, தனது துதிக்கையில் சிங்கத்தைச் சுருட்டி ஓரமாக வீசிவிட்டு நடையைக் கட்டியதாம். விழுந்து எழுந்த சிங்கம் என்ன சொல்லி இருக்கும்???

“இந்த வீணாப்போன யானைக்கு பதில் தெரியவில்லை என்றால் பேசாமல் போக வேண்டியது தானே! எதற்காக என்னை இப்படிப் பந்தாட வேண்டும்’ என்று யானையைத் திட்டிவிட்டு, பிடரியில் ஒட்டியிருந்த மணலை உதறிவிட்டு நொண்டி நொண்டிச் சென்றதாம்.

விரும்பியது கிடைத்துவிட்டால் சந்தோசப்படுவதும், கிடைக்காவிட்டால் சங்கடப்பட்டு வேதனை அடைவதும் மனதின் இயல்பு. கிடைக்காத பொருளுக்காக மனம் தடுமாறும். அந்த சூழ்நிலைகளில் சாமார்த்தியமாக மனதைக் கையாள்வது புத்திசாலித்தனம். கிடைக்காத பொருளுக்கு பெருமூச்சு விடாமல், அதற்கு நம்மை அடையும் பாக்கியம் இல்லை என்று நேர்மறையாக சிந்தித்து அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிவிட வேண்டும். வருத்தம் கொள்ள வேண்டும். எப்பொழுதென்றால், நம்மீது உண்மையான அன்பு கொண்ட நெஞ்சத்தை இழக்க நேர்ந்தால். மாறாக, நமதருமை புரியாத, புரிய வைக்க முடியாத, உதாசீனப்படுத்து பவர்களுக்காக வருத்தப்பட்டு, நம்மை வருத்திக் கொள்வதில் எந்தவித பலனும் இல்லை.

நமது அழியாப்புகழ் கண்ணதாசன் அவர்கள் எப்பொழுதும் முன்மொழியும் மறுக்க முடியாத கூற்று: “ஒருவருக்கு நம் மனதார நன்மை செய்தோமானால், அது இப் பொழுது இல்லாவிட்டாலும், எப்பொழுதேனும் அதன் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். அவ்வாறன்றி, மற்றவருக்கு தீங்கோ, வஞ்சகமோ நினைத்தால் கூட வெகுவிரைவில் அதன் பாவமும், விளைவுகளும் நம்மை வந்தடைவது உறுதி’.

“சீறும் பாம்பும், பாய்ந்து வரும் புலியும், பலம் படைத்த யானையும் மனிதனை துவம்சமாக்க ஒரு நொடி போதும். ஆனால் அக்கொடிய மிருகங்களையும் கட்டுப்படுத்தி ஆட்டுவிக்கும் மனம் மனிதனுக்கு உண்டு. அவற்றைக் கைப்பொம்மைகளாக ஆட்டி வைக்கும் தந்திரம் மனிதனுக்கு உண்டு. மனம் உண்டென்றால் மார்க்கம் எதற்கும் உண்டு’.

புண்பட்ட பின்னரே நல்ல பண்பட்ட நெஞ்சம் உருவாகும். கஷ்டங்களை இஷ்டப்பட்டு அணுகிப் போனால் மலையென்ற பிரச்சனையும் பனி என உருண்டோடி விடும். நம்மை உதாசினப்படுத்த நினைப்பவர்களிடமும் அன்பாக புன்முறுவலைக் காட்டிப் பாருங்கள், அங்கே அவர்களது ஆணவம் அடிபட்டுப் போவதோடன்றி, அன்பிற்கு அடிமையாகாவிட்டாலும் வெறுப்புணர்ச்சியின் வீரியம் நிச்சயம் குறைவாகத் தான் இருக்கும்.

காலத்தின் போக்கில் கருத்தைச் செலுத்தி காலம் வெல்லும் சரித்திரம் படைக்க நாமாக நாம் இருக்க வேண்டும். சிந்தனையைச் சிதைக்காமல், மற்றவரை வஞ்சிக்காமல், எண்ணங்களை ஏற்றத்துடன் செலுத்த நாமாக நாம் இருக்க வேண்டும். சிரிப்பு வந்தால் சிரிக்கவும், அழுகை வந்தால் அழவும் என்று உணர்ச்சிகளை எதற்காகவும் கட்டுப்படுத்தாமல், எவருக்கும் கட்டுப்படாமல் இருக்க நாமாக நாம் இருக்க வேண்டும். தான் என்ற அகந்தை இல்லாது, எல்லோரும் ஒன்றென்ற எண்ணம் கொண்டு நாமாக நாம் வாழ்வோம்!

 பொறுப்புகளைத்தனதாக்கி,

அனைத்தையும்சரிப்படுத்தி

நான்தான்என்றுநிற்பவர்கள்

தனக்குமட்டுமல்ல,

மற்றவர்களுக்கும்

ஒருசிறந்தமுன்னோடி 

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2013

தன்னம்பிக்கை மேடை
செயலின் ரகசியம்
எண்ணித் துணிக!
சான்றோர் சிந்தனை
பார்வையற்றவரின் வார்த்தைகள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத் துவதில் கேழ்வரகின் பங்கு
என் பள்ளி
தயாராகுதல்
நம்பிக்கை!
நாமாக நாம்
நல்ல நண்பர்கள் உங்களுக்கு வேண்டுமா?
விதி என்ற சொல்லை விலக்கிவிடு
ஆசையை அகற்று
தொடர்பு எல்லை
நீங்கள் சாதனையாளரே!
மனதின் உயர்வே! மனிதனின் உயர்வு!!
உள்ளத்தோடு உள்ளம்