Home » Cover Story » எண்ணங்களை செயலாக்கு! வெற்றிகளை மாலையாக்கு!

 
எண்ணங்களை செயலாக்கு! வெற்றிகளை மாலையாக்கு!


திருவாசகம் க
Author:

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.
வான மளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழிய வே.
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
யிசைகொண்டு வாழியவே.
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே.
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி யோங்கத்
துலங்குக வையகமே.
தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.

மகாகவி பாரதியார்

டாக்டர். திருவாசகம் பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

தமிழ்மொழியின் மீது தனிப்பற்றுதல் கெண்டு அதன் வளர்ச்சியில் தனி அக்கறைசெலுத்தி வரும் செயல் துணைவேந்தர் இவர்.

“உன்னிடம் மறைந்து கிடக்கும் திறமை, இயற்கை உனக்கு மட்டுமே அளித்த வரப்பிரசாதம். அது என்ன என்பதை நீயே முயன்று வெளியே கொண்டு வரவேண்டும்” என்பதற்கேற்ப,

தனக்குள்ளே உள்ள திறமையை இனம் கண்டு அதன் மூலம் வறுமையைப் போக்கி பெற்றவர்களுக்குப் பெருமையைத் தந்து கொண்டிருப்பவர்.

கால மாற்றத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் புதுமையைப் புகுத்தி ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் கல்வியைக் கொடுத்து அவர்கள் காணும் மகிழ்ச்சியில்
மகிழ்ச்சியைக் கண்டு வருபவர்.

விடாமுயற்சி மூலம் தாக்குப் பிடிக்கும் சக்தியை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறமுடியும் என்றபாரதியின் வாக்குக் கேற்ப விடாமுயற்சியினை மாணவர்களுக்குள் விதைத்து அவர்களை விருட்சங்களாக்க அதிகம் முயற்சி எடுத்து வருபவர்.

தான் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியும், துறைகளை விரிவாக்கியும் ஆய்வு மையம், நானோ தொழில்நுட்பம் (Nano Technology) என பல கோடித் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியும் வரும் சிறப்பிறக்குரியவர்.

“நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் வளர வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும். திடமான மனதுடனும் நல்லெண்ணங்களுடனும் வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றென்றும் வளர்ச்சியடையலாம்”
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் கருத்திற்கேற்ப

“எண்ணங்களை செயலாக்குங்கள்!
வெற்றிகளை மாலையாக்குங்கள்”

என தன்னம்பிக்கை விதையை
விதைத்து வருபவர்.

பார்த்தவர்கள்! பழகியவர்கள்! நிச்சயம் சொல்வார்கள் இவர் பாராட்டப்பட வேண்டியவர் தான் என்று. அந்தளவு எளிமை, எதார்த்தம் இனிமையான பேச்சு, செயல்திறன் என நிரம்பப்பெற்றவர்.

இச்சிறப்பிற்குரிய துணைவேந்தர் டாக்டர். க. திருவாசகம் அவர்களை கௌர ஆசிரியர் திரு. மு. இராமநாதன், பேராசிரியர் டாக்டர். ந. செந்தில், பேராசிரியை டாக்டர். க.கலைச்செல்வி, திரு. K. வெள்ளியங்கிரி அவர்களுடன் நாம் நேர்முகம் கண்ட போது “இருக்கும் வரை அடுத்தவர்க்குக் கொடு” என்றார்.

“யாரால் கஷ்டத்தை அதிக மாக அனுபவிக்க முடியுமோ அவரால் தான் சிறப்பான சாதனைகளைச் செய்ய முடியும்” என்பது உண்மை தானா?

என்னுடைய இளமைக்காலம் கஷ்டம் நிறைந்தது என்பதை அறிந்துதான் இந்தக் கேள்வியை முன் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கஷ்டம் ஒரு மனிதனை பல்வேறு வகையில் சிந்திக்க வைக்கிறது. அந்தச் சிந்தனை நல்லவையாக, நடைமுறைக்கு கொண்டு வந்து செயல்படுத்தக் கூடியவையாக இருந்தால் அவரால் சாதித்து விட முடியும். நான் சிவகங்கை மாவட்டம் காளையர் கோயில் பகுதியில் உள்ள சிறுவேலங் குடி என்னும் குக்கிராமத்தில் கணபதி, தனுஷ்கோடி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தேன். எனக்கு ஒரு சகோதரன், ஒரு சகோதரி உண்டு.

எங்கள் குடும்த்துடன் மொத்தம் ஒன்பது குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்த ஊர் தான் நான் பிறந்த ஊர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஊர். ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் நகரத்திற்குச் செல்ல பேருந்து பிடிக்க வேண்டும். தேர்தல் நேரங்களில் தான் “கார்” எல்லாம் கண்ணுக்குத் தென்படும். கூரைவீடு தான் எங்கள் வீடு. அப்பாவுக்கு விவசாயம். வறுமை எங்களை வாட்டி எடுத்திருக்கிறது. ரேஷன் அரிசி வாங்கி வர அம்மா தந்த ஒரு ரூபாயை நான் தொலைத்து விட்டபோது தவித்த தவிப்பு, மறக்கவே முடியாது. பண்டிகை காலங்களில் மட்டுமே “இட்லி”. ஒரு நாளைக்கு இரு வேளை உணவு. பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல…

என்றாலும், கல்வியில் கவனம் செலுத்தி விடாமுயற்சியால் இன்று வளர்ந்து ஒரு கௌரவமான பொறுப்பில் இருக்கிறேன்; மகிழ்சியடைகிறேன். அதற்காக நான் கடந்து வந்த பாதைகளை மறக்க விரும்பவில்லை. மறைக்க விரும்பவில்லை. அன்று நான் பட்ட துன்பங்கள்தான் இன்று என்னை உயர்த்தி யிருக்கிறது.

சிறந்த படிப்பு உயர்ந்த மனிதர்களை உருவாக்கிறது. உயர்ந்த மனிதர்கள் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்துகிறார்கள்” என்பார் திரு. வலம்புரிஜான் அவர்கள். உங்கள் படிப்பிற்கு வறுமை தடையைத் தந்ததா?

இல்லை. என் பெற்றோர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். அவ்வளவு கஷ்டத்திலும் எங்களை படிக்க வைத்தார்கள் அவர்கள். பிறந்த ஊரில் 5-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம். ஆனால் வீட்டில் கஷ்டம். என் விருப்பத்தை நன்கு உணர்ந்த என் தந்தை விவசாயத்தை விட்டு விட்டு தேவகோட்டையில் கணக்குப்பிள்ளை பணியில் சேர்ந்தார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எங்களையும் படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டேன். பின்பு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அன்றைய PUC வகுப்பில் சேர்ந்தேன்.

தேர்வு முடிவை அறிந்து கொள்ளவதற்காக செய்திதாள் வாங்கக் கூட அன்று இயலாத நிலை.

ஆனாலும் நான் சோர்ந்துவிட விடவில்லை. வறுமையை விரட்ட ஒரே வழி கல்வி தான் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே பல்கலைக்கழகத்தில் B.Com, M.Com முடித்தேன். படிப்பில் தங்கப்பதக்கம் பெற்று அங்கேயே கல்லூரி ஆசிரியப் பணியிலும் சேர்ந்தேன்.

நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அன்றைய துணை வேந்தர் வெளிநாடு சென்று விட்ட காரணத்தால் அன்றைக்கு அவரின் பொறுப் பாளராக பல்கலைக் கழகத்தில் இருந்தேன்.

அப்போது ஒரு முறைதேர்வு முடிவுகளை வெளியிட என்னிடம் கையொப்பம் பெறுவதற்காக அலுவலர் வந்து என்னை கேட்கிறார்.

ஒரு கணம் நான் நினைத்துப் பார்த்தேன்…….

காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் படித்து முடித்த பின்னர் யாதவர் கல்லூரியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து, அதே கல்லூரியில் முதல்வராகி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 3 முறை பல்கலைக் கழக செயற்குழு உறுப்பினராகி, அதன் பின்னர் பல்கலைக்கழக துணை வேந்தரின் பொறுப் பாளராக, அதாவது தேர்வு முடிவுகளை வெளி யிடும் உயர்ந்த நிலையை அடைந் திருப்பதை நினைத்துப் பார்த்த போது மெய் சிலிர்த்துப் போனேன். ஆம்! படிக்கும் காலத்தில் எந்தக் கல்லூரியின் தேர்வு முடிவை காசு கொடுத்து செய்தித் தாள் வாங்கி தெரிந்து கொள்ள முடிய வில்லையோ அதே கல்லுரியில் தேர்வு முடிவை வெளியிடுபவராக உயர்ந்திருப்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தேன். இங்கே இந்தச் சம்பவத்தை நான் சொல்லக் காரணம், முயற்சிகள் தான் நமக்கு எல்லாமே பெற்றுத் தருகிறது. ஆகவே வறுமையைக் காரணம் காட்டிக் கொண்டு மாணவர்கள் யாருமே சோர்ந்து போய் விடக் கூடாது. போராடுங்கள். போராடினால் உண்டு பொற்காலம்.

உங்களுக்கு கல்லூரிப் பணி கிடைத்ததே ஒரு சுவையான அனுபவம் என்று அறிந்தோம். அது குறித்து உங்கள் கருத்து?

பொதுவாகவே நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். நிறைய எழுதுவேன். நன்றாக மேடைகளில் பேசுவேன்.

அப்படி ஒரு முறை நான் M.Com முடிக்கும் தருவாயில் ஒரு மேடையில் பேச சென்றிருந்தேன். அப்போது என்னுடன் பேசியவர்கள் இரண்டுபேர். ஒருவர் அரசியலில் பிரபலமானவர், இன்னொருவர் சிறந்த பேச்சாளர் திரு. வலம்புரி ஜான் அவர்கள்.

அந்தச் சிறப்பிற்குரிய மேடையில் நான் பேசி அமர்ந்ததும் எனக்கு துண்டுச் சீட்டு ஒன்று வந்தது.

நீங்கள் M.Com படித்திருப்பதாகவும், தங்கப் பதக்கம் பெற்றவர் என்பதையும் நாங்கள் அறிந்தோம். உங்களின் திறமையைக் கண்டு பாராட்டுகின்றோம்.

உங்களுக்குச் சம்மதம் என்றால் “யாதவர் கல்லூரியில்” ஆசிரியர் பணிக்கு நீங்கள் சேரலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். பெருத்த மகிழ்ச்சியுடன் சென்றேன். மன நிறைவுடன் பணியைக் கொடுத்தார்கள். ஏற்றுக் கொண்டு சிறப்புடன் செயல்புரிந்தேன்.

“நட்பு வட்டம்” உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது? அது பற்றிக் குறிப்பிடும் படியாக…

எனக்கு மறக்க முடியாத நட்பு வட்டம் அமைந்திருந்தது. உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன். வேலை வாய்ப்பு கிடைத்த விஷயத்தை என் ஆருயிர் நண்பன் காரைக் குடியைச் சேர்ந்த திரு. தினகரனிடம் தெரிவிக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியடைந்த வனாக,

சற்றும் தாமதிக்காமல், பணியில் சேர மதுரை யாதவர் கல்லூரிக்கு செல்லும்போது, காரைக்குடி வழியாக எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு போ… நண்பா என்றான்….

ஏன் என்ன விஷயம் என்றேன்…….

“டேய்! நீ வந்துட்டு போன்னா வந்துட்டுபோ அவ்வளவு தான்.” இதுக்கு மேல எதுவும் கேட்கக் கூடாது என்று சொல்லி லிவிட்டான்.

சரி என் நண்பனாயிற்றே…. என்ன செய்வது?

எங்கள் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி விட்டு என் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். சென்றதும் நன்கு உபசரித்தவன் புறப்படப்போகும் போது, ஒரு பீரிஃப்கேஸ் ஒன்றை கையில் கொடுத்து, நண்பா… இதை நீ மதுரை, போகிறவரைக்கும் திறந்து பார்க்கக் கூடாது என்று அன்பு கட்டளையிட்டான்.

சரி நண்பனல்லவா…..மீறிச் செய்ய முடியுமா?

நானும் அப்படியே மதுரை போகிற வரைக்கும் அந்த “பீரிஃப்கேஸை” திறந்து பார்க்க வில்லை.

மதுரை வந்தடைந்து கல்லூரிக்குச் சென்று விடுதியில் தங்கியிருக்கும் போது திறந்து பார்க்கிறேன்….

வேஷ்டி, சர்ட் மட்டும் அணிகிற எனக்கு,

2 பேண்ட், 2 சட்டை, 1 வாட்ச், 1 பெல்ட் என சகலமும் இருக்கிறது. ஏனென்றால் அற்கு முன்பு நான் வேட்டி சட்டைதான் அணிந்திருப்பேன்.

அதாவது நீ நாளைக்கு கல்லூரி விரிவுரை யாளாராக பணிக்கு செல்கிறாய். பிரமாதமாக போக வேண்டுமென்று என் நலத்தில் அக்கறை செலுத்திய அந்த நட்பை நான் என்னவென்று சொல்லிப் பாராட்ட முடியும். இன்றைக்கு அந்த நண்பன் திரு. தினகரன் சிங்கப்பூரில் நல்ல சிறந்த தொழிலபதிராக இருக்கின்றார். கடந்த வாரம் கூட பல்கலைக்கழக இல்லத்திற்கு வருகைபுரிந்து என்னை சந்தித்து விட்டு சென்றிருக்கிறார்.

படித்தவுடன் வேலை வாய்ப்பைப் பெறும் பாடத்திட்டங்கள் நம் கல்வி முறையில் புகுத்தப்பட்டு வருகிறதா?

தமிழகத்திலேயே நல்ல தரமான பல்கலைக் கழகம் என்ற பெயர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு துணை வேந்தராகப் பொறுப்பேற்று பணியாற்றுவதற்கு மிகவும் பெருமை பெற்றவனாகவே நான் கருதுகிறேன்.

பாரதியார் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 19 பல்கலைக்கழகங்களிலும் முதன்மையான தரமான பல்கலைக் கழகமாக, முழுஉள் கட்டமைப்பு வசதிகள் பெற்ற பல்கலைக் கழகமாக பாரதியார் பல்கலைக் கழகம் சிறப்புப் பெற்றுள்ளது.

இனிவரும் சந்ததியினருக்கு, ஏதோ படித்து பட்டம் பெற்றோம்; பல்கலைக் கழகத்தினை விட்டு வெளியே சென்றோம் என்றில்லாமல் படிக்கின்ற மாணவர்கள் படிப்பு சம்பந்தமான நல்ல வேலை வாய்ப்பு பெறும் விதமாக, பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை அமைத்திட வேண்டும் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

எல்லாத் துறைகளிலும், “நவீனமாக்கப்படல்” என்ற கோட்பாட்டின்படி பயன்பாடு (Modernization) சார்ந்த பாடத்திட்டங்களை அமைத்துள்ளோம்.

“ஒரு பல்கலைக்கழகத்தின் தரம் என்பது அந்த பல்கலைக் கழக மாணவர்கள் படித்து முடித்த பின்பு வேலைவாய்ப்புக்களில் எந்த அளவுக்கு “தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்” என்பதைப் பொறுத்து தான் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியும்.

அந்த வகையில் நமது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பாராட்டும் படியாக உள்ளது.

இனி வரும் காலங்களில் வேலை வாய்ப்பு உள்ள துறையாக நீங்கள் சுட்டிக் காட்ட விரும்புவது?

தற்போதைய சூழலில் õ2 முடித்து பட்டப் படிப்பு, மேற்பட்டப் படிப்பு என தொடர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

தற்போதைய மாணவர்களில் பட்டம் பெறுவர்களில் 4» மட்டுமே மேற்கொண்டு ஆய்வு சம்பந்தமான துறைகளிலும் 2» தொழில் முனைவோராகவும் உள்ளனர். மீதம் உள்ள 94» பிறதுறை சார்ந்த பணிகளிலேயே சேர்கின்றார்கள்.

இப்போதைக்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் இருப்பது வரவேற்கத்தக்கது. அதே போல் (Bio tech, Bio Informatics) உயிர் நுட்பவியல், உயிர் தகவல் தொழில் நுட்பவியல் போன்ற துறைகளில் நல்ல வாய்ப்பு இருப்பது மாணவர் களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று கருதுகிறேன்.

இனிவரும் கால கட்டங்களில்….

நானோ தொழில்நுட்பம் சார்ந்த பணி களுக்கு அதாவது இயற்பியல் துறைசார்ந்த மாணவர் களுக்கு நல்ல அபார வளர்ச்சி உள்ளது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் எந்தப் பணிகளிலும், பயன் படுத்தும் பொருட்களிலும் அதாவது வேளாண் தொழில், கட்டமைப்பு, கணிணி போன்ற துறைகளில் நானோ தொழில் நுட்பத்தின் பங்கு மகத்தானதாக அமையப் பெற்றிருக்கும்.

இளநிலை பட்டப்படிப்பு முடித்ததும் வேலை என்பது எட்டாக் கனியாக இருக் கிறது. பெருந்தொகையைச் செலவழித்து மேற்படிப்பு படிக்க முடியாதவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தாங்கள் செய்ய விரும்புவது?

இளநிலைப் பட்டப் படிப்பில் சேருகின்ற மாணவர் ஒருவர் கல்லூரியில் செலுத்திய தொகையிலேயே, அந்த 3 ஆண்டுகள் படித்து முடித்து வெளிவர வேண்டும். அதே சமயம் பிற தகுதிகளையும் அவர் வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கேற்ற திறமையான மாணவராக உயர்வும் பெற்றிருக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் மாணவர் களுக்கு வாய்ப்பு, வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது என் எண்ணம்.

உதாரணமாக, இங்கிலாந்து நாட்டில் உள்ளதைப் போல் பாடத்திட்டங்கள் Sandwitch அதாவது “ஒரு கலவையாக” உள்ள பாடமுறை இனி இருக்க வேண்டும்.

THAT PERSON IS SUITABLE FOR ANY JOB. என்பதைப் போல இருக்க வேண்டும்.

Biological Science – Physical Science – Combine Science இந்த மூன்றையும் கொடுத்து அவனை படிக்க வைக்க வேண்டும். அதாவது. இயற்பியல், வேதியியல், கணக்கு, வணிகம், வங்கியியல், புள்ளி விபரம், கனிணி இவை எல்லாவற்றைப் பற்றிய அடிப்படையும் மேலும், அதனை வேலை வாய்ப்பில் கையாளுகின்ற திறமையையும் பெற்றிருக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கின்ற 100» வேலைவாய்ப்பில் 35% “IT Sector” போக மீதம் உள்ள 65» “Non IT Sectorp” தான் வேலை வாய்ப்பு அதிகம். எனவே அந்த வாய்ப்பிற்கு ஏற்ற அறிவாற்றல் உள்ள மாணவராக உருவாக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பார்த்தீர்களேயானால், பள்ளிப்படிப்பு முடித்து 4 ஆண்டுகள் இளநிலைக் கல்வி (UG Degree) பின்பு 1 வருடம் முதுகலைக் கல்வி (PG Degree) அந்த ஒரு வருடம் கூட தான் தேர்ந்தேடுக்கின்ற துறை சார்ந்த பயிற்சிக் கல்வி முறையாக உள்ளது.

இளநிலைக்கல்வி படிக்கும் 4 ஆண்டுகளிலேயே நான் சொன்ன Sandwitch கல்விமுறையை கற்றுக் கொண்டு. வேலை வாய்ப்பில் பிரகாசமான எதிர் காலத்தை சந்திக்கின்றார்கள். எனவே இனிவரும் எதிர் காலங்களில் UG Degree யை 4 வருடமாக வேலை வாய்ப்பு சார்ந்த கல்வியாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

அதுமட்டுமன்றி, இனி கல்லூரிகளில் பட்டப்படிப்பு மட்டுமின்றி வேலை வாய்ப்பு சார்ந்த டிப்ளமோ பாடங்களும் நடத்தப்படும். மேலும் சிறப்பம்சமாக, ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பல்கலைக் கழகம் சார்ந்த கல்லூரிகளில் 20 பேருக்கு இலவசக்கல்வி பெறும் வகையில் முயற்சி மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதற்காக, கல்லூரிகள் தங்களது நிர்வாக இட ஒதுக்கீட்டில் இல்லாமல். பல்கலைக்கழகமே இதற்கென அதிகமாக இடங்களை ஒதுக்கி தருகின்றது. அதாவது 5%கூடுதல் இடங்கள், எந்தப்படிப்பானாலும் அதில் ஏழை மாணவர் கள் சேர்ந்து பயன் பெறலாம்.

இப்படி பாரதியார் பல்கலைக் கழகம் சார்ந்த 147 கல்லூரிகளில் வருடத்திற்கு 1600 மாணவர்கள் பயன் பெறுகின்றார்கள். இது முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவொன்றும் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டம் மற்ற பல்கலைக்கழகங்களிலும் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

அதே போல் இப்பல்கலைக் கழகத்தில் உடல் ஊனமுற்றமாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கஷ்டப்படுகிறவர்கள் பயன்பெற்று வளம் காண வேண்டும் என்பதில் தான் மகிழ்ச்சியே இருக் கிறது. அதை எந்நாளும் செய்ய காத்திருக்கிறேன்.

இன்றைக்கு மாணவர்கள் மத்தியில் உள்ள மொழி ஆர்வம் குறித்து?

இன்றைக்கு மாணவர்கள் மத்தியில் மொழி ஆர்வம் குறைந்து விட்டது. தங்கள் சொந்த தாய் மொழியில் ஆர்வம் இல்லாதவர்கள் தன்னம் பிக்கை இல்லாதவர் களாகத்தான் இருப்பர்.

நான் படிக்கும் காலகட்டத்தில் மொழியின் மீது நல்ல ஆர்வம், ஈர்ப்பு இருந்தது. அதனால் தலைமைப் பண்பைப் பெற முடிந்தது. தாய்மொழியில் ஆர்வம் இருந்ததால் தான் எனக்கு எல்லாமுமே கூடி வந்தது.

எவர் ஒருவர் தாய்மொழியில் சிறப்பாக இருக்கிறாரோ அவரிடம் நல்ல தலைமைப் பண்பு இருக்கும். அதே போல், நல்ல தலைமைப் பண்பு எவரிடத்தில் உள்ளதோ அவர் தான் தன் தாய்மொழியின் மீது தனி ஆர்வம் பெற்றிருப் பார். இது மறுக்க முடியாத உண்மையாகும். கல்லூரிகளிலே இப்போது பார்த்தால். Expo 2008, Compu 2008 என்று .நடத்துகிறார்கள்.

சேக்கிழார் .2006, கம்பன் 2008 திருவள்ளுவர் 2008 என்று நடத்துகிறார்களா?

தாய்மொழியில் சிறப்பில்லாமல் வெறும் ஆங்கில மோகம் என்பது மனப்பாடம் செய்கின்றநிலையைத் தான் உருவாக்குமே தவிர அது தனித் திறமையை வளர்க்காது.

வகுப்பறைகளில் கூட ஆசிரியர்கள் இன்றைக்கு “Today திருக்குறள் Lesson” என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இனியும் இந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காக பாரதியார் பல்கலைக் கழகம் சார்பாக, அனைத்து தமிழ்துறைத் தலைவர்களையும் மற்றும் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திரு. ராஜேந்திரன் அவர்களையும் அழைத்து, தனியாக குழு அமைத்து தமிழ் மொழி மேம்பாட்டுச் சிந்தனைகளும், செயலாக்கமும் மேம்பட வழி வகை செய்யப்பட உள்ளன.

பல்கலைக் கழக பாடத்தில் கூட நம் மாணவர்கள் மொழிப்பிரிவுகளில் தமிழுக்கு பதிலாக பிறஅயல் நாட்டு மொழிகளை கேட்கின்றார்கள். தமிழையே கஷ்டப்பட்டாவது படியுங்கள் என வலியுறுத்தி வருகிறேன்.
நன்றி : திரு.ஓ. வெள்ளியங்கிரி

பாரதியார் பல்கலைக் கழகத்தின் புள்ளியியல் துறைத் தலைவரும்
மாணவர் நல மேம்பாட்டு இயக்குநருமான பேராசிரியர் டாக்டர். K.K. சுரேஷ் அவர்கள் கூறியதாவது….

நான் கடந்த 25 ஆண்டுகளாக புள்ளியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். க. திருவாசகம் அவர்கள் 2006 ஆகஸ்டு மாதத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராகப் பொறுப்பேற்றார்.

இவரை “துணைவேந்தர்” என்பதை விட “செயல் வேந்தர்” என்று சொல்வது தான் மிகவும் பொருத்தமாகும்.

பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் தனது பணியை, மிகச் சீரிய முறையில் நிறைவேற்றி வருகிறார். இவரை தனி மனிதராகப் பார்க்கும் போது, நல்ல செயலாற்றல் கொண்டவராகத் தோன்றுகிறார்.

பல்கலைக்கழக துறைகளை 22 துறைகளாக இருந்த நிலையை தற்போது 37 துறைகளாக உயர்த்தி யிருக்கிறார். அது தவிர Womens Studies Centre, Instrumental Centre, Carrier Guidance இதுபோன்ற 8 Non Academic துறைகளையும் கொண்டு வந்துள்ளார். மேலும் பல்கலைக் கழக துறைகளை ஒருங்கிணைத்து “School Concept” ஆக கொண்டு வந்திருப்பது பாராட்டக்குரிய விஷயம்.

பல்கலைக் கழக முன்னேற்றத்திற்காக கால நேரம் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார். பல்கலைக் கழக மானியக்குழுவின் உதவி மற்றும் தமிழக அரசின் உதவிகளைச் செவ்வனே பெற்று மாணவர்களின் ஆசிரியர்களின் நலனில் முன்னோடியாக விளங்குகிறார்.

பல்கலைக் கழகத்திற்கு புதிய கட்டிடங்கள், புதிய துறைகள், புதிய ஆசிரியர்களை கொண்டு வந்திருக்கிறார். மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய “Green Box” முறையைக் கொண்டு வந்தார்.

 • தொலை தூரக் கல்வி முறையில் மாணவர்கள் மேம்பட பாரதியார் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றிருக்கிறார்.
 • தொலை தூரக் கல்வி முறையிலேயே பிற தொழிலகங் களுடன் இணைந்த கல்வி முறையை உருவாக்கி யிருக்கிறார்.
 • மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஹோட்டல் நிர்வாகம், வங்கியியல், சுற்றுலா என பல்வேறு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த செயல்முறைக் கல்வியை (Practical Course) கொண்டு வந்ததன் காரணமாக வேலை வாய்ப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
 • பல்கலைக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறையில் உள்ள மாணவர்களும் வேலை வாய்ப்பு பெற்றிடுவதை உறுதி செய்யும் பொருட்டு (Placement Cell) வேலை வாய்ப்பு பிரிவை உருவாக்கியிருக்கிறார்.

மேலும், பாரதியார் பல்கலைக் கழகம் சார்ந்த ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் மலைப் பிரதேச பகுதிகளில் புதிய கல்லூரிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இன்றைய சூழலில் மாணவர்களின் உடல் நலம், மன நலம் நன்றாக இருந்தால் தான் சிறப்பாக கல்வி கற்றிட முடியும் என்பதை கருத்தில் கொண்டு, மாணவர் நலனில் மேம்பாடு காணும் பொருட்டு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக் கழக வளாகத்திலேயே யோகா, தியானம் போன்றவற்றை காலை, மாலை இரு நேரங்களில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், பல்கலைக் கழக துறைகளில் உள்ள CBCS, (Choice Based Credit System) இந்த முறையை பாரதியார் பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகள் அனைத்திலும் துணிச்சலாக செயல்படுத்தியிருக்கிறார்.

பிறநாட்டு பல்கலைக்கழகங்களின் முன்னோடியான திட்டங்களும், திட்டங்கள் சார்ந்த செயல்முறைகளும் நமது பாரதியார் பல்கலைக் கழகமும் பெற்று எதிர் காலத்தில் நல்ல வளர்ச்சியினை பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஜப்பான் என பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்குள்ள “அமைப்பு முறைகளை” அறிந்து அவற்றை

நமது பல்கலைக்கழகத்திற்குச் செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்.

எதிர்காலத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகமானது தேசியத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக சிறந்து விளங்கிட வேண்டுமென்ற ஒரு தொலை பார்வையில் செயலாற்றுகிறார்.

எந்த ஒரு மனிதனும் தான் மேற்கொண்ட பணியில் சமுதாயம் சார்ந்த அர்ப்பணிப்போடு செய்பவர்கள்…. தன் வாழ்வில் நாளும் வெற்றி அடைக்கின்றார்கள்.

அந்த வகையில் நமது பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர்.க.திருவாசகம் அவர்கள் சிறப்புடன் பணியாற்றுகிறார்.

அவரது பணி மென் மேலும் சிறந்து விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

 

1 Comment

 1. suganthi says:

  தங்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து கலங்கிப்போனேன் .அப்படியே எனது வாழ்வினையே பார்த்து பார்த்து வடித்து போல் உள்ளது ஒவ்வொன்றும் .எனது ஊரும் வீடும் கூட அப்படித்தான் .எனக்கு தங்களின் ஆலோசனைகள் கண்டிப்பாக தேவை .என்னால் அடிக்கடி கணினியை தொட முடியாது எங்களிடமோ எங்களது ஊரை சுற்றியோ கணினி கிடையாது எனவே தங்களின் ஆலோசனைகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் .
  இப்படிக்கு
  உயர விரும்பும் சுகந்தி

Post a Comment


 

 


October 2008

நலமாகும் பயிற்ச்சி
இயந்திர மனிதர்கள்
குழந்தை பருவங்களில் உடற்பருமன்
இங்கு இவர் இப்படி
கடமைதான் வாழ்க்கை
தாழ்வு மனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை
வெற்றிப்படிக்கட்டுக்கள்
திறந்த உள்ளம்
அற்புத இளைஞனே!
மனிதா.. மனிதா..!
பயோடேட்டா தயாரிப்பது எப்படி?
உடலினை உறுதிசெய்!
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு
எண்ணங்களை செயலாக்கு! வெற்றிகளை மாலையாக்கு!
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே…கிராமத்தில் வசிப்பவனா நீ?
திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கச் செய்தி
தடைகளை உடைப்போம்
நிறுவனர் நினைவுகள்
பெரிய நம்பிக்கை