Home » Articles » மனிதா..! மனிதா..!

 
மனிதா..! மனிதா..!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இளமை ததும்பும் இந்திய நாடு

இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன். மனித நேயம் செழித்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

உலக மக்கள் தொகை சுமார் 650 கோடி. நம் இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 106 கோடி. இதில் இளைஞர்கள் சுமார் 70 கோடி பேர்.

பருவம் மூன்று

நமது வாழ்க்கையை உடல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொரு வரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கிய மானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாததால் தான் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று பாடினர். உழைக்க முடியாத பருவம்.

ஆனால் குழந்தை தொழிலாளர்கள் இங்கு இல்லையெனப் பல வணிக நிறுவனங்களில் எழுதி வைத்துள்ளதைப் பார்க்கிறோம். தேவை யின் காரணமாக குழந்தைகளும் வேலை செய்ய அனுப்பப்படுகின்றனர் என்பது இதனால் தெரிகிறது.

உலகில் மனித இனத்தின் சராசரி வயது சுமார் 75 வருடங்கள். இந்தியாவில் இது 70 தான். முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தி யின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

ததும்பும் இளமை

உடலாலும் மனதாலும் மற்றவர்களைச் சாராமல் இயங்கும் நிலை, எவ்விதமான கடின உழைப்புக்கும் தயாரான உடல்நிலை மற்றும் புதிய சிந்தனைகளின் பிறப்பிடமான மனநிலை யுள்ள பருவம். வாழ்க்கையின் பலம் நம்பிக்கை என்றால் நாட்டின் பலம் இளைஞர்கள்தான். இந்தப் பருவத்தில் குறைவான வாழ்க்கை அனுபவங்கள்தான் இருக்கும். தன்னம்பிக்கை யின் தனித்தன்மையுள்ள பருவம் இது. குழந்தைகள் மற்றும் முதியோர்களைப் பராமரிக்கும் பருவம் இது.

ஒரு நாட்டில் எந்த அளவு இளைஞர்கள் இருக்கிறார்களோ, அந்த அளவு முன்னேற்றம் இருக்கும். சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டு கிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் நம் இந்திய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத் துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள்.

உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கவுரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம் வீடுகளில் உள்ளது.

சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமை யுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கை யுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

நம் பாரத நாடு

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” இது பாரதி வாக்கு. நம் நாட்டின் இரு கண்கள் போன்றவை உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும், தொழில்களின் அடிப்படையில் ஜாதிகளை உண்டாக்கினர் நம் முன்னோர். பெரும்பாலான மக்கள் தம் குடும்பத் தொழிலில் ஈடுபட்டனர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பல புதிய தொழில்கள், இயந்திரம் சார்ந்தவை உண்டாக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவிலும் பிரதமர் நேரு அவர்கள் பல பெரிய தொழில்கள் துவங்க காரணமாயிருந்தார்.

நம் நாட்டின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வண்ணம் தொழில்கள் பரவலாக்கப்பட்டன. “ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது” என்ற அனுபவ மொழிதான் இன்றும் அரங்கில் உள்ளது. படித்ததற்கும் பார்க்கின்றவேலைக்கும் தொடர்பே இருக்காது. நமது இளைஞர்களின் திறமை, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு இவை களை அறிந்து கொண்ட பல சர்வதேச நிறுவனங்கள் எந்தப் படிப்பாயிருந்தாலும், தேர்வு செய்து பயிற்சி மூலம் தங்களுக்குரியவர் களாக பண்படுத்துகின்றன.

விவசாயத்தில் பல புதுமையான கருவி களைப் பயன்படுத்தி, உணவு தானிய விளைச்சலில் தன்னிறைவை அடைந்துள்ளோம். நெசவுத் தொழிலில் உலக நாடுகளுக்கு சவால் விடுமளவு புதுமைகளை ஏற்றுக்கொண்டு உற்பத்தி செய்கிறோம். பல நாடுகட்கும் சென்று மில்களை நிறுவி உற்பத்தியும் செய்து தருகிறோம்.

ஜாதி இரண்டு ஒழிய வேறில்லை

ஆண், பெண் ஜாதியென்றார் பாரதி. ஆனால் இங்கு நாம் பார்க்கும் ஜாதி கருத்தல் உழைப்போர், கரத்தால் உழைப்போர் என்பதைத்தான். கருத்தால் உழைப்பவர்கள் அறிவாற்றலால், சிந்தனைத் திறத்தால் பணி புரிந்து அதிக ஊதியம் பெறுகின்றனர். படிப்பறி வின்றி ஒரு தொழிலை கற்றுக் கொண்டவர்கள், நிர்ப்பந்தத்தால் ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டவர்களைக் கரத்தால் உழைப்பவர்கள் என்று கூறுகிறோம். இவர்களது ஊதியம் குறைவுதான். ஆனால் இந்த இரு ஜாதியினருக்கும் வெளிநாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

உள்நாட்டில் நிலைமை வேறுவிதமாய் உள்ளது. படித்துப் பட்டம் பெற்றவர்கள் பலர் வேலை தேடிக் கொண்டுள்ளனர். சிலர் குறைந்த சம்பளத்தில் பணி புரிகின்றனர். தொழிலாளர் களுக்கு பஞ்சம் உண்டாகி விட்டது. அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து தங்கவைத்து, உணவு வழங்கி, வேலை கொடுத்து சம்பளமும் தருகின்றனர். பல சமயங்களில் தொழிலாளர்கள் அதிக வருவாய் பெறும் நிலை உள்ளது.

பார் போற்றும் பெண்கள்

ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை காணீர் என்பதற்கேற்ப சமீப காலங்களில் மாணவர் களை விட மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் பலதரப்பட்ட பணிகளையும் பெறுகின்றனர். உடல்வாகுப்படி ஒரு சில கடினமான பணிகள் தவிர எஞ்சிய எல்லாப் பணிகளையும் பார்க்கும் தகுதியும் திறமையும் நிறைந்தவர்களாகவே உள்ளனர். குறிப்பாக நம் நாட்டில் பெண்கள் பணிக்குச் சென்று ஊதியம் பெற்று குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகின்றனர். குடும்பப் பணிகளைச் செய்கின்றனர். குழந்தை பெறும் பணியும் அவர்களுக்கே. பல வகையிலேயும் இன்று பெண்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அச்சாணியாக உயர்ந்துள்ளனர்.

இன்றைய நிலை

ஆரம்பத்தில் கடுமையான உடல் உழைப்பு மட்டுமே இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தான் ஒயிட் காலர் (White Collar Job) பணிகள் உருவாக்கப்பட்டன. இப்பணியால் மாதம் ஒருமுறை ஊதியம் பெறும் நிரந்தரத் தன்மை உண்டானது. விவசாயம், நெசவுத் தொழிலில் நிரந்தர வருமானம் எதிர்பாராத போது, இதுபோன்றபணிகளால் நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டது. மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பும் இருந்ததால் இவர்கட்கு மக்களிடம் தனி செல்வாக்கு உருவானது. எனவே, அவர்கள் தனி ஒரு ஜாதியாக உருவாகி விட்டனர். தங்கள் வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழிகாட்டி, தொடர்ந்து அது போன்றபணிகளைப் பெற உதவினர், உதவுகின்றனர்.

சுதந்திர இந்தியாவில், இந்நிலையை மாற்றவேண்டுமென்றநோக்கில், சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் இது போன்றபணிகளைப் பெறவேண்டுமென அரசியல் நிர்ணய சட்டத்திலேயே இட ஒதுக்கீடு (Reservation) கொண்டு வரப்பட்டது.

எனவே, இன்று ஜாதி, மத பேதமின்றி அரசு மற்றும் தனியார் பணிகளில் இளைஞர்கள் பொறுப்பேற்றுச் செயல்படும் நிலை தொடர்கிறது.

தேவையான மாற்றம்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும்… வளர்ப்பு நட்பு இவற்றால்தான். இன்றைய இளைய தலைமுறைஒரு சில மாற்றங்களைச் செயல்படுத்தினால் உலக அரங்கில் நம் பலம் மேலும் ஓங்கும்.

தமது பெற்றோரின் வருமானத்தை அறிந்து அதற்கேற்ப சிரமம் கொடுக்காதவாறு படிக்கவும் செலவின் சிக்கனமும், பண்பாட்டில் பிடிப்பும் கட்டாயம் வேண்டும். தாய் மொழியில் உரையாடும் துணிச்சல் தேவை. தமிழ்நாட்டில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த இருவர் கூட ஆங்கிலத்தில் உரையாடுவது வருத்தமளிக்கிறது. மொழி என்பது கருத்தொடராக வருவதால் தான், தாய்மொழி எனக் கூறப்படுகிறது. தாய்மொழியில் உரையாடினால் மற்றவர்கட்கு புரியாது என்ற நிலையில் பிறமொழியில் பேசுவதை வழக்கமாய் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அம்மாவின் சகோதரனை – மாமா என்றும், சகோதரியை சின்னம்மா என்றும், அப்பாவின் சகோதரனை சித்தப்பா என்றும், சகோதரியை அத்தை என்றும் பல உறவுப் பெயர்களில் அழைக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் ஆண்டி (Aunty) என்றும் அங்கிள் (Uncle) என்றும் எல்லோரையும் அழைக்கின்றோம்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்
மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”
என்ற பாரதி வாக்கு உண்மையே.

தாய் வழி வாழ்க்கை வாழும் நம் இளைஞர்கள் தாய் மொழியிலேயே பேச விரும்ப வேண்டும்.

மழை வெள்ளம் சேதப்படுத்தாமலிருக்க அணை கட்டி தேக்கி வைத்து முறையாகப் பயன் படுத்துவது போல், இளைஞர் பலம் விரையமாகாமல், மேல் நாட்டு பண்பாடற்ற கலாச்சாரத்துக்கு அடிமையாகாமல் இருக்க கல்வி நிறுவனங்கள் பாடங்களைப் போதிப்ப துடன் நல்ல பழக்கங்களையும் ஒழுக்கமான வாழ்க்கை நெறிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

உலக நாடுகளில் நம் நாட்டு இளைஞர் பலம் ஒப்புவகை இல்லாதது. கடந்து வந்த பாதையை அடிக்கடி நினைவுகூர்ந்து, இன்றைய நல்ல நிலையில் மற்றவர்கட்கு இயன்றஅளவு உதவும் அன்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெருமைப்பட வேண்டிய செய்தி.

பெற்றோர்களும் தம் வீட்டு இளைஞர்கட்கு நல்ல வழிகாட்டி, சரியான பாதையில் பயணத்தை தொடரச் செய்ய வேண்டும். இன்றைய சிறார்கள் தான் நாளைய இளைஞர்கள் என்பதால் அவர்கட்கு நல்ல பழக்கங்களை கற்பிப்போம். இதற்கு இயற்கை வளமும் துணையாக இருப்பதை இனி பார்ப்போம். வாழ்க வளமுடன்.

– தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்