Home » Articles » ஆத்ம சக்தி (Will Power)

 
ஆத்ம சக்தி (Will Power)


நாகராஜ் ஓ
Author:

– ஓ. நாகராஜ்
பேராசிரியர். பிஷப் அம்ப்ரோல் கல்லூரி, கோவை

இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.

இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதியவைத்துக் கொள்வோம்.

“சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய
என் உள்மனமே
நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை
என் உள்மனதுக்கு உண்டு.
என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை.
நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால்
எதுவும் செய்ய முடியும். என் சக்தி அபாரமானது
அந்த அபார சக்தியால் என்னால்
செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.”

இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறைசொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.

நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.

மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration)

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும். ஒன்றை அடையவேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மனிதனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. நம்மால் எதையும் செய்து முடிக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். மனித சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியானாலும் காரியங்களை செய்து முடிக்க முடியாது.

இந்த சக்தியை தெரிந்து பயன்படுத்தி பலவிதமான சித்துக்களையும் காட்டி மறைந்த பெரியோர்கள், ஞானிகள், சித்தர்கள், நாயன் மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் போன்றவர்கள் எல்லா மதத்திலும் தோன்றி மறைந்து இருக்கிறார்கள்.

இவைகளை தெரிந்தும், படித்தும், கேட்டும் இன்னமும் செயல்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். காரணம் நம்மை நாம் அறியாததே. நமது சக்தியின் தன்மையை நாம் தெரிந்து செயல்பட்டால் இவ்வுலகில் நாம் சுகபோக வாழ்வு வாழலாம். அதற்கு,

 • முதலில் நமது எண்ணங்களை நமக்கு எது தேவையோ அதிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மனதில் வேறு பல எண்ணங்கள் புகவிடாமல் மனம் அலைபாயாமல் – நமது என்ன அலைகளை சிதறவிடாமல் ஒரு பிடியாக நாம் நினைத்த காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
 • ஆத்ம சக்தி என்ற நமது மனோதிட சக்தியை நமது எண்ணம் எதுவோ அதிலேயே இருக்கச் செய்ய வேண்டும்.
 • நமது விருப்பங்களை இடைவிடாமல் ஏற்றத் தாழ்வு இல்லாமல் சமநிலையில் வைராக்கியத்துடன் எண்ணி அதிலேயே ஊன்றி கவனத்தைச் செலுத்தி வரவேண்டும்.
 • நாம் விரும்பும் காரியம் முடியும்வரை அதிலேயே மனதை வைத்து செயல்பட வேண்டும். வேறு சிந்தனை கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதைத் தளரவிடாமல் நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும்.

நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு எண்ணத்தை மனதில் நிறுத்தி தொடர்ந்து அமைதியாவும், அழுத்தமாகவும் அந்த எண்ணத்தை பற்றியே மனதில் தியானத்துக் கொண்டு இருப்பதே மனதை ஒரு நிலைப்படுத்தும் நிலையாகும்.

இந்த மனதை ஒரு நிலைப்படுத்தும் விதத்தைப் பயிற்சிகளினால் தான் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தி நிற்பது கடினம். காரணம் மனதில் ஆயிரக்கணக் கான எண்ணங்களை வைத்துக்கொண்டு நம் சிந்தனையை பல வழிகளிலும் சிதரவிட்டுக் கொண்டு பலவற்றையும் எண்ணிக்கொண்டே இருப்பதுதான்.

நமக்கு எது வேண்டுமோ அந்த எண்ணத்தையே அடிக்கடி மனதில் எண்ணி அதே எண்ணத்தில் விடாப்பிடியாக இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியும்.

உன்னை அறிதல் (Know thyself)

வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனதை ஒரு முக்கியமான கருவியாக எல்லா வகையிலும் நல்லது-கெட்டது இரண்டுக்குமே உபயோகப் படுத்தி வருகிறோம். மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது.

இதில் சில சக்திகள் மிக பலமாக இயங்கும். சில பலவீனமாக இயங்கும். நல்ல சக்தி அலைகள் பலமாக இயங்கும்போது நாம் எடுத்த காரியங்கள் வெற்றி அடைகின்றன.

நமது வாழ்வில் வெற்றி தோல்விகள் இந்த நல்ல கெட்ட சக்திகளின் ஆடுக்கிரமிப்பினால் தான் நமக்கு நடைபெறுகின்றன. இதில் சில நமது எண்ணங்களிலும் சில வெளியில் ஏற்படும் சக்தி களின் செல்வாக்கினாலும் நடைபெற்று விடுகிறது.

நமக்கு அப்பாற்பட்ட சக்தியில் சிக்கிக்கொள்ளும் போது நாம் அதில் இருந்து மீள முடியாது போய்விடுகின்றன. இந்த வெளி சக்திகளை எதிர்த்து எதிர் நீச்சல் போட நாம் நமது சக்திகளை அடுத்தவர்களிடம் பிரயோகிப்பதைவிட முதலில் நமது சக்திகளை நாம் பெருக்கிக்கொண்டால் இந்த வெளி சக்திகளை நாம் சுலபமாய் தடுத்து நம் சக்தியால் நாம் வெற்றியடையலாம்.

திடமனதுடன் நம்மால் முடியும் என செயல்படுத்தினால் ஆகாய சக்தியையும்கூட நம் உதவிக்கு எடுத்துக்கொண்டு நாம் வெற்றி பெறலாம்.

ஆம்! நம் வெற்றிக்கு பின்வரும் 3 விதிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் வெற்றி நமக்குதான்.

1. நம்முடைய மனதில் முதலில் நமக்குத் தேவை என்ன என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

2. நம் மனதில் எடுத்த காரியம் நிச்சயம் முடியும் என திடமான அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும்.

3. நாம் என்ன செய்ய வேண்டி இருக்கிறதோ அதை எப்படி செயல்படுத்தலாம் என திட்டம் போட்டு அதை செயல்படுத்த ஆயத்தப் படுத்திக்கொண்டு மனதில் போட்ட திட்டப் படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம்முடையதே.

இத்தகைய ஆத்ம சக்தியை திடமான மனம் (Will power), ஆழ்ந்த நம்பிக்கை (Faith), இறைவன் பேரில் பரிபூரண நம்பிக்கை வைத்து அவனிடம் சரணடைதல்(Total surrender) , நல்ல எண்ணங்கள் – எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம், நம்முடைய செயல், பேச்சு, கருத்துக்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நம்மிடம் உள்ள சக்திகளை பிரயோகித்து நிச்சயம் வெற்றியடையலாம்.

 

7 Comments

 1. arun says:

  superb…..

 2. mohan says:

  very much useful sir

 3. SURESH says:

  Maruka,maraika mudiyatha unmai!
  simply superb…

 4. a jayahraman says:

  very very usefull

Post a Comment