Home » Articles » உள்ளத்தால் உள்ளலும் தீதே

 
உள்ளத்தால் உள்ளலும் தீதே


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

“திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருடாதே… பாப்பா… திருடாதே” இன்று சிறு குழந்தைகள் திருடாமல் நல்ல குணங்களுடன் இருக்கின்றனர். ஆனால் மக்களை ஆட்சி செய்பவர்களும், அரசின் நிர்வாகப் பிரிவில் இருப்பவர்களும், அரசுக்காக மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களும், பெரிய தொழில் அதிபர்களும், திரையுலகப் பிரமுகர்களும், மேலே கூறிய ஒன்றை முழுமையாகக் கடைபிடிக்காததால்… வந்த விளைவுகளைப் பாருங்கள்.

 • சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய பணம் சுமார் ரூ.73 இலட்சம் கோடி உரியவரி செலுத்தாமல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
 • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகளின் தரம் சிரிப்பாய் சிரிக்கிறது.
 • நமது ஊர்களில் பாதாள சாக்கடை, சாலைகள், பாலம், கட்டிடங்கள் போன்ற பொதுப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்கள் உரிய தரத்தில் செய்யாததால், பணிகள் பாதியில் முடக்கம் அல்லது முடிந்தபின் விரைவில் பழுதடைகின்றன.
 • ஒரு சில பணிகள் உண்மையிலேயே முடிக்கப்படாமல், முடிந்ததாய் புத்தகங்களில் காண்பிக்கப்பட்டு, அதற்குரிய தொகையைப் பெற்று சந்தோஷமாக, தைரியமாக நடமாடிவரும் தன்மானம் கொண்டவர்கள்.

இது போல் பல கூறலாம்.
நீங்களே உங்கள் பகுதியில் நடந்தவைகளை, நடைபெற்று வருபவைகளை எண்ணிப்பாருங்கள்.
திருட்டு
“பாருக்குள்ளே நல்ல நாடு
நம் பாரத நாடு”
என்றார் பாரதியார். இன்றைய பாரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழல், லஞ்சமின்றி செயல்படும் மாநில அரசுகள் பற்றிய செய்திகளைப் பலர் பார்த்திருக்கலாம். குஜராத் முதலிடத்திலும், பீஹார் அடுத்த இடத்திலும் உள்ளன.
“எண்ணி எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
– குறள் 666
எண்ணத்தில் வலிமை செயலாக மலரும். அங்கு மலர்ந்துள்ளதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது.
பிறர் பொருளுக்கு ஆசைப்படாத மனநிலை பாராட்டுக்குரியது. தன்னம்பிக்கை நிறைந்தது. ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்த எண்ணமே மேலோங்கி, தன்னம்பிக்கையை சிதறடித்துவிடும்.
பிறருக்கு உரிய ஒன்றை, அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது திருட்டாகும். பொய்யாமொழி திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்மே கள்ளாமை என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்களின் மூலம் திருடர்களின் வாழ்க்கை, திருடாதவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என விவரித்துள்ளார்.
திருடர்கள்
திருட்டு என்ற ஒன்றைச் செய்வதாலேயே ஒருவரது தன்மானம் போய்விடுகிறது. திருடர்களின் மனமானது எந்நேரமும் மற்றவர்களிடமிருந்து எதை, எப்போது, எப்படி எடுப்பது என்றே சிந்தித்துக் கொண்டிருக்கும். திருட்டால் சேர்த்த செல்வம் ஊதாரித்தன செலவுகளால் கரைந்து இறுதியில் அழிந்துவிடும். அத்துடன் அந்தத் திருடர்களையும் அழித்துவிடும்.
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்”
– குறள் 282
மற்றவர்களுக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்து (திருடிக்) கொள்ளலாம் என மனதில் நினைப்பது கூட தீமை தரும் செயல் என்பது இதன் பொருள்.
ஒளவையாரும் ஆத்திச்சூடியில், சிறுபிராயத்திலிருந்தே நல்ல பல பண்புகளை வளர்த்துக் கொள்ளக் கூறியுள்ளார்.
“கொள்ளை விரும்பேல்”
என்பது அதில் ஒன்று. திருடாதவர்களுக்கு தேவலோகத்தில் இடம் வழங்கப்படும் என்று குறள் கூறுகிறது.
கொள்ளை
தினமும் செய்தித்தாள்களில் கொள்ளையர்கள் அட்டகாசம் எனப்படித்து வருகிறோம். இது திருட்டிலிருந்து முழுவதும் வேறுபட்டது.
நீங்கள் சட்டைப்பையில் ரூ.100 வைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறுகிறீர்கள். கூட்ட நெரிசலில், ஏறி உள்ளே சென்று பாக்கெட்டைப் பார்த்தால் ரூ.100 இல்லை. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பணம் ரூ.100 எடுத்துக் கொண்டதை திருட்டு என்று கூறுகிறோம்.
கொள்ளை என்பது தனி நபரோ, பலர் ஒரு குழுவாகவோ, பகலிலோ, இரவிலோ ஓரிடத்திற்குச் சென்று, அங்குள்ள பொருட்களை, அவற்றிற்குச் சொந்தக்காரரை மிரட்டி, ஆபத்தை உண்டாக்கி, தேவைப்பட்டால் கொலையும் செய்து எடுத்துச் செல்வதாகும். இம்மாதிரி செய்பவர்களை “கொள்ளையர்கள்” “கொள்ளைக்காரர்கள்” என்று கூறுகிறோம்.
திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் இருவருக்கும் அடிப்படையில் தேவை ஒன்று தான். முன்னது தெரியாமல் செய்வது, பின்னது தெரிந்த செய்வது.
இல்லறவாழ்க்கை
நாம் அனைவருமே வீடுகளில் குடும்பமாக வசித்து வருகிறோம். நமக்கு நமது வாழ்க்கை இன்பமாக, மகிழ்ச்சியாக, அமைதியாக அமைய வேண்டுமானால் சில நல்ல குணங்களைக் கடைபிடிக்க வேண்டும். சில கெட்ட குணங்களைக் கைவிட வேண்டும் என உலகப்பொதுமறை கூறுகிறது.
கடைபிடிக்க வேண்டியவை
அன்பு, அடக்கம், இனிய பேச்சு, உதவும் மனம், ஒழுக்கம், கற்புநெறி, நன்றி பாராட்டுதல், நடுநிலை காத்தல், விருந்து அளித்தல் போன்றவை.
கைவிட வேண்டியவை
மற்றவர்களைப் பார்த்து பொறுக்க முடியாமை (பொறாமை), பிறர் வைத்துள்ள பொருட்களை விரும்புதல், புறங்கூறுதல் (இல்லாதபோது ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுதல்). தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுதல். தீய செயல்களைச் செய்தல் போன்றவை.
இவைகளைக் கடைபிடிப்பது குடும்பத்தாரின் கடமை.
துறவிகள்
குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்று தனித்து, எல்லாவித சுகங்களையும், சொத்துக்களையும் துறந்தவர்களைத் துறவிகள் என்று கூறினர். ஆனால் இன்று துறவிகள் ஒருவர் கூட இல்லை என்று தான் கூற வேண்டும். இவர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் கைவிட வேண்டிய பண்புகளையும் கூறியுள்ளார் செந்நாப்புலவர்.
கடைபிடிக்க வேண்டியவை
அனைத்து உயிர்களிடமும் அருள் (சன்ம் என்று கருதி, துன்பம் செய்யாமல் உதவுதல்), இறை சக்தியின் மீது முழு நம்பிக்கை, உண்மையே பேசி, நேர்மையாகவே வாழ்தல் போன்றவை.
கைவிட வேண்டியவை
கோபம், உயிர்க்கொலை, மாமிச உணவு, பொருட்கள் மீதான ஆசை, பிறர் வருந்துமாறு துன்பச் செயல் புரிதல், ஏமாற்றுதல் போன்றவை.
காவி உடையர்கள்
இன்று, பலர் காவி உடை அணிந்து தனி அமைப்புகள் வைத்துக்கொண்டு, ஆடம்பரமாக, படாடோபமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைச் சாமியார்கள் என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். சாமியார் என்பவரும் துறவி போன்ற வாழ்க்கை வாழ்பவர் தான். ஆனால், இன்று நாம் வாழும் காலத்தில் வசிக்கும் காவி உடை அணிந்து, ஊடகங்கள் மூலம் நமக்கு அறிமுகமானவர்களைச் சாமியார் என்றோ, துறவி என்றோ கூற முடியாது.
இவர்கள் எதையும் துறக்கவில்லை. சாதாரண மனிதர்களைவிட சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். எனவே தான் இவர்களை “காவி உடையர்கள்” என்று கூறுகிறோம்.
லஞ்சம், ஊழல்
இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் நம் நாட்டில் நடைபெறும் கட்சி ஆட்சி லஞ்சம், ஊழலுக்கு வித்தானது. பொதுநலம் கொண்டு செயல்பட்ட ஒரு சிலர் இன்றும் சரித்திரத்தில் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம்.
மக்கள் சேவை என்ற முழக்கத்துடன் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து, தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதிகள். சேவைகளைச் செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதும், அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் ஒப்பந்தப் பணிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்று, தரம் குறைந்த பணிகள் செய்து, கொள்ளை லாபம் அடிப்பதும் வெளிப்படை. இங்கும் கொள்ளை என்ற சொல் உபயோகித்துள்ளோம். அரசுக்கும், பணிகளை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் தெரிந்தே இதுபோன்று செய்வதால் இதைத் திருட்டு என்று கூறாமல் கொள்ளை என்று கூறுகிறோம்.
இதை “ஊழல்” என்று கூறலாம்.
ஏமாற்றும் நோக்கில் தரம் குறைந்த பணிகள் அல்லது சேவைகள் மூலம் அதிக ஆதாயம் பெற்று, அதில் ஒரு பகுதியை மேற்பார்வையிடும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் கொடுப்பது தான் ஊழல். அதிகாரம் காரணமாய் மிரட்டி, மற்றவர்களுக்கு ஒன்றும் தராமலேயே தாமே முழுவதையும் வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர்.
இதிலிருந்து வேறுபட்டது “லஞ்சம்”
நியாயமாக, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டிய பணியை, வேண்டுமென்றே, சுய ஆதாயத்திற்காக, மற்றவர்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்து, காலதாமதம் செய்து, பேரம் பேசி பெற்றுக்கொண்டு முடிக்கின்றனர். இதில் பெற்றுக் கொள்ளும் பொருள், சேவை, பணம், சொத்து போன்றவை தான் லஞ்சம்.
சமீபத்தில் உலக நாடுகளில் 180ல் மேற்கொண்ட ஆய்வில் லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் நமது இந்திய நாடு 84வது இடத்தில் இருப்பதாய் செய்திகளின் மூலம் அறிந்தோம்.
லஞ்சம், ஊழலே இல்லாத முதல் நாடு நியூசிலாந்து. அவர்களைப் பாராட்டுவோம். அந்த நிலைக்குச் செல்ல இளைய தலைமுறை உத்வேகத்துடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
கருப்புப் பணம்
கணக்கில் வராத பணம் கருப்புப் பணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அரசாங்க கணக்கின்படி சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. திருட்டுப்பணம், கொள்ளையடிக்கும் பணம், லஞ்சமாய் வாங்கும் பணம், ஊழல் செய்து சம்பாதித்த பணம் அனைத்துமே கருப்புப் பணமாகும்.
பகல் கொள்ளையர்கள்
முகமூடி அணிந்து அடையாளம் தெரியாதவாறு வந்து கொள்ளையடித்துச் செல்பவர்களை முகமூடிக் கொள்ளையர்கள் என்று கூறுகிறோம். தீவட்டி (தீப்பந்தம்) பிடித்து வந்து கொள்ளையடித்துச் செல்வோரை தீவட்டிக் கொள்ளையர்கள் என்று கூறுகிறோம்.
முகமூடி அணியாமல் உண்மையான தோற்றத்துடனேயே இருந்து பிறர்பொருளை புத்திசாலித்தனமாக தனதாக்கிக் கொள்வோரை பகல் கொள்ளையர்கள் என்று கூறலாம். இன்று சிறு அளவிலிருந்து மிகப்பெரிய நிலைவரை இந்தப்பகல் கொள்ளையர்கள் அதிகரித்துவிட்டனர்.
நிர்பந்தக் கொள்ளை
நிர்பந்தப்படுத்துவதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதை சமீப கால நிகழ்வுகளால் அறிய முடிகிறது.

 • நம் வீடுகளில் நல்ல நிகழ்ச்சி என தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்வோம். உண்மையில் அது நல்ல நிகழ்ச்சியாகவும் இருக்கும். நிகழ்ச்சி மட்டும் ஒலிபரப்பாகும் நேரம் 15 நிமிடம் என்றால், வேறுமாதிரியான நிர்பந்தங்கள் (விளம்பரங்கள், தேவையற்ற காட்சிகள் போன்றவை) 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். நமது 15 நிமிட நேரம் தொலைக்காட்சியால் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம்.
 • ஓர் அல்ட்ரா டீலக்ஸ் அரசாங்க பஸ்ஸில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு, பயண நாளன்று செல்கிறோம். சாதாரண பஸ் நிற்கிறது. அந்த பஸ் ரிப்பேர் ஆகிவிட்டது. வேறு பஸ் இல்லை. இதில் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறினால் எப்படி இருக்கும். இதுவும் நிர்பந்தக் கொள்ளை தான். இதுபோல் பல உதாரணங்களை நீங்கள் கூற முடியும்.

தன்னம்பிக்கை
திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் அடிப்படையாக இருப்பது அவர்களிடமுள்ள தன்னம்பிக்கைதான். பஸ்ஸில், கூட்டத்தில், மற்றவர் பாக்கெட்டிலிருந்து ரூ.100 எடுக்க ஒருவர் முயற்சிப்பது, தன் மேலுள்ள அபரிமிதமான தன்னம்பிக்கையால் தான்.
அதுபோன்றே இரவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலில் உள்ளவர்களுக்கும் அசாத்தியமான தன்னம்பிக்கை உள்ளது. அவர்களது உயிரைப் பணயம் வைத்து அச்செயலில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், பகல் கொள்ளையர்கட்கு அந்த அளவு தன்னம்பிக்கை தேவையில்லை. சிறுசிறு ஆதாயங்களுக்கே சோரம் போகும் பலர் இருப்பதால் இவர்களால் பல காரியங்களைச் சிரமமில்லாமல் செய்ய முடிகிறது.

 • கான்ட்ராக்ட் தொகையில் கட்டிங்
 • ரேசன் பொருட்கள் கடத்தல்
 • இலவச திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்தல். இது போல் இன்னும் பல கூறலாம்.

தன்மாத்தைப் பற்றி கவலைப்படாமல், உயிரைப்பற்றிக் கவலைப்படாமல், தீமையான செயல்களில் தன்னம்பிக்கையுடன் சிலர் ஈடுபடும்போது.
நேர்மையாக வாழ்ந்து சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்து பிறர் சாபத்துக்கு பயந்து வாழும், 98 சதவிகித மக்கள் தன்னம்பிக்கையே இல்லாமல் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?
சிந்தித்தால் தெளிவு வரும்
இன்று ஜனநாயகத்தின் தூண்களுள் ஓரளவு நம்பிக்கை அளிப்பது நீதித்துறை தான். சிந்திக்க வேண்டும். அரசு ஒதுக்கும் தொகை முழுதும், ஒதுக்கப்பட்ட பணிக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் உரிமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் (Citizen) உண்டு. இதைக் கடமையாக எப்போது செயல்படுத்துகிறோமோ அன்று தான் இந்தியா ஊழல் இல்லாத நாடாக மாறும்.
இதற்குத் தேவை நாட்டுப்பற்றும், இணைந்து பணியாற்றும் சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும் ஆகும். நம்நாடு என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். எப்படி நம் வீட்டைப் பராமரித்துப் பாதுகாக்கிறமோ, வீட்டிலுள்ள பொருட்கள் திருடு போகாமல் பத்திரப்படுத்துகிறோமோ அதுபோல் நாடு, நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் மற்றும் நாட்டு மக்களுக்காகச் செலவிடப்படும் நிதிகளைப் பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும்.
ஒரு தெருவில் வசிப்போர், தமக்குள் கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அங்கு நடைபெறும் பொதுச் செயல்களில் முழுமையாக இணைத்துக் கொள்வதுடன், பிறர் செயல்களைப் பக்குவமாய் நன்னெறிப்படுத்தும் மனநிலையைப் பெற வேண்டும்.
நேர்மையாகவும், நாணயமாகவும் பொதுவான காரியங்கள் நடைபெறுவதைக் கண்காணித்து முறைப்படுத்தும் தைரியமும், தன்னம்பிக்கையும் தேவை. குழுவாக இணையும்போது தைரியம் வந்துவிடும். தேவை தன்னம்பிக்கை தான். தவறு செய்பவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையுடன் செய்கின்றபோது, நம்மால் ஏன் முடியாது? ஏன் கூடாது? என்று நினைத்தாலே போதும். தன்னம்பிக்கை உடலின் அனைத்து செல்களுக்கும் புது சக்தியைத் தருவதை உணரலாம்.
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், நம்மிடம் இருப்பதை அறிந்து, அளவுடன் அனுபவித்து வாழும்போது, அநியாயங்களை சுட்டிக்காட்டும் மனப்பக்குவம் பெற்று வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
வாழ்க வளமுடன்


Share
 

1 Comment

 1. Nika says:

  Your article was excellent and eurdtie.

Post a Comment


 

 


January 2011

மனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து
என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்
காலத்தை வென்று வாழும் மகாகவி பாரதி
என் பதில்களுக்கான கேள்விகள் எங்கே?
கவிதை
நலந்தானா
கணினி தொழில்நுட்பம்
இருளிலும் விடியல்
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
உனக்குள்ளே உலகம்-8 நேரந்தான் இல்லையே!
உடலினை உறுதி செய்
நூற்றுக்கு நூறு மார்க்
உள்ளத்தால் உள்ளலும் தீதே
வெற்றி நிச்சயம்
முயற்சி தரும் வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்