Home » Cover Story » சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!

 
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!


ஆசிரியர் குழு
Author:

திரு. மோகன் கே. கார்த்திக், திருமதி. வினோதினி கார்த்திக்
இயக்குனர்கள், கிட்ஸ் கிளப் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்

“இவ்வுலகம் குழந்தைகளால் வழிநடத்தப்பட்டால் மிகவும் அற்புதமானதாக இருக்கும். ஏனெனில் மற்ற எல்லோரையும் விட வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பவர்கள் அவர்கள் தான்” என்பார் சத்குரு. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்தமான முறையில் பாடம் கற்றுத் தரக் கூடியவர்கள் இவர்கள்,

சர்வதேச பல்கலைப் பாடத்திட்டங்களை வழிகாட்டியாகக் கொண்டும், ஒழுக்கத்துக்கு அதிமுக்கியத்துவம் அளித்தும் யோகா, கலாச்சார வகுப்புகளுடன் பாடம் எடுத்து நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருபவர்கள் இவர்கள்,

உயர்ந்த லட்சியங்களும், சிறந்த குறிக்கோளும் கொண்டதாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டவர்கள் இவர்கள்,

ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்த நாடு பெற்றிருக்கிற மேதைகள், சிந்தனையாளர்கள், வழி நடத்திச் செல்லக்கூடிய தலைவர்கள் ஆகியோரின் அளவைக் கொண்டுதான் கணிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அத்தகைய சிந்தனையாளர்களை, மேதைகளை, தலைவர்களை உருவாக்கும் கல்வியைக் கற்றுத்தருபவர்கள் இவர்கள்,

அறிவுத்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்கும் உன்னத முயற்சியாகவும், வளரும் தலைமுறையினர் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களைச் சந்திக்கும், சாதிக்கும் தலைமைப் பண்புகளுடனும் உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்,

ஒவ்வொரு பெற்றோரின், குழந்தைகளின் பெயர்களைக் கூறி அழைத்துப் பேசும் அளவுக்கு நெருக்கமான உறவை பேணுபவர்கள் இவர்கள்,

இவ்வாறு கல்வியிலும், சமுதாய நலத்திலும் தனி அக்கறை செலுத்தி ஒரு பள்ளியில் கற்றுத்தரும் கல்வியின் அடிப்படை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக ‘கிட்ஸ் கிளப்’ மேனிலைப் பள்ளியை நடத்தி வரும் இயக்குநர்களான திரு. மோகன் கே. கார்த்திக் மற்றும் திருமதி. வினோதினி கார்த்திக் அவர்களைச் சந்தித்தபோது, “மதிப்பெண்களையும் தாண்டி சிந்திக்கும் ஆற்றலை மாணவர்களிடம் வளர்க்கவே விரும்புகிறோம்” என்றவர்களுடன் இனி நாம்…

வெவ்வேறு பின்புலத்தில் இருந்து வாழ்வில் இணைந்த தாங்கள் கல்விப் பணியிலும் இணைந்து ‘கிட்ஸ் கிளப்’ பள்ளியை உருவாக்கியதன் நோக்கம்:
எங்களுக்கு குழந்தைகள் என்றால் உயிர். எப்பொழுதும் என்னைச் சூழ்ந்து குழந்தைகள் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஒருநாள் இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது. அப்போது திருப்பூர் இருந்த சூழ்நிலையில் கல்வி முறையும், குழந்தைகளும் பெற்றோர்களும் எதிர்கொண்டிருந்த சவால்களும் எங்களுக்குள் பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. குழந்தைகளை ஆற்றல்மிக்கவராக உருவாக்க வேண்டும் என்று எண்ணினோம்.

அப்போதுதான் கற்றலுக்காக குழந்தையினுள் எழும் கனலை யாரும் சரியான முறையில் தக்கவைத்து அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கவில்லையோ? என்பதை உணர்ந்தோம். அன்றைய நடைமுறையில் பரவலாயிருந்த கல்வியின் அடிப்படை செயல்பாடுகளை மாற்றி குழந்தையினுள் அறிவு தாகத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளுடன் கூடிய கல்வியைக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது.

சிறந்த ஒழுக்க நெறி படைத்தவர்களாக, பழக்கவழக்கங்களில் மேம்பட்டவர்களாக, நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களாக, தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டியதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

குழந்தைகளின் அறிவு மேம்பாட்டிற்காகவும், நவீன உலகின் சவால்களை எதிர்கொண்டு, தன்னம்பிக்கையுடன் கூடிய ஆளுமையை வளர்க்கும் பொருட்டாகவும், கணினி அறிவியல் துறையில் சிறந்தும், ஆங்கிலப் பேச்சாற்றல் மிக்க ஒரு புதிய சமூகத்தினரை உருவாக்க வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடாகத் தான் இந்த ‘கிட்ஸ் கிளப்’ பள்ளி உருவானது.

மழலையர் பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாக வளர்த்திருப்பது குறித்து?
எங்களுடைய ஆத்ம திருப்திக்காக 1996ம் ஆண்டு மூன்று குழந்தைகளைக் கொண்டு ஒரு மழலையர் பள்ளியாகத் தான் இதைத் தோற்றுவித்தோம். இன்று 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். மழலையர் பள்ளியாக தோற்றுவிக்கப்பட்ட பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. குறுகிய காலத்திலேயே எங்களுடைய இலக்கை பெருமளவு எட்டியதற்குக் காரணம் எங்கள் பள்ளியில் பாடங்களைக் கற்றுத்தரும் முறையும் அவற்றைச் சரியான வகையில் வழங்கும் ஆசிரியர்களையுமே சாரும்.

பொதுவாகவே குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் போது மகிழ்ச்சியாகவும், பள்ளிக்கு வரும்போது போர்க்களம் செல்வதைப் போலும் இருக்கும். முதலில் இந்த சூழ்நிலைகளை மாற்றியமைக்க முடிவு செய்தோம். குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்ற ஆடல் பாடல்களுடன் கூடிய செயல்வழி கற்றலைக் கொடுத்தோம். மும்மதப் பிரார்த்தனைகூட ஆடல் பாடல்களுடன் தான் நடைபெறும். இதனால் குழந்தைகள் வீட்டில் இருக்கும் சூழலை அனுபவிப்பார்கள். விளைவு கற்றலின் ஆர்வம் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்.

எங்கள் பள்ளியின் முழுநோக்கமாக கல்வி வெறுமனே மனப்பாடத் திணிப்பாக இல்லாமல் அறிவிற்கான தாகத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம். மகிழ்ச்சியில் மலர வேண்டிய சின்னஞ்சிறு மொட்டுக்களுக்கு அவர்கள் விரும்பிய வழியிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுத்தோம். தேவையற்ற நிர்பந்தங்களை அவர்கள் மீது திணிக்காமல் அவர்களின் அறிவிற்கான தாகத்தைத் தூண்டி, கற்பனை சக்தியை வளர்த்தெடுக்கும் விதத்தில் கற்றுக்கொடுத்தோம். குழந்தையினுள் அறிவுத் தாகம் தூண்டப்படுமானால் அவர்கள் கற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. எப்படியும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை உணர்ந்து அறிவுத் தாகத்தைத் தூண்டிவிட்டதன் விளைவுதான் இன்று மருத்துவம், பொறியியல், கணினி அறிவியல் என்று பல்வேறு துறைகளில் எங்களின் மாணவர்கள் இந்தியா தாண்டியும் பல அயல்நாடுகளிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் பள்ளியின் கல்வி முறையில் எந்த மாதிரியான பாடத்திட்டத்தைக் கையாளுகிறீர்கள்?

எங்கள் பள்ளியில் சமச்சீர் கல்விமுறை, சி.பி.எஸ்.சி. கல்விமுறை மற்றும் ஐ.ஜி.எஸ்.இ. (IGSE) கல்விமுறை என்று மூன்று விதமான கல்விமுறைகளையும் மிகச்சிறப்பாக நடத்துகிறோம். மழலை வகுப்புகளுக்கு மாண்டிசேரி முறையில் பாடம் கற்றுத்தரப்படுகிறது. மூன்று முறையிலும் குழந்தைகளிடம் உள்ள திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி, மெருகேற்றி, தலைமைப் பண்பை வளர்க்கிறோம். ஒவ்வொரு குழந்தையையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, அறிவைக் கூர்மையாக்கும் அனுபவம் உள்ள ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்துகிறோம். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கக் கூடியவரை அழைத்துவந்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதால் அவர்களின் பாடம் எடுக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது.

உங்களின் பார்வையில் மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் இன்றைய கல்விமுறை சரியான பாதையில் செல்கிறதா?

இன்று பெற்றோர்களும், மாணவர்களும் எப்போதும் மதிப்பெண்களில் முதலிடத்தில் இருப்பதையே விரும்புகிறார்கள். அதை நோக்கியே இன்றைய கல்விமுறை செல்கிறது. குழந்தைகளின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் கல்விமுறையை விட்டுவிட்டு முதலிடம் என்பதை நோக்கமாகக் கொண்டே செயல்படும் விதமாக இன்றைய கல்விமுறை மாற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். ஏனென்றால் அனைவருமே முதலிடத்தில் இருக்க முடியாது. நாம் எந்த செயலைச் செய்தாலும் நம் கவனம் முதலிடத்தில் உட்காருவதிலேயே இருக்குமானால் மன அழுத்தம் ஏற்படும். எனவே மதிப்பெண் நோக்கி நகரும் இன்றைய கல்விமுறை திசைமாற்றம் பெறவேண்டும். அதற்கு முதலில் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் மாற வேண்டும். ஏனென்றால் பள்ளிகள் பெற்றோர்களின் நோக்கங்களையே செயல்படுத்துகின்றன. பெற்றோர்களின் நோக்கங்கள் மாறினால் பள்ளிகளும் மாறும்.

அப்படியானால் எத்தகைய கல்வியை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்?

எப்படியாவது என்னுடைய குழந்தை நூறு சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்று எண்ணும் பெற்றோரின் விருப்பம் முதலில் மாற வேண்டும். மாணவர்கள் உண்மையான அறிவுடனும், முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வகையிலும், உடலாலும், மனதாலும் முழுத்திறமையுடன் செயல்படக்கூடிய அளவுக்கு தயார் செய்யக்கூடிய கல்வியைக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கல்வி முறையில் வளரும் குழந்தைகளால் மட்டுமே இந்த உலகத்தை புரிந்துகொண்டு வளர முடியும்.

தாங்கள் கூறும் கல்வி முறையைத்தான் ‘கிட்ஸ் கிளப்’ பள்ளி தருகிறதா?

கல்வி கற்க செல்லும் மாணவர்களின் மூளையில், எவ்வளவு முடியுமோ, அதற்கு மேலும் திணிக்க கல்வி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இது நல்ல கல்விச் சாலையின் பணியல்ல. இதனால் மாணவர்களின் அறிவும், ஒழுக்கமும் துளி கூட வளர்வதில்லை. மாறாக எதிர்மறை எண்ணங்களுக்கு ஆட்படும் சூழ்நிலையே மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

கல்வியென்பது ஏராளமான செய்திகளை அவனுக்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்தி திணிக்கப்பட்டதாக இல்லாமல், அறிந்து கொள்வதற்கான தாகத்தினை அதிகப்படுத்துவதாகவும், அவர்களின் புத்திசாலித்தனம் விரிவாக வளருமாறும் இருக்க வேண்டும். முதல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என்று எதிர்பார்க்காமல், அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையையும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தக்கூடிய கல்வியை எங்களின் ‘கிட்ஸ் கிளப்’ பள்ளி கொடுக்கிறது.

இன்னும் எப்படியெல்லாம் மாணவர்களின் திறனை தங்கள் பள்ளியில் மேம்படுத்தி வருகிறீர்கள்?

எங்கள் ‘கிட்ஸ் கிளப்’ பள்ளியில் எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுக்காமல், அவர்களுக்கு தங்கள் மூளையை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்றுத்தருகிறோம். இன்றைய நிலையில் பரவலாக இந்தியாவில் பல துறைகளில் வெற்றியைப் பெற்றவர்களும், சாதனையைச் செய்தவர்களும் சொந்த வாழ்க்கை என்று வரும்போது பல சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் சரியாக மூளையை உபயோகிக்க கற்றுத்தராதது தான். எனவே தான் மூளையைத் தூண்டிவிடக்கூடிய கல்வியாக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து கற்றுத்தருகிறோம்.

ஒரு தூண்டுதல் இல்லை என்றால் எந்த மனிதனும் தன்னுடைய எல்லையைக் கடப்பதில்லை. மனிதன் தூண்டப்பட்டால் தான் தற்போதிருக்கும் எல்லையைக் கடந்து போக முடியும் என்பதால் 100 சதவிகிதம் செய்தியாகவே உள்ளவற்றைக் கூட விசுவலாக காட்சிப்படுத்தி மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டிவிடுகிறோம். உதாரணமாக யானை பற்றிய செய்தியைச் சொல்வதற்காக நாங்கள் நிஜ யானையையே பள்ளிக்கு அழைத்துவந்து குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தோம். இப்படி ஏராளமானவற்றைக் கூறலாம்.

மதிப்பெண்களே அதிமுக்கியம் என்கிற இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் கண்ணோட்டத்தை எப்படி மாற்றியமைத்து மாணவர்களுக்கு கல்வியைக் கொடுக்கிறீர்கள்?

பல்வேறு வகையான வாழ்க்கை முறைகள், பல்வேறு வகையான சமூகப் பின்னணி என்று பரவலான சூழ்நிலைதான் திருப்பூரில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் சார்ந்த கல்வி மட்டுமே கிடைக்குமென்றால் எதிர்காலத்தில் ஏற்படும் சூழலை எதிர்கொள்வது கடினமாகிவிடும் என்பதால் தான் மதிப்பெண்களைத் தாண்டியும் இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து கற்றுத் தருகிறோம்.

பெற்றோர்களுக்கும் இந்த விசயத்தில் இருக்கும் கல்வி பற்றிய புரிதல்களை எடுத்துச் சொல்கிறோம். இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு கல்வி பற்றிய கண்ணோட்டம் குழந்தையின் அறிவு வளர்ச்சி பற்றியதாக இல்லாமல், முதலிடம், முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதாகவே இருப்பது ஒரு துரதிருஷ்டம் தான். நாங்கள் அவர்களின் நோக்கங்களை மாற்றியமைக்கிறோம். குழந்தைகளின் கல்வியிலும், கற்றுக் கொள்வதிலும், வளர்ச்சியிலும் அக்கறையாக இருக்க வேண்டுமே ஒழிய முதலிடத்தில் வருவதல்ல என்பதை எடுத்துக்கூறி, கல்வி கற்றுத் தருகிறோம். இதனால் குழந்தைகள் எந்த நிர்பந்தத்துக்கும் ஆளாகாமலும், மன அழுத்தத்திற்கு ஆட்படாமலும் வளர்கிறார்கள்.

எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதில்லை. தங்கு தடையின்றி கருத்துக்கள் பரவ வேண்டும், பரிமாற்றிக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையை, அறிவின் பயனை சிறிதளவாவது உணர முடியும் என்று எண்ணி சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்கும்படி கல்வி கற்றுத் தருகிறோம்.
தங்களின் கல்விப் பணியில் ஒத்துழைப்பு தரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்து…

அப்பாவின் மறைவிற்குப் பின்னர் என் அம்மா ரத்தினம் அம்மாளும், பெரியம்மா விசாலாட்சி அம்மாளும் எங்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பதுடன் கிட்ஸ் கிளப் பள்ளியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக ஒரு ஆல விருட்சமாக இருக்கிறார்கள்.

கிட்ஸ் கிளப் பள்ளியின் வளர்ச்சிக்கு எனது மாமனார் அழகேச கவுண்டரின் ஆக்கபூர்வமான வழிகாட்டுதல் இருந்ததைப் போலவே அவரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் செந்தில் குமார் அவர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் கிடைப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இவர்களைப் போலவே எனது மகளின் மாமனார் ‘கல்வித் தந்தை’ வெள்ளியங்கிரிக் கவுண்டரின் பேரன் திரு. ஆனந்த் அவர்கள் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு எங்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் கிட்ஸ் கிளப் பள்ளியின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்துக்கு இன்றளவும் உதாரணமாகத் திகழும் எனது அப்பாவின் மூத்த சகோதரி திருமதி பாப்பீஸ் பழனியம்மாள் அவர்களும், அவரது மகன் பத்மஸ்ரீ சக்திவேல் (டீ சங்க தலைவர்) அவர்களும் கொடுக்கும் தன்னம்பிக்கையையும், வழிகாட்டலையும் என்றும் நினைவில் நிறுத்திக் கொண்டிருக்கிறோம்.

மேலும் எங்கள் குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும், நண்பர்களாக அறிமுகமாகி இன்று குடும்ப உறவாகவே இருக்கும் ‘சண்முகவேல் மில்ஸ்’ வேலப்பகவுண்டர் குடும்பத்தினர், திரு. பிரேம் துரைசாமி, ‘கரோனா’ சாமிநாதன், ‘எம்பரர்’ பொன்னுசாமி, ‘சக்தி பிலிம்ஸ்’ சுப்ரமணியம், சௌந்தரம் அப்பு, ‘கீதாஞ்சலி’ கோவிந்தப்பன், ‘லக்ஷ்மி டிரேடர்ஸ்’ பத்மநாபன் , அகில் ரத்தினசாமி ஆகியோரின் உதவிகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருப்பதற்கு இந்நேரத்தில் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

எதிர்கால இலக்கு குறித்து…

ஒரு சமூகத்தின், நாட்டின் கௌரவம் தனி மனிதர் வளர்ச்சியின் மூலமே அடைய முடியும். தனிமனித வளர்ச்சிக்கு சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வி முக்கியம். அத்தகைய சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது மகள் நிவேதிகா ஸ்ரீராமின் நீண்டகாலக் கனவு. அந்தப் பள்ளியின் மூலம் தரமான கல்வியை சவாலுடனும், ஊக்கத்துடனும் வழங்குவது மட்டுமின்றி மாணவர்கள் மிகச்சிறந்த உயர்ந்த நிலையை அடையக்கூடியதாகவும் இருக்கும்படி கற்றுத்தர முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பள்ளியின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் குழந்தைகளின் உள்ளிருக்கும் இயல்புகளை ஒளிரச் செய்து கற்கவும், புதியனவற்றைத் தெரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கும்படி செயல்படுவார்கள்.

2500 ஆண்டுகால பழமை வாய்ந்த லண்டனில் உள்ள பியர்ஷன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட முறையில் பாடங்களை கற்றுத்தரும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பதை உணர்ந்து தொடக்க நிலைக் கல்வியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும்படி வடிவமைக்கப்பட்ட கல்விமுறையுடன் கூடிய இந்தப் பள்ளி மார்ச் 2013 முதல் செயல்படத் தொடங்குகிறது.

பெட்டிச் செய்தி:

மோகன் கே. கார்த்திக்:
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆண்டிபாளையத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அப்பா திரு. மோகன் கந்தசாமி. பனியன் தொழிலின் தந்தை என்று போற்றப்படும் இவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பின் தலைவராகவும், பழனி முருகன் கோவில் அறங்காவலராகவும் இருந்ததுடன், தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து பல்வேறு நலத்திட்டங்களைச் செய்தவர். மிகச்சிறந்த மனித நேயமிக்கவர். அம்மா திருமதி. ரத்தினம் அவர்களும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதுடன் எளியவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பவர். இவர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்தான் கார்த்திக்.

இவர் பள்ளிக் கல்வியை கோவை கார்மல் கார்டன் மேனிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும் படித்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஸ்போர்ட்ஸ் செகரட்டரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டவர். தன்னுடைய அப்பாவைப் போலவே உதவும் குணம் கொண்டவர். இவருக்கு ரமேஷ் என்ற இளைய சகோதரர் இருக்கிறார்.

திருமதி வினோதினி:
பவானி தாலுக்கா அந்தியூர் அருகில் உள்ள விராலிக்காட்டூர் என்ற மலையடிவாரக் குக்கிராமத்தில் விவசாயத்தையே தொழிலாகச் செய்து கொண்டிருந்த திரு. அழகேசக் கவுண்டர் – திருமதி பத்மாவதிக்கு மூத்த மகளாகப் பிறந்தவர். பள்ளிக் கல்வியை ஈரோடு கலைமகள் பள்ளியில் சித்தப்பா, சித்தியின் வழிகாட்டுதலுடனும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் படித்தவர். கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி முறையையும், அக்குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கல்வியைக் கற்றுத்தரும் சிறப்புக் கல்வி முறையையும் (Madras Dyslixya Association) கற்றுத் தேர்ந்தவர். 5 ஆண்டுகள் திருப்பூர் 35 ம் வார்டு கவுன்சிலராக சேவை செய்தவர். குழந்தைகளின் மீது மிகுந்த பற்று கொண்டவர். இவரது எண்ணமே கிட்ஸ் கிளப் பள்ளி உருவாகக் காரணம். இவருக்கு சத்யலட்சுமி என்ற இளைய சகோதரி இருக்கிறார்.

1982ம் ஆண்டு மோகன் கே. கார்த்திக்குக்கும், வினோதினிக்கும் திருமணம் நடைபெற்றது. நிவேதிகா மற்றும் ஐஸ்வர்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. கார்த்திக்கின் இளைய சகோதரரான ரமேஷூம், வினோதினியின் இளைய சகோதரியான சத்யலட்சுமியும் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.

நிவேதிகா ஊட்டி நேசரத் பள்ளியில் பள்ளிக் கல்வியையும், சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை ஆங்கில இலக்கியத்துடன் பி.எட். மற்றும் எம்.பில். முடித்தவர். தற்போது எம்.எட். படிப்பை படிப்பதுடன் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். எத்திராஜ் கல்லூரியில் படித்தபோது பத்து தங்கப்பதக்கங்களை பல்வேறு பிரிவுகளில் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சர்வதேசத் தரத்துடன் ஒரு பள்ளியைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற இவரது ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தான் கிட்ஸ் கிளப் இன்டர்நேசனல் ஸ்கூல் உருவாகிறது. கணவர் ஸ்ரீராம். இவர் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் துணைவேந்தராகவும் பணியாற்றிய V.C. வெள்ளிங்கிரி கவுண்டரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நிவேதிகாவின் ஆக்கபூர்வமான ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் துணையாக இருப்பதுடன் தேவையான சமயத்தில் தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு வழிகாட்டவும் செய்கிறார். இவர்களுக்கு சிருஷ்டி, ஸ்கந்தன் என்ற இரண்டு குழந்தைகள்.

ஐஸ்வர்யா:
ஊட்டியில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் பள்ளியிலும், சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் படித்தவர். ஆங்கில இலக்கியம் படித்த இவர் இங்கிலாந்தில் எம்.எஸ்.ஸி. கல்வியியல் (M.Sc. Education) முடித்திருக்கிறார். இவரது குறிக்கோள் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உண்டு உறைவிடப் பள்ளியைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதே. தற்போது அதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

திருமதி. ராஜலட்சுமி, முதல்வர்
திரு. T. கோவிந்தராஜன், நிர்வாக இயக்குநர்
மோகன் கார்த்திக் அவர்களும், வினோதினி கார்த்திக் அவர்களும் தங்களுடைய தந்தையைப் போலவே ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பதை மனதில் நிறுத்தி ஏழைகளுக்கும், வரியோர்களுக்கும் தான் சேர்த்த பொருட்செல்வத்தை வாரிவழங்கி அழியாத அருட்செல்வத்தை தன்வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுனாமியின் போது இவர்கள் சேகரித்த 25 இலட்சம் மதிப்பிலான மருத்துவம், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி பலநூறு மக்களின் கண்ணீரைத் துடைத்தவர்கள்.

தான் நடத்தும் பள்ளியில் தரமான கல்வியை வழங்குவதுடன் வேரோடு பள்ளியைத் தத்தெடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுத்து கல்விச் சேவையைச் செய்து வருகிறார்கள். மேலும் தகுதி வாய்ந்த மாணவர்களின் மேற்படிப்புக்கும் உதவுகிறார்கள்.

2011ல் திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, 3000க்கும் மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு, உடை, உறைவிடம் மட்டுமின்றி மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டு உதவிகளைச் செய்தவர். எப்போதும் இன்முகத்துடன் ஒவ்வொரு குழந்தையிடமும் அவர்கள் காட்டும் அக்கறையும், மனித நேயமும் அவர் தலைமையின் கீழ் நாங்கள் பணியாற்றக்கிடைத்த பெருமையாகவே கருதுகிறோம்.

N.R. உமா மகேஸ்வரி
அரும்புகள் துளிரவும், மலரவும் உரமாகும் கிட்ஸ் கிளப் பள்ளியின் முதல் ஆசிரியை என்ற பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். “நாளும் பொழுதும் உழைப்பார் நல்லதையே நினைப்பார், ஊரும் உலகமும் வாழ ஒவ்வொரு நாளும் நினைப்பார்” என்ற வரிகளுக்கு ஏற்ப பாசத்தையும், அன்பையும் கொடுத்து கல்விப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள். பள்ளி வாயிலில் அனைத்துக் குழந்தைகளையும், பெற்றோர்களையும் தங்களுடைய புன்னகை மாறாத முகத்துடன் வரவேற்கும் திரு. கார்த்திக், திருமதி. வினோதினி அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

G. பிரவீனா, ஆசிரியர்
ஒரு வேலையை முடிக்க முடியாது என்று நாம் சொல்லி முடிப்பதற்குள் ஒருவன் அவ்வேலையை செய்து முடித்து விடுகிறான்’ என்ற இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் கருத்திற்கும் ஏற்ப இவர்கள் செயலாற்றுகிறார்கள். குழந்தைகளின் பால் இவர்கள் கொண்டுள்ள அன்பும், அவர்களின் எதிர்காலத்தின் மீது உள்ள தீராத அக்கறையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் கண்டு பல நாட்கள் வியந்திருக்கிறேன். இவர்களின் தலைமையில் விவேகானந்தர் எதிர்பார்த்த சமுதாய சிந்தனையுள்ள புதிய தலைமுறையாக மாணவர்கள் வளர்ச்சியடைவார்கள் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை.

திரு. பாலு ஆசிரியர், பணி நிறைவு
நான் வணங்கும் தெய்வமான மோகன் கந்தசாமி அவர்களின் குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகவே திகழ்கிறது. தான் மேற்கொள்ளும் பணி எதுவானாலும் அதனை சிறப்பாகச் செய்யும் மோகன் கந்தசாமி அய்யா அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்விட்டுச் சென்ற இந்தப் பள்ளியை வளர்ப்பதில் கார்த்திக் மற்றும் வினோதியின் பங்கு போற்றுதலுக்குரியது. இவர்களின் இலட்சியக் கனவு நிறைவேற என்னுடைய ஆசிகளைக் கூறிக் கொள்கிறேன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!