Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

மனதின் ஆற்றலை பேசும் தொடர்

மனதின் ஆற்றல் பல மடங்கு பெருகி வற்றாத ஜீவ நதியாக பாய வேண்டும் என்றால் மனதை இனிய பழக்கூடையாக வைத்திருக்க வேண்டும்; குப்பைக் கூடையாக வைத்திருந்தால் வாழ்க்கையில் துர்நாற்றம்தான் வீசும்.

பழக்கூடையில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம், திராட்சைப்பழம் எல்லாம் போட்டு டைனிங் டேபிளில் வைத்திருப்போம்; பார்க்கவே அழகாக இருக்கும்; சாப்பிடா விட்டாலும் வயிறு நிறைந்தது போலிருக்கும்; மனது நிறைந்தது போல இருக்கும். வீட்டிற்கே ஒரு அழகு வந்தது போல இருக்கும்.

மனம் என்ற பழக்கூடையில் வைக்க வேண்டிய பழங்கள் என்னென்ன எனப் பார்ப்போம். ஆப்பிள் – அது உற்சாகம்; வாழைப்பழம் – நல்லெண்ணம்; திராட்சை – மகிழ்ச்சி; ஆரஞ்சு – அச்சமற்ற – தைரியப் போக்கு; மாதுளை – உதவும் எண்ணம்.

நண்பர் ஒருவர் கேட்டார், “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?”

நான் சொன்னேன், “நிச்சயமாக அதிலென்ன சந்தேகம்?”

அடுத்து அவர் கேட்டார், “எப்படி முடிகிறது?”

நான் திருப்பிக் கேட்டேன், “அதிலென்ன கஷ்டம்?”

அவர் சொன்னார், “என்னால் முடியவில்லையே? இதில் விந்தை என்னவென்றால் என்னிடம் எதுவும் இல்லாதபோது மகிழ்ச்சி இருந்தது. எல்லாம் வந்தபின் அது இல்லை. இதுதான் புரியவில்லை. நான் பத்தாண்டுகளுக்கு முன் இளமையாக இருந்தபோது, ஒரு புதிய தொழிலை தொடங்கியபோது மிகவும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருந்தேன். தொழிலில் நிறைய சவால்கள் இருந்தன. தோல்விகள், சறுக்கல்கள் ஏற்பட்டன. அப்போதுகூட உற்சாகம் இருந்தது. சுறுசுறுப்பாக இருந்தது. அதன்பின் தொழில் சீர்பட்டது; நிறைய செல்வம் வந்தது. எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன். இனிய குடும்பம்; இருந்தாலும் முன்னர் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. சுறுசுறுப்பு இல்லை. தொழிலில் எந்தவித பிரச்னையும் இல்லை. அதனை ஒழுங்கு படுத்திவிட்டேன். தானாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கோ இப்போது எல்லாம் வெறுமையாக தெரிகிறது.”

என்றார் அந்த நண்பர்.

அவரை நான் வியப்புடன் பார்த்தேன்.

அவர் சொல்வது உண்மைதான்!

முகத்தில் ஒரு பிரகாசம் இல்லை!

நான் அவரிடம் கேட்டேன், “நீங்கள் சனி, ஞாயிறுகளில் என்ன செய்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள்! பிறர் படும் துன்பங்கள் பற்றி எப்போதாவது ஆதரவுடன் கேட்டது உண்டா? அதை தீர்க்க முயற்சி செய்தது உண்டா?”

அவரது மகிழ்ச்சி அவரிடம்தான் உள்ளது. ஆனால் ஒளிந்திருக்கிறது. அதை வெளிக்கொணர அவர் முயற்சிக்க வேண்டும். அவருக்கு பிரச்னைகள், சாவால்கள்தான் இன்பம். அவற்றைத் தீர்க்க அவர் காட்டும் ஆர்வமே அவரது உற்சாகத்தின் ஒளிவிளக்கு. எப்போது பிரச்னைகள், சவால்கள், இடையூறுகள், தடைகள் இல்லாத அளவு அவரது வாழ்க்கையும் தொழிலும் ஒழுங்குப்படுத்தப்பட்டுவிட்டதோ, அப்போது அவரது உற்சாகம் வடிந்து போய்விட்டது.

சில பேருக்கு எப்போதும் பிரச்சனைகளை சந்திக்கின்ற வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள்.

மகிழ்ச்சியாக மனதை வைத்துக்கொள்வது ஒரு அரும்கலை.

உற்சாகத்தை வெகுசுலபமாக ஏற்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நம்மில் பலர் அதற்கான சிறு முயற்சிகூட செய்வது இல்லை.

“Enthusiesm can be cultivated” என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல் என்கிற தன்னம்பிக்கைச் சிந்தனையாளர். இதற்கு சுலபமான வழி மற்றவர்களை பாராட்டுதல். வீட்டில் உள்ளவர்களை, அலுவலகத்தில் உள்ளர்களை, பொது இடங்களில் சந்திப்பவர்களை மனம் திறந்து பாராட்டத் தயங்காதீர்கள். ஒருவரை பாராட்டும்போது அவர் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி உங்களுக்கும் பரவுகிறது. உங்களைச் சுற்றி மகிழ்ச்சியின் காந்த அலைகள் பரவுவதை உணரலாம். பாராட்டுகின்ற குணத்தை மனம் என்ற பழக்கூடைக்குள் முதலில் அடுக்கி வையுங்கள்.

அடுத்து நல்லெண்ணம் என்ற வாழைப்பழம். நல்ல நல்ல எண்ணங்களை மனதில் ஒன்றன்பின் ஒன்றாக பதிய விட்டால் அது வளர்ந்து மனதை பூங்காவனம் ஆக்கிவிடும். தீய எண்ணங்களை பதியவிட்டால் அது வளர்ந்து மனதை முட்செடிகள் நிறைந்த கானகம் ஆக்கிவிடும்.

நல்ல எண்ணம் என்பது என்ன? என்பதனை பாரதியின் கவிதைகளை படித்தாலே விளங்கும்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்

வறுமையில் உழன்றபோதும் மகாகவி பாரதி பராசக்தியிடம் வேண்டும்போது என்னவெல்லாம் கேட்கிறான் பாருங்கள்! நல்ல எண்ணங்கள் வேண்டும்; நல்ல ஆசைகள் வேண்டும்; அவையெல்லாம் நிறைவேறவேண்டும் என்று கேட்கிறான்.

‘செல்வ வளம் வேண்டும்; சொகுசு வாழ்க்கை வேண்டும்’ என்று கேட்கவில்லை. எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ண வேண்டும்’ என்கிறான்.

நல்ல எண்ணங்கள்தான் நம்மை வாழவைக்கும்; தலை நிமிர வைக்கும்; புகழுடன் நடைபோட வைக்கும்; மற்றவர்களை நம்மிடம் மரியாதை கொள்ள வைக்கும்; இனிய நட்பு, இனி சுற்றம் ஏற்படுத்தித் தரும். வாழக்கையை ஒளிமயமனாது ஆக்கித்தரும். எனவே மனதில் நல்ல எண்ணங்களை வாழைப்பழங்களை அடுக்கி வையுங்கள்.

அடுத்து அச்சமற்ற தைரியப் போக்கினை ஆரஞ்சுப் பழங்களாக மனம் என்கின்ற பழக்கூடையில் இடம்பெறச் செய்ய வேண்டும். மீண்டும் பாரதிதான் நினைவுக்கு வருகிறான்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்று தலைநிமிர்ந்து நிற்கின்றான்.

“உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்….
இச்சகத்தில் உள்ளோர் எல்லாம் எதிர்த்து
நின்றபோதிலும்…
அச்சமில்லை”

என்கிற முறுக்குமீசை கவிஞனின் மனதிடம், தைரியம், வீரம், அச்சமற்ற தன்மை நம்மை வியக்க வைக்கின்றது.

“Keep your fears to yourself and share your courage with others” என்கிறார் Robert Louis Stevenson. உங்களை பயங்களை உங்களிடமே வைத்திருங்கள். உங்கள் தைரியத்தை, வீரத்தை மட்டும் அடுத்தவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அதைரியத்தை பயங்களை, அச்சங்களை மற்றவர்களிடம் பங்குபோட்டுக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. பாதிபேருக்கு அதில் சந்தோஷம், மீதி பேருக்கு அதில் அக்கறை கிடையாது. எனவே உங்கள் அச்சங்கள் உங்களோடு இருக்கட்டும். முதலில் தைரியமானவராக, அச்சப்படாதவராக நடிக்கத்தொடங்குகள். பிறகு நடிப்பு உண்மையாகிவிடும். நீங்கள் அச்சமற்றவராகவே மாறிவிடுவீர்கள்.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா”

என்ற பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். தைரியம் தானே வரும். அச்சப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்த்து நின்றால் எதையும் வெல்லலாம்.

இந்த நல்ல பழங்களை மனம் என்ற பழக்கூடையில் அடுக்கி வைத்து உணவருந்தும் மேசையில் வையுங்கள். உடம்பும், மூளையும், ஆன்மாவும் மணக்க மணக்க வாசனை வீசுவதை உணரலாம்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு