Home » Articles » இவைகளையும் கவனியுங்கள்

 
இவைகளையும் கவனியுங்கள்


பாலா
Author:

– பாலா
அடர்ந்த இருட்டு, அங்கு ஓரமாயிருந்த ஜன்னலின் வழி மட்டும் கதிர் ஒளிகள் அந்த அறையினுள் நுழைந்தன. மிக விசாலமான அறை, நாள்காட்டிகளோ, வரைப் படங்களோ, எதுவுமில்லாத சுவர்கள். புத்தகங் களுக்கென்று ஓர் பெரிய அலமாரி, ஜன்னல் வழி நுழைந்த வெளிச்சத்தில் அலங்கரித்த புத்தக அலமாரியின் நேர் எதிரில், ஓர் மூலையில் மேஜை ஒன்று தென்பட்டது. ஒரு நாற்காலியும் உடனிருந்தது, ‘வணக்கம்’ என்று ஒரு குரல் கேட்டது, அந்த அறையில். அருகில் நெருங்க முற்படுகை யில், ‘வேண்டாம்! அங்கேயே இருங்க…’ என்றது அதே குரல். அசைவுகள் ஏதுமில்லா அந்த மேஜை நாற்காலியிருந்த இடத்திலிருந்து அந்த குரல் கேட்க ஆரம்பித்தது.

‘வருத்தம்! யார்கிட்டேயும் சொல்லி அழமுடியாத நிலைமையில் நான். என்னோட… என்னோட அப்பா இறந்துட்டார்!’ என்றது அந்த குரல்.

விம்மல்களின் சிதறல்.

தழுதழுத்த குரல் மீண்டும் பேச தொடங்கியது.

‘அவரு…… அவரு எனக்கு அப்பா! என் குரு! எனக்கு எல்லாமே…… என்னுடைய பிதாமகர்! எனக்கு எல்லாமே அவர்தான், அவரை போல ஒருத்தர் இனி இந்த உலகத்துல பொறக்குறது……’ என்று சிந்தனைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டது அந்த குரல், சிறு இடைவேளைக்கு பிறகு, பெருமூச்சொன்றின் சப்தம் அந்த அறையின் நிசப்தத்தை உடைத்தது.

‘பணம், பேர், புகழ், அந்தஸ்து…… இந்த மாதிரி ஒண்ணுமில்லாத விஷயங்களை வெறுத்தவர் அவர்… எழுத்து… ஓயாத எழுத்து!’ என்று கூர்மை யானது அந்த குரல், சட்டென்று முறுக்கேறிய சிங்கம் போல் கர்ஜனையுடன், ‘சிந்தனை! நல்ல சிந்தனை! அதுக்கு அவருக்கு உரமா இருந்தது, அவரோட இந்த உலக அறிவு! திடமானதா… உங்கள மாதிரி மனுஷங்களுக்கு என்னைக்கும் திடமளிக்கக்கூடிய பல சிந்தனைகளை அவரோட எழுத்துக்கள் மூலம் தந்தார்’ என்று அமைதியானது அந்த குரல். அலையடித்து ஓய்ந்த அமைதி.

‘அதனாலேயே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சது. அவரோட வாழ்ந்த நாட்கள் அழகு. அவரோட உடலில் இருந்து எழும் வியர்வைக்கு உண்மைங்கிற ஒரே மணம் தான் இருக்கும்! அத ரசிச்ச பெருமை எனக்கு மட்டும்தான் இருக்கும்!’

மீண்டும்,
“நல்லவனுக்கு காலமில்ல…” என்றது குரல்.

‘நான் சொல்றத நல்லா காதுல வாங்கிக் கோங்க… நல்லவனுக்கு காலமில்ல! அப்படின்னு யாராவது சொன்னா… அவன பாக்காதீங்க… அவன் கிட்டயிருந்து விலகிடுங்க… ஓடுங்க… நல்லது பண்ணனும்னா… அவன ஓங்கி கன்னத்துல அறைஞ்சிடுங்க! அந்த அறை, அவன் சிக்கியிருக்கிற அந்த மாயமான விஷம் கலந்த குழப்ப சேற்றிலிருந்து மீண்டெழுந்து வர ஓர் அதிர்ச்சியை கொடுக்கும். அதுவே அவனுக்கு நாம் செய்யிற உதவியாகும். நல்லவன் வாழ முடியும். நல்லவனா லேயே நல்லா வாழ முடியும்!” இதெல்லாம் என் முன்னாடி தான் அவர் எழுதினார். அவர் எழுதுனதுலயே எனக்கு பிடிச்ச வரிகள் இது. அவர் எழுதின மாதிரியே அவரும் நல்லவரா தான் வாழ்ந்தார். நேத்து வரைக்கும்… இந்த அறையில… இந்த அறையிலதான் அவர் இருந்தார்! அவர் மூச்சுக்காற்று இங்க எல்லா இடத்துலயும் நெறஞ் சிருந்தது. என் மேலேயும் அவரோட மூச்சுக்காற்று மென்மையான ஸ்பரிஸத்தை கொடுத்துச்சு. இந்த அறையிலதான் அவரோட பல படைப்புகளை உருவாக்கியிருக்கார். பல கதைகள், கவிதைகள், வரைபடங்கள், கேலிச் சித்திரங்கள் என்று எத்தனையோ படைப்புகள்! மீண்டும் கூர்மை யானது குரல்.

‘உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு இந்த அறைக்குள்ள வந்திருக்கிற கதிரவனொளி ஏமாந்து போயிருக்கும். ஏன்னா அவர் இங்க இல்ல… காலையில முந்தியடிச் சிட்டு, அந்த ஜன்னல் வழியா ஒவ்வொரு சூரிய ஒளிக்கதிர்களும் உள்ளே வரும். அதிகாலையில் சூரியனை விட பிரகாசமான அவரோட கண்களைப் பார்க்க! அவரோட படைப்புகளை அவர் செய்ய, இந்தக் கதிரொளிகளின் வெளிச்சம் உதவியா இருக்குறதா நெனைச்சு அதுங்களுக்கு ஒரு பெருமை உண்டு. அந்தக் கதிர்களெல்லாம் என்னையும் பார்த்து ரசிக்குங்க!’ என்று சிறு புன்முறுவல் சிந்தியது அந்த குரல்.

‘அவரோட இந்த அறையில் இருக்கிற புத்தகங்கள், காகிதங்கள் எல்லாம் இன்னைக்கு வருத்தத்துல இருக்கு! நானும் தான்… இனிமேலும் இங்க வருத்தங்களின் கோர தாண்டவம் தான் இருக்கும். ஏன்னா அந்தப் புத்தகங்களையும் என்னையும் தொட்டு தாலாட்டிய அந்தக் கைகளையும் மடியையும், காலம் அதன் கொடிய பசிக்காக இறையாக்கிடுச்சு!’ என்று மீண்டும் சிந்தனைக்குள் மூழ்கியது குரல்.

‘இனி இந்தப் புத்தகங்கள் எல்லாம் ஏதாவது பழைய மார்க்கெட்ல பல புத்தகங்களுக்கு அடியிலோ, தூசு துரும்புகளுக்கு இடையிலோ, கரையான்களுக்கு இரையாகவோ போகப் போகுது, அவரோட செல்லப் பிள்ளை நான், என்னையாவது இங்கேயே விட்டிருங்க, அவரோட இந்த அறையில், அவரோட நினைவுகளோடவே நான் வாழ்த் திடறேன். இனி இந்த இருட்டில, என்னோட விம்மல்களோ, அழுகையோ யாருக்கும் கேட்காம பாத்துக்கிறேன். என்னை விட்டுருங்க!

அவரையும் அவர் எழுத்துக்களையும் மறந்த மாதிரி, என்னையும் மறந்திடுங்க, அந்த நல்ல மனிதன், உன்னதக் கலைஞனின் கைகளில் சுழன்று விளையாடிய ஒரு பேனாவின் கடைசி ஆசை இதுன்னு நெனைச்சுகுங்க!” என்றபடி அந்தக் குரல் தன் நீண்ட உரையாடலை நிறுத்திக் கொண்டது. மீண்டும் நிசப்தம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்