Home » Articles » டாப் 10 பொறியியல் படிப்பு

 
டாப் 10 பொறியியல் படிப்பு


ஆசிரியர் குழு
Author:

+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம் என்ற கேள்வி எழும்போதே எந்தப்படிப்பு ‘மோஸ்ட் வான்டடு?’ என்ற கேள்வி பலரின் மனதில் கிளம்பி விடுகிறது. அத்தகைய கேள்விக்கான பதிலாக உங்களுக்கு உதவத்தான் இந்தப் பதிவில் முக்கியமான கல்வி நிறுவனங்களையும், பத்து படிப்புகளையும் வரிசைப்படுத்துகிறோம்.
பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது… என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்துவிடுமா… என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரணம்… படித்து முடிக்கும் போதே… பல நேரங்களில் கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே… பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை… சில வருடங்களிலேயே லட்சத்தைத் தொடும் அளவுக்குச் சம்பள உயர்வு… வெளிநாட்டு வேலை வாய்ப்பு… என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள் தான்.
பி.இ. படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்சைத் தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸிக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப்புதுத் துறைகள் வந்துள்ளன. வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் துறைகளை விட இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டடு’ ஆக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் (Materials Science and Engineering)
பொறியியல் பாடப் பிரிவுகளிலேயே இப்போது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங். எல்லா பொருட்களின் மூலக்கூறுகளின் தன்மையைப் பற்றி படிப்பதே இதன் சிறப்பம்சம்.
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும் அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப்படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்பிற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அட்டாமிக் எனர்ஜி (Atomic Energy)
மும்பை பல்கலைக்கழகம் மற்றும் புவனேஸ்வரில் உள்ள என்.ஐ.எஸ்.ஈ.ஆர். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்) பயாலஜி, கெமிஸ்ட்ரி, மேக்ஸ் மற்றும் ஃபிசிக்ஸ் பாடங்கள் அடங்கிய ஐந்து வருடங்களுக்கான இந்த இன்டக்ரேட்டர் எம்.எஸ்.சி. கோர்சை அளிக்கின்றன.
என்.ஐ.எஸ்.ஈ.ஆர். தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக்கொடுக்கும் இந்த கோர்சில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படைப் பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும் அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜூகேசனின் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்தத் தீர்வு பொதுப்பிரிவு, மேக்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என 5 பாகங்களாக பிரித்து நடத்தப்படும் வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.
ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் (Aerospace Engineering)
செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவை பற்றிய படிப்பை வழங்கிவந்த ஏரோனாடிக்கல் என்ஜினியரிங் துறை இப்போது இன்னும் பல புதிய பாடக்கூறுகளை தனக்குள் இணைத்துக் கொண்டு ‘ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்’ கல்வியாக மாறியுள்ளது.
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. இது சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, கான்பூர் ஐஐடி, கோவை அமிர்தா யுனிவர்சிட்டி மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கின்றனர்.
எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் (Electrochemical Engineering)
வேதிப் பொருட்களின் ஆற்றலை மின்வேதி ஆற்றலாக மாற்றுவது. இவற்றில் உள்ள அறிவியல் கூறுகள், வடிவமைப்பு, குணாதிசயங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி படிக்கும் படிப்பு தான் இது. பயோ சென்சார்ஸ், எலக்ட்ரோ கெமிக்கல் சென்சார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்புமிக்க துறைகளில் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ.) சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பார்மாஸூட்டிகல் என்ஜினியரிங் (Pharmaceutical Engineering)
இதுவரை கெமிக்கல் என்ஜினியர்களையே பணியமர்த்திய பார்மாஸூட்டிகல் தொழில்துறை, இப்போது அந்தப் பணியிடங்களுக்கு அதில் இன்னும் ஆழமாகப் படிக்க முடிகிற இந்த பார்மாஸூட்டிகல் என்ஜினியர்களைப் பயன்படுத்துகிறது.
மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸூட்டிகல் என்ஜினியரிங் ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படுகிறது. புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும் அவற்றிற்கான தேவை அதைவிட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவே தான் இந்தப் படிப்பிற்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
பெட்ரோலியம் ரீஃபைனிங் டெக்னாலஜி (Petroleum Refining Technology)
பெட்ரோலியத்தைப் பிரித்து எடுப்பது, அதைப் பராமரிப்பது, சுத்திகரிப்பது என இந்த பெட்ரோலியத் துறையில் உள்ள தொழில்நுட்பங்களைப் படிக்கும் பொறியியல் இது.
வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலைவாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
பயோ மெடிக்கல் என்ஜினியரிங் (Bio-medical Engineering)
பொறியியல் தொழில்நுட்பத்தை மருத்துவத்துறையில் புகுத்தும் இந்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங்கில் பயோ இன்பர்மேட்டிக்ஸ், பிஸியலாஜிக்கல் சிக்னல் பிராஸஸிங், மெடிக்கல் இமேஜிங், திரி டி மாடலிங் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கும். இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெசின்கள் முதலியவை இந்தத் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது. இதற்கான வேலைவாய்ப்பு நாளுக்குநாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கான தேவையும் பெருகிக்கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங் (Mechatronics Engineering)
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களின் கலவைதான் இந்த மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங். தானியங்கி ரோபோக்கள் போன்ற அதிஅற்புத தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடங்கிய இந்தப்பாடப் பிரிவுக்கு, இப்போதும், இனிவரும் காலங்களிலும் பெருமளவில் தேவை உள்ளது.
என்ஜினியரிங் மேக்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினியரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசியிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலமும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
நேவல் ஆர்கிடெக்சர் (Navel Architecture)
கடல் வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தைப் பற்றிய படிப்பு இது. இப்போது வான்வழிப் போக்குவரத்துக்கு இணையாக கடல் வழிப்போக்குவரத்தும் வளர்ச்சியடைந்து வருவதால், இந்தத் துறை இன்று பெரிதும் நாடப்படும் துறையாக உள்ளது. இந்திய கப்பல் படையிலும் இந்தப் படிப்புக்கான தேவை அதிக அளவிலேயே உள்ளது. ஆண், பெண் என இருபாலருக்குமான இந்தப் படிப்பு கேரளாவில் உள்ள கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர யுனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரிகளில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன.
அக்ரிகல்சர் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Agriculture Information Technology)
தகவல் தொழில்நுட்பவியல் சில ஆண்டுகளாகவே பரவலான முக்கியத்துவத்தைப் பெற்றுவருவதை நாம் அறிவோம். இதை விவசாய உற்பத்தியிலும் பயன்படுத்தும் அறிவியல் தான் ‘அக்ரிகல்சர் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி’. இதன் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும், ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்சர் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி’. நாட்டில் 70 சதவீதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் என்பதால் இதற்கான வேலை வாய்ப்பு அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சரல் இன்ஃபர்மேசன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன் ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்குத் தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!