Home » Articles » எல்லாம் எவன் செயல்?

 
எல்லாம் எவன் செயல்?


அனந்தகுமார் இரா
Author:

மிதப்பில் எழுதுவது கேள்விப்பட்டிருக்கின்றேன். மிதந்து கொண்டு எழுதுவது எப்படிதான் இருக்கின்றது என அனுபவித்துப் பார்த்துவிடலாம் என்று பஞ்சப்பள்ளி அணைக்கட்டிற்குள். பரிசலில் மிதந்து கொண்டு எழுதுவதை அனுபவிக்க, மீனவராக மாறி பதினைந்து வருடமான விவசாயி ஆறுமுகத்துடன் பேச்சுக் கொடுத்து நட்பை வளர்த்துக் கொண்டு நடு அணைக்கட்டை அடைந்தோம். 500 மீட்டருக்கும் மேல் நீர்ப்பரப்பு இருக்கும் போல முதலைகள் கிடையாதாம், நீந்தும் ஆசை பிறந்து மறைந்தது.
நடப்பதைக் காட்டிலும் பரிசல் வேகமாகப் போகும் என நண்பர் (மீன்துறை) வரதராசன் கூறினார். நம்பச் சிரமமாக இருந்தாலும் அனுபவம் நிரூபித்துக் காட்டியது. நீர் என்றென்றும் கனவுகளின் அடைக்கலமாக இருந்திருக்கின்றது. நீர்ப்பரப்பு குறைந்ததும் யானைகள் இந்த இடத்திற்கு வருமாம் இயற்கையோடு இணைவதற்கு என்றாவது ஒரு நாள் நேரம் ஒதுக்குதல் நல்ல விஷயம்தான். எழுதலாம் என்று தோன்றுவதையெல்லாம் கடந்த ஒரு மாதமாக குறித்துக் கொண்டு குறி பார்த்துக் காத்திருந்தேன். படிப்பதற்காக என்பதைக் காட்டிலும் வெளி வடிகாலுக்காக என்று எழுதுவதிலிருக்கின்றஅழகும் அதன் பயனும் அதிகமாக இருக்கக் காண்கின்றேன் மாரண்ட அள்ளியிலிருந்து சின்னாற்றின் எதிர் திசையில் பயணித்து பஞ்சமில்லாமல் பேரழகைக் கொட்டி வைத்திருக்கின்ற பஞ்சப்பள்ளியை அடைவதொன்றும் சிரமமான காரியமில்லை. கனவு தனது ஆக்கத்தை என்றைக்குமே கலைத்துக் கொள்ளாது என்கின்ற மாதிரி மலை மடிப்புக்களுக்கிடையே நீர் மனசு போல சலசலத்துக் கொண்டிருந்தது.
இசை சமீபகாலமாக கவனத்தை ஈர்த்துக் கொண்டு இருத்தல் நிஜம்தான். சின்ன வதம்பச்சேரியில் கிராம நாட்கள் நினைவாடுகின்றன. காவிரிக் காடு என்பதற்கும் காவிரி நிதிக்கும் எங்களூருக்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. காவேரிக்காடு என்று அழகாக அழைக்கப்படும் அந்த விளையாட்டு மைதானத்தில் மனத்தாங்கல்களோடு முடிந்த நாட்கள் ஞாபகம் வருகின்றன. உடனடியாக நீரில் எழுதி அழிப்பது போல நினைவுப் பதிவுகளை அழித்து எழுதினால் எப்படி இருக்கும் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி எல்லாம் செல்லும் உடல் கேட்ட பாரதி, ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ? என்று கேட்ட திருநாவுக்கரசர் இருவரும் சேர்ந்து மனமும் உடலும் நம் கரங்களில் இல்லை ஏதோ ஒரு பரம் பொருளில் உள்ளது என்றும் இந்த நினைவுகள், படிவங்கள் எல்லாமே “”நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே” என்று எண்ணம் கூட கந்தன் செயல் என பேசிக் கொண்டு காரியம் ஆற்றாமல் இருந்துவிட இயலாது.
அண்மையில் பெரியவர் ஒருவரை சந்தித்து அளவளாவ நேர்ந்தது. உடனிருப்பவர்களை சரியான இதயத்துடிப்போடு வைத்திருத்தல் ஒரு கலை. அதன் மூலம் அற்புதமான பணி விளைவுகளை உருவாக்க முடிகின்றது. வேலை வேலை என்று பரபரக்கையில் வேளை வீணாகிறதே ஒழிய பணி முடிக்கப்படுவது இல்லை. கற்பனை காதுகளுக்கு ஓய்வு கொடுக்கையில் தான் கருத்து வடிவம் பூண்டு கொள்கின்றது. கற்பனை உடைமாற்றுகின்ற நேரத்தில் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டு பார்வையாளர்களால் பதட்டப்படுத்தப் பட்டுவிடக் கூடாது.
சமீபத்தில் ஒரு கல்லூரிக்குப் பேசுவதற்காக சென்றிருந்தேன்.. கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என்று போட்டியை உச்சரித்து அவர்களுக்கு முதல், இரண்டு, மூன்று என பரிசுகளை ஒவ்வொன்றாக வழங்கும் பொழுது அந்தப் புத்தகத்தின் அட்டையினைப் படித்துப் பொருளை உள்வாங்கிக் கொண்டே அளித்து மகிழ்ந்தேன். பக்க எண்ணிக்கைகளும், புத்தக விலையும், ஒரு புறம் வைத்து பரிசு பெறும் இடத்தை எதிர்ப்புறம் வைத்தால் இரண்டுக்கும் எதிர்மறைப் பொருத்தம் காணப்பட்டது. ஆறுதல் பரிசாக கொடுத்த புத்தகங்கள் கனமில்லாமல் இருந்தன.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது போல பேசுகையில் கனமில்லாத புத்தகங்கள் என்று நினைத்துவிடப் போகின்றீர்கள் அவைதான் மனதை இலேசாக்க வல்லவை என்று கூறும் பொழுது என்னால் பொருளை உணர்ந்துகொள்ள முடிந்தது.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்த
மொன்று வருகுது”
எனும் நாமக்கல் கவிஞர் பாடல்தான் மாரண்டஅள்ளி பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஞாபகம் வந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளை யார் யார் நூற்றுக்கு நூறு சதம் வாங்குவீர்களோ? அவர்களை கைகளை உயர்த்துங்கள் என்றால், சூரியகாந்திப் பூக்களைப் போல பக்கவாட்டிலும் பின்புறத்திலும் வளைந்து அசைந்தன தலைகள். நம்மைக் காட்டிலும் அருகிலிருக்கின்றவர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்தே வாழ்ந்து பழகிவிட்டோம் நாம். நேரம் கொடுப்பது குறித்து கூட, யாரோடு இருக்க மிகவும் விரும்புகின்றீர்கள் என்று யாரேனும் கேட்டால் நம்மோடு பேசுவதற்கு என சற்று நேரம் கூட ஒதுக்க இயலாத நண்பர்கள் எனக்கு உண்டு திருமூலர் ஒரு பாட்டில் “தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே” என்று முடித்து வைத்திருப்பார். நான் செய்துவிட்டேன் என்று “நார்ஸிஸக்” கொள்கைக்குள் நுழைத்துவிட வேண்டாம், நானே எவ்வளவு அழகு என்று நாணிப் போகுமளவு பிரஸ்தாபித்துக் கொள்ளவும் வேண்டாம், இரமண மகரிஷி கோபுரம் தாங்கி பொம்மை குறித்துப் பேசுவது போல செயல்கள் சிலபல நேரங்களில் இயற்கையை ஒட்டி நடப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் எல்லாம் எவன் செயல் என்று கேட்கவும் வேண்டி உள்ளது.
தன்னைப் புரிந்து அளந்து கொண்டதும், மனதைப் படிக்கின்றஆற்றல் பெருகிவிடுகின்றது. அண்மையில் சந்தித்த பெரியவர், இரண்டு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார், ஒன்று வி.ஆர்.கிருஷ்ணா ஐயர் குறித்த பல்வேறு உலகில் என் பயணம் என்பது, இரண்டாவது அவரது சகோதரரது ‘சந்திப்பு நேரங்களும், ஏமாந்த நேரங்களும்’ (Appointments and Disappointments) என்கின்ற புத்தகங்கள். முன்னவர் வழக்கறிஞர் மற்றும் புகழ்பெற்ற நீதிபதி, பின்னவர் காவல் துறை அதிகாரி. தலைசிறந்த நீதிபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கின்ற சுவை குறித்துக் கூறவே வேண்டாம், நினைத்த இடத்திலெல்லாம் ஷெல்லி, வோர்ட்ஸ் வொர்த், உமர் கயாம் என்றும் எமர்ஸன், டென்னிங் என்றும், ரூட்யார் கிப்ளிங் என்றும் தெரிந்த தெரியா ஷேக்ஸ்பியரின் கவிதைகளென்றும் அள்ளி விளையாடுகின்றஅற்புத பொக்கிஷம் இது. இது போலவே இராபின் சர்மாவிடம் இருந்து இழையெடுத்து படித்த புத்தகங்கள் நிறைய உண்டு, ஒரு யோகியின் சுயசரிதம் என்றபரமஹம்ஸ புத்தகத்தையும் கிருஷ்ணா ஐயர் தொட்டுப் போயிருப்பார். அவரது இல்லத்தரசி சாரதா ஐயர் அவர்கள் மீதிருந்த காதலைப் பேசுமிடங்களில் காவியமே ஆற்றியிருப்பார். அரசியல் பேசிய இடங்களில் துள்ளியெழச் செய்வதும், சோகம் நெருடும் இடங்களில் துவண்டு விழச் செய்வதுமாம் தொண்ணூறைத் தொடுகின்ற அனுபவத்தை புத்தகத்திற்குள் பதித்துக் கொடுத்திருப்பார்.
படிக்கச் செய்த பெரியவர், ஆனந். இந்தப் புத்தகத்தை ஏன் மெதுவாய் படிக்கறீங்க எடுத்தா முடிக்காமல் பெரும்பாலான புத்தகங்களை வச்சதே இல்லீங்க என்றார். அறுபது வயதுக்காரர்களோடு அன்யோன்யமாக இருப்பது முப்பதிலிருக்கின்றவர்களுக்கு வாழ்வை வாசிக்கக் கற்றுத் தருகின்றது. இலக்கை சரிவரிப் பொருத்திக் கொள்ள உதவி செய்கின்றது. அன்பின் அடைக்கும் தாழ்களை அடையாளம் கண்டு விளங்கிக் கொண்டு விலக்கிக் கொள்ள வழிவகை செய்கின்றது.
மாணிக்க வாசகரின் திருவாசகம் தொடங்குகையில் ‘வேகம் கொடுத்தாண்ட வேந்தன் கழல் வெல்க” என்றொரு வரியோடும், பரபரப்பாக இருப்பதற்கும் பணி செய்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி உடல் நிலையை பாழாக்கிக் கொள்கின்றவர்களுக்கு, மிட் பிட்சில் விழுந்து ஆஃப் திசையில் சீறிச் செல்கின்றஞானமணியின் (ஆயுதப்படை காவலர்) வேகப்பந்தை ஸ்கொயர் கட் செய்ய மட்டும்தான் மின்னல் வேக ரிப்ளக்ஸ் வேண்டும், மற்றபடி வாழ்க்கையில் வேகமான முடிவுகளை நிதானமாகத்தான் செய்தாக வேண்டும். அழுத்தந்திருத்தமாக பேசுவதற்கு ஆழமான பயிற்சி தேவைப்படுகின்றது என்றெல்லாம் யோசிக்க வைத்தது பஞ்சப்பள்ளி அணைக்கட்டின் பரிசல் பயணம்.
தருமபுரி மாவட்டத்தில் ஜருகு எனப்படும் மானியத அள்ளி கிராமத்தில் எட்டு ஊர் மக்கள் தியானத்தால் தங்கள் மனதுகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. செயல்களின் வலிமை மனதில் அழுத்துகையில் ஏற்றுக் கொண்டு புன்னகைக்கின்ற மன வலிமை தியானம் தரும் எனில், வெற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் திருவள்ளுவர் சொன்ன சுடச் சுடரும் பொன் போல, துன்பம் வரவர தியானம் செய்பவர் மிளிருவார் என்கின்றசெய்தி அழகானது. தன் செயல் எண்ணி தவிக்கின்றநெஞ்சை, நின் செயல் செய்து நிறைவு செய்யச் செய்வாய் என்கின்றபாரதியின் வாக்கு.
எல்லாம் எவன் செயல் என்று எண்ணுகிற நிதானத்தை மக்களுக்கு வழங்கினால் அதுவே மாபெரும் தானம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்