Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

செ.சைலேந்திர  பாபு IPS பதில்கள்

எனது தந்தை அருப்புக்கோட்டை தாலுக்காவில் பரளச்சி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணி செய்து 2001ம் ஆண்டு ஓய்வுபெற்று இறந்துவிட்டார். எனது தந்தை பணியாற்றிய காவல் துறையில் சேர்வதற்காக ஆசைப்படுகிறேன். அதற்காக இப்போது தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை தேர்விற்கு முயற்சித்து வருகிறேன். எனவே தாங்கள் எனக்கு அத்தேர்வுக்குத் தயார் ஆவதற்கான புத்தகங்களையும், வழிமுறைகளையும், அறிவுரைகளையும் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பா. ஜெயசூர்யா
மேலையூர் (அஞ்சல்)
அருப்புக்கோட்டை, விருதுநகர்
80983 85596

பதில்:

தந்தையார் பணிசெய்த காவல்துறை மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், மரியாதையும் மேலும் அதே தமிழ்நாடு காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தையும் அறிந்து பெருமைப்படுகிறேன்.

இன்றைய நிலையில் காவல்துறையில் இளைஞர் படை சிறப்பு காவலராக (Youth Brigate) சேர்வதில் போட்டி கடுமையாகவே இருக்கும். பல ஆயிரம் இளைஞர்கள் இந்தத் தேர்வில் சேர முயற்சி செய்வார்கள். இத்தேர்வில் போட்டியிட்டு வெற்றிபெறும் நபர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. அதற்கு நீங்களும், தன்னம்பிக்கை வாசகர்களும் கவனிக்க வேண்டியது…

எழுத்துத் தேர்வு: விடைகளைத் தெரிவு செய்து எழுதும் வகையிலானது கொள்குறி வகைத் தேர்வு. நேரம் 1 மணி 40 நிமிடங்கள், வினாத்தாள் தமிழில் இருக்கும். மொத்த மதிப்பெண்கள் 100, எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம். இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்துச் சைகைகள் மற்றும் முதலுதவி, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் அந்தந்த மாநகர – மாவட்ட காலிப் பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1 : 5 விகிதாச்சாரப்படி இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

 உடற்கூறு அளவு: உயரம் – பொது. பிற்படுத்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர் மரபினர் 170 செ.மீ. இருக்க வேண்டும். ஆதி திராவிடர். ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் 167 செ.மீ. இருக்க வேண்டும். மார்பளவு – அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சினை முழுமையாக இழுத்த நிலையில் குறைந்த பட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு உடற்கூறு அளவில் தேறியவர்கள் பின்வரும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

1.    1500 மீட்டர் ஓட்டத்தினை 7 (ஏழு) நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

2.    உயரம் தாண்டுதல் – 1.20 மீட்டர் (அல்லது) நீளம் தாண்டுதல் – 3.80 மீட்டர்

3.    100 மீட்டர் ஓட்டம் – 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் – 80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும்.

4.    கயிறு ஏறுதல் – 5 மீட்டர் ஏறுதல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட 4 நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தகுதி பெற வேண்டும். ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதியிழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்ள தகுதியற்றவராவார். இந்த 4 நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகளே, மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. இந்நிகழ்வுகளில் உயரம் தாண்டுதல் – நீளம் தாண்டுதல் நிகழ்வுக்கு மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும். இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரரின் உயர் அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் நிகழ்வுகளுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்படும். கயிறு ஏறும்போது கைகளைத் தவிர, கால்களையோ அல்லது மற்ற எந்த உடல் பாகங்களையோ பயன்படுத்தக்கூடாது.

அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல்: உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடத்தப்படும். விண்ணப்பத்துடன் அனுப்பிய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வர வேண்டும். உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் வரை பெறும் தகுதிகள் தற்காலிகமானது.

பணிபுரியும் வயது வரம்பு: இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர் 40 வயது வரை இப்படையில் பணிபுரியலாம்.

காவல்துறைக்கு தேர்வு செய்தல்: இப்பணிக்கான அனைத்துப் பயிற்சிகளிலும் முழுமையாகத் தேர்ச்சியடைந்து ஒரு வருட காலம் முழுமையாக இப்படையில் பணிபுரிபவர்கள். காவலர் தேர்வுக்கான தகுதிகளிருப்பின் தமிழ்நாடு காவல்துறைப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் சிறப்புப் பொதுத் தேர்வில் கலந்து கொள்ளத் தகுதி உள்ளவர்கள் ஆவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013

ஜெயசூர்யாவாகிய இனி, நீங்கள் உடனடியாக உடல் தகுதியை வளர்ப்பதற்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களைப் படித்தல் வேண்டும். மிக முக்கியமாக தமிழக வரலாறு, தமிழக புவியியல், தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் தவறாமல் சேகரிக்க வேண்டும். மன தத்துவ (Psychology) கேள்விகளுக்கான பதிலைத் தெரிந்து கொள்ள கடைகளில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும்.

இந்த மூன்று காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டால் போட்டித் தேர்வில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. உங்களுக்கும், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தன்னம்பிக்கை வாசகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்