Home » Articles » பேச்சு வாழ்வின் மூச்சு

 
பேச்சு வாழ்வின் மூச்சு


admin
Author:

பேச்சு – இறைவனின் பரிசு

‘பேச்சு’ இறைவன் மனிதனுக்களித்த அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுவது பேச்சுதான். மிருகங்கள் பேசாமல் வாழ முடியும். ஆனால் மனிதர்கள் பேசினால்தான் வாழ முடியும். நாக்கும் அதிலிருந்து வெளிப்படும் வாக்கும் இருபெரும் செல்வங்கள்.

சமுதாய வாழ்க்கையின் அஸ்திவாரம் பேச்சு. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு வாழ்வின் உயிர் மூச்சு. மூச்சு உள்ளவரை பேச்சு இருக்கும். பேச்சு இல்லையென்றால் மூச்சு நின்று விட்டதற்கு ஒப்பாகும்.

பேச்சு என்பது ஒரு மாபெரும் கலை. வாழ்விற்கு வேண்டிய அடிப்படையான அரிய கலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கின்ற வல்லமை பேச்சுக்கலைக்கு உண்டு. இது கல்லாதவரையும் கற்றவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்புக் கலை.

பேச்சின் பேராற்றல்

பேச்சுக்குப் பேராற்றல் உண்டு. அந்த பேராற்றலால் அகிலத்தையே புரட்டிப் போட்ட வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். சிறந்த பேச்சு கோழையையும் வீரனாக்கும். நயவஞ்சகர் களையும் நல்லவர்களாக்கும், தேசவிரோதி களையும் தேசபக்தர்களாக்கும்.

‘சிறப்பாகப் பேசுவோர் பிறரைக் காட்டிலும் வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிச் செல்கின்றனர்’. வெற்றி பெற விரும்பினால் பேசுவதை கலையாகக் கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்வைத் தொலைத்தோர் ஏராளம்.

பயனில்லாத சொற்களை சொல்லக் கூடாது. “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்” என்கிறார் வள்ளுவர். பயன் இல்லாத சொற்களால் பிறரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இகழ்ச்சிக்கு உள்ளாகக்கூடும்.

பேசும் மொழிநடைகளைப் போலவே உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் முக்கிய மானது. வார்த்தைகளின் பயன்பாட்டிலும், அதன் உச்சரிப்பிலும் கவனக்குறைவாக இருந்தால் கருத்து வேறுபாடுகளும், கசப்புணர்வும் ஏற்பட்டு நட்டமும் தோல்வியும் ஏற்பட வாய்ப்புண்டு. வெளிப்படுத்தும் வார்த்தைகள் அவருடைய அறிவுக்கூர்மை, ஒழுக்கத்தரம் போன்றவற்றை வெளிப்படுத்தும்.

மாட்டுக்கு பல்லைப் பிடிச்சுப் பார்க்கணும், மனிதனுக்கு சொல்லைப் பிடிச்சுப் பார்க்கணும் என்பது பழமொழி. சொல் மிகப் பெரிய தாக்கத்தையும், வலிமையையும் தரக்கூடியவை. சொல்லால் யுத்தத்தையும் தொடங்க முடியும், அமைதியையும் உண்டாக்க முடியும்.

பிறரோடு நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகள் பூப்போன்றவை. தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மாலையாகும். நமக்கு மதிப்பு கிடைக்கும். வார்த்தைகளை கட்டுப் படுத்தி விட்டால் வாழ்வில் வெற்றிகரமான இணக்கம் நிலவும். எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லும் போது வள்ளுவர் ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறார்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது உங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டினால், ‘அடடா, நல்ல வேளை நீங்கள் சொன்னீர்கள், இதுவரை நான் கவனிக்கவே இல்லை, உங்களுக்கு மிக்க நன்றி’ என்று சொன்னால் சுட்டிக் காட்டியவரே ‘அதனாலென்ன, பரவாயில்லை’ என்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான் வார்த்தைகளின் வலிமை.

சொற் பிரயோகம்

யுத்தத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைவிட பயங்கரமான ஆயுதம் நாக்கு. அதனால்தான் ‘யாகாவராயினும் நாகாக்க’ என்று கூறி நாக்கை அடக்கிய மனிதனே மாமனிதன் என்கிறார் வள்ளுவர். “பேசாத மொழி உன் கையிலிருக்கும் வாள். பேசிய மொழி உன் எதிரிக்கு நீ கொடுத்த வாள்”. நாவிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லையும் மனதில் சற்று நேரம் நிறுத்தி, கேட்பவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று ஆராய்ந்து தெளிந்த பின்னரே வார்த்தையை வெளியிட வேண்டும். இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும்.

நாவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திட முடியாமல், தங்களை நாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்திருப்பவர்கள், வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். அவமானமும் அமைதி யின்மையுமே அவர்களை வந்தடையும்.

வேலையின்றி கெட்டியாகப் பேசுவோ ரிடம் தவறான சொற்பிரயோகத்தின் பாதிப்பை அதிகம் காணலாம். இவர்களின் குதர்க்கமான வார்த்தைப் பிரயோகங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும். ஆக்கபூர்வ சிந்தனையும், அதிக வேலைப் பளுவும் கொண்டவர்களை ஒருவர் ஜாடை யாக, குத்தலாக வார்த்தைகளைப் பிரயோகித்தாலும், அதிலுள்ள தவறான அர்த்தத்தை ஒதுக்கித் தள்ளி விட்டு அவரோடு சகஜமாக கலந்துரையாடும் அழகைப் பார்க்க முடியும். இத்தகை யோரிடம் அனர்த்தமான வார்த்தைகள் கூட அவற்றின் குறைகள் நீக்கப்பட்டு அர்த்தமுள்ள தாகி விடுகின்றன. கசப் பான சொற்பிரயோகம் தங்கள் மனதை பாதிக்கா வண்ணம் கையாளும் இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது.

கட்டுப்பாடு

பேச்சு சிந்தனையின் ஒரு பகுதி. அதனால் எதை யாரிடம் பேசுவது, எதை எவரிடம் பேசக் கூடாது என்பதைப் பகுத்தறிந்து பேச்சைக் கட்டுப் பாட்டிற்குள் வைக்க வேண்டும். ‘கால் இடறிவிடுவதால் ஏற்படும் காயத்தை விட நாக்கு இடறிவிட்டால் ஏற்படும் காயம் அதிகம்’ என்பதை மறந்து விடக்கூடாது.

பேச்சை அளவறிந்து பேசவேண்டும். தேவைக்கு அதிகமாகப் பேசினால் நன்மைக்கு பதிலாக தீமையே ஏற்படும். அதிகமாகச் பேசப் பேச பொய் பேச வேண்டி வரும். இல்லாத செய்தியை இருப்பதாக கூறுவதுதான் தவறான பேச்சு. தவறான பேச்சினால் உங்கள் தரம் தாழ்ந்து போகும்.

சிறந்த பேச்சாற்றலுக்கு வழிமுறை

யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எல்லோரும் சிறந்த பேச்சாளராக முடியாது. சிறந்த பேச்சாளராக சிறிய நிகழ்விலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 • பேசவிருக்கும் இடத்திற்கு பழக்கப் பட்டவர்களாக மாறவேண்டும். அதாவது கூட்டம் நடைபெற உள்ள அரங்கிற்கு முன்னதாகச் சென்று அந்த அரங்கையும், ஒலிபெருக்கி உள்ள இடத்தையும், கூட்டத்தினர் அமரும் இடத்தையும் ஒருமுறை நேரில் பார்த்து அந்த இடத்திற்கு பரிச்சயமாவது நல்லது.
 • கூட்டத்திற்கு தெரிந்தவர்கள் வந்திருந்தால் அவர்களோடு சற்று நேரம் உரையாடலாம். காரணம் முற்றிலும் அறிமுகமே இல்லாதவர்கள் மத்தியில் பேசுவதை விட தெரிந்தவர்கள் மத்தியில் பேசுவது எளிதாக இருக்கும்.
 • எந்த தலைப்பில் பேசவிருக்கிறோம் என்பது பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும், ஓரளவு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பேச்சை எப்படி தொடங்குவது என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பேச்சை ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே பேச்சாளரைப் பற்றி கூட்டத்தினர் ஒரு முடிவுக்கு வந்து விடுவர்.
 • பேசும்போது நடுக்கம் இருந்தாலும் ‘நடுக்க மாக இருக்கிறது’ என்று வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. பல நேரங்களில் உங்கள் நடுக்கம் உங்களுக்கு பெரிதாக தெரியும், கூட்டத்தினர் உங்கள் அளவிற்கு அதனை உணர வாய்ப்பில்லை.
 • ஒவ்வொரு முறை பேசும் போதும் கிடைக்கும் அனுபவத்தின் காரணமாக அடுத்தடுத்த முறை தைரியமாக பேசவும், சிறப்பாக பேசவும் முடியும்.
 • குறிப்பெடுக்க கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். யார் ஒருவர் தயாரிப்பதில் தோல்வி அடைகிறாரோ அவர் தோல்விக்கு தயாராகிறார் என்று பொருள்.
 • பேச்சினூடே எழும் தேவையற்ற ஓசைகள் (அதாவது அடிக்கடி இருமுவது, கணைப்பது, எச்சில் சத்தம்) கேட்போரை முகம் சுளிக்க வைக்கும். இதனை தவிர்க்க வேண்டும்.

மனப்பாடம் செய்து பேசக்கூடாது. அப்படிச் செய்தால் மனப்பாடம் செய்த வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வருவதில்தான் கவனம் இருக்குமே ஒழிய கருத்துக்களை கொண்டு வர இயலாது. இம்முறையில் ஆங்காங்கே தடைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

உரையை அப்படியே வாசிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. பட்டமளிப்பு விழா உரைகளின் போது இதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். இயல்பாகப் பேசினால் உரிய இடத்தில் தானாகவே நிறுத்தம் ஏற்பட்டு விடும். படிக்க ஆரம்பித்தால் வேண்டிய இடத்தில் நிறுத்தம் இல்லாமல் உரை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் உதிரிப்பூக்களாக வெளிப்படும்.

உரையை வாசிப்பது வேறு, அதை பேசுவது வேறு. வாசிக்கப்படும் உரையில் மிகவும் சம்பிரதாயமான வார்த்தைகள் பயன்படுத்தப் படும். அத்தகைய பேச்சு அந்நியப்பட்டு இருக்கும். பேச்சாளர் கூட்டத்தினரை பார்த்துப் பேசாத போது செய்தி அவர்களை சென்றடை யாது. பார்த்து படிக்கும்போது கூட்டத்தினரை பார்க்க முடியாது. பார்வை முழுக்க எழுதி வைத்த உரையில்தான் இருக்கும். கூட்டத்தினரை பார்த்துக் கொண்டே படிப்பதற்கு மிகுந்த பயிற்சி தேவை.

ஒருவரின் உடை, தோற்றம் போன்றவற்றை விடவும் அவரது வார்த்தைதான் அவரது மதிப்பை உயர்த்தும். அடுத்தவர் இதயத்தை வெல்ல வேண்டுமானால் பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வர வேண்டும். நன்றாகப் பேசுவதற்கு நமக்கு பரந்த அறிவு தேவை. பலவற்றைப் பற்றி கொஞ்சமாவது அறிந்திருப்பதும், நமது துறையில் சிறப்பான திறன் பெற்றிருப்பதும் மிக மிக முக்கியம்.

வெறும் அறிவும் ஞானமும் இருந்தால் மட்டும் போதாது. பேசிப் பேசி நல்ல பயிற்சி இருந்தால்தான் அறிந்தவற்றைபேசவும் முடியும். யோசிக்காமல் பேசக்கூடாது. எதைப் பேச வேண்டுமோ அதில் தெளிவான கருத்துகளும், எளிமையான நடையும் துல்லியமான விசயங்களும் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரியவை பற்றி பேசுவதை எப்போதுமே தவிர்த்து விட வேண்டும். பொறுமையும் மற்றவர் பேசுவதை கவனிப்பதும் நாம் சிறப்பாகப் பேச உதவும்.

குரலும், தொனியும் இயல்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உரையை மேடையில் வாசிப்பதற்கு முன்பாக தனிமையில் ஒருமுறை உரக்க வாசித்துப் பார்க்க வேண்டும். எழுதும் போது எளிதாக உள்ள சொற்கள் பேசும் போது நம்மை தடுமாறவைத்து விடும்.

உரையை வாசிக்கையில் அங்க அசைவு களை சிறைபடுத்தப்படுவதால் உடல் பேசும் மொழி இல்லாமல் வாய் பேச்சின் மூலமாக மட்டும் புரியவைப்பது கடினம். மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கடினமான அரிய வார்த்தைகளைக் கையாளக் கூடாது. எவ்வளவு முக்கியமோ அவ்வளவு எளிமையாக இருக்க வேண்டும். பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் ஒதுங்கி இருத்தலே நல்லது.

ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். என்ன சொல்லப் போகிறோம் என்று முதலில் சொல்லுங்கள். அதனைத் தொடர்ந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள். கடைசியில் என்ன சொன்னீர்கள் என்பதை சுருக்கிச் சொல்லுங்கள்.

நிறைவாக…

புத்தகத்தில் இருப்பதை படித்து புரிந்து கொள்ள படிப்பறிவு வேண்டும். பேச்சைப் புரிந்து கொள்ள காது கொடுத்து கேட்டால் போதும். பேச்சு என்பது மாபெரும் கூட்டத்தில் பேசுவது என்பது மட்டும் அல்ல. நண்பர்கள் மத்தியில், குடும்பத்தினர் மத்தியில் பேசுவதும் பேச்சுதான். எனவே அதிலும் கவனம் தேவை.

“பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம்” என்று சொல்வார்கள். மகான்கள் எல்லாம் தேவைக்கு மட்டும்தான் பேசுவார்கள். மற்றநேரங்களில் மவுனமாக இருப்பதையே விரும்புவார்கள். தேவையினை கருதி மிக ரத்தின சுருக்கமாக பேசுவார்கள்.

சில நேரங்களில் பேசாமல் அமைதியாக இருந்து விடுதல் பேச்சைக் காட்டிலும் ஆற்றல் மிக்கது ஆகும். ஒரு சொல் போதுமான இடத்தில் இரு சொற்களைச் செலவு செய்யத் தேவை யில்லை. மௌனம் அழகான மொழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’. ‘தானத்தில் சிறந்தது நிதானம்’ என்பார்கள். நிதானப் பேச்சானது பேசுபவர், கேட்பவர் ஆகிய இருவருக்கும் நன்மைகளை உண்டாக்கும். குழப்பம் இருக்காது. அது அறிவை வளர்க்கும், அத்துடன் அறிவையும் பெருக்கும்.

போராட்டங்களும், வன்முறைகளும் மிகுந்து விட்ட இந்தக் காலத்தில் மனங்களை இணைக்கப் பாலமாக பேச்சு விளங்குகிறது. இனிமையான பேச்சு வாழ்வில் மேன்மையைத் தரும். யாரையும் தரக் குறைவாகப் பேசக்கூடாது. கனிவாகப் பேசினால் காரியம் கைகூடும். கருணையுடனும் பேசினால் கடவுள் கை கொடுப்பார்.

மென்மையான பேச்சு மேன்மைதரும், தெளிவான பேச்சு சிறப்பைத் தரும், அன்பான பேச்சு அழியாப் புகழைத் தரும். அடுத்தவர் பேச வாய்ப்பளித்துப் பேசுங்கள். உங்கள் மதிப்பு ஒருபடி உயரும், பயமின்றிப் பேசுங்கள் தெளிவான சிந்தனை பிறக்கும், கனிவாகப் பேசுங்கள் – காரியம் கைகூடும். இனிமையாகப் பேசுங்கள் – பிறர் மனம்

உங்கள் வசப்படும். வெற்றி உங்கள் பேச்சில்தான் ஒளிந்திருக்கிறது.


Share
 

4 Comments

 1. rajkumar says:

  i am very happy,because i learned so many matters,

 2. M.J. SYEDABDULRAHMAN says:

  ஐயா.மனோகரன் சிறப்பாஹ ஸ்பீச் ங்க
  நல்லவிசயங்கள் நயம்பட உரைத்ட்டர் தன்னம்பிகை முலமாக
  இரண்டு தாடை கு நடுவில் உள்ளதையும்
  இரண்டு துடைகலுஇக் கு நடுவில் உள்ளதையும் அளவு அறிந்து தாங்கள் உரைத்தது போல உரிய நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்வைத் தொலைத்தோர் ஏராளம் என்ற அடிகள் சிறப்பானவை
  மேலும் சொல்லுங்க சார்

  நன்றி சார், சிறப்பு

 3. madasamy says:

  super

  No line to write and no word to speak about this article super .
  Please continue thank u , anbudan madasamy

 4. […] those who can read Tamil, here is an interesting blog on the importance of speech: http://thannambikkai.org/2009/04/01/2332/ […]

 5. VINOTH says:

  நிதானமாக பேசுங்கள் என்பவையும் சுருக்கமாக பேசுங்கள் மற்றும் மனப்பாடம் செய்தல்களை விட்டு விடுங்கள் என்பவையும் மிக தெளிவானது…மிக்க நன்றி …

Post a Comment


 

 


April 2009

தன்னம்பிக்கை
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிச்சக்கரம்
தன்னம்பிக்கை
வானம் வசப்படும்
அச்சீவர்ஸ் அவென்யூ
‘வறுமை’ என்றும் தடையல்ல!
'வறுமை' என்றும் தடையல்ல!
நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
நன்னம்பிக்கைதாங்க தன்னம்பிக்கை
தோல்விக்கு நன்றி சொல்!
பேச்சு வாழ்வின் மூச்சு
இங்கு… இவர்… இப்படி…
நம்பிக்கையே வாழ்க்கை
நினைவாற்றலில் இணையற்ற இருவர்
உடலினை உறுதி செய்!
உன்னதமாய் வாழ்வோம்!
மனிதா! மனிதா!!
எண்ணம் வெற்றியின் பிம்பம்
வெற்றிப் படிக்கட்டுகள்
வாய்ப்பை உருவாக்கு! வாழ்க்கையை வளமாக்கு!!