Home » Articles » ஒழுங்கான செயல்

 
ஒழுங்கான செயல்


மெர்வின்
Author:

நாம் செய்யும் எந்தச் செயலும் வெற்றியுடன் அமைவதற்கு ஒழுங்கு முறை கட்டாயம் இருக்க வேண்டும். ஒழுங்கு என்பது நம்மைச் சரியான முறையில் செயலாற்றியவர்கள் எல்லாம் வெற்றியின் மைந்தர்களாக வீற்றிருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தில் நாமும் உட்கார வேண்டும் அல்லவா!

அப்படியானால் நாம் நிச்சயம் ஒழுங்கு முறையை கடைப்பிடித்தே ஆகவேண்டும். என்னுடைய மூளையில் பல அலுவல்கள் ஒழுங்காகவும் வரிசையாகவும் தனித்தனியே புறா கூண்டின் அறைகள் போல் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு அலுவலை மறந்து மற்றொரு அலுவலைப் பற்றி செயல்பட வேண்டி இருந்தால் முதல் அறையை மூடிவிடுவேன். இப்பொழுது தேவையான அறையை திறந்து கொள்வேன்.

இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதில்லை. வீணான சிந்தனைக்கு என மூளையில் இடம் இல்லை. உறங்கச் செல்லும் போது என்னுடைய மூளையில் உள்ள எல்லா அறைகளையும் மூடிவிடுவேன்.

உடனே அயர்ந்து தூங்கி விடுவேன். இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? அவர்தான் பிரான்ஸ் நாட்டு அதிபர் நெப்போலியன். ஆனால் நாம் எப்படிப் செயல்படுகிறோம்?

சாப்பிடும்போது உணவை நன்கு சுவைத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக நம்முடைய வரவு செலவைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அலுவலக வேலையைச் செய்யும்போது வீட்டு விவகாரங்களைப் பற்றி நினைத்து மூளையைக் குழப்பிக் கொள்கிறோம். ஒரு சமயத்தில் ஒரே வேலையை செய்து முடிப்பது தான் பல செயல்களைச் செய்வதற்கான குறுக்கு வழியாகும்.

ஒழுங்கு என்பது ஒரு பெட்டியில் சாமான்களை அடுக்கி வைப்பதுதான். சரியாகச் சாமான்களை அடுக்கி தவறாகச் சாமான்களை அடுக்கி வைப்பதை விட அரை மடங்கு பொருட்களை அதே பெட்டியில் வைக்க முடியும்..

ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பது இயற்கையின் சட்டம். நான் சிலமுக்கிய காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தால் அதை முடிக்கும் வரையில் நான் வேறு ஒன்றையும் பற்றி எண்ணமாட்டேன் என்கிறார் இங்கிலாந்து நாட்டு உயர்நீதிபதி டிவிட்.

இப்படி ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற ஒழுங்குச் சட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே பிறபித்துக்கொண்டு யார் மனம் ஒன்றி வேலை செய்கிறார்களோ அவர்களே வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.

எடுத்துக்காட்டாக காந்திஜியின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் ஆன்மீக ஞானியாகவும் விளங்கினார்.

இரண்டும் ஒருவரிடத்தில் சங்கமமாகிறது எளிதானச் செயல் அல்ல! அவருக்கு அளிக்கப் பட்ட நேரம் போலவே நமக்கும் ஒருநாளைக்கு இருபத்தி நான்கு மணிநேரம் தான் தரப்பட்டிருக்கிறது.

ஆனால் அவர் அதனை எவ்வாறு பற்பல காரியங்களுக்கு என்று வகுத்துக் கொண்டார் என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிறரால் தாங்க முடியாத அரசியல் சுமைகளைத் தாம் ஒருவரே தனித்துச் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அவர் பிராத்தனை செய்வதை நிறுத்தவில்லை.

பத்திரிகைகளுக்குக் கட்டுரை எழுதினார். அறிக்கைகளை வெளியிட்டார்.

நண்பர்களை தொழுநோயாளிகளையும் சந்தித்தார். அரசியல்வாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நூல் நூற்றார்.

அதற்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதை மட்டும் செய்யும் பொழுது குறைவு ஏற்படாது. வாழ்வில் குழப்பமும் தோன்றாது. நேரம் போதவில்லை என்ற முணுமுணுப்பும் வராது.

மலை போன்ற வேலைகளுக்கு இடையிலும் அவர் மொழிகளை கற்றுக் கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கி செயல்பட்டது ஆச்சரியம் அல்லவா!

ஜார்ஜ் புல்லர் கூறுகிறார் உன்னுடைய எண்ணங்களை எல்லாம் அழகாக ஒழுங்கு படுத்து, சுமையானது தோள்மீது அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தால் அதிகமான சுமைகளைச் சுமக்க முடியாது.

ஆனால் அதை ஒழுங்காகக் கட்டி வைத்தால் அதிகமான சுமையை தூக்கிக் கொண்டு செல்ல முடியும்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தந்த மணி நேரத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு அனைச் செயலாற்றினால் வாழ்வின் ஒளி நிச்சயமாக இருக்கும்.

நம்முடைய நேரத்தை ஒழுங்காக வகுத்துக் கொண்டால் ஒளிக்கதிர் போன்று பிரகாசமாக விளங்கும். திட்டமிட்டு ஒழுங்குடன் செயலாற்றினால் குறுகிய கால எல்லைக்குள் பெரிய செயல்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்.

ஒரு வேலையைச் செய்யும்பொழுது அதிலேயே மனம் ஒன்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது வேறு வேலையைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்க்கக்கூடாது.

நம்முடைய வேலை எதுவாக இருந்தாலும் அதை உயர்ந்த நிலைக்கு உட்படுத்த விரும்பினால் வரையறுக்கப்பட்ட ஒழுங்கானத் திட்டத்துடன் செயலாற்ற வேண்டும்.

சில சமயங்களில் திட்டம் தீட்டத் தெரிந்தாலும் அதனைச் செயலாற்றத் தெரியாமல் போய்விடுகிறது. நம்முடைய செயலைத் திட்டம் என்ற ஆற்றல் வழிகாட்டிக் கொண்டு செல்லவில்லை என்றால் எவ்வளவு விடாப்பிடியுடன் முயற்சியைக் கொண்டிருந்தாலும் வெற்றியைப் பெறமுடியாது.

ஒழுங்கின்றி திட்டமின்றி செயலாற்றினால் எப்பொழுதும் தலைத்தெறிக்கும் அவசரம் ஏற்படும். குழப்பத்தலும் வேகத்திலும் நம்முடைய நேரம் வீணாகக் கழிந்து விடும்.

இதன் பயன் நம்முடைய மேஜை அலமாரி எல்லாம் குவியலாக இருக்கும். அதை ஒழுங்கு செய்யக்கூட நேரம் கிடைப்பது அரிதாகிவிடும்.

நேரம் அமைந்தாலும் அவற்றை எங்கு வைப்பது என்பது கூடத் தெரியாமல் போய்விடும். அதை ஓரிடத்தில் வைத்தால் அப்புறம் அதனை எங்கு வைத்தோம் என்பது மறந்துவிடும்.

பின்பு அது தேவைப்படும்போது கண்டபடி கலைத்துவிட்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட நேரிடும். இறுதியில் காட்டைக் கலத்து வேட்டையாடும் கதைபோல் ஆகிவிடும்.

ஒழுங்குடன் திட்டமிட்டு செயலாற்றினால் இப்படிப்பட்ட ஒருநிலை ஏற்படாது. அவசரமும் தோன்றாது. எப்பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கும் சூழ்நிலை உண்டாகும்.

ஒழுங்கற்று செய்வதைவிட ஒழுங்குடன் செய்யும் வேலை நூறு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்பது உண்மை.

நெப்போலியனைத் தூங்கச் சென்றபின் எவரும் எக்காரணத்தைக் கொண்டும் அவரை எழுப்பக் கூடாது என்பது கட்டளை.

ஒருநாள் பிரெஞ்சு படைகள் ஓரிடத்தில் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பொழுது ஒரு போர்வீரன் அவசரமாக நொப்போலியனைப் பார்க்க வேண்டும் என்றான்.

தூங்கும்போது நெப்போலியனைப் பார்க்க முடியாது என்று வாயிற்காப்பான் கூறிவிட்டு கூடாரத்திற்குள் சென்றான். அங்கே இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களுக்கான உத்தரவுகளை எழுதி இருபதைப் பார்த்தான்.

அதை வாயிற்காப்பான் எடுத்துக் கொண்டு வந்ததும் அதில் அந்த வீரனுக்கு வேண்டிய அத்தனை செய்திகளும் எழுதப்பட்டிருப்பதைக் கண்டதும் வீரன் அடைந்த வியப்பை அளவிட முடியாது.

அதில் எழுதப்பட்டிருந்த செய்தி இத்தனை மணிக்கு இந்த இடத்தில் எதிரி தாக்குதல் அதிகமாக இருந்து நம் படைகள் பின்வாங்க நேரிட்டால் அப்பொழுது இந்த இடத்திற்கு நம்முடைய படைகள் பின்வாங்கி அரண் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

நாம் ஒரு செயலைச் செய்ய தொடங்கும் முன் அதை எவ்விதம் செய்வது எனபதற்காகன திட்டத்தை தன் மனத்திலோ காகிதத்திலோ எழுதி ஒழுங்குப்படுத்தி அதனை முழுவதும் நம் மனக் கண்முன் கொண்டு வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!