Home » Articles » தன்னம்பிக்கை மேடை…

 
தன்னம்பிக்கை மேடை…


சைலேந்திர பாபு செ
Author:

 செ.சைலேந்திர பாபு IPS பதில்கள்

2020 இந்தியா வல்லரசாகும் என்று சொல்லப்படும் நிலையில் இளைஞர்களாகிய நாங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?.

ஹரிகிருஷ்ணன், கோவை

2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு உண்டு. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று விரும்பும் அவர், அதற்கு இளைஞர்கள் எவ்வாறு தயாராக வேண்டும்? யார் தயாராக இருக்க வேண்டும்? அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என பத்து அம்ச செயல்திட்டங்களை வகுத்துள்ளார். அவை,

1.   கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து ஒன்றிணைக்க வேண்டும்.

2.   அனைவருக்கும் ஒரே மாதிரியாக குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்க வேண்டும்.

3.   விவசாயம், தொழில்துறை, சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

4.   திறமையான மாணவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையைக் காரணம் காட்டி கல்வி மறுக்கப்படக் கூடாது.

5.   திறமையான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், முதலீட்டாளர்களுக்கு தகுதியான இடத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

6.   நாட்டில் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும்.

7.   அரசாங்கம் நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும், ஊழல் இல்லாமலும் செயல்பட வேண்டும்.

8.   நாட்டில் வறுமையும், தீவிரவாதமும் நீங்க வேண்டும்.

9.   எழுத்தறிவு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. நாட்டில் சுகாதாரம், பாதுகாப்பு, தீவிரவாதம் இல்லாமை, அமைதி மற்றும் மகிழ்ச்சியான நடைமுறைகள் இருக்க வேண்டும்.

10.  நல்ல தலைமையின் கீழ் இருக்கிறோம் என்பதை நினைத்து நாட்டு மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.

இவற்றில் மிக முக்கியமானது மாணவர்கள் முழுக் கவனத்துடனும், ஆர்வத்துடனும் தங்களது பாடங்களைப் படிக்க வேண்டும். மேலும் நான் சொல்ல விரும்புவது, இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் கடமைகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டாலே இந்தியா வல்லரசாகி விடும்.

பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களாக இருக்கும் நீங்கள் உங்களது பாடத்தை ஒழுங்காகப் படித்து அதில் சொல்லப்பட்டிருக்கக் கூடியதை முறையாக புரிந்துகொண்டு தேர்வுகளில் பதிலளிக்க வேண்டும். அப்படி செய்தாலே உங்கள் கடமைகளைச் சரியாக செய்ததாகிவிடும். இதற்கு மேலாக மிக முக்கியமாக, ஒரு வேலை கிடைத்த பின்பு அவரவர் செய்யும் பணியை அக்கறையுடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்துவிட்டால் ஒவ்வொரு இந்தியனுடைய செயல்திறனும் (Productivity) பன்மடங்கு உயரும்.

 

வேலைகளோ ஆயிரக்கணக்கில், விண்ணப்பங்களோ லட்சக்கணக்கில். டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுக்கு லட்சக்கனக்கில் விண்ணப்பிப்பது எதைக் குறிக்கிறது?

முத்துக்குமார், நெல்லை

ஆயிரக்கணக்கில் விண்ணப்பம் வருவது அந்தத் துறைகளில் பலர் ஓய்வு பெறுவதையும், அதற்குப் பணியாளர்கள் தேவைப்படுவதையும் குறிக்கும்.

லட்சக் கணக்கில் விண்ணப்பிப்பது இப்பணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அரசுப் பணி என்பது மிகவும் சவாலான பணியாகும். மனநிறைவு தரக்கூடிய பணியாகவும், மக்கள் முன்னேற்றத்திற்கு பெரும் தொண்டாற்றுவதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

அதுமட்டுமல்ல, பணி நிரந்தரம், படிப்படியாக பதவி உயர்வு, பல்வேறு விதமான சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு வாய்ப்பு, சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்து, அரசுப்பணி என்கின்ற ஒரு அங்கீகாரம் என்று பல சிறப்பு அம்சங்களால் அரசுப் பணியில் இளைஞர்கள் சேர விரும்புகிறார்கள். நல்ல திறமையான நிர்வாகம் அமைய இத்தகைய இளைஞர்களின் ஆர்வம் ஒரு நல்ல அறிகுறியாகத்தான் தெரிகிறது.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை