Home » Cover Story » தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!

 
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!


ராஜராஜன்
Author:

திரு. ராஜராஜன்
அஞ்சல் தலைவர், மேற்கு மண்டலம்
நேர்முகம் : செந்தில் நடேசன்
அதிர்ஷ்டம் என்பது நல்ல நேரம் அல்ல. அது உழைக்கும் காலமே என்பார் இங்கர்சால். அதுவாய் உழைப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை வர வழைத்துக் கொண்டவராக, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல் கிடைத்ததை எல்லோரும் பாராட்டும் வண்ணம் உயர்த்திடும் வல்லமை பெற்றவராக, எந்த ஒரு செயலிலும் சகிப்புத் தன்மையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து அனைவரும் விரும்பும் நல் அதிகாரியாக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு அவசியம் செய்திட வேண்டும். எந்தச் சூழலிலும் நாம் நாமாகவே இருந்திட வேண்டும் என்று தபால் துறையில் தனிமுத்திரை பதித்து வருபவரும், மேற்கு மண்டலம் அஞ்சல் தலைவருமான
திரு. ராஜராஜன் அவர்கள் தந்த நேர்முகத்தில் இனி நாம்…

உங்கள் இளமைக்காலம், கல்வி, குடும்பம் பற்றி…
நான் பிறந்தது திருவாரூரில். என்னுடைய தந்தை (திரு. இரா. வரதராஜன்) ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கியவர். எனக்கு இரு சகோதரிகள். சிறுவயதி லேயே தாயை இழந்ததால் பாட்டியின் பரா மரிப்பில் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பு முழுவதுமே திருவாரூரில்தான். பி.யூ.சி பயின்றது திருச்சியில். பின்னர் மதுரை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். பள்ளியில் இருக்கும் போதே விளையாட்டு, தேசிய மாணவர் படை உள்ளிட்டவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். கல்லூரியில் இருந்தபோது கூடைப் பந்து, கிரிக்கெட், மேசை வரிப்பந்தாட்டம் போன்ற அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினேன்.
பி.யூ.சி படிப்பு உங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது என அறிந்தோம் அது குறித்து?
என் பள்ளிப் பருவம் எனக்கு சந்தோசம் நிறைந்த பருவம். இயற்கையை நேசித்தல், மீன் பிடித்தல், நீச்சல் அடித்தல் என எந்நேரமும் குதூகலமாக, குறும்புத்தனமாக விளையாடி மகிழ்ந்திருந்தேன். வீட்டில் கண்டிப்பு இருந்தாலும் என் செயல்களுக்குத் தடை இருந்ததில்லை. எந்த செயலையும் சரியாகத்தான் செய்வான் என்கிற நம்பிக்கை என் தந்தைக்கும் பாட்டிக்கும் இருந்திருக்கலாம் என நம்புகிறேன். அதனாலேயே அந்த வயதில் அதிகம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றேன். மேலும் பதினொன்றாம் வகுப்பு வரை தமிழ் கல்வி முறையிலேயே படித்ததால், திருச்சியில் பி.யூசி. படிக்கும்போது விலங்கியல் பாடப்பிரிவில் இடம்பெற்ற ‘Characteristics’ என்ற ஆங்கில வார்த்தையைப் பார்த்து இவ்வளவு பெரிய ஆங்கில வார்த்தையா? என்று அதிர்ச்சியடைந்தேன். ஆங்கிலத்தைக் கண்டு பயப்பட ஆரம்பித்தேன்.
“ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்துகிறார்கள். என்னால் புரிந்து கொண்டு தொடர்ந்து படிக்க முடியுமா என்று தெரிய வில்லை”. என தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
இது எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடிய பயம்தான். புரிந்துகொள்ள புரிந்து கொள்ள சரியாகி விடும் என்கிற நம்பிக்கையை ஊட்டினார். மேலும் அடிக்கடி எனக்கு ஆங்கிலத்திலேயே கடிதம் எழுது அதில் இருக்கக்கூடிய பிழைகளை திருத்தி அனுப்பி வைக்கிறேன். இந்தப் பழக்கம் நாளடைவில் உன்னை ஆங்கிலத்தில் புலமை பெற்றவனாக்கும் என்றார் என் தந்தை. அவரின் வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தது.
பயம்தான் தனக்குள்ளே உள்ள திறமையை வெளிக்கொணராமல் தடுக்கிறது என்பதை உணர்ந் தேன். படிப்பில் ஆர்வம் ஆனேன். வெற்றிகளைச் சந்திக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் உங்களுடைய கனவு?
சிறு வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணமே மேலாங்கி இருந்தது. என்றாலும் மருத்துவப்படிப்பு கிடைக்காததால், அடுத்து எனக்கு பிடித்தமான வேளாண்மைத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
வேளாண்மைக் கல்வி என் வாழ்க்கையில் அமைந்த மிகச் சிறந்த விஷயம். இளமையிலேயே எனக்கு இயற்கை மீது காதல் இருந்ததால் எனக்கு இப்படிப்பு மகிழ்ச்சியையே தந்தது. மேலும் என்னுடைய கல்லூரிப் படிப்பின் போது எனக்கு மிகச் சிறந்த நண்பர்களும், ஆசிரியர்களும் கிடைத் தார்கள். குறிப்பாக, எனது கல்லூரி முதல்வர் டாக்டர் கே.கே. அவர்களின் மூலம் தலைமைப் பண்பு, பரிவு, நிர்வாகத்திறமை உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொண்டேன்.
ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது?
ஐ.ஏ.எஸ். கனவு எனக்கு சிறு வயதில் இருந்தது இல்லை. நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் தற்போதைய நிதிச் செயலர் திரு. சண்முகம் அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சியடைந்தார். அதன்பின், எனது நண்பர் கோவை போலீஸ் கமிஷனர் முனைவர்
சி. சைலேந்திர பாபு. இவர்களைப் பார்த்த பின்பு தான் எனக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ் தேர்விற்குத் தயாராகினேன்.
முதுகலைப்பட்டம் முடிப்பதற்கு முன்பாக இரண்டு முறை பிரிலிமினரித் (முதல்நிலை) தேர்வு எழுதினேன். தேர்ச்சியடையவில்லை. முதுகலைப் பட்டம் முடித்தவுடன் எனக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் பிரைமரி தேர்வை எழுதினேன். அப்போது தேர்ச்சி அடைந்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியின் ஒத்துழைப்பும் தியாகங் களும் என் வெற்றிக்கு துணையாக இருந்தன.
எப்போதாவது ஐ.ஏ.எஸ். ஆக முடியவில்லையே என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததுண்டா?
இல்லை. அப்படி நான் நினைத்ததில்லை. அத்துறைக்கு சென்றிருந்தால் என் பார்வையும், எண்ணமும் விரிந்து இருக்கும் என்று நினைத்ததுண்டு. ஆனால் வருந்தியது இல்லை.
துறை மாற்றம் எப்போது நிகழ்ந்தது?
ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற உடனேயே அடுத்த பணிக்குத் தயரானேன். சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். இந்தியன் வங்கிப் பணியில் சேலத்தில் அமர்ந்தேன். ஆனால் எனக்குள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிய வேண்டும் என்பதி லேயே ஆர்வ மாக இருந்தேன். என்றாலும் தேர்வு முடிவுகளுக்குப் பின்பு, இந்தியத் தபால் துறையைத் தேர்ந்தெடுத்து பணியாற்றத் துவங்கினேன்.
இந்தியத் தபால் துறையில் பணியாற்றிய உங்கள் அனுபவம் பற்றி…
சேலம், மதுரை, கோவில்பட்டி, சென்னை, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றியுள்ளேன். இளமையில் இருந்த எனது வேகமும், கோபமும் பின்னாளில் விவேகமாக மாறியது. எனது நிர்வாகத் திறமையும் வளர்ந்தது. வேலை செய்யும் இடத்தில் ஒரு சுமூகமான மனநிலையை ஏற்படுத்தும் திறமையும் எனக்கு வந்தது. ஒரு முடிவு எடுக்கும்போது அது பிறரை பாதிக்காத வண்ணம் எடுக்கப் பழகிக் கொண்டேன். எனது முடிவை மற்றவர்களும் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டனர்.
இப்போது தபால் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் பற்றி…
தபால் துறையில் ஒரு சுணக்கம் ஏற்பட் டுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை தான். இதற்குக் காரணம் தனியார் நிறுவனத்தின் பெருக்கம் கிடையாது. தொலை செய்தித் துறை யில் ஏற்பட்டுள்ள புரட்சியே இதற்குக் காரணம். இப்போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுபவர்கள் யாரும் இல்லை. இப்போது வரும் கடிதங்கள் பெரும் பாலும் வர்த்தகம் மற்றும் வங்கித் தொடர் பானவை மட்டுமே.
இதிலிருந்து தபால் துறையை மீட்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
இந்திய தபால் துறை என்பது மிகப்பெரிய வலைபின்னல். இந்தியாவில் கிட்டத்தட்ட 1,55,000 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1,25,000 கிராமப்புற தபால் நிலையங்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். சில கிராமங்கள் இந்தியாவைச் சேர்ந்தது தான் என்பதை அங்கே செல்லும் இந்தியத் தபால்காரர் மூலமே கண்டறிய முடிகின்றது. இப்போது இந்த 1,55,000 தபால் நிலையங்களையும் ஒரே மின்னனு வலை பின்னலின் கீழ் கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

தபால் நிலைய வங்கிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வாழ்நாள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு (உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே பணமாற்று சேவை) உள்ளிட்டவையும் நன் முறையில் செயல்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் பல இந்த சேவையைச் செய்யும் போதிலும், அரசு தபால் துறையால் மேலும் சாதிக்க முடிகின்றது. இதற்குக் காரணம் முக்கியமான நகரங்களைத் தாண்டி கிராமங்களையும் அடையக்கூடிய எங்களின் பலம்.
தபால் துறையானது சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கீட்டின் (2010) போது பல உட்புற கிராமங்களையும் எளிதாக அடையவும், கொடுக்கப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான முகவரி சரிபார்த்தலை செய்வதற் கும், நுகர்வோர் விலைபட்டியல் தயாரிப்பதற்கும் பெரிதும் உதவியுள்ளது.
இதனால் தபால் நிலையங்களின் நிலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு மீண்டும் பல வகையான சேவைகளைச் செய்து, மக்களின் தினசரி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையை நெருங்கிச் சென்றுள்ளது.
தபால்துறையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட விருக்கும் சேவைகள் குறித்து?
இந்தியாவில் குறிப்பாக வங்கிகள் தபால் நிலையத்துடன் இணைந்து கிராமப்புற வங்கிகளை ஏற்படுத்த விளைகின்றது. அவசரத் தபால் இருக்கும் இடத்தை கண்டறியும் சேவையைப் (Speed Post Tracking Service) போல பதிவஞ்சலை கண்டறியும் சேவையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் ஆறு லட்சம் அஞ்சல் பணியாளர்களுக்கும் இப்போது கணிணிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு இத்திட்டம் முழுமையாக முடிவு பெறும் போது கிராமப்புறங்களிலும் தபால் துறை வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முழுமையாகப் பெறலாம். 2014ல் தபால் துறை முற்றிலுமாக நவீனமடையும்.
தபால் தலை பற்றி…
வழக்கமாக அச்சிடப்படும் தபால் தலையைத் தவிர, இந்தியத் தபால்துறை ஒவ்வொரு வருடமும் 30க்கும் குறைவான விதவிதமான தபால்தலைகளை வெளியிடுகின்றது. குறிப்பிட்ட அளவு மட்டுமே வெளியிடப்படும் இத்தபால் தலைகள் விற்றுத்தீர்ந்ததும் பின் நாட்களில் மிக அதிக விலைக்கு விலைபோகின்றன. அரசிற்கு இதனால் எவ்விதமான லாபமும் இல்லாத போதும், மக்கள் லாபம் அடைகின்றனர். இந்த சிறப்புத் தபால்தலைகள் சரித்திர ஆவணங்களாகவும் திகழ்கின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவும் இவை உதவுகின்றன.
கடினமான வேலைப்பளுவிற்கு இடையில் உங்கள் குடும்பத்திற்காக உங்களால் நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிகிறதா?
குடும்பத்திற்காக குறைந்த நேரம் ஒதுக்கி னாலும் அது உபயோகமாக, பயனுள்ளதாக, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவேன். என் குடும்பத்தாரும் என்னுடைய வேலையை அனுசரித்து மிகவும் புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள். பணி நிமித்தமாகப் பல ஊர்களுக்குச் செல்வதை ஒரு சுமையாக நான் நினைப்பதில்லை. புது நண்பர்களையும், புது இடங் களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளாகவே நான் அதை எடுத்துக் கொள்கிறேன். வலிகளையும் ரசிக்கக் கற்றுக்கொள்கிறேன்.
உங்களுக்கு முன் உதாரணமாக யாரைக் கருதுகிறீர்கள்?
திரு. தியோடர் பாஸ்கரன் இயற்கை ஆர்வலர் மற்றும் சிறந்த மனிதர். திருமதி. சாந்தி நாயர், தமிழகத்தின் முதன்மை அஞ்சல் தலைவர். எனக்கு பணி வல்லமையைக் கற்றுக் கொடுத்தவர். ஆசிரியர் டாக்டர் கே.கே., நற்சிந்தனை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் என் தந்தை திரு. இரா.வரதராஜன்.
புதிதாகப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
பிரச்சனைகள் நமக்கு மட்டுமே வருகின்றது என்ற எண்ணத்தை விடுங்கள். எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தான் நமக்கும் வருகின்றது. ஒரு முடிவு எடுக்கும்போது நல்லறிவுடனும், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டும் எடுக்க வேண்டும். நிர்வாகத் திறன் என்பது வெளியில் இல்லை. உங்களுக்குள் தான் இருக்கின்றது.
இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…
நீங்கள் நீங்களாகவே இருங்கள். சமூகத்திற் காகவும், மற்றவர்களுக்காகவும் மாறாதீர்கள். கனவுகளை அடையப் போராடுங்கள்.
‘தன்னம்பிக்கை’ குறித்து…
இந்த வார்த்தையிலேயே அனைத்தும் உள்ளது. நேரம் பலனை எதிர்பார்க்காது நற்செயல் புரிய அனைவரையும் தூண்டி சாதிக்க வைக்கிறது.
தங்கள் குடும்பம் குறித்து…
அளவான ஆரவாரமில்லாத குடும்பம். மனைவி சாந்தி குடும்ப நிர்வாகி. மகன் இராகுலன், பொறியியல் படிப்பு முடித்துக்கொண்டு மேற் படிப்பிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்