Home » Articles » சினத்தைக் கையாள்வது எப்படி?

 
சினத்தைக் கையாள்வது எப்படி?


மதியழகன்
Author:

சினம் வாழ்வின் ஆதாரத்துக்கே எப்படியெல்லாம் சேதாரத்தை விளைவிக்கிறது. உடல் நலத்தில், சமூக வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கோபமே நமது முதல் எதிரி என்பதான கோபத்தின் பல்வேறு பரிமாணங்களைக் கடந்த மாதம் கண்டோம்.

இயலாமையால், ஓயாது பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமை கொள்வதால், பிறரால் அவமானப்பட நேர்வதால், பொறுப்பற்றதனம், சமூக அநீதி, ஒழுங்கீனம் போன்றவற்றைக் காணவும் கையாளவும் நேர்ந்தால் பல்வேறு தாங்கொணாத அழுத்தங்களால் எல்லாம் சினம் சீறிப் பாய்கிறது. கோபத்தை அடக்கி வைக்காது மென்மையாக அளவாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடக்கி அடக்கி வைப்பது ஆபத்தில் கொண்டு விட்டுவிடும். வெளிப்படுத்திவிடுவது மேல்.

அதேபோல கோபத்தை வெறுப்புணர்ச்சியாக மாற்றிவிடும் வாய்ப்பு அதிகம். அது மிகவும் ஆபத்து (Suppressed Anger is Hatred). கோபத்தால் நாம் பாதிக்கப்படுவது ஒருபுறம். ஆனால் பிறரையும் பாதிக்கும்போது தான் சிக்கல் உருவாகிறது. கோபத்தால் விளையும் விபரீதங்களில் பரவலாக நிகழ்வது கடுமையான சொற்களால் திட்டித்தீர்ப்பது. ஆனால் அது ஆறாத வடுவையல்லவா உருவாக்கிவிடுகிறது. ‘ஆறாது நாவினால் சுட்டவடு’ என்றாரே திருவள்ளுவர். தீயாக சுடும் சொற்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுள் முழுமையும் மறக்கமாட்டார்கள். இதனால் தான் ‘ஆறுவது சினம்’ என்கிறது ஆத்திச்சூடி. சினத்தால் நிகழும் சேதாரங்களைத் தடுக்க வேண்டுமானால் சினத்தோடு சினேகிதம் கொள்வதே சிறந்த வழி.

ஏழு வயதே ஆன மகனுக்கு அடிக்கடி ஏகப்பட்ட கோபம் வருகிறது. அன்றாடம் அகப்பட்டவர் மீதெல்லாம் அம்பென வீசுகிறான் அனல் கக்கும் சொற்களை. கோபத்தைக் குறைத்துக் கொள் என்று அறிவுரை கூறுகிறார் தந்தை. கோபம் குறைக்க ஒரு வழி சொல்கிறார். “மகனே! எப்பொழுதெல்லாம் கோபம் வருகிறதோ அப்போதெல்லாம் நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஓர் அணியை அடி” என்கிறார் கைநிறைய ஆணியையும் சுத்தியையும் கொடுத்து. இனி கோபம் வந்தவுடன் யாரையும் சொல்லால் அடிக்காமல், இந்த சுத்தியால் மரத்தில் ஆணியடி என்று சொன்ன படியே அன்றாடம் செய்துவந்தான் மகன்.

முதல் நாள் 7 ஆணிகள், அடுத்த நாள் 5, பிறகு 3 ஆணிகள் என மரத்தில் ஆணி அடிக்க அடிக்க கோபம் குறைந்தது. இந்தப் பசுமரத்து ஆணி போலத் தானே என் சொற்கள் இத்துணை நாள்கள் பிறரைக் காயப்படுத்தி இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்தான். ஒருநாள் ஒரே ஓர் அணி தான் அடித்திருந்தான். எண்ணிப்பார்த்தால் ஏகப்பட்ட ஆணிகள் அவனை அவை என்னவோ செய்தன, மொத்தம் 45 ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன.

பிறகு ஆணிகள் அடிப்பது நின்று போனது, புதிதாக எதுவும் அடிக்கப்படவில்லை. அப்பா! இனிமேல் மற்றவர் மனம் மகிழப் பேசுவேன், கோபப்பட மாட்டேன் என்றான்.

இனி என்ன செய்ய வேண்டும் என்றான் மகன். “இனி கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கியெடு என்றார் தந்தை. அடுத்த 45 நாள்களில் ஆணிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டுவிட்டன. குதூகலத்துடன் தந்தையைப் பார்த்தான். அப்பா மரத்தை வந்து பாருங்கள், ஆணிகள் எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டன என்றான்.

ஆணிகள் பிடுங்கப்பட்ட மர்ததை தொட்டுப் பார்த்துவிட்டு தந்தை சொன்னார், “ஆணிகள் அடித்த இடத்தைப் பார், அதன் காயங்களும், தழும்புகளும் இருக்கின்றன” என்றார். “இனி எக்காணரம் கொண்டும் கோபப்பட்டு பிறர் மனம் நோகச் செய்ய மாட்டேன். சினத்தோடு சினேகிதம் கொண்டேன்” என்றான் மகன்.

கோபத்துக்கும், ஆபத்துக்கும் நெருக்கம் அதிகம் (Anger is One Letter Short of Danger). எனவே கோபம் தவிர்ப்போம். இயலாமல் போனால் கோபம் தணிப்போம். “கோபம் வந்துவிட்டால் மனிதனுக்கு மற்றவர்தம் குணநலன்கள் தெரிவதே இல்லை. பிரியமானவர்கள் கூட ஓர் இமைப்பொழுதில் பகைவர்களாகிவிடுகிறார்கள்” என்கிறார் மகாவீரர். தீ எப்படி எரியக்கூடிய பொருள்களை எல்லாம் எரித்துவிட்டுத் தான் அணைகிறதோ அதுபோல கோபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தால் அகப்பட்டவரை அழிக்க முணைந்து பின் அதுவும் அடங்கிப் போகும்.

திச் நாட் ஹான் (Thich Nhat Hann) என்ற வியட்நாம் பவுத்த அறிஞர், புத்தரின் போதனைகள் இழைந்த ‘சினம்’ என்னும் நூலில் அந்த கோப நெருப்பை குளிர்விக்கம் வழியாக மனத்தை நலத்தோடு வைக்க வேண்டும் என்கிறார்.

உடலும் மனமும் ஒன்றோடு ஒன்று இணைந்தே கிடக்கிறது என்பதால். இந்த இரண்டில் எதனொன்றில் சமநிலை இழந்தாலும், மற்றொன்றில் பாதிப்பும் தாக்கமும் நிகழவேச் செய்யும். இந்த இரண்டையும் சமநிலையில் வைக்க யோகப் பயிற்சிகள் சிறந்தன.

கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுவது நல்லது, இது கோபத்தால் வெளிப்படும் கொப்பளிக்கும் சொற்களால் யாரும் சூடுபடாமல் தவிர்க்க வழி எனப் பலரும் குறிப்பிடுகிறார்கள். நிதானமாக செயல்பட முடியாதவர்கள் இப்படிச் செய்யலாம். ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தபோது என்னிடம் பணியாற்றிய ஊழியர் ஒருவர், கோபம் வந்தால் திடீரென எழுந்து சென்றுவிடுவார். அப்போதைக்கு, என்ன இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே சென்றுவிட்டாரே என்று இருந்தாலும்… இது ஒரு வழி. ஆனால் ஒரு கூட்டத்தில் பொறுப்பான இடத்தில் இருக்கிறவர் பொறுப்பில்லாமல், பொருத்தமில்லாமல் மற்றவர் பேசுகிறபோது உடனே எழுந்து சென்றுவிட முடியாது.

அத்தகு சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வது? நான் அறிந்த, உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அந்த நண்பர் என்ன செய்வார் தெரியுமா? அப்படிக் கொதிக்க வேண்டிய சூழ்நிலையில் மெல்லச் சிரிப்பார். அடுத்து வெடிப்பதற்கு மாறாக இனிய சொற்களால், முருவலித்தவாறே அவரின் முடிவை அறிவிப்பார். கோபப்பட்டு கொடுஞ்சொற்களின் கொடுக்கால் கொட்டுவிற்கு மாறாக இப்படிக் கையாள்கிற இலாவகமும் பக்குவமும் பெற மிகுந்த மனப்பயிற்சி வேண்டும்.

சினத்தைத் தணிக்க, தவிர்க்க சிறந்த மனப்பயிற்சி ஏதும் இருந்தால் கற்றுத்தருமாறு ஒரு மாணவன் ஜைன துறவி ஒருவரை அணுகிக் கேட்டான். எங்கே உன் கோபத்தைக் காட்டு நானுந்தான் பார்க்கிறேன் என்றார் துறவி. தற்போது என் கோபம் என்னோடு இல்லை, எனவே இப்போது அதனைக் காட்டவியலாது என்றான் மாணவன்.

சரி, அதனாலென்ன, எப்போது உன்னிடம் இருக்கிறதோ அப்போது கொண்டுவந்து காட்டு என்றார் துறவி. அதுவும் இயலாத காரியம். ஏனெனில் எப்போது அது வரும் என்றே தெரியாது, தங்களிடம் நான் வரும்போது அது நிச்சயம் என்னை விட்டு ஓடிவிடும் என்றான் மாணவன்.

அப்படியானால் அந்தச் சினம் உந்தன் உடன்பிறந்த குணமன்று, உனது பெற்றோரோ! மற்றோரோ! உற்றாரோ! உறவினரோ! நண்பர்களோ! வம்பர்களோ உனக்கு அளித்த பரிசும் அன்று. நீயாக வெளியிலிருந்து தேடிக் கொண்டது. இப்போது விளங்குகிறதா? நீ உன்னை மறந்த நிலையில் மற்றவர்தம் தூண்டுதலால் உணர்ச்சிவாய்ப் படும்போது சினம் உன்னோடு சினேகம் கொள்கிறது. பிறகு உன்னையே அதற்கு அடிமையாக்கிக் கொள்கிறது. எப்போதும் விழிப்புடன் இருக்கும்போது சினத்தில் சிக்கிப்போவதில்லை. எனவே நீ எப்போதும் விழிப்புடன் இருக்கக் கற்றுக்கொள் என்றார் துறவி.

நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருந்தால் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இல்லையென்றால் சினம் உங்களைச் சிறைபிடிக்கும். சுயகட்டுப்பாட்டுடன் வாழும் வரை நீங்கள் தான் உங்களுக்கு எசமான். கட்டுப்பாட்டை இழக்கும்போது யாரோ ஒருவருக்கு அல்லது ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிடுகிறீர்கள்.

ஆர்ப்பரிக்கும் ஆழியின் மேற்பரப்பிலும், ஓரங்களிலும் தான் அலைகளின் ஆர்ப்பாட்டம் இருக்கும். ஆழ்கடலிலும், நடுக்கடலிலும் அமைதியே நிலவும். ஆதலால் தான் ஆரவாரமாக புயல் சின்னம் தென்பட்டால் கப்பல்களை நடுக்கடலுக்குக் கொண்டு சென்று நிறுத்திவிடுகிறார்கள். அதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எல்லாம் மனதின் மேற்பரப்பில் தான். ஆழ்மனம் அமைதியானதே! ஆழ்மனத்தோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்ள ஏற்ற மனப்பயிற்சிகளை மேற்கொண்டால் கோபம் நம்மிடம் கோபித்துக் கொண்டு ஓடுவது உறுதி. புத்தரும், சித்தரும் தந்துள்ள மனப்பயிற்சிகளை மேற்கொண்டால் சினம் நம்மை சீண்டாது. இது நோய் வருமுன் தடுப்பூச போட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்திச் செய்வது போல மனப்பயிற்சியால் மனவலிமையை அதிகரித்து கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் தாக்கப்படாமல் தடுப்பதேயாகும்.

கோபத்தைத் தடுக்க மனப்பயிற்சி. கோபத்திற்கு வடிகால் முன்பு சொன்ன பசுமரத்தாணி பயிற்சி. காட்டாறு வெள்ளமென கோபம் வரும்போது அழிவு நிகழா. தடுத்து அணைபோட்டு நிறுத்தி வாய்க்கால்களில் வடிய விடுவது போன்று. கோபத்தை வடிய விட வழிகள் பல உண்டு.

இதோ… ஆப்ரஹாம் லிங்கனின் அனுபவத்தைத் தருகிறேன். வளைகுடாப் போரில் கடைசி கட்டத்தில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்தார் ஆப்ரஹாம் லிங்கன். படைத்தளபதி மீது கடுங்கோபம் கொண்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினார் அதிபர் லிங்கன்.

“நீ செய்த தவறுகள் இத்தனை. நீ எப்படியெல்லாம் நடந்திருக்க வேண்டும். உன்னால் அமெரிக்காவின் கௌரவமே குறைந்துவிட்டது”. இப்படியாக பல பக்கங்களுக்கு எழுதினார். அந்தக் கடிதம் லிங்கனின் மறைவிற்குப் பிறகு தான் வெளிவந்தது. அந்தக் கடிதத்தின் கடைசியில், “இத்தனை கோபம் அடைந்த நான். தளபதியின் இடத்தில் இருந்திருந்தால் அவர் செய்ததைத்தான் நானும் செய்திருப்பேன். அதனால் இதனை அவருக்கு அனுப்பவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில், கோபத்தின் வெளிப்பாடுகளை ஒரு காகிதத்தில் எழுதித் தீர்க்கலாம். உரையாடலின் போது கோபம் உண்டானால் பேசுகிற தலைப்பை மாற்றிவிடலாம். கருத்து வேறுபாடு மனிதருக்கு மனிதர் உண்டாவது இயல்பு என உணர்ந்தால் கோபம் குறையும்.

குளிர்ந்த நீரில் குளிப்பதும், மெல்லிசை கேட்பது, நடைப்பயிற்சி, ஆழ்ந்த உறக்கமும் கூட கோபத்தை வடியச் செய்யும் வழிகள் தான். பொதுவாக மன்னிக்கும் மனோபாவம் இருந்தால் கோபம் நம்மில் குடியேறாது.

கோபப்படுவதற்கான சூழல் எப்படியும் தினம் தினம் ஏற்பட்டுவிடுகிறது என்றார் நண்பர் ஒருவர். “நானும் முயற்சி பண்ணிதான் பார்க்கிறேன் எப்படியும் கோபப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் நமக்கு மேல் அதிகாரியாக இருக்கிறவங்க திட்டும்போது கோபம் வருது. ஆனா எதிர்த்து திட்டவும் முடியாது, வேலைய விட்டு ஓடவும் முடியாது” என்றார்.

இன்னொரு நண்பர், “சமூகத்தில் பார்க்கிற அநியாயங்களைப் பார்த்து கோபம் பொங்குது. உங்க மாதிரி எழுத்தாளரா இருந்தா எழுதி வடிய வைக்கலாம். மரத்துல ஆணி அடிக்கிறது. பிரேக்டிகலா ஆகாது. வேறு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க” என்றார்.

இத்தகையவர்களுக்கு இதோ ஓர் எளிய பயிற்சி. முறையாக சிறந்த ஆசிரியர்களிடம் மூச்சுப்பயிற்சி, தியானம் எனப்படும் மனதை ஆள்கிற பயிற்சி பெற வாய்ப்பு இல்லாதவர்களும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

கட்டுங்கடங்காத கோபம் ஏற்படும்போது ஆழ்ந்த சுவாசம் செய்யும்படி பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் சொல்வது நீங்கள் முன்பே அறிந்தது தான். கடுமையாக உடல் உழைப்போ, அல்லது வெளியில் நெடுந்தொலைவு அலைந்தோ, பயணித்தோ வீடு வந்ததும் உட்காரும்போது ‘அப்பாடா’ என்று உடலை நாற்காலில் கிடத்தும்போது, வெளிச்சுவாசம் வாய்வழியாக வெளியேறும். இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும். இதற்கு ‘அப்பாடா பயிற்சி’ என்று பெயர்.

இதையே நீங்கள் ஆற அமர நிதானமாக மூச்சை நன்கு நாசி வழியாக முடியும் அளவு உள் இழுத்து, பிறகு வாயை அகலத் திறந்து மெதுவாக வாய்வழியாக வெளிவிட வேண்டும். அப்போது கவனம் முழுவதும் உங்கள் மூச்சில் வைத்துக் கொள்க. ஓரிரு நிமிடம் அப்பாடா பயிற்சி செய்தாலே சினத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை உதிர்த்துவிடலாம்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை