Home » Cover Story » விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்

 
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்


மயில்சாமி அண்ணாதுரை
Author:

திரு மயில்சாமி அண்ணாதுரை
“சந்திராயன்” திட்ட இயக்குநர், இஸ்ரோ

“சந்திரயான் – 1” வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக் கோள் தொழில் நுட்பத்திலும் நமது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்றநாடுகளே தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்தன. இன்று நம்மாலும் முடியும் என பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1” என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பி “இஸ்ரோ” விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.

“சந்திரயான் -1” சாதிப்பிற்குப் பின்னால் நம்ம ஊர்த் தமிழர்

திரு. மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதில் நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆனந்தமான காலமிது.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி என்னும் கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று உலகளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிற திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்தச் சாதிப்பு அவருக்கு சாதாரணமாக கிட்டியதா என்றால் இல்லை.

“இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மில் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.

நமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே. அந்த வலிமையாலும் அந்த விடா முயற்சி யினாலும் விடாது போராடி இந்த அரிய சாதிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

வாழ்க்கையில் வெற்றியை நினைப்பதும், கற்பனை செய்வதும், நிச்சயம் நிறைவேறும் என்றமுழு நம்பிக்கையும் நிரம்பவே பெற்றுள்ள அவர் தன் ஆய்வுப்பணிக்கு பக்கபலமாக இருந்து நல்வழி காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்.

ஆறாவது நீள்வட்டப்பாதையான பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரயான்-1 செயற்கைக் கோளை நிலவின் பாதையில் சுற்றவிட்ட அந்நேரத்தில் கடினமான அந்த செயல்பாடு வெற்றியைப் பெறவேண்டுமென்று எனது பிறந்த ஊர் கோதவாடி மக்கள் ஆலயம் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் அன்பு என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என தன் கிராமத்து மக்களின் மீது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்.

பெற்றோர்களின் பெயரை “இன்சியல்” போடுவது நாகரீகம் அல்ல என்றும் இயற்பெயரைக் கூட மூன்றெழுத்துக்குள் சுருக்கிக்கொண்டு “ஸ்டைலாக” வாழ்வோர் எண்ணிக்கை கூடி வரும் காலத்தில் அப்பாவின் பெயரையே தன் பெயருக்கு முன்னால் சேர்த்து தந்தையை கௌரவப்படுத்தி மகிழ்பவராய் அதேசமயம் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வராக இருக்கும் தம்பி திரு. மோகனசுந்தரம் அவர்களின் பேராற் றலையும் வெளிப்படுத்த தவறவில்லை. ஆம்! தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி தமிழக முதல்வர் டாக்டர்

மு. கருணாநிதி அவர்களால் பாராட்டுப் பெற்றிருக்கிறார் அவர் என எல்லோரையும் நன்கு அரவணைத்து வாழ்வியல் கருத்துக்களை அற்புதமாக வெளிப்படுத்தவும் செய்கிறார்.

தனிமனித சாதிப்பு அல்ல இது. ஒட்டு மொத்த “இஸ்ரோ” விஞ்ஞானிகளின் கூட்டு சாதிப்பு என்று எல்லோரையும் முன்னிலைப்படுத்தி மகிழும் “நல்ல மனிதராகவும்” திகழும் அவரை கௌரவ ஆசிரியர் டாக்டர் ந. செந்தில் அவர்களுடன் நாம் தொடர்பு கொண்ட போது,

“காலத்தை மதித்து, அன்பு செலுத்தி, கடமை உணர்வுடன்
வாழ்ந்தால் அருமையும் பெருமையும் நிச்சயம் கிடைக்கும்”
என்றார்.

சாதித்திருக்கிற இந்த சாதிப்பான நேரத்தில் பிறந்து வளர்ந்த அந்த நாட்களை நினைவு கூறுங்களேன்?

கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. எனக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். எங்கள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.

ஆசிரியப் பணிபோக மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர்.

தமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரை யில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தேன். அதற்குப் பின்பு அப்பா மாற்றலாகி கிணத்துக்கடவு பள்ளிக்குச் சென்றபோது நல்லட்டிபாளையத்தில் குடி பெயர்ந்தோம். அப்போதெல்லாம் தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் செல்வேன். அரசு உதவித் தொகையில் தான் என் கல்விப் பயணமே தொடர்ந்தது.

கல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து நநகஇயில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றேன். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தேன்.

நாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்றதனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப் பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தேன். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) நிறைவு செய்தேன்.

நீங்கள் படித்து முடித்ததும் பிரெஞ்சு கம்பெனி ஒன்று வேலை தரத் தயாராக இருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர்கள்?

நான் எம்.இ. படித்து முடித்ததும் புதுச் சேரியிலுள்ள “ஆரோலெக்” என்றபிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அந்த வேலையை வேண்டாமென்று சொல்லி விட்டேன்.

அதனை அடுத்து மூன்று மாதத்தில் இஸ்ரோவில் வேலைக்கு தேர்வானேன். சேர்ந்த நாள் முதல் வானிலை ஆராய்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன்.

தமிழில் படித்தால் விஞ்ஞானம் என்பதெல்லாம் வெகுதூரம் என்கிறார்களே?

கல்லூரியில் சேரும்வரை நான் படித்த தெல்லாம் தமிழில் தான். பத்தாம் வகுப்பி லிருந்தே அரசின் உதவித் தொகையை பெற்றுப் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன். எல்லாம் ஆர்வம் தான் காரணம். தாய்மொழியின் மீது பற்றுதல் இல்லாமல் பிறமொழிகளின் மீது ஆர்வம் காட்டுதல் என்பது ஆரோக்கியமான விசயமாகப்படவில்லை.

எந்த ஒன்றையுமே தன் தாய் மொழியில் படிக்கும் போது உணர்தல் என்பது அதிகமாக இருக்கும். தமிழ் படித்தால் விஞ்ஞான அறிவு இருக்காது, வளராது என்பதெல்லாம் கிடையாது. டாக்டர் அப்துல் கலாம் தமிழ் வழியில் பயின்றவர் தான். அவர் சாதிக்க வில்லையா. தமிழில் படித்துக் கொண்டு மற்றமொழிப் பாடங்களையும் சேர்த்து அறிவை வளர்த்துக் கொள்வது என்பது கூடுதல் பலம். அதற்காக கான்வென்ட் சென்று படித்தால் தான் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நம்மவர்கள் பலபேர் அமெரிக்காவின் “நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் இணைந்து நல்ல ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை அவர்கள் அழைத்தும் ஏன் நீங்கள் செல்ல மறுத்தீர்கள்?

“நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். எனக்கு பல முறை அங்கிருந்து அழைப்பு வந்தது. என் நாடு, என் மக்கள் என்கிற உணர்வு எனக்குள் சிறு வயதில் இருந்தே அதிகம் இருந்தது. சமுதாயத்தின் மீது அக்கரை காட்டிய ஒரு தலைவரின் பெயரை அப்பா எனக்கு சூட்டி “அண்ணாதுரை” என அழைத்து மகிழ்ந்த போதே நான் முடிவெடுத்து விட்டேன்.

நாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பாடு மிக்கவனாக நான் இருக்க வேண்டும் என்று. அதனால் “இஸ்ரோ”வை விட்டு எங்கும் வெளியில் செல்ல நான் விரும்பவில்லை. உடன் அற்புதமான விஞ்ஞானிகள், அற்புதமான தலைமை – என எல்லாமுமே நமது நாட்டிலேயே இருக்கும் போது வேற்று நாட்டில் வேலையை நான் ஏன் தேட வேண்டும்.

“சந்திரயான் – 1″ன் இயக்குநராக இருந்து பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியிருக் கிறீர்கள். இந்நிலையை அடைய நீங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இஸ்ரோவில் 1982-ல் என்னை இணைத்துக் கொண்ட நாள் முதல் நேரம் காலமின்றி புதிது புதிதாக தொழில் நுட்பங்களை உருவாக்கி AÓjRÓjÕ TR® EVoÜ ùTtúu.

1985 : Team leader to develop S/W satellite Simulator,

1988 : Spacecraft operations manager IRS – IAC,

1989 : Spacecraft operations manager IRS – IB,

1992 : Spacecraft operations manager INSAT – 2A,

1993 : Spacecraft operations manager INSAT – 2B,

1994 : Deputy Project Director, INSAT – 2C,

1996 : Mission Director INSAT – 2C,

1997 : Mission Director INSAT – 2D,

1999 : Mission Director INSAT – 3B,

2000 : Mission Director INSAT – 2E,

2001 : Mission Director GSAT – 1,

2003 : Mission Director INSAT – 3E,

2003 : Associate Project Director, EDUSAT

இத்தனை படிக்கட்டுகளைத் தாண்டிய பின்பு தான் 2004ல் “சந்திரயான்-1” ன் திட்ட இயக்குநராக உயர்ந்தேன்.

சந்திரயான்-1 பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது?

நிலவுக்கு ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பிட 386 கோடி ரூபாய் செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய திட்டம் இது. நான்கு வருட காலம் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கடந்த மாதம் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி – சி11 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண் வெளி மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப் பட்டது.

வெவ்வேறு தூரங்களைக் கொண்ட ஆறு நீள்வட்டப் பாதைகளில் பயணிக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளதை செயலாக்கத்திற்கு கொண்டு வந்த பின் “சந்திரயான்-1” சந்திரனுக்கு 100 கி.மீ. வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தி இரண்டாண்டு காலம் நிலாவை ஆராய வைப்போம். செயற்கைக்கோளில் உள்ள 11 ஆராய்ச்சிக் கருவிகள் கதிரியக்கம், நீர்நிலைகள், தனிமங்கள், பருவநிலை என பலவாறு அங்கிருந்து ஆராய்ந்து தகவலை அனுப்பும். அதன்பின் சந்திரயான் 2 ஏவப்படும். அது நிலாவில் எங்கே இறங்குவது என ஆராய்ந்து அங்கே ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவி சந்திரயான் 1 மேற்கொண்ட ஆய்வுகள் சரிதானா என ஆராயும். அதன்பின்பு சந்திரயான் 3 அனுப்பப் பட்டு நிலாவிலிருந்து எதையெல்லாம் எடுத்துவர முடியும்? அங்கிருந்து மற்றகோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா? என ஆய்வு செய்யும். அதன்பின்பு சந்திரயான் 4-ல் மனிதனை அனுப்பும் பணி தொடரும். இப்படியாய் அடுத்தடுத்து சந்திரனில் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற சந்திராயன் 1 அடித்தளமாக அமைந்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அதிகம் வளர்ந்து சந்திரனில் மனிதன் வாழக்கூடிய சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 2020ல் நிலவுக்கு மனிதனை அனுப்பி பத்திரமாய் திரும்ப அழைக்கும் பணி நிச்சயம் நிறைவேறும்.

நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக் கோளை சுற்ற விடுவதில் விண்வெளித் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கே சவாலாக இருந்த போது முதல் முயற்சியி லேயே இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்திருக் கிறார்கள் எப்படி இது சாத்தியமானது?

பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளை, நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றவைக்கும்போது, பூமி, நிலவு இரண்டின் ஈர்ப்பு சக்தியையும் கணக்கிட வேண்டியிருக்கும்.

செயற்கைக் கோளை நிலவின் சுற்றுப் பாதையில் சுற்றவிடும் போது, சிறிய தவறு நிகழ்ந்தாலும், செயற்கைக் கோள் பூமி அல்லது நிலவில் மோதக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும், விண்வெளியின் ஆழமான பகுதிக்கும் செயற்கைக்கோள் இழுத்துச் செல்லப்படக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத்யூனியன் உள்ளிட்ட நாடுகள் இந்த விசயத்தில் 30 சதவீதமே நிலவின் சுற்றுப்பாதையில் சுற்ற விடப் பட்டும் சமயத்தில் தோல்வியடைந் திருக்கின்றன. ஆனால் நாம் முழு நிலவையும் ஆய்வு செய்யும் சுற்றுப்பாதையில் சுற்றவிடப்பட்டும் சாதித்திருக் கிறோம். இது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மேலை நாடுகள் 6 நாட்களில் செயற்கை கோளை நிலவுக்கு அருகில் கொண்டு சென்றஅந்த முயற்சி தோல்வியைச் சந்தித்தது. அதனால் நாங்கள் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் படிப் படியாக செயற்கைகோளை நிலவுக்கு அருகில் சரியான முறையில் செலுத்தி வெற்றியை சந்தித்திருக்கிறோம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு விண்ணில் ஏவிய பின்பு அதில் ஏமாற்றங்களை சந்திக்கும் போது உங்கள் மனநிலை?

ஒவ்வொரு தோல்வியும் அடுத்தடுத்த வெற்றியின் படிக்கட்டுகள். இந்தத் துறையைப் பொருத்தவரையில் நூற்றுக்கு நூறு சதவீதமும் சரியாக இருந்தால் தான் வெற்றியை எட்ட முடியும். இதில் 2% மட்டுமே தோல்வி என்றாலும் அது ஏன் எப்படி என்று ஆராய்ந்து அறிந்து அடுத்த முறைமிகத் துல்லியமாக ஏவும் செயற்கைக்கோளை தயார்படுத்த ஏமாற்றங்கள் உதவுகிறது. ஒரு ஏமாற்றம் வருகிறது என்றால் அடுத்தடுத்து பெரிய வெற்றியை சந்திக்க அது உதவுகிறது என்பதுதான் உண்மை. இருப்பினும், முழு முயற்சிகளை மேற்கொண்டு முதல் முறை யிலேயே சாதித்துவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய அவா. எல்லா சூழலையும் எதிர்கொண்டு வெற்றியாக்கும் மனநிலை தான் எப்போதுமே எங்களுக்குள் இருக்கும்.

விண்வெளி ஆய்வுப்பணியில் இளைஞர் களின் எழுச்சி இன்று எந்தளவுக்கு உள்ளது?

நாமிருக்கும் நாடு முன்னேறவேண்டும் என்றால் அறிவியல் தொழில்நுட்பம் நன்கு வளர வேண்டும். அதற்கு ஐப என்று மட்டுமே செல்லாமல் விண்வெளித் துறைக்கு இளைஞர்கள் அதிகம் வரவேண்டும். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு விண்வெளி ஆய்வுத் துறைக்கு இளைஞர்கள் வருவது குறைவாகத்தான் இருந்தது. சந்திராயன்-1 திட்டத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இஸ்ரோவுக்கு வருபவர்களிடையே போட்டி அதிகம் இருக்கிறது. அதே சமயம் பணியில் சேர்ந்து ஓரிரு வருடங்கள் இருந்து விட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக் கிறது. அரசு நன்கு இப்போது இத்துறையை ஊக்குவித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆய்வுத்துறையில் இருப்பவர்கள் குடும்பத் தினருடன் அதிக நேரம் இருப்பது என்பது சாத்தியமானது என்று சொல்வதற்கில்லை. உங்களை உங்கள் குடும்பத்தினர் எந்தளவு புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார்கள்?

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோருமே சூழலை நன்கு புரிந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை நினைந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளிக் காலத்திலிருந்தே ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அது முழுவதும் முடிக்காமல் பின் வாங்கியதில்லை. இஸ்ரோவுக்கு வந்த ஆரம்பத்தில் பணி சார்ந்து நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் நேரம் காலமின்றி உழைப்பைக் கொடுத்து எல்லா வற்றையும் சமாளிக்க பழக்கப்படுத்திக் கொண்டேன். “சேலஞ்ச்” அதிகம் இருந்தது. ஒன்றையடுத்து இன்னொன்று என்று ஆய்வுப்பணி சென்று கொண்டே இருக்கும். புதிது புதிதாக கண்டுபிடிப்பு, அது சார்ந்தப் படிப்பு இப்படி தொடர்ந்து வேலை வேலை என்று தான் இருந்தேன். இந்த நேரத்தில் திருமணம் நடந்தது. பெங்களூரிலே குடியமர்ந்தேன். எனது துணைவியார் வசந்தி, மகன் இருவருமே என் பொறுப்புணர்ந்து நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டதால் இல்லற வாழ்க்கை / ஆராய்ச்சி வாழ்க்கை இரண்டை யுமே சந்தோஷமாக என்னால் எடுத்துக் கொண்டு சாதிக்க முடிந்திருக்கிறது.

வளரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் வார்த்தைகள்?

 • நமது இந்தியாவிலேயே எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கிறது. பயன்படுத் துங்கள். நீங்களும் பயன்படுங்கள். அயல் நாட்டு மோகத்தை விட்டு விடுங்கள்.
 • ஐஐப-யில் படித்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் காண முடியும் என்று இல்லாமல் அதற்கு அடுத்தடுத்து இருக்கிற கல்லூரிகளில் படித்தும் சாதிக்கலாம் என நிரூபியுங்கள்.
 • பெற்றோர்கள் கான்வென்ட் ஸ்கூலில்தான் குழந்தைகள் ஆரம்பத்தில் படிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தை திணிப்பதை தவிர்க்கலாம். புரியாத மொழியை குழந்தை களுக்கு திணிப்பதால் சிந்தனை ஆற்றல் தடைபட வாய்ப்புண்டு.
 • சிறு வயதில் கல்வியின் மூலம் மன அழுத்தத்தை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்காமல் இயல்பாக, சுதந்திரமாக வளர விடுவது அவர்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லதாகும். தாய்மொழியில் பேசுவது, படிப்பது என்பது நிறைய கருத்துக் களை உள்வாங்கிட உதவும். அதனால் தாய்மொழிக் கல்வி அத்தியாவசியம் என்பதை உணர்ந்து படித்தல் வேண்டும்.
 • விண்வெளி ஆய்வுப்பணியில் பெண்களின் ஆர்வம்?

  ஆண்கள் பெண்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. இருப்பினும் இன்று 15 சதவீத அளவு பெண்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம். இவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும். வரும் காலங்களில் அதிகமாகலாம். ஏனென்றால் தற்பொழுது இஸ்ரோவுக்கு தேர்வாகி வருபவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு இருக்கும். அங்கு வருகிறபெண்களின் எண்ணிக்கை 30% அளவு இருக்கிறது.

  வாழ்த்துப்பா

  சந்திரமண் டலத்தியலைக் கண்டு தேரச்
  	சிந்தனையில் வடிவமைத்தான் கவிஞன் அந்நாள்;
  "சந்திரயான்" விண்கலத்தை வடிவமைத்தே
  	சந்திரனுக் கனுப்பிவைத்தான் அறிஞன் இந்நாள்!
  சிந்தனையும் செயலுமெனத் தெளிவு பெற்ற
  	சிறப்பாலே தமிழர்நாம் தலைநி மிர்ந்தோம்;
  வந்தனையை அவர்கட்கே வழங்கி, யென்றும்
  	வாழ்த்துரைப்போம் மயில்சாமி அண்ணா துரைக்கே!
  செப்படிவித் தையைப்போல் கோள்கள் எல்லாம்
  	சூரியனைச் சுற்றிவரும் பாதைக் குள்ளே
  எப்படியோ சந்திரனைச் சுற்றி வந்தும்,
  	இறங்கியங்கே வளங்களெலாம் கண்டும் காட்ட
  இப்படியோர் விண்கலத்தை வடிவ மைத்த
  	இனியவராம் மயில்சாமி அண்ணா துரை நம்
  அப்துல்க லாமைப்போல் புகழ்ப ரப்பி
  	அவனியிலே எந்நாளும் நீடு வாழ்க!

  – வெ. சுப்பிரமணியன்
  ஓய்வு பெற்ற முதுகலைத் தமிழாசிரியர்,
  பூ.சா.கோ. சர்வஜன மேல்நிலைப்பள்ளி, பூளைமேடு

  சந்திரயான்-1

  இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆனது கடந்த 22.10.2008 ஆம் தேதி காலை 6.20 மணிக்கு சந்திரயான்-1 என்று விண்ணுளவியை (துணைக்கோள்) பி.எஸ்.எல்வி. ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான்-1 விண்ணுளவியானது இந்தியாவின் முதல் மனிதரற்றநிலவுப் பயணமாகும். நிலவின் பரப்பிலுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதி மூலங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவு பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்குவதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.

  PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட் 1995 முதல் 2005 வரை 8 முறைவிண்ணில் துணைக்கோள்களை பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றஅனுப்பியது 316 டன் எடை கொண்ட மேம்படுத்தப்பட்ட டநகய ராக்கெட் 1300 ந்ஞ் எடை கொண்ட விண்ணுளவியை முதலில் பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றவைக்கிறது. பூமியின் ஈர்ப்பாற்றல் உயரே செல்லச் செல்ல குறையும். இதன் காரணமாக 1300 கிலோ எடை கொண்ட விண்ணுளவி 590 கிலோ எடையாக குறைந்துவிடும். பிறகு விண்ணுளவி வெவ்வேறு தூரங்களைக் கொண்ட ஆறு நீள்வட்ட பாதைகளில் பயணித்து, 386000 கி.மீ. நீண்ட ஆரமுள்ள வட்ட வீதிக்கு நகர்த்தப்படுகிறது. அதுவே சந்திரனை நெருங்கும் “கடப்புச் சுற்று வீதி” (Transfer orbit) என்று அழைக்கப்படுகிறது.

  8.11.2008 அன்று நிலவுக்கான சுற்றுப்பாதையை சந்திரயான்-1 அடைந்தது. அந்த வீதியின் நீள் ஆரத்தில் செல்லும் போது விண்ணுளவி சந்திரனை நெருங்கியது. அப்போது விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் (Spacecrafts Retro-Jet Engines) இயங்கி அதன் வேகத்தைக் குறைக்கும். விண்ணுளவியின் வேகம் தளர்ந்தவுடன் நிலவின் ஈர்ப்பாற்றல் அதை தன் மண்டலத்தைச் சுற்றஇழுத்துக் கொள்கிறது. விண்ணுளவி நிலவை சுற்றி வரும் முதல் கட்ட விதி 1000 கி.மீ. இருக்கும். பிறகு விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் வேகத்தை தளர்த்தி முடிவான வட்ட வீதி 100 கி.மீ. உயரத்தில் இருக்குமாறு கட்டுப்படுத்தப்படும். இந்த இயக்கங்கள் சரியான கால நேரத்தில் பூமியின் ஆட்சி அரங்கிலிருந்து (ISRO) தூண்டப்பட்டு நிகழ வேண்டும். விண்ணுளவி இரண்டு வருட காலம் அந்த வட்ட வீதியில் நிலவை சுற்றி வர, உந்து கணைகளில் எரிசக்தித் திரவம் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் 100 கி.மீ. (60 மைல்) சுற்றுப்பாதையை அடைந்ததும், சந்திராயன் நிலவை ஆராயும் பணிகளை துவங்கி விடும்.

  இப்பணித் திட்டத்தின் தலைவராக திரு. மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார்.

  நன்றி : ச. அனிதா


Share
 

4 Comments

 1. Karunaharan says:

  Please sent me adress to Thannambikai in english.

  Thank you!

  Best recards

  Karunaharan

 2. M.J. SYED ABDULRAHMAN says:

  நன்றி
  “இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மில் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.

  நமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே.
  நன்றி – சிறப்பு

 3. sreekumar says:

  இப்படியோர் விண்கலத்தை வடிவ மைத்த
  இனியவராம் மயில்சாமி அண்ணா துரை நம்
  அப்துல்க லாமைப்போல் புகழ்ப ரப்பி
  அவனியிலே எந்நாளும் நீடு வாழ்க!
  (வெ. சுப்பிரமணியன்) அவ்வாறே நானும் vazhthukiren

 4. s.saravanan says:

  நல்ல இருந்தது!., இவங்க கஷ்டம் பட்டது நம்ம நாட்டுக்கு தான் சொல்லறப்ப நம்ம எல்லோரும் சந்தோசப்படன்னும், பெருமையடையனும்.,
  வேற( வெளி நாட்டுக்கு ) எங்கும் வேலைக்கு போகாம ” நம்ம நாட” உயர்த்தனும் நினைத்த அவங்க நாட்டுப்பற்றுக்கு ஒரு ஷல்குட் கண்டிப்பா அடிக்கணும். நம்ம லும் இந்த மாதிரி இருக்கனும் ., நம்ம கூட இருக்கிற நண்பர்களையும் இந்த மாதிரியாக உறுதுனைய இருக்கணும்., நாம குழந்தை களையும் இது போல் எண்ணத்துடன் வளர்க்கணும் .,

Leave a Reply to Karunaharan


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்