Home » Articles » மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'

 
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'


மனோகரன் பி.கே
Author:

– பேரா. பி. கே. மனோகரன்

2009ம் ஆண்டிற்கான அனைத்துலக நாடுகளின் ‘மானுட வளர்ச்சி அறிக்கை’ அக்டோபர் மாதம் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை ‘ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டம்’ (UNDP) 1990ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகின்றது. வளர்ச்சியின் அடிப்படையிலான உலக நாடுகளின் ‘ரேங்க்’ பட்டியல் இதில் இடம் பெற்றிருக்கும். சர்வதேச அரங்கில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் நாடு களில் இந்தியா எங்கே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள ஆய்வு மேலிடுவது இயற்கை. அதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு சில அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிடும் முறை குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இன்று வரை ஏற்படவில்லை. ‘எது வளர்ச்சி?’ என்பதற்கான விளக்கம் காலந்தோறும் மாற்றம் பெற்று வருகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘வளர்ச்சி’ என்பது தேசிய வருமானம் என்ற அளவுகோலைக் கொண்டே மதிப்பிடப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக தலாவருமானம் உயர்ந்து விட்டதென்றால் அந்நாடு மேம்பட்ட நிலையில் உள்ளதாக கருதப்பட்டது. எனவே, தேசிய வருமானத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை என்று பொருளியல் அறிஞர்கள் வயுறுத்தி வந்தனர்.

தேசிய வருமானம் என்பது ஒரு வருட காலத்தில் நாட்டின் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைப் பணிகளின் பணமதிப்பாகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையினால் வகுக்கக் கிடைப்பது தனிநபர் வருமானம்.

பல நாடுகளில் தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம் உயர்ந்த போதிலும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. சீரான வளர்ச்சி ஏற்படவில்லை. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி குறைய வில்லை.

இதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஏற்பட்ட வருமான உயர்வு, நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களால் மட்டுமே உருவாகி இருக்கலாம். இது போன்ற சமயங்களில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டினாலும் மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரம் உயராது. எடுத்துக் காட்டக, ரூ.100 சம்பாதிக்கும் ஒருவரையும், ரூ.900 சம்பாதிக்கும் ஒருவரையும் கணக்கில் கொண்டு, ஆளுக்கு ரூ.500 சம்பாதிக்கிறார்கள் என்ற சராசரி கணக்கு உண்மையைப் புலப்படுத்தாது.

‘வளர்ச்சி’ என்பதற்கு சரியானதொரு பொருள் தேடிக்கொண்டிருந்த தருணத்தில், 1976ம் ஆண்டு ‘பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு’ (ஐகஞ) வெளியிட்ட ஒரு அறிக்கையில் ‘அடிப்படை வசதிகளை’ அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே வளர்ச்சி என குறிப்பிடப் பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பாதுகாப்பான குடிநீர், உறைவிட வசதி மற்றும் பொது வாழ்வில் பங்கெடுக்க உரிமை மற்றும் தங்கள் கலாச் சாரத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்கான தடையற்ற வாய்ப்புகள் ஆகியவற்றைஅனைத்து மக்களும் பெறுவதையே அரசுகள் நோக்கமாகக் கொள்ள அந்த அறிக்கை வயுறுத்துகிறது.

இப்படி வளர்ச்சி என்பதன் இலக்கணம் படிப்படியாக மாற்றம் பெற்று வருகையில் 1990ம் ஆண்டு ‘ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டம்’, ‘வளர்ச்சி’ என்பது பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக மட்டும் அல்லாமல் மானுட வளர்ச்சியை உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று ‘மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்’ (Human Development Index) என்றபுதிய அளவுகோலை அறிமுகப்படுத்தியது. இதுதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

மானுட வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவர்களுள் முக்கியமானவர் நோபெல் பரிசுப்பெற்ற பொருளாதார மேதை அன்ர்த்தியாசென். இதற்கு நடைமுறைவடிவம் கொடுத்தவர் ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் தலைவராக விளங்கிய மேகபூப்-உல்-ஹக்.

இந்தக் குறியீட்டெண் கல்வி, சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. இதன் மதிப்பு 0 (பூஜ்ஜியம்) முதல் 1 வரை இருக்கும். பொதுவாக குறியீட்டெண் மதிப்பு இந்த இரண்டு எண்களுக்கு இடைப்பட்டதாகத் தான் இருக்கும். குறியீட்டெண் மதிப்பு எந்த அளவிற்கு 1 என்ற எண்ணை நோக்கி செல்கிறதோ அந்த அளவிற்கு அந்த நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்று பொருள்.

இனி அறிக்கைக்கு வருவோம். 2009 ஆண்டுக்கான மானுட வளர்ச்சி அறிக்கை 2007ம் வருட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் உறுப்பு நாடுகளான 192-ல் 180 நாடுகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. போதிய புள்ளி விவரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் ஏனைய 12 நாடுகள் சேர்க்கப்படவில்லை. கல்வி, சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகியவற்றில் பெற்ற புள்ளிகளைக் கொண்டு உலக நாடுகள் மிக உயர்ந்த, உயர்ந்த, நடுத்தர மற்றும் குறைந்த வளர்ச்சி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 38 நாடுகள் மிக உயர் வளர்ச்சி பட்டியலிம், 55 நாடுகள் உயர் வளர்ச்சி பட்டியலிலும், 75 நாடுகள் நடுத்தர வளர்ச்சி பட்டியலிலும், 24 நாடுகள் குறைந்த வளர்ச்சி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன. முதல் பட்டியலில் உள்ள நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள் எனவும், மீதமுள்ள மூன்று பட்டியலில் உள்ள நாடுகள் வளரும் நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்தியா 0.612 புள்ளிகளை பெற்று நடுத்தர வளர்ச்சிப் பட்டியலில் 134வது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு மேலாக சீனா 0.772 புள்ளிகளைப் பெற்று 92வது இடத்திலும், இலங்கை 0.759 புள்ளிகளைப் பெற்று 102வது இடத்திலும், பூடான் 0.619 புள்ளிகளைப் பெற்று 132வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு கீழாக பாகிஸ்தான் 0.572 புள்ளிகளைப் பெற்று 141வது இடத்திலும், பங்களாதேஷ் 0.543 புள்ளிகளைப் பெற்று 146வது இடத்திலும் உள்ளன.

மிக உயர்ந்த வளர்ச்சிப் பட்டியல் முதல் பத்து இடங்களை முறையே நார்வே, ஆஸ்திரே-யா, ஐஸ்லாந்து, கனடா, அயர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. அமெரிக்கா 13வது இடத்தில் உள்ளது. குறைந்த வளர்ச்சிப் பட்டியல் முசாம்பிக், ஆப்கானிஸ் தான், எத்தோப்பியா போன்ற நாடுகளும் இடம் பெற்றுள்ளன. முதல் நாடாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நார்வேயும் (0.971) கடைக்கோடி நாடாக மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள நைஜிரியாவும் (0.340) உள்ளன.

2008ம் ஆண்டு இந்தியா 0.609 புள்ளிகளைப் பெற்று 132வது இடத்தில் இருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு 0.612 புள்ளி களைப் பெற்றும் 134வது இடத்திற்கு அதாவது இரண்டு இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம் 2008ல் 179 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் 2009ம் ஆண்டு 182 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நாடு களின் எண்ணிக்கை மாறிக் கொண்டே இருப்ப தால் பெற்றுள்ள புள்ளிகள் அதிகமானாலும் ரேங்க் பின்னுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே வளர்ச்சியின் போக்கை அறிய புள்ளி களின் அளவை கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் ரேங்க் பின்னுக்குச் சென்றிருப்பது போல் தோன்றி னாலும் புள்ளிகளின் அடிப்படையில் பார்க்கும் போது முன்னேறிச் சென்றுள்ளதாகவே கொள்ளலாம்.

எனினும் இந்தியா நடுத்தர வளர்ச்சிப் பட்டியல்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வளர்ச்சி அறிக்கையின் புள்ளி விவரங்கள் இந்தியா கல்வி, மருத்துவ வசதி, சுகாதாரம் மற்றும் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மானுட வளர்ச்சியில் உயர் அளவை எட்ட மன உறுதியும் திட்டமிடலும், காலக் கெடுவிற்கு உட்பட்ட முறையிலான அமலாக்கமும், வெளிப்படையான செயல்பாடு களும், கட்டாயத் தேவையாகும். மானுட வளர்ச்சிக்கு உணவுப் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு போன்றவை மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தனிநபர் பாது காப்பில் எங்கோ ஒரு மூலையில் அச்சுறுத்தல் இருந்தாலும் வாழ்க்கை சுமுகமாக அமையாது. அத்தகைய அபாயங்களைப் போக்க சட்டம் ஒழுங்கை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். சரியான பாதையில் சென்று கொண்டிருக் கிறோமா என்பதை ஆண்டுதோறும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா இன்னும் மானுட வளர்ச்சியில் செல்ல வேண்டிய பயணத் தூரம் அதிகமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை அனை வருக்கும் கிடைக்கச் செய்வதே ஒரு நல்ல அரசின் கடமையாகும். தொடர்ந்து அத்தகைய பணிகளை மேற்கொண்டால் மட்டுமே மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment