Home » Articles » சிந்தனை செய் நண்பனே…

 
சிந்தனை செய் நண்பனே…


ரஜினிகாந்த் கே
Author:

– கே. ரஜனிகாந்த்

நண்பர்களே! வாழ்க்கையில் முன்னேறஅறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. அறிவோடு சேர்ந்து சில நல்ல குணாதிசயங்களும் வேண்டும். ஒருவர் தனது லட்சியத்தை அடைய, புத்திசாலியாக மட்டும் இல்லாமல், மற்ற தகுதிகளும் உள்ளவராக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, இருவரை எடுத்துக் கொள்வோம்.

ஷாலினியும், குமாரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள். இருவரும் நல்ல புத்திசாலி. ஷாலினிக்கும், குமாருக்கும் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்தவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பது இலட்சியம். அதற்கு ஏற்றார்போல, இருவரும் நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்கள் விருப்பப்படி மருத்துவக் கல்லூரியில் சேருகிறார்கள். இருவருக்கும் ஒரே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

ஷாலினி மிகவும் புத்திசாலி. தான் எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்று நினைப்பவள். அதற்காக எதையும் தியாகம் செய்வாள். தூக்கம், பொழுதுபோக்கு, நண்பர்கள், சில சமயம் சாப்பாடு இப்படி எதையும் தியாகம் செய்வாள். தான் ஒரு சிறந்த மருத்துவராக மட்டும் அல்லாமல், தென்னிந்திய மருத்துவர்கள் சங்க தலைவராக வேண்டும் என்பதையும் லட்சியமாகக் கொண்டவள்.

குமார், ஷாலினியைப் போலவே மிகவும் புத்திசாலி. ஆனால் பிறவிஷயத்தில் அவறுக்கு நேர்எதிர். வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும், நட்பை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அவனுக்கு, தான் ஒரு தலைசிறந்த மருத்துவராகி, அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இலட்சியம்.

இவர்கள் இருவருமே இரண்டு விதமான குணாதிசயங்கள் கொண்டவர்கள்.

ஒரு நாள், இவர்கள் உடன் படிக்கும் ஒரு மாணவனுக்கு, உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு. மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறான். இவர்கள் அனைவரும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள். பெற்றோர், உற்றார், உறவினர்கள் அடுத்து இல்லாதவர்கள். அதனால் மாணவர்களே, ஒவ்வொருவராக மருத்துவமனையில் அவனோடு இருந்து பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார்கள்.

ஷாலினி பார்த்துக் கொள்ள வேண்டிய நாள் வருகிறது. அடுத்தநாள் அவர்களுக்கு ஒரு முக்கியமான பரீட்சை இருப்பதால், தான் அதில் முதலாவதாக வரவேண்டும் என்றால், நன்றாகப் படிக்க வேண்டும். அதனால் தன்னால் மருத்துவமனைக்கு வந்து பார்த்துக் கொள்ளமுடியாது என்று கூறிவிடுகிறாள் ஷாலினி. மாணவர்கள் அனைவரும் மிகவும் வருத்தம் அடைகின்றனர்.

முதல் நாள் ராத்திரி முழுவதும் அந்த உடல்நிலை சரியில்லாத மாணவனோடு இருந்தது குமார் தான். ஆனாலும் குமார், ஷாலினிக்கு பதிலாக, அந்த நண்பனைத் தானே பார்த்துக் கொள்வதாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான். மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். குமாரை நினைத்துப் பெருமைப் படுகின்றனர்.

மருத்துவமனையில் இருந்து கொண்டே குமார் படித்து தன்னை பரீட்சைக்கு தயார்படுத்திக் கொள்கிறான்.

தான் நினைத்தது போலவே, ஷாலினி பரீட்சையில் முதலாவதாக வருகிறாள். குமார் இரண்டாவதாக வருகிறான். அதனை நினைத்து, அவன் சிறிதும் வருத்தம் அடையவில்லை. சிறிது நாட்களுக்குப் பிறகு, அவர்கள் கல்லூரியில் மாணவர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியிட யார் தகுதியானவர்கள் என்று பட்டியலிட்டு முதலாம், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷாலினியையும், குமாரையும் தேர்வு செய்கிறார்கள் ஆசிரியர்கள்.

மிகவும் சுலபமாக குமார் வெற்றி அடைகிறான். காரணம், குமார் புத்திசாலி மட்டும் அல்ல, அவன் ஒரு பொதுநலவாதி. எல்லோருக்கும் உதவி செய்பவன். மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்ததால் அவனால் ஜெயிக்க முடிந்தது.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால், மருத்துவ சங்கத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒரு குழுவுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தென்னிந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களை ஆராய்ந்து ஒருவரைத் தேர்வு செய்கிறார்கள். அவர் வேறு யாருமில்லை. குமார் தான். அந்தக் குழுவின் முக்கியப்பொறுப்பில் இருப்பவர், பத்து வருடங்களுக்கு முன்னால், குமார் மருத்துவமனையில் பார்த்துக் கொண்ட அந்த நண்பனின் தந்தை. அவருக்குக் குமாரைப் பற்றி நன்றாகத் தெரியும். குமார் படிப்பில் திறமைசாலி, மருத்துவத்துறையில் கைதேர்ந்தவர். அடுத்தவருக்கு உதவி செய்யும் குணம் உடையவர். இப்படி பல நல்ல குணங்கள் இருப்பதால், குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷாலினி நல்லவள்தான், புத்திசாலிதான். ஆனால் அவள் ஒரு சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவள். அதனால் அவளுக்கு வெற்றி வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. குமார், ஷாலினியைப் போல புத்திசாலி தான். அவனுக்கு அடுத்தவருக்கு உதவும் நல்ல குணம் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல், அவன் அனைவரோடும் அன்பாகப் பழகி நட்பு பாராட்டுபவன். அதனால் அவனுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், புத்திசாலித்தனம் மட்டுமே, வெற்றிக்கு வழி வகுக்காது. ஆங்கிலத்தில் கூறப்படும் “Attitude” அதாவது பழகும் தன்மை மிகவும் முக்கியம்.

நண்பர்களே, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்பது சரிதானே?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்