Home » Articles » சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?

 
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?


மனோகரன் பி.கே
Author:

நிதி நெருக்கடி தொடர்பான பரபரப்புச் செய்திகள் அன்றாடம் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி விண்ணைத் தொட்ட அமெரிக்க நிதி நிறுவனங்கள் இன்று மண்ணைக் கவ்வி நிற்கின்றன. அமெரிக்காவில் ஆரம்பித்து இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைக் கும் நிதி நெருக்கடியிலிருந்து மீள வழி தெரியா மல் நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சனை இன்று நேற்று தோன்றியது அல்ல. 1990ன் பிற்பகுதியிலேயே தொடங்கி விட்டன. அப்போது அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிறமுனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும், பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடனை தாராளமாக வழங்கத் தொடங்கின. 2001ல் “ஆகா, ஓகோ” என்று எதிர்பார்க்கப்பட்ட டாட்காம் நிறுவனங்களின் தோல்வியால் பல முதலீட்டு நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின. அதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் செப்டம்பர் – 11 இரட்டை கோபுர தாக்குதலால் அமெரிக்க பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சென்றது.

பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்க வட்டி விகிதத்தை 3.5% -லிருந்து 1%க்கு குறைந்தது அமெரிக்க ரிசர்வ் வங்கி, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக இதே வட்டி வீதம் தொடர்ந்தது. குறைந்த வட்டி என்பதால் வீட்டுக்கடன் வாங்குவது அசுர வேகத்தில் உயர்ந்தது. இங்குதான் ஆரம்பித்தது பிரச்சû.ன “சப்-பிரைம்” (நன்க்ஷ-ல்ழ்ண்ம்ங்) அடமானம் என்னும் தகுதியில்லாத நபர்களுக்கு பெரிய அளவில் வழங்கப்பட்ட வீட்டு அடமானக் கடன்கள்தான் நிதி நெருக்கடிக்கு மூலகாரணம்.

அமெரிக்க வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் வீட்டுக் கடன், அடமானக் கடன் கொடுக்க ஆரம்பித்தன. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதை கருத்தில் கொள்ளாமல் கொடுத்த பணத்துக்கு பிணைய மாக வீடு இருக்கிறதே என்ற தைரியத்தில் பணத்தை வாரி வாரி இறைத்தன. எல்லோரும் வீடு வாங்க ஆரம்பித்ததும் வீடு, வீட்டுமனை ஆகியவற்றின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்தது. வங்கிகள் மகிழ்ச்சி அடைந்தன.

ரியல் எஸ்டேட் தொழிலில் அளவுக்கு அதிகமான வளர்ச்சியும், வீடுகளின் விலைகளில் எண்ணிப் பார்க்க முடியாத உயர்வும் ஏற்பட்டன. இந்தச் செயற்கையான வளர்ச்சி வெகு காலம் தொடரவில்லை. உயர்ந்து கொண்டே சென்றவீட்டு விலை ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டது. ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. அத்துடன் வேறு சில காரணங்களால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு அதிகப்படியான வேலை இழப்புக்கு வழிகோலியது. வருமானம் குறைந்ததால் பலபேர் வீட்டுக் கடன்களின் தவணைகளை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தவணைக் கட்டாதவர்களின் வீடுகளை கடன் கொடுத்த வங்கிகளால் கையகப்படுத்த முடிந்ததே தவிர அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. வாங்குவதற்கும் ஆள் இல்லை.

வீடு விலை சரியத் தொடங்கியதும், வீட்டுக்கடன் வாங்கியோர் வீட்டுச் சாவியை கடன் கொடுத்த வங்கியில் கொடுத்துவிட்டு ஆளை விட்டால் போதும் என்று போய் விட்டனர். ஏறக்குறைய 40% வரை விலை சரிந்ததால் வீட்டின் மார்க்கெட் மதிப்பு வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை பாக்கிக்கும் குறைவாக சென்று விட்டது. சுமார் 20 லட்சம் பேர் இந்த ரீதியில் வெளியேற, அந்த வீடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றுத் தெரியாமல் விழிக்க ஆரம்பித்தன வங்கிகள்.

வங்கிகள் தாங்கள் கொடுத்திருந்த கடன் களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப்பணம் தடைபட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு இந்த வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு முதலீடு செய்திருந்த நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின.

இதன் தொடர்விளைவாக இந்த நிதி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள், தங்களது முதலீடு மதிப்பிழந்ததால் நட்டமடைந்தனர். இது அமெரிக்கா முழுவதும் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது.

அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக் காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொருளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கொஞ்சமும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாது என்கிறமுடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தானே நிதி நெருக்கடி, மற்ற நாடுகளுக்கு என்ன பிரச்சனை என்று எண்ணத் தோன்றும். ஆனால் பிரச்சனை இருக்கிறது. அதாவது அமெரிக்க நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. நிதி நெருக்கடியின் காரணமாக இந்த நிறுவனங்கள் அந்த முதலீடுகளை எடுக்க ஆரம்பித்தால், அங்குள்ள பங்குச்சந்தைகளின் நிலை அதோ கதிதான். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த நிறுவனங்கள் செய்திருந்த முதலீட்டை இந்த ஆண்டு ஜனவரி முதலே திரும்பப் பெறத் தொடங்கி விட்டன.

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் பீதி அடைந்துள்ள இந்திய மக்கள், இந்திய வங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம், அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் பாதிக்கப் பட்ட அளவுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் பலமில்லாமல் இல்லை. இந்தியாவில் உள்ள பொதுத்துறைமற்றும் தனியார் வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன. எனவே இந்திய வங்கிகளுக்கு வலுவான அடித்தளம் உண்டு. மேலும் இந்தியாவில் வீடு விலை இறங்கினாலும் கடன் கொடுத்த வங்கிகள் கடனை வசூலித்து விடும் அளவுக்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை.

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்குப் போது மான மூலதனம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தனிநபர்களின் சேமிப்புகளில் 55% வங்கிகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் தரும் வட்டிவீதம் குறைவுதான் என்றாலும் வங்கிகள் மீதுள்ள நம்பகத்தன்மை காரணமாகவே வங்கிகளில் சேமிக்கின்றனர். இப்படிப்பட்ட சேமிப்புகளின் மதிப்பு இந்தியாவின் ஓராண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 80% என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பி வருமோ வராதோ என்றரிஸ்க் உள்ள கடன்களின் மதிப்பைவிட 4% கூடுதலான அளவுக்கு இந்திய வங்கிகளில் மூலதனம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, வங்கிகள் திரட்டும் மூலதனம் ரூ.100 கோடி என்று கொள்வோம். அதில் ரிஸ்க் எடுத்து தரப்படும் கடன்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால், வங்கிகள் அதற்கு இணையான மதிப்புக்கு தங்கள் வசம் மூலதனம் திரட்டி வைத்திருக்க வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு என்றால் ரிஸ்க் இனத்தில் கடன் வாங்கியவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் வங்கிகள் தனது சுய மூலதனத்தை இட்டு அதை நிரப்பி நிலையை சரிசெய்வதற்காகத்தான் இந்தியாவில் இந்த வகை மூலதனம் 13%-ஆக, அதாவது தேவையான 9%-ஐ விட 4% அதிகமாகவே இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த அம்சத்தில் அஞ்சத் தேவையில்லை.

வங்கிகள் தாங்கள் பெறும் முதலீடுகளைவிட அதிகத் தொகையைக் கடனாகக் கொடுத்து விட்டு கடனை வசூலிக்க முடியாமல் திவாலாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்திய ரிசர்வ் சில கடமைகளை வங்கிகள் மீது திணித் துள்ளது. அவற்றில் முக்கியமானவை சட்டப்பூர்வமான ரொக்க கையிருப்பு (SLR), மற்றும் குறைந்தபட்ச கட்டாய ரொக்க கையிருப்பு விகிதம் (இதத) ஆகும்.

இதன்படி வங்கிகள் தாங்கள் திரட்டும் முதலீடுகளின் மதிப்பில் 25% தொகையை ரொக்கமாகவோ, வங்கிகளின் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களின் முதலீடாகவோ பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இதுபோக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது இடும் கட்டளைக்கு ஏற்ப “கட்டாய ரொக்க கையிருப்பு விகிதத்தை” பின்பற்றவேண்டும். இது 3% முதல் 15% வரை அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். வங்கிகள் கடன் தர போதிய ரொக்கம் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும், முதலீட்டாளர்களின் பணம் அளவுக்கு அதிகமாக ஏதாவது ஒரு இனத்தில் போய் முடங்கி விடக்கூடாது என்பதற்காகவும் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை களை அவ்வப்போது எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட ஏற்பாடு அமெரிக்காவில் கிடையாது.

பொதுவாக வங்கிகள் வழங்கிடும் கடன் தொகையை வசூல் செய்வதில் சிக்கல் ஏற்படும்போது நீதி மன்றங்களை நாட வேண்டியுள்ளது. நீதி மன்றங்களில் ஏற்பட்டு வந்த அதிகப்படியான தாமதங்களால் வாராக்கடனை வசூலிப்பதில் தாமதங்கள் நேர்ந்து வந்தன. நல்ல வேளையாக சில ஆண்டு களுக்கு முன்பு புதிதாக “செக்யூரிடைசேஷன்” என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக கடனாளிகள் கடனைக் கட்டாத பட்சத்தில் அடமானச் சொத்துக்களை விற்று கடன் தொகையை அடைத்துக் கொள்ளும் வழி முறைகள் எளிதாக்கப்பட்டன. இதன் விளைவாக வாராக்கடன் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய சட்டம் வந்த பிறகு வாடிக்கை யாளர்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள்.

இந்தியாவில் மொத்த முதலீட்டு மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கடனாகத் தர அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்க வங்கிகளோ தாங்கள் திரட்டிய முதலீட்டு மதிப்பைவிட ஐந்து அல்லது ஆறு மடங்குக் கடன்களை அள்ளித் தந்து விடுகின்றன. இந்தியாவில் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது. அமெரிக்காவில் நெருக் கடியைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகள் இந்தியாவில் நிரந்தரமாகவே நடைமுறையில் உள்ளது.

1970, 1980-களில் உலகிலேயே நிதி மேலாண்மையிலும், வங்கிச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியவர்கள் அமெரிக்கர்கள்தான் என பரவலாகக் கருதப்பட்டது. அதனால் அமெரிக்கர்களின் நிதித்துறைநிபுணத்துவம் மற்றும் நடைமுறைகள் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளால் பின்பற்றப்பட்டன. ஆனால் அமெரிக்க வங்கிகள் பிறநாடுகளுக்குக் கற்றுக் கொடுத்த நிதி மேலாண்மைத் தத்துவங்களை அவர்களே பின்பற்றவில்லை. அதனால்தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவால் ஆயின.

இன்றுள்ள நிலையில் இந்தியாவில் வங்கிகளுக்கு பாதிப்பு இல்லை என்றபோதிலும் சில அடிப்படை பாதுகாப்பு அரண்களை வங்கி கள் ஒருபோதும் கைவிடக்கூடாது. வங்கிகளின் வலிமை, அவற்றின் சீரிய செயல் திறனிலும் விதிமுறைகளை கடைபிடிப்பதிலும்தான் உள்ளது. அவற்றின் பிரம்மாண்டமான அளவில் அல்ல என்பதை உணர வேண்டும்.

உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதன் காரணமாக உலகின் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர்விளைவுகளும் சரியான உதாரணங்கள். அமெரிக்காவின் இந்த அவலத்திலிருந்து இந்தியா பாடம் பெறவேண்டும். அப்போதுதான் இது போன்றசர்வதேச நிதி நெருக்கடிகள் இந்தியாவை பாதிக்காமலிருக்கும். ஏழை இந்தியனின் நலன் காக்கப்படும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்