Home » Articles » மதிப்பு, மரியாதை

 
மதிப்பு, மரியாதை


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

மதிப்பு, மரியாதை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. மதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Value) வேல்யூ என்று சொல்கிறோம். நம்மைப் பொறுத்த அளவில் முக்கியத்துவம் என்று கொள்ளலாம்.
மதிப்பு
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. அது பணத்தாலும் இருக்கலாம்; கலை நயத்தலாலும் இருக்கலாம்; உபயோகத்தாலும் இருக்கலாம். உதாரணமாக சாதாரண செருப்பை எடுத்துக் கொள்வோம். கடும் வெயில்; சாலையோர கரடுமுரடாக உள்ளது. நடந்து செல்ல வேண்டிய நிலை. இதுவரை வெறும் காலில் வெளியில் நடந்ததே இல்லை.
செருப்புகள் இரண்டும் அறுந்துவிட்டன. அணிந்து நடக்கவோ முடியாது. இந்த நிலையில் செருப்பின் மதிப்பு (Value) என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தச் சூழ்நிலையில் மிக மிக முக்கியமானது செருப்புதான்.
எனவே, எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு உயிரையும் மிகச் சாதாரணமாக மதிப்பிட்டு, ஒதுக்கவோ, உதாசீனப்படுத்தவோ கூடாது.
மனித மதிப்பு
நம்மிடம் மனம் என்கின்ற சிந்திக்கின்ற, யூகித்து அறிகின்ற ஆறாவது அறிவு உள்ளது. இதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும்.
இன்று சமுதாய நிகழ்வுகளைக் கேட்கும்போது, பார்க்கும் போது, பரவலாக, குறிப்பாக இளைஞர்கள் மனித நேயத்தை மறந்து தற்காலிக திருப்திக்காக தவறான செயல்கள் செய்வதை அறிகிறோம்.
ஏன்?
இவர்கள் தங்கள் மதிப்பை அறியாததால் தான். இதற்குக் காரணம் இவர்களது பெற்றோர்கள் என்று சுட்டிக்காட்டினால் மிகையாகாது.
பொதுவாக மனிதர்கள் மற்றவர்கள் மீது வைத்துள்ள அபிப்ராயங்களை மதிப்பு எனக்கூறலாம். குடும்பம் என்றால் பெற்றோர் குழந்தைகள்; கணவன் மனைவி இவை தான் அடிப்படை உறவுகள்.
இவர்களுக்கிடையிலுள்ள உறவு மேலும் வலுப்பட்டு அன்புடையதாக இந்த அபிப்ராயங்கள் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இது மாறாது; மாறக்கூடாது.
சரியும் மதிப்பு
அப்படி, தன் நெருங்கிய உறவுகளிடம் இவர் இப்படித்தான் என்று குறைபட்டுக் கொண்டு, இவரிடம் நேரில் தன் அபிப்ராயத்தை சரியான திருத்தத்துக்கு கூறாமல் விடுபவர்களை நாம் காண்கின்றோம். இதனால் உறவுகளின் மத்தியில் இவரது மதிப்பு சரியும்.
இதுபோல் சரிந்துவிட்ட மதிப்பை உயர்த்துவதென்பது மிகச் சிரமம். பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமலேயே பெரிய மாற்றுக்கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், இவர் என்ன தான் முயன்று, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முழுமையான திருப்தியை குடும்பத்தாரும் உறவுகளும் அடையமாட்டார்கள்.
மதிப்பின் நிலைமாறுமா?
ஆம். மாறும். உயரும் அல்லது தாழும். அழகான, நல்ல வேலைப்பாடமைந்த பொருள் உள்ளது. அதற்கென ஒரு காலம் உள்ளது. நாளாக, நாளாக அதனது இருப்புத் தன்மை குறைந்து கொண்டே வரும்.
இளமைப்பருவத்தில் காண்பித்த திறமை உத்வேகம் முதுமையில் குறைவது போன்றதே இது. மறைவுக்குப் பின்னும் மதிப்பால் உயர்ந்த மனிதகுலச் செம்மல்கள் பலரை அறிவோம்.
சாக்ரடீஸ்
இளைஞர்களை சிந்தித்துத் தன்னை அறிந்து செயல்பட வழிகாட்டினார். அதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்தார்.
அண்ணல் காந்தி
மனிதர்களை மதங்கள் பிரித்துவிடக் கூடாது. அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று ஆங்கிலேயரிடமிருந்து நம் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தவர். சுய லாபத்துக்காக கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் வாழ்ந்தவர்.
A.P.J. அப்துல்கலாம்
எளிமைக்கு சிறந்த உதாரணம். பதவியெனும் வாய்ப்பு இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றவே. தன் உறவுகளை அழைத்து வைத்து சேர்ந்திருப்பதற்கு அல்ல என்று தம் வாழ்க்கையால் போதித்து வருபவர். இது போல் பலரைக் கூறலாம்.
மதிப்பை அறிதல்
ஒருவரது மதிப்பை எப்படி, எப்போது அறிய முடியும் என்றால், அவர் இல்லாத போது. அவரைப் பற்றிய விமர்சனங்கள், அபிப்ராயங்கள், கருத்துக்கள் மூலமாக, மக்களில் பெரும்பாலானவர்கட்கு எதற்கு எப்போது மதிப்பு கொடுப்பது எனத் தெரிவதில்லை. உதாரணமாக ஒருவர் தங்க நகை அணிந்து சாலையில் நடந்து செல்கிறார். அவரை மறித்து நகையைப் பிடுங்க முயற்சிக்கின்றனர். உயிரே போனாலும் நகையை விடமாட்டேன் என்றஉறுதியோடு போராடுகிறார்.
கும்பல்தான் வெற்றி பெற்றது; இவர் பிணமானார். என்ன தெரிகிறது?
உணர்ச்சி வேகம், பொருளாசை, உயிரைப் பற்றிய அறியாமை அருமையான வாழ்க்கை அவரைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது.
சமயோசிதமாய் சிந்தித்து செயல்படுவதற்கு ஆறாவது அறிவு இருப்பதையே மறந்து விடுகிறோம். எதற்கு, யாருக்கு, எப்போது, எப்படி மதித்து தரவேண்டும் என்பது மிக முக்கியம்.
செயல்பாடு
அதேபோல் பிறர் கோணத்தில் நமது மதிப்பு சரியாமல் இருக்க என்றும் ஒரே மாதிரியான செயல்பாடும் முக்கியம். சிலரிடம் நமது மதிப்பை உயர்த்திக் காண்பிக்க தேவையில்லாத முயற்சிகள் செய்வர். பின்னர் உண்மை நிலை தெரியும்போது கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றப்பட்ட கலசம், திடீரென கீழே விழுந்த கதையாகிவிடும்.
ஒவ்வொருவரிடமும் என்ன உள்ளது? என்ன தேவை? இந்த இரண்டும் முக்கியம். இருப்பதை பண்புகள், குணங்கள், செல்வங்கள் என்று கூறலாம். தேவைகளை வேண்டுதல்கள் என்று கூறலாம். அதனால்தான் நாம் இது வேண்டும், அது வேண்டும் என்று எப்போதும் வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.
வேண்டுதல் எந்த அளவு முக்கியமானதோ, அதைவிட மேலானது இருப்பதை தக்கவைத்துக் கொள்வது, நல்ல குணங்களை, பண்புகளை நாளும் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வருவதால் மட்டுமே அவைகளைத் தக்க வைக்க முடியும்.
தியாகம்
பலர், தனி மனித வழிபாட்டின் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட நிலையில் உயிரையும் தியாகம் செய்யுமளவுக்குச் செல்வதை ஊடகங்கள் வழி பார்க்கிறோம். அந்த அளவுக்கு மதிப்பு மிக்கவர்களா என்றவினாவும் எனலாம்.
மதிப்பு இங்கு முன்னிலைப்படுத்தாமல் உணர்ச்சியே பிரதானமாக இருப்பதால், திடீரென, பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர்.
ஓர் உதாரணம் மூலம் தெளிவு பெறலாம். உலக நன்மைக்காகப் பாடுபட்டு வரும் நல்ல சிந்தனையாளர் ஒருவர், அவரது செயல்களால், நல்ல பழக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என இருவர் ஆற்றில் படகில் செல்கின்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது. ஒரு லைப் பெல்ட் மட்டும் உள்ளது. படகு கவிழும் சூழல் உருவாகிவிட்டது.
அந்த நல்ல சிந்தனையாளர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டுமென்று உடன் உள்ளவர், லைப் பெல்டை அவருக்கு கொடுத்து விடுகிறார். இதுதான் தியாகம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை உலக நலன் கருதி சிந்தித்துச் செயல்படுதல். இதற்கு அடிப்படையாக அமைந்தது அந்தச் சிந்தனையாளரது நற்பண்புகள் மீது இவர் கொண்ட மதிப்பு.
மரியாதை (Respect)
இதை கண்ணியம் என்றும் கௌரவம் என்றும் கூடக் கூறலாம். தோற்றத்தில், ஆடையில் கூட பிறரிடம் நம்மீது மரியாதையை உண்டாக்க முடியும். இது நிரந்தரமில்லாதது; மாறிவிடும் இயல்பு கொண்டது.
மனித குலத்தின் மாண்புகளில் ஒன்று இந்த மரியாதை. அறிமுகமில்லாத ஒருவர் தொடர்பு கூட, உடனே அவர்மீது ஒரு மரியாதையை உண்டாக்கும். பழகப் பழக இந்த மரியாதையானது மதிப்புக்காக மாறுகிறது அல்லது அவர் தொடர்பை விட்டு விடுகிறோம்.
நல்ல பண்புகள் உள்ளவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என எண்ணி கவலைப்படாமல், தாங்களே நன்றாகச் சிந்தித்து, துன்பமில்லாத வகையில் செயல்படுவதால், மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை.
மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல. பிறரிடமிருந்து தானாக வர வேண்டும். “எனக்கு அவர் உரிய மரியாதை அளிக்கவில்லை’ எனச் சில சமயம் நாம் நினைப்பதுண்டு.
(Give and Take Respect) மரியாதை என்பது கொடுப்பதால் பெறமுடியும் அல்லது தன் தோற்றத்தால், பேச்சால், செயலால் மட்டுமே பெறமுடியும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
ஆறறிவில்லாத தாவரம் உள்ளிட்ட உயிரினங்கள் கூட, தம்மீது அன்பு, அக்கறை காட்டுவோரிடம் தமது நன்றியை வெளிப்படுத்துவதை நாம் அறிவோம்.
வாழ்க்கை
வாழ்க்கை என்பதன் இருப்பிடம் குடும்பம். எனவே, குடும்பத்தில் மரியாதைகள் காலப்போக்கில் மதிப்பாக மாறவேண்டும்.
சிலர் குறைபட்டுக் கொள்வார்கள். “என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று இங்கு மதித்தல் என்பது மதிப்பு (Value) ஆகாது. அங்கீகாரம் என்று கூறலாம். தன் இருப்பை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை அப்படிக் கூறுகின்றனர்.
அழைப்பிதழ் பெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் செல்கிறோம். கூட்டம் அதிகம். அழைத்தவரைச் சந்திக்க வாய்ப்பில்லை. நிகழ்வு முடிந்து திரும்பும்போது மனதுள் நெருடல்.
வீடுதேடி வந்து அழைத்தவர்கள் சரியாக மதிக்கவில்லை; உபசரிக்கவில்லை என்று இது தேவையில்லை. நிகழ்வின் முக்கியத்துவம் கருதி நம்மால் என்ன உதவி அவருக்குச் செய்ய முடியுமோ, அதைச் செய்வது தான் சரியானது.
சிறுவயதுக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்பிக்க வேண்டிய ஒன்று – பிறருக்கு மரியாதை அளிப்பது; வயதுக்கு மரியாதை பணிவாய் பேசுவது; அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பது; தெளிவுக்காக சந்தேகங்கள் கேட்பது போன்றவை.
கல்விக்கு மரியாதை இன்று கல்வி என்றாலே, வேலைக்கானது என்றாகிவிட்டது. எனவே, எந்தத் துறையைத் தேர்வு செய்கிறோமோ, அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் தேவையான தகவல்கள் பெற, இந்த மரியாதை உதவும்.
அனுபவத்துக்கு மரியாதை ஒரு செயலால் பெறும் பலனை அனுபோகம் என்று கூறுகிறோம். அனுபவித்தல் என்று பொருள். அனுபோகங்கள் அனுபவங்களாகப் பதிவாகின்றன. அனுபவசாலிகளை மரியாதையுடன் போற்றவேண்டும்.
அவர்களது அனுபவங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைய வாய்ப்புண்டு.
மரியாதையில் போலி மரியாதை என்று ஒன்று உண்டு. நேரில் பார்த்தால், மிகவும் பவ்யமாய் செயல்படுவர்; பிறகு தரக்குறைவாய் பேசுவர். தமிழில் “கூழைக்கும்பிடு” என்றசொல் உள்ளது. காரியம் ஆக வேண்டுமென்றால் காலையும் பிடிப்பார்கள். முடிந்தபின் காலை வாரிவிடவும் தயங்கமாட்டார்கள்.
தன்னம்பிக்கையுள்ளவர்கள் இதுபோன்று கூழைக்கும்பிடு ஆசாமிகளாக மாறமாட்டார்கள். அதே நேரம் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்த்து ஏங்கவும் மாட்டார்கள்.
இவர்கள் தங்கள் மதிப்பை (Value) நன்கு உணர்ந்துள்ளதால், அதற்கேற்றவாறு செயல்படுவார்கள். போலியாக பிறரது மரியாதையை எதிர்பார்க்காமலிருப்பதுடன் மற்றவர்களுக்கும் போலியாக, அளவுக்கும் அதிகமாக மரியாதை காண்பிக்கமாட்டார்கள்.
இந்த வாழ்க்கையில் நமது தோற்றம், பேச்சு, செயல்கள் எல்லாம் மற்றவர்கள் மனதில் நம்மீது முதலில் மரியாதையை உருவாக்க வேண்டும். காலப்போக்கில் இது மதிப்பாக மாறவேண்டும். இதற்கு அடிப்படையாக அமைவது நல்ல எண்ணங்களும், நல்ல பண்புகளுமாகும்.
– வாழ்க வளமுடன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்