Home » Articles » இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்

 
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்


நாகராஜ் கே
Author:

ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். ஒரு டாக்டர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்து விடலாம். ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால்? எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறையிலும் உருவாக்கப்படுகிறது என்பதற்கு ஏற்ப தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களைச் சிறந்தவர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் உயிரூட்டுபவர்களே ஆசிரியர்கள். அவர்கள் தவறு செய்தால் எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று என் விருப்பத்தை இதில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.

ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.

மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.

தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.

குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மாணவன் ஒரு நல்ல தலைமைப் பண்புள்ள மனிதனாக உருவாக வேண்டுமென்றால் அவனுக்கு துணிச்சலும், மனதைரியமும் இருக்க வேண்டும். கூடவே நேர்மையும், அறமும் இருக்க வேண்டும். ஒரு தலைவனின் நடவடிக்கைகள் நேர்மையையும், அறத்தையும் பின்பற்றி செயல்படும் தன்மையாக இருக்க வேண்டும். இந்தத் தன்மை தான் இன்றைக்கும், எதிர்காலத்துக்கும் தேவை. ஏனென்றால் இன்று எல்லாத் துறைகளிலும் ஊழல் புகுந்துவிட்டது. அந்த ஊழலை அகற்றி, வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுக்கும் தலைமைப் பண்புள்ளவனாக மாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் செயல்பட வேண்டும்.

கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் ஆசிரியர் தின நன்நாளில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

3 Comments

  1. Buvana Mohan says:

    Nice article. As being a teacher, i am very proud when read this one.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை