Home » Articles » வெற்றி விலாஸ்

 
வெற்றி விலாஸ்


admin
Author:

தன்னம்பிக்கை வாசகர்கள் போட்டியில் தேர்வு பெற்ற நட்சத்திரக்கதை

‘வெற்றி விலாஸில்’ கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கொண்டு, பரந்து விரிந்திருந்த தனது ஹோட்டலையே பார்த்துக் கொண்டிருந்தான் மதிவாணன்.

சப்ளையர்கள், மாஸ்டர்கள், துப்புரவுப் பெண்கள் என நாற்பத்தைந்துபேர் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கடலூர் டவுனிலுள்ள முக்கிய சாலையில், பிரம்மாண்டமாய் நின்றிருந்தது “வெற்றி விலாஸ்”. ஹோட்டலின் மாடியில் மதிவாணனின் வீடு. சுவையான ஆகாரத்திற்காக காலையிலேயே வரத்துவங்கும் கூட்டம், இரவு பதினொரு மணிவரை ஓயாது. ஊழியர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மதிவாணனுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் இல்லை. ஆனால் இன்று… அவனுக்கு ஒரு உணவகமே சொந்தம்.

“ஏம் மதி சோகமா இருக்க…”

“………….”

நண்பன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், பெருமாள் கோவில் கோபுரத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் பதினைந்து வயது மதிவாணன்.

“மதி……… அழுவுறியா?”

“இல்ல……..”

“பின்ன ஏன் தலை குனிஞ்சி ஒக்காந்திருக்க?”

“விடிஞ்சா… சோத்துக்கு என்ன செய்யறது?”

“வழி பிறக்கும்”

“எப்படி?”

“நீ மனசு வச்சா…”

“புரியல…”

“இந்த டவுன்ல மொத்தம் எத்தன ஆபிஸ் இருக்கும்?”

“நூறு ஆபிஸ்கள் இருக்கலாம்”

“ஆபிஸ் வேலை செய்யுறவங்கள்ல எத்தனை பேர் டூவீலர்ல வருவாங்க?”

“எல்லாரும்”

“இல்ல ஒரு ஐநூறுபேர் டூவீலர்ல வரலாம்”

“அது எதுக்கு இப்ப…”

“ஒவ்வொரு ஆபிஸா போய் டூவீலர் தொடைச்சுக் கொடு”

“கொடுத்து…”

“அதுக்காக அவங்க தர்ற காசு எவ்வளவா இருந்தாலும் வாங்கு. ஆளுக்கு ஒரு ரூபா கூடவா தரமாட்டாங்க?”

“தரலாம்…”

“காலைல பத்து மணிக்கு கிளம்பு. சுறுசுறுப்பா வேலை செய். சுத்தமா வண்டிகள தொட, சாயங்காலத்துக்குள்ளாற நிச்சயமா நூறு வண்டி தொடைக்கலாம். குறைந்தது நூறு ரூபா கிடைக்கும்”

அன்பு காட்டிய வழி, மதிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எந்த முதலீடும் இல்லாத வேலை. அன்பு, மதியின் பால்ய சிநேகிதன். கணித ஆசிரியரின் ஒரே மகன் அன்பு. மதியின் அப்பாவும், அம்மாவும் ஒரு சாலைவிபத்தில் இறந்தபின், மதி அனாதையானான். கணித ஆசிரியர், மதியை மாணவர் விடுதியில் சேர்த்துவிட்டார். செலவுக்குப் பணம் கொடுத்தார். அன்பு பயன்படுத்திய பழைய பேண்ட், சர்ட்டுகளை உடுக்கக் கொடுத்தார்.

தாய் தந்தையரை இழந்து, மதி கலங்கிய போதெல்லாம் ஆறுதலாயிருந்தது அன்பு தான்.

“சார்… உங்களப் பார்க்க யாரோ வந்திருக்காங்க”

மேனேஜரின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் மதி.

“யாரு வந்திருக்கா…”

“தெரியல சார். வரச் சொல்லட்டுமா?”

“வரச்சொல்”

மதியின் மாமா வந்திருந்தார். மதி, கடலூரில் ஒரு கடை போட்டதும், ஏதேதோ சொந்தம் சொல்லிக் கொண்டு பலபேர் வந்து போனார்கள். அவர்களில் இவரும் ஒருவர். சொந்தங்கள் யாரும் கஷ்டகாலத்தில் உதவவில்லை. உதவியதெல்லாம் அன்பு தான்.

ஒரு வருடம், இரண்டு வருடமல்ல ஐந்து வருடங்கள்… டூவீலர் வண்டிகளை துடைத்தான் மதி. முதலில் சில நாட்கள் வரை முப்பது, நாற்பது ரூபாய் தான் கிடைத்தது. இவனது தொழில் நேர்த்தி, சுறுசுறுப்பு பார்த்தவர்கள் தங்களது கார், வேன் போன்றவைகளைத் துடைக்கச் சொன்னார்கள். கிடைத்த வேலைகளை சோம்பலின்றி செய்தான். வருமானம் பெருகியது. கடலூர் டவுனில் ஒரு அரையை வாடகைக்கு எடுத்தான். தூங்க மட்டுமே அங்கு செல்வான். மற்ற நேரமெல்லாம் ஏதோ ஒரு வேலையைப் பார்த்து சிறுகச் சிறுக பணம் சேர்த்தான்.

“சார்… உங்களைப் பார்க்க பத்திரிக்கை ஆட்கள் வந்திருக்காங்க…”

மீண்டும் மேனேஜர் அழைத்ததும் சுயநினைவிற்கு வந்தான் மதி. ‘எதிர்காலம்’ பத்திரிக்கையிலிருந்து சிலர் வந்திருந்தனர்.

“வரச்சொல்”

“சார்… வணக்கம்”

“வாங்க… வாங்க… உட்காருங்க”

“எங்க இதழ்ல… ‘வெளிச்சத்தை வென்றவர்கள்’னு ஒரு தொடர் கட்டுரை எழுதப்போறோம். அதுக்காக… உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி தெரிஞ்சுகிட்டு போலாம்னு வந்தோம்”.

“குருட்டு அதிர்ஷ்டம் அப்படினு சொல்ல மாட்டேன். ஒரு வேளை சோத்துக்குக் கூட நாதியில்ல. ஏதாவது ஒரு வேலை செஞ்சாத்தான் சோறுன்னு ஆயிடுச்சி, காலம் கொடுத்த நெருக்கடியில வெறித்தனமா-கௌரவம் பார்க்காம உழைச்சேன்… என் வெற்றிக்குக் காரணம் என் நண்பனும் என் ஆர்வமும் தான்”

“அப்போ… ஒருவர் முன்னேற பணம் தேவையில்லையா?”

“தேவையில்லை. ஆர்வம் இருந்தா… எல்லாம் நம்ம கூட வரும். முன்னேறியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டா, பணம் ஒரு மேட்டர் இல்லை. பணம் கோடி கோடியா இருந்து ஆர்வம் இல்லைன்னா… வீழ்ச்சி சர்வ நிச்சயம். ஆர்வம் இருந்து… பணம் இல்லேன்னா பிரச்சனை இல்ல”

“அப்போ வேலையில்லா திண்டாட்டம் என்பது…”

“ஒரு மாயை. சோம்பேறிகளின் ஒப்பாரி அது. பைசா காசு கையில் இல்லாத எனக்கு, ஆர்வமும் உழைப்பும் தான் மூலதனம்… ஒரு ரூபா ஒரு ரூபாயா சேர்த்து … ஒரு எறும்பு உணவு சேர்க்கிற மாதிரி நான் பணம் சேர்த்தேன். பைசா ஒன்றுமே இல்லாத நானே குப்பையிலிருந்து கோபுரத்திற்கு உயர்ந்திருக்கும்போது… கொஞ்ச நஞ்சம் வசதி படைத்த இன்றைய இளைஞர்கள் இன்னமும் உயரப் போகலாம்”

“ரொம்ப ஈஸியா முன்னேற்றம் கிடைக்கும்னு சொல்றீங்க…”

“இல்ல… ஈஸி இல்ல… முட்டி, மோதி, ரத்தம் வழிந்து, மனசு, உடம்பு எல்லாம் ரணமாகும் பாதை இது. துயரம்… அவமானம்… அசிங்கம்… எல்லாம் தாங்கி, சகிச்சுகிட்டு உரமா நின்னேன். ஜெயிச்சேன்”

“விளக்கமா சொல்ல முடியுமா?”

“கண்டிப்பா. வண்டி துடைக்கிற வேலைதான் முதலில் செஞ்சேன். கொஞ்சம் பணம் கையில தங்கினதும், வீடு வீடா போய் காரம், இனிப்பு வித்தேன். என் கூட படிச்சவங்களோட கேலி கிண்டல தாங்கினேன். வாங்கி சாப்பிட்டுட்டு காசு கேட்டா… நாளைக்கு வா, அப்புறம் வா… என பத்து ரூபாய்க்கு ஒரு மாசம் இழுத்தடிப்பாங்க. சிலர்கிட்ட காசு கேட்டா, அடிக்க வருவாங்க. கெட்ட பேச்சு பேசுவாங்க. சில ரவுடிகள் என் சரக்க புடுங்கி வச்சுகிட்டு துரத்துவாங்க. பல ராத்திரிகள் தூக்கமில்லாம அழுதிருக்கேன். பசிக்கு மட்டும் தான் சாப்பிடுவேன். ‘எதுக்கு இந்த வாழ்க்கை… பணத்துக்காகத்தானே பலபேர் கிட்ட பேச்சு வாங்குறோம். செத்துப் போயிடலாமன்னு’ பல நேரம் வேதனைப்பட்டிருக்கேன். அவமானம் தாங்காம ஏதுங்க வெகுமானம்? உசிரோடு இருந்தா ஒரு நாள் ஜெயிப்போம் என்கிற நம்பிக்கைல உழைச்சேன். இன்றைய வெற்றி ஈஸியா கிடைக்கல. இருப்பதஞ்சு வருஷம் பேய் மாதிரி அலைஞ்சேன். வசதி கிடைக்கிற வரை உழைக்கணும்ணு நான் எடுத்த முடிவு இது. இந்த நிலை கிடைக்க இன்னும் இருபது வருஷம் ஆகும்னாலும் நான் உழைக்கிறத நிறுத்தியிருக்க மாட்டேன்”

“இன்றைய இளைய தலைமுறைக்கு உங்க ஆலோசனை என்ன?”

“தான் விரும்பிய பெண் தனக்குக் கிடைக்க, ஒரு இளைஞர் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறான். அதே அளவு ரிஸ்க்க, ஒரு தொழிலுக்காக எடுத்தான்னா, அவன் வாழ்க்கை செழிப்படையும் என்பது என் ஆலோசனை”

பத்திரிக்கையாளர் போனதும், வீட்டிற்குச் சென்றான் மதி.

செல்போன் அழைத்தது. மறுபக்கத்தில் அன்பு.

“அன்பு…”

“சொல்லு மதி… நலமா?”

“நல்லா இருக்கேன். உன்ன பார்க்கணும் போல இருக்குடா”

“தை மாசம் வர்ரேன். உன் குடும்பம் எப்படி இருக்கு? குட்டிப்பய விக்கி என்ன பண்றான்”
அன்பு பேசும் போதெல்லாம்…….. மதிக்குத் தெம்பு வரும். தெம்பு தருவதுதான் அன்பின் வாடிக்கை. அவன் மட்டும் இல்லையென்றால்………
“என்னடா சத்தத்தையே காணோம்?”
“ஒன்னுமில்லடா, உன் நினைப்பு…… பழைய நினைப்பு வந்திருச்சு……… அமைதியாயிட்டேன்.”
“என்ன நெனப்பு வந்துச்சி…………”
“நீ கொடுத்த ஊக்கம் தான்டா என் வாழ்க்கை.”
“ச்சே……………. ச்சே…………… அப்படியில்லடா. ஒன்னமாதிரி நிறைய பேருக்கு உபதேசம் பண்ணியிருக்கேன். அவங்களும் கேட்டாங்க. ஆனா, செயல்ல காட்டல. நீ என் பேச்ச கேட்டதோட நிக்காம, செயல்ல இறங்கிட்ட உன் முன்னேற்றத்துக்கும் நீ தாண்டா காரணம்.”
“இல்லடா…………… உன் பேச்சுங்கற தீபம் இல்லேன்னா. …………… என் வாழ்க்கை இருண்டு போயிருக்கும்டா.”
“நோ…………… மதி.…………… நோ…………… எல்லையற்ற ஆர்வம் ஒங்கிட்ட கொட்டிக்கிடந்திச்சி. அந்த ஆர்வம் தான் உன்னை இயக்குன என்ஜின். ‘ஐன்ஸ்டீன்கிட்ட நீங்க நோபல் பரிசு பெற்றதற்கு என்ன காரணம்னு கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? ஆர்வம்…………… ஆர்வம். …………… ஆர்வம். ஆர்வத்தைத் தவிர வேறெதுவும் இல்லைன்னார்.’ அதே ஆர்வம்தாண்டா உன்னை உயர்த்தின எரிபொருள். நான் வெறும் கருவிடா.”
“இந்த அடக்கம்தான்டா உன்கிட்ட எனக்குப் பிடிச்சது.”
“பல பேருக்கு பணம் இருக்கு. சொந்தமான தொழில் பண்ண ஆர்வம் இல்ல. உனக்கு ஆர்வம் இருந்திச்சி…………… சிகரம் தொட்ட……………”
ஆம்! கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும், கடலூர் டவுனில், தள்ளுவண்டியில் இட்லி, தோசையைச் சுடச்சுட விற்றான். ஐந்து ஆண்டுகளில் இப்படி. அதன்பிறகு கடைவீதியில் ஒரு சிறிய இடம் பிடித்து ஹோட்டல் துவக்கினான். நேர்மையான வியாபாரம், சுவையான உணவு, வாடிக்கையாளர்களை பணிவுடன் நடத்தியவிதம் என தனது தனிப்பட்ட தன்மையால் மக்களைக் கவர்ந்தான் மதி. காலம் சுழன்றது. இன்று…….. கடல்போல ஒரு ஹோட்டல், அதன் மீது தனது வீடு என வளர்ந்து விட்டான். இன்னும் அவன் சோம்பேறியில்லை., கூட்டம் அதிகமானால், பணியாளர்களோடு சேர்ந்து உணவு பரிமாறுவான், எச்சில் இலை எடுப்பான், கல்லாவில் உட்காருவான், வந்த வாடிக்கையாளர்களை நலம் விசாரிப்பான், ஆர்வம் என்பது எரிபொருள். அதை உள்ளத்தில் நிரப்பி விட்டால்…………… எப்படி ஒருவனால் ஓய்வெடுக்க முடியும்?

 

1 Comment

Post a Comment


 

 


October 2010

கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
வரி சில வரிகளில்
உடலினை உறுதி செய்
விதை
தன் வினை தன்னை சுடும்
பயத்திற்கு குட்பை
ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க ஆலோசனைகள்
கதையும் கருத்தும்
உனக்குள்ளே உலகம்-5
கோபத்தை அகற்றுங்கள்
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள் 50
இடத்தை மாற்று வெற்றி நிச்சயம்
சோம்பலை சாம்பலாக்கி வெற்றி பெறு!
வெற்றி விலாஸ்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
வல்லமை தாரோயோ
உள்ளத்தோடு உள்ளம்