Home » Articles » பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்

 
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்


மனோகரன் பி.கே
Author:

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

வழக்கமாக தேசத் தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படும் அல்லது நினைவு நாள் அனுசரிக்கப்படும். ஆனால் இந்த இரண்டுமே இல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் மேதையாகத் திகழ்ந்து நோபெல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதியைத்தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்திய அறிவியல் வானில் தோன்றிய விடிவெள்ளி சர்.சி.வி.ராமன். தமிழகத்து மண்ணில் பிறந்து அறிவியல் துறையில் நோபெல் பரிசு பெற்ற அவரின் கண்டுபிடிப்பான ‘ராமன் நிறத்தோற்றம்’ அறிவியல் துறையின் அடிப்படையாக விளங்குகிறது. சர்.சி.வி.ராமனின் நுண்ணறிவினையும், திறமையையும், ஆராய்ச்சிகளின் சிறப்பையும் உணர்ந்து 1930ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

ஆன்மீகத்திற்கும் அகிம்சைக்கும் பெயர் பெற்றது நம் பாரத நாடு. தேசத்தலைவர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட தியாகிகளைக் கொண்டாடுவது போலவே அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தை இந்திய அரசு கொண்டு வந்தது.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகில் உள்ள மாங்குடி என்ற ஊரில் சந்திரசேகரய்யர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு 1888ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி இரண்டாவது மகனாகப் பிறந்தார் சர்.சி.வி.ராமன். பெற்றோர் இட்ட பெயர் வெங்கட்ராமன். இளம் பருவத்திலேயே வெங்கட்ராமன் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமையோடு விளங்கினார். 1917 முதல் 1933 வரை பேராசிரியர் பதவி வகித்த ராமன் 1933 முதல் 10 ஆண்டுகள் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவன இயக்குனராகப் பணியாற்றினார்.

1943ஆம் ஆண்டு தமது பெயரில் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 1948இல் அவர் தேசியப் பேராசிரியர் ஆனார். அவருக்கு கிடைத்த விருதுகளும், பதவிகளும் பலப்பல. 1954இல் நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருதும், 1957இல் ‘சர்வதேச லெனின் விருதும்’ அவருக்கு வழங்கப்பட்டன. உலகம் போற்றும் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் 1970ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமது 82வது வயதில் காலமானார். அவர் மறைந்தாலும் அவரின் கண்டுபிடிப்பான ராமன் விளைவு என்றென்றும் நிலைத்திருக்கும்.

அரும்பெரும் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளால் உலகம் வேகமாக மாறி வருகிறது. அவர்கள் சந்தித்த சோதனைகளும், அடைந்த சாதனைகளும் வார்த்தைகளில் சொல்லி மாளாது. அவர்களால்தான் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாராஜாக்கள், மகாராணிகள் கூட வாழாத சொகுசு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசிய அறிவியல் தினத்தில் சர்.சி.வி.ராமனை நினைவு கொள்வதோடு மட்டுமின்றி அறிவியல் சிந்தனைகளை வளர்த்து, புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்று, வளர்ச்சிகளைப் பாராட்டி விஞ்ஞானிகளை ஆதரிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக் கடனாகும்.

எந்த ஒரு நாகரிகத்துக்கும் அடிப்படை அறிவியலே. மனிதனுக்கு சிந்தனா சக்தி வளரவில்லை என்று கருதப்பட்ட காலத்தில் கூட வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலைப் பயன்படுத்தினான். கற்களைப் பலமாக வீசி மிருகத்தை காயப்படுத்தி அதனை நகர முடியாமல் செய்தான். பின்னர் கற்களைக் கூர்மையாக்கித் தாக்கும் சக்தியை அதிகப்படுத்தினான். இப்படி கற்கால மனிதன் காலத்திலிருந்தே ஒவ்வொரு கால கட்டத்திலும் அறிவியல் நம் வாழ்வோடு இணைந்தே வந்திருக்கிறது.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற மால்தஸின் கூற்றை பசுமைப்புரட்சி பொய்யாக்கி விட்டது. விவசாயம், மருத்துவம், போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று அனைத்துத் துறையிலும் அறிவியல் கால்பதித்துள்ளது. தேனிலவுக்கு சுற்றுலா மையங்களுக்கு செல்லும் புதுமணத் தம்பதிகள் அந்த நிலவுக்கே செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அறிவியல் உலகில் வாழும் நாம் அறிவியல் கண்டுபிடிப்புகளை வரவேற்று, அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, அறிவியல் அறிஞர்களை ஆதரிப்போமானால் நாடும் நலம் பெறும், நம் வாழ்வும் வளம் பெறும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!