Home » Articles » அமர்நாத் யாத்திரை

 
அமர்நாத் யாத்திரை


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

– அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

பயணம்
சுற்றுலா
யாத்திரை

இந்த மூன்றுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, மூன்றுமே ஓரிடத்திலிருந்து புறப்பட்டு வேறு இடம் சென்று திரும்புவதுதான். ஆனாலும் என்ன வேறுபாடு எனப் பார்ப்போமே!

பயணம்

அன்றாட வாழ்வில் படிப்பு, பணி மற்றும் சில வேலைகளுக்காக சென்று வருவது, விசேடங் களுக்காக வெளியூர் சென்று வருவது போன்றவை பயணமாகும்.

சுற்றுலா

குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒரு சில நாட்கள் முக்கியமான பல இடங்களுக்குச் சென்று வருதல் சுற்றுலா. உள் நாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா என இப்போது மக்கள் பல வகையிலும் மகிழ்கிறார்கள். உணவு, போக்குவரத்து, தங்குமிடம் அனைத்தும் ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு. எவ்வித சிரமமும் இல்லா மல் சென்று, கண்டு மகிழ்வுடன் திரும்புதல்.

யாத்திரை

ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மேற் கொள்ளும் பயணமே யாத்திரையாகும். பெரும் பாலும் பக்தி, கடமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அமைகிறது, பல மத அன்பர் களும், அவரவர் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் சென்று வருவதை யாத்திரை என்று கூறலாம்.

காசி யாத்திரை, கைலாஷ் யாத்திரை, அமர்நாத் யாத்திரை, 12 ஜோதிர்லிங்க யாத்திரை போன்றவைகள் அவற்றுள் சில. யாத்திரை என்பதை புனிதப்பயணம் என்றும் கூறலாம். உணவு, தட்பவெப்பம், தங்குமிடம், போக்குவரத்து இவற்றில் கிடைப்பதை ஏற்றுக் கொள்வதே இந்த யாத்திரைகளின் முக்கியம். சுற்றுலா போல வசதிகளை எதிர்பார்ப்பதில்லை,

காரணம்: நோக்கம் : அதாவது தரிசனம்.

அமர்நாத்

செய்தித்தாள்கள் வாயிலாக பெரும் பாலும் எல்லோருக்குமே அறிமுகமான பெயர் தான் இந்த அமர்நாத். இது ஒரு மலை. காஷ்மீரில் உள்ளது. இந்த மலையின் உயரம் சுமார் 14000′. மலை உச்சியில் குகை போன்றபெரிய திறப்பு (Open SP) உள்ளது. அந்த இடத்தை அடைய படிகள் கட்டியுள்ளனர். அதில் ஒரு மூலையில், மலை மீது உள்ள பனி ஒழுகி லிங்க வடிவில் காட்சியளிக்கிறது. இதுவே அமர்நாத் பனிலிங்கம், இந்துக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் உள்ளார்ந்த புனிதப் பயணத்துக்கான அடிப்படை.

இருப்பிடம்

குகை சுமார் 15′ உயரமும், 90′ நீளமும் உடையது. தரிசனத்துக்கு பக்தர்கள் செல்லும் ஆரம்ப காலத்தில் சுமார் 10′ உயரமுள்ள பனி லிங்கம், படிப்படியாக கரைந்து ஒன்றரை மாத முடிவில் ஓரடியாகிவிடுவதாய் கூறுகின் றனர். ஜம்மு என்பது சாதாரண சம பூமி போன்றது. ஜம்மு வரை ரயில், விமானம், சாலை வழியாக செல்ல முடியும். விமானம் மூலம் ஸ்ரீ நகர் வரையிலும் கூட செல்ல லாம். ஜம்முவிலிருந்து ரயில்பாதை இப்போதைக்கு இல்லை. பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருவழியில் அமர்நாத் செல்லலாம்.

1. பகல்காம் வழி

ஜம்முவிலிருந்து பகல்காம் என்ற இடத்துக்கு 315 கி.மீ. தூரம் சாலை வழியாகச் செல்ல வேண்டும் அல்லது ஸ்ரீ நகருக்கு 294 கி.மீ. சாலை வழி சென்று அங்கிருந்து பகல்காமுக்கு 96 கி.மீ. சாலை மூலம் செல்லலாம். இது சுற்று வழி தான்.

பகல்காமிலிருந்து சந்தன்வாரிக்கு 16 கி.மீ. தூரம் மினி பஸ் மூலம் செல்லலாம். அங்கிருந்து 34 கி.மீ. வாகன வசதி கிடையாது. நடந்து, குதிரை மீது, டோலியில் அமர்ந்து அல்லது ஹெலிகாப்டர் மூலம் அமர்நாத் குகையை அடையலாம். ஹெலிகாப்டர் மூலம் சென்றாலும் சுமார் 6 கி.மீ. நடந்தோ, குதிரை மூலமோ, டோலி மூலமோ தான் குகைக்கு செல்ல வேண்டும்.

சந்தன்வாரியிலிருந்து செஷாங், பஞ்சதரணி, சங்கம் வழியாக சுமார் 32 கி.மீ. தூரம் மலைப்பாதைகளில் மூன்று நாட்கள் அங்கங்கு தங்கி நடந்து செல்ல வேண்டும். அதன்பின் சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் பனி மீது நடந்து சென்று குகையை அடையலாம். பகல்காம் என்றஊர் லிட்டர் என்ற நதிக்கரையில் உள்ளது.

2. பால்டால் வழி

ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகர் வழியாக சாலை மூலம் சுமார் 400 கி.மீ. பயணம் செய்து பால்டால் என்றஇடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து மலைமீது 14 கி.மீ. பயணம்/ (நடை/ குதிரை/ டோலி ஹெலிகாப்டர் மூலம் (6 கி.மீ. தூரம் நடைதான்) செய்து குகையை அடையலாம்.

டோமெயில், பராரிமார்க், சங்கம் என்ற இடங்கள் வழியாக மலைப்பயணம் செல்கிறது.

நாங்கள் பால்டால் சென்று குகைக்கு பயணித்தோம். வழியில் சோனாமார்க் என்றஅழகான பள்ளத்தாக்கைப் பார்த்தோம்.

காஷ்மீர் மாநிலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவர்கள் நம் நாட்டைக் காக்கும் வீரர்கள். அவர்களது கட்டுப்பாட்டில் தான் இக்குகைக் கோவில் உள்ளது.

முன்ஏற்பாடு பயணப்பதிவு

இது மிக முக்கியமான ஒன்று. அமர்நாத் ஸ்ரீஸ்ரைன் போர்டு என்றஅமைப்பில் பயணியாக முதலில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவம் உள்ளது. பெயர், முகவரி, தொடர்பு எண், இரத்த குரூப் முதலியன தெரிவித்து 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்ப வேண்டும். இணைய தளம் மூலமும் பதிவு செய்ய வசதி உண்டு.

பதிவு செய்து 4 பகுதிகள் கொண்ட போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்குகின்றனர். அது அவசியம் தேவை. இல்லாவிட்டால் மலையேறஅனுமதி இல்லை.

ஒவ்வொரு வருடமும் சூலை, ஆகஸ்டு ஆகிய இரு மாதங்களில் சுமார் 40 முதல் 60 நாட்கள் மட்டுமே வழிபாடு அனுமதி உண்டு. மற்ற 10 மாதங்கள் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

ஹெலிகாப்டரில் செல்வதற்கு இணைய தளம் மூலம் முன்னரே பதிவு செய்யலாம். மேகமூட்டம் இல்லாமலிருந்தால் பயணிக்கலாம். இல்லாவிட்டால் சிரமம் தான்.

பவன்ஹான்ஸ் ஹெலிகாப்டர் லிட் என்றமத்திய அரசு நிறுவனம், டெக்கான், குளோபல் வெக்ட்ரா போன்ற தனியார் நிறுவனங்களும் உள்ளன. ஹெலிகாப்டரில் சென்றுவர கட்டணம் சுமார் ரூ.6000 மட்டும். சுமார் 5 நிமிட நேர பயணம்தான். ஆறுபேர் அமர்ந்து செல்லலாம். பால்டாலில் 4 ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டே உள்ளன.

யாத்திரை

ஜம்முவரை இரயிலில் சென்று அங்கிருந்து டூர்பஸ் மூலம் ஸ்ரீ நகர் வழியாக பால்டால் சென்றோம். மலைப்பாதைகள், நம் ஊரில் சுமார் இரண்டரை மணிநேரம் மலைப்பாதையில் ஊட்டி சென்றுள்ளோம். ஆனால் இந்தப்பயணம் சென்று கொண்டே இருக்கவேண்டும். பயணம் ஒரு தொடர் கதை தான். வழியில் ஜவஹர் டனல் என்றசுமார் 3 கி.மீ. நீளமுள்ள மலை குகைக்குள் பயணம் செய்தோம். அதன்பின் குவாஸிகண்ட் என்ற இடத்திலிருந்து ஸ்ரீ நகர் 60 கி.மீ. தூரமும் சமவெளி தான். சாலையின் இருமருங்கும் பச்சை வயல் வெளிகள், மரங்கள், ஒரே பசுமை தான். மிகப்பெரிய பள்ளத் தாக்கு. சுமார் 6000′ உயரத்தில் பல நூற்றுக் கணக்கான சதுர கி.மீ. பரப்பளவுக்கு சமவெளி உள்ளது. அதனால்தான் நமது நாட்டுக்கு அந்நியர் தொந்தரவு தருகின்றனர் என்ற எண்ணம் தோன்றியது.

கல் எறிதல்

காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை யாளர்கள் கல் எறிவதை பத்திரிக்கைகளில் படித்துள்ளோம். நாங்கள் சென்ற பஸ் மீதும் கல் எறிந்தனர். இரு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பெரிய பாதிப்பு இல்லை. ஸ்ரீ நகரில் தால் ஏரிக்கரையில் அஜீஸ் ஓட்டலில் தங்கினோம். தால் ஏரி சுமார் 14 கி.மீ. சுற்றளவு உடையது. ஆயிரக்கணக்கான நீரூற்றுகள் தான் இதன் நீராதாரம்.

அங்கிருந்து பால்டால் என்றமுகாம் சென்றோம்.

பால்டால்

சுற்றிலும் மலை சூழ்ந்த சமவெளிப்பகுதி. வாகனங்கள் ஏராளமாய் நிறுத்தப்பட்டுள்ளன. ஹெலிபேடு உள்ளது. தங்குவதற்கு தற்காலிக டெண்ட்கள் அமைத்துள்ளனர். மழை பெய்தால் ஒழுகாது. மடக்கு டேப் கட்டில், அதன் மீது இரு சிறு மெத்தை, ளஆஉஈன ஒன்று விரிப்பதற்கு மற்றொன்று நாம் போர்த்திக் கொள்வதற்கு. நாள் ஒன்றுக்கு வாடகை ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கின்றனர். கட்டில் இல்லாமல் தரையிலும் விரிப்புடன் வழங்கின்றனர். இங்கு வெந்நீர் பக்கெட் ரூ.20

குளிப்பதற்கு பாத்ரூம், கழிப்பிட வசதி, தற்காலிகமாக, மிக அருகாமையாக, சுகாதார முறை யில் ஏற்பாடு செய்துள்ளனர். உலகத்தமிழ் மாநாடு சமயம் இங்கு வைத்த தற்காலிக கழிப்பிட வசதிகளை வியந்து பார்த்தேன். ஆனால் பல ஆண்டுகளாக பல நாட்களுக்கு இவ்வசதி பால்டாலில் வழங்கப்பட்டு வருவதைப்பார்த்து வியந்தே போனேன்.

உணவு

உணவு அனைத்தும் இலவசம். வீணாக்காமல் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வட இந்திய மாநில பெரு நகரங்களில் உள்ள சேவா மையங்கள் (TRUST) பலவும் இரு மாத காலம் முழுமையான சேவையில் தம்மை இணைத்துக் கொள்கின்றன.

காலை: டீ, காபி, பால், வர்க்கி, ரஸ்க்

டிபன்: பிரெட், பூரி, இட்லி, தோசை, பொங்கல், வடை

மதியம் : ரொட்டி, சப்பாத்தி, பராட்டா, சாதம், சாம்பார், ரசம், தயிர், இனிப்பு வகைகள்

மாலை : திண்பண்டங்கள், டீ, காபி, முதலியன.

இரவு : பலவித இனிப்புகள், ரொட்டி, சப்பாத்தி, பலவித சைடு டிஸ்கள், சாதம் முதலியன; உடன் பாதாம் பால்.

சுமார் 30க்கும் மேற்பட்ட உணவகங்கள் பால்டால் முதல், மலைக்குகை வரை உள்ளன. அன்பான உபசரிப்பு. இது தவிர காஷ்மீர் பள்ளத் தாக்கிலும் ஆங்காங்கே மலைப்பாதைகளிலும் இலவச உணவு வழங்குகின்றனர். இந்த உணவகங் களை லங்கர் (LANGER) என்று கூறுகின்றனர்.

மலைமேல் பயணம்

பெண்கள் உட்பட பலர் குதிரை மீது பயணம் செய்தனர். சிலர் டோலி மூலம் சென்றனர். டோலி கட்டணம் ரூ.8000. குதிரைக் கட்டணம் ரூ. 2600 மேலே செல்ல 5 மணிநேரம். கீழிறங்க 5 மணிநேரம். நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டு சென்றனர். நான் குதிரையில் சென்றேன்.

புதுமையான பயணம். இரு கைகளாலும் குதிரையின் சேணத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரு கால்களையும் வளையத்துக்குள் விட்டு நன்கு உதைத்துக் கொடுத்து உட்கார வேண்டும். இல்லாவிட்டால் குதிரை வேகமாக செல்லும்போது பேலன்ஸ் இன்றி கீழே விழ வாய்ப்புண்டு.

குதிரையை ஒருவர் பிடித்து இழுத்துக் கொண்டு வெகு வேகமாகச் செல்கிறார். போட்டோக்கள் பல எடுத்துக்கொண்டு சுற்றியுள்ள காட்சிகளை ரசித்துச் சென்றேன். வழியில் குதிரை நீர் அருந்த, கொள்ளு சாப்பிட, குதிரை ஆள் டீ குடிக்க என நிறுத்தினார். லங்கரில் 2 ரொட்டி காலை உணவாக சாப்பிட்டேன். வழியில் டோலியில் செல்பவர்களைத் தூக்கிச் செல்பவர்களுக்கே முதலிடம். கரடு, முரடான பாதை, ஏற்ற இறக்கம், பயமான பயணம் தான். ஓர் இறக்கத்தில் இறக்கிவிட்டு நடந்து வருமாறு கூறினர்.

குகைக்கு 1 1/2 கி.மீ. முன் குதிரைப்பயணம் முடிந்தது. பனியில் நடந்துதான் செல்ல வேண்டும். பலர் வழுக்கி விழுந்தனர். பனி நீர் சிறு கால்வாயாக ஓடுகிறது. அதன்மேல் பனிக்கட்டி சுவராக உள்ளது.

குகையை அடைய சோதனை செய்து அனுப்புகின்றனர். கேமரா அனுமதி இல்லை. 80 வயது முதல் 85 வயது வரை உள்ள முதியவர்களும் நடந்து வந்து தரிசிக்கின்றனர். பனி நீர் பாதத்தில் பட்டு வலி வந்தது. பனி லிங்க தரிசனம் மிக அருமையாக இருந்தது. படைவீரர் ஒருவர் பனிநீர் (புனித நீர்) தீர்த்தம் டியூப் வழியாக வழங்குகிறார். பிரசாதமாக பொறி, அவல் தந்தனர். கீழிறங்கிய உடனே மதியம் லங்கரில் பராட்டா, சப்ஜி, சாதம் சாப்பிட்டேன்.

பனியில் நடந்து, குதிரை ஏறி 5 மணிநேரம் பயணித்து பால்டாலை அடைந்தேன். திரும்பும் வழியில் பாதை ஓரம் படு பாதாளம். பார்த்தாலே பயம், விழுந்து விட்டால்… என்றஎண்ணம். தூக்கக்கலக்கம் வேறு. இறங்கி சிறிது தூரம் நடந்தேன்.

மிக அருமையான வாழ்வில் மறக்க முடியாத பயணம். கீழே வந்தவுடன் சுவையான மசால் தோசை ஒன்று சாப்பிட்டேன். இரவில் டென்டில் நல்ல தூக்கம்.

மறுநாள் காலை எழுந்து தயாராகி காலை உணவை மகிழ்வுடன் முடித்து, பஸ் ஏறி பயணத்தைத் தொடர்ந்து நிறைவு செய்தோம்.

பக்தி, நம்பிக்கை, சாகசம் அனைத்தும் இணைந்த ஒரு பயணமாக அமைந்தது. அவரவர் வாழ்க்கை அவரவர் எண்ணங்களின் அடிப் படையில் தான்.

வாழ்க வளமுடன்

 

4 Comments

 1. yogatha says:

  really is very interesting
  we have also get the feeling of visiting amarnath

 2. sundar says:

  டியர் சார்,
  விவரங்கல்க்கு நன்றி.

 3. Suresh Radhakrishnan says:

  நன்றி சார்.பயனுள்ள தகவல்.தனிப்பட்ட முறையில் செல்வது நல்லதா அல்லது சுற்றுலா நபர்களுடன் செல்வது நல்லதா.எவ்வளவு பணம் செலவாகும் என்பது கூறவும்

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்