Home » Cover Story » சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை

 
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை


செந்தில்குமார் இரா
Author:

நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல, அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா காந்தியடிகள்.

அந்த நம்பிக்கை பலமாக்கிக் கொண்டு வெற்றி மனிதராக உலா வருபவர்,

ஒவ்வொரு நாளையும், நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதே வெற்றி பெறுவதற்கான பயிற்சி முறையென்று இளைய தலைமுறைக்கு நல்வழிகாட்டும் பண்பாளர்,

தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும் என்று ஆற்றல் மிக்கவர்களை உருவாக்கிட நண்பர்களுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர்,

நல்வாழ்வு என்பது நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. என்பதற்கேற்ப தெற்கு ரயில்வேயின் உயரிய விருதினை 2004, 2005-ம் ஆண்டும்,

நமது இந்திய ரயிலவே துறையின் மிக உயிரிய விருதான ரயில்வே மினிஸ்டர் அவார்ட்ஐ (Outstanding Serviece-க்காக ) 2006ம் ஆண்டும் பெற்ற சிறப்பிற்குரியவர் சென்னை சதர்ன் ரயில்வே முதுநிலை கோட்டமேலாளர் (பாதுகாப்பு) திரு. இரா. செந்தில்குமார்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும். இன்றே “நேர்முகம்” கொடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் செயல்படுகிறவருக்குதான் இந்த உலகம் சொந்தம் என்று எமர்ஸனின் கருத்தை முன்வைத்த அவரோடு இனி நாம்.

உங்கள் இளமைப்பருவம் குறித்து?

விவசாயம் சார்ந்த குடும்பத்தில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். அப்பா V. இராமச்சந்திரன், அம்மா R. திரிபுர சுந்தரி, திண்டிவனம் தான் எனது சொந்த ஊர். நான் செங்கல்பட்டில் 10 வது வரை படித்தேன். மேல்நிலைக் கல்வியை சென்னையில் முடித்தேன். சாதனையாளனுக்கு மட்டுமே கிடைக்கும் பெருமையை நாமும் பெற்றுவிட வேண்டும் என்கிற எண்ணம் பள்ளிக் காலத்திலிருந்தே இருந்து வந்தது. அதற்கான தேடல் அதிகமானது.

விவசாயம் சார்ந்த படிப்பை படித்த நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் கொள்ளக் காரணம் ?

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கொரு ஆங்கில ஆசிரியர் இருந்தார். அவர் ஒவ்வொருவரிடமும் எப்படி பழகவேண்டும், எப்படி செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். என்று அறிவுறுத்தியதின் மூலமாக நிர்வாகத்துறை மீது ஆர்வம் அதிகரித்தது. இத்துறை மீது ஈடுபாடு வருகின்றபோது நம்முடைய சேவையின் எல்லை அதிகமாகும் என்பதுவும் காரணமாகும். மேலும், இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி என கல்வி நீளும்போது அங்கிருக்கிற மாணவர்கள் முதன்மை நிலைத் தேர்வுகளுக்கு (சிவில் சர்வீஸ்) தயார் ஆவதை அறிந்து எனக்குள்ளும் அத்தேர்வு எழுத ஆவல் பிறந்தது.

எதிர்வரும் இளைய தலைமுறைக்காக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டதை பற்றி சொல்லுங்களேன்?

M.Sc. (Agri Plant Reading & Genetics) படித்துக்கொண்டிருக்கும்போது இத்தேர்வின் மீது ஈடுபாடு வந்தது. ஆனாலும் படிப்பை முடித்த பின்புதான் அதிகம் ஆர்வம் காட்டி செயல்பட முடிந்தது.

என்ன தேர்வு எழுதப்போகிறோம். அதற்காக நாம் எந்தப் பாடத்தை எடுக்கப்போகிறோம் என்பதை தீர்மானமாக முதலில் ஒருமுடிவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

படித்துக்கொண்டிருக்கிற பாடப்பிரிவு சார்ந்துதான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. மொழிப்பாடமாக தமிழும் விருப்பப்பாடமாக வேறு பாடப்பிரிவுகளையும் எடுத்து படிக்கலாம், நான் வேளாண்மையும் தமிழும் எடுத்து முடித்தேன்.

பொதுவாக இந்தத் தேர்வில் எல்லோரும் எந்தப் பாடத்தில் அதிக வெற்றி பெறுகிறார்களோ அந்தப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வெற்றிபெறுவது சிறப்பான ஒன்றாகும்.

நான் படித்த கால கட்டத்தில் கோவை, சென்னையில் அதிகம் பயிறசிக் கூடங்கள் இல்லை. தற்பொழுது நிறையவே இருக்கிறது.

தேர்வுக்கு படிக்க உகந்த நேரங்கள் குறித்து?

நான் காலையில் 4 மணிக்கு மேல் வழக்கமாக எழுந்துவிடுவேன். இரவில் நீண்ட நேரம் நான் படிப்பதை தவிர்த்துவிடுவேன். ஒரு நாளைக்கு தூங்குவது தவிர குறைந்தது ஐந்தாறு மணி நேரங்களாவது விளையாட்டு, பொழுதுபோக்கு நேரம் ஒதுக்கிவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

6.00 to 8.30 படிப்பு 8.30t o 9.30 இடைவெளி
9.30 to 2.30 படிப்பு 12.30 to 2.30 இடைவெளி
2.30 to 6.00 படிப்பு

அதற்குப் பிறகு விளையாட்டு, உணவு மீண்டும் 10.30 வரை படிப்பு என்று நேரத்தை திட்டமிட்டு படிப்பது வெற்றி தரும்.

படிப்பு பொறுத்தளவில் புத்தகத்தில் உள்ளதை நேரிடையாக படிப்பது நல்லது. நேரடியாக புத்தகத்தலிருந்து படிப்பது அப்படியே மனதில் பதிவாகிவிடும். சிலபேர் நோட்ஸ் எடுத்து படிக்கச் சொல்வார்கள் – கடையில் தனியாகவே இது விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால், எனக்கு இதில் உடன்பாடில்லை. பல்வேறு வினாத்தாள்களை சேகரித்து அதன் மூலம் தேர்வுக்கு தயார் செய்யலாம். பழைய கேள்விகளை வெவ்வேறு கோணத்தில் தயார் செய்து படிக்கலாம். கையெழுத்து நல்ல முறையில் இருத்தல் மிக மிக அவசியம்.

டெல்லயில் பயிற்சி எடுப்பது குறித்து?

ஒருவருட காலம் இங்கு பயிற்சி எடுக்க முடியும். நான் ஆறுமாத காலம் பயிற்சி எடுத்தேன். நிதியை பொறுத்தளவு நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். கோட்சிங் கிளாஸில் எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது இல்லை. பாடத்திட்டத்தில் தேவையானதற்கு மட்டும் பணம் கட்டிப் படித்துக் கொள்ளலாம்.

தொடக்க கால பணிகளைப் பற்றி…?

IRTSல் 1994ல் தேர்வானேன். 11/2 வருடம் தொடக்க நிலைப் பயிற்சியை இரயில்வேக்காக பரோடாவில் முடித்தேன். பயிற்சி முடித்தவுடன் தெற்கு ரயில்வேயில் சென்னை, பாலக்காடு, திருவனந்தபுரம், மதுரை என பணியாற்றி தற்பொழுது சென்னையில் பணியாற்றி வருகிறேன்.

நிர்வாகத்துறை சார்ந்த பணியில் சிறந்து விளங்கும் நீங்கள் நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

1. அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுதல்
2. ஒரு செயலை இவர் செய்தால் நன்றாக இருக்கும் என அறிந்து அவரை அச்செயலை செய்யத் தூண்டுதல்
3. திறமை அறிந்து செயலை பகிர்ந்தளித்தல்
4. ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக வேலை வாங்குதல் சிறப்பு. உயர் அதிகாரி என்று பாராமல் எல்லாமட்ட தொழிலாளர்களிடம் நன்றாக நெருங்கி அவர்கள் செய்யும் பணிகளைப் பற்றி அறிந்துகொண்டு செயல்படுதல் பெரும் வெற்றியைத் தரும். அதன் மூலம் மனித உறவுகளும் பலப்படும்.

நிர்வாகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நீங்கள் எப்படி தீர்வு கண்டீர்கள்?

ஒரு உயர் அதிகாரி ஒன்று சொல்வார், அடுத்த உயர் அதிகாரி இன்னொன்று சொல்வார். இப்படி நடக்கும் பொழுது நாம் பொறுமை காத்து அணுசரணையாக சரியாக நடந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

ஒரு செயலை சொல்லும்போது இது எந்தளவு சாத்தியமானது என்பதை ஆராய்ந்துணர்ந்து அதன்படி செயல்பட்டால் பிரச்னைகள் குறைவாகும்.

மேலதிகாரிகளின் வழிகாட்டுதலில் தவறுகள் இருந்தால் அதை உரிய அதிகாரியிடம் சரியான முறையில் தெரிவித்து மனச்சங்கடம் ஏற்படா வண்ணம் நடந்துகொள்ளுதல் கூட பணியில் பிற்காலத்தில் ஏற்படும் சங்கடங்களை குறைக்கும்.

அசைக்க முடியாத உறுதியும், திடசித்தமும் கொண்டவர்கள் தன் வழியைத்தானே உருவாக்கிக்கொண்டு சாதிக்க முடியாத காரியம் என்று எதுவும் இல்லை என்று நிரூபித்து விட முடியும்.

எதிர்வரும் காலங்களில் இரயில்வே துறையில் இளைஞர்களுக்குள்ள வேலை வாய்ப்பைப் பற்றி..?

கடந்த மூன்ற வருடங்களுக்கு முன்னால் நமது ரயில்வே துறையில் ஆட்கள் சேர்ப்பு என்பது குறைவாகத்தான் இருந்தது. நிறைய ரயில்வே பணிகள் நடந்து வருவதால் தற்பொழுது ஆட்கள் சேர்ப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே ரெக்ரூமண்ட் போர்டு மூலமாக குரூப் C, குரூப் Dதேர்வு எழுதி நிறைய வாய்ப்புகளை பெறலாம்.

தற்பொழுது தாங்கள் சார்ந்திருக்கும் இரயில்வே துறையில் சிறப்புகள்/ செயல்பாடுகள் குறித்து…?

நமது இரயில்வே துறையின் வளர்ச்சி எல்லோரும் பாராட்டும்படி வளர்ந்து வருகிறது. 50 வருடங்களுகு முன்னால் இருந்த சதவீதத்தை விட பல மடங்கு சதவீதம் வளர்ந்திருக்கிறோம். நான் பணியில் அமர்ந்த கால கட்டத்தில் சாலை வசதிகள் அதிகம் ஆகிக் கொண்டிருந்து. அதனால் ரயில்வேக்கு நெருக்கடிகள் அதிகமானது. இப்பிரச்சினையிலிருந்து விடுபட பல்வேறு சிறப்பான திட்டங்களின் மூலமாகவும், அதிகார பகிர்ந்தளிப்பின் மூலமாகவம் எக்சஸ் ஓவர் ரெவின்யூ இரண்டாயிரம் கோடி என்றிருந்தது. கடந்தாண்டு 20 ஆயிரம் கோடி அளவு உயர்ந்திருக்கிறது.

சேலம் இரயில்வே கோட்டம் அமைவதின் சிறப்புப் பற்றி….?

புதிதாக ஒரு கோட்டம் உருவாகும்போது அந்நகரைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

மக்களின் தேவைக்கு உண்டான வேலைகள் வேகமாக நடக்கும்.

புதுப்புது ரயில்களின் போக்குவரத்து கிடைக்கும்.

நேரிடயாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வளர்ச்சிப் பணிகள் அதிகமாகும்.

மக்களின் தேவைக்கேற்ப ரயில்வே நிர்வாகத்தில் சீரமைப்பு உண்டாகும். இப்படி நிறையக் காரணங்கள் சொல்லலாம்.

இன்றைய இளைஞர்களின் பலம், பலவீனம் பற்றி…?

இளைஞர்களின் பலம் எதிர்காலத்தை நினைத்து அதற்கேற்றவாறு வேகமாகவும், விவேகமாகவும் தகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவது. இவர்களின் அற்புத ஆற்றல்களின் வெளிப்பாட்டினால் இன்றைக்கு தொழில் துறையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். நிறைய IT இண்டஸ்ட்ரீஸ், ஆட்டோ மொபைல் என வளர்ச்சி அற்புதமாக இருக்கிறது. மேலை நாடுகளில் கணினி சார்ந்து எத்தனை ஆற்றல்களோடு எத்தனை நமது இளைஞர்கள், பாராட்டுக்கள்!

அதே சமயம் பலவீனம் வீணான பொழுதுபோக்கு நிகழ்வு சார்ந்து (சினிமா) தன்னை தொலைத்துக் கொள்வது.

ஒருவரின் வெற்றிக்கு பெரிதும் காரணமாகும் தன்னம்பிக்கை குறித்து…?

எதையுமே எளிதில் பெற்றிட முடியாது. கடினமான உலகில் எடுத்துக்கொண்ட இலட்சியத்தை நோக்கி நகரும்போது ஏற்படும் தடைகளைக் கண்டு சோர்வு அடையும்போது உசுப்பி விடும் உன்னத சக்தி தன்னம்பிக்கை. என்னை இன்று இந்தளவு உயர்த்திருப்பது தன்னம்பிக்கைதான். எனது நண்பர்கள், பெற்றோர்கள் தந்த நம்பிக்கை வார்த்தைகள் தான் நான் இன்று பெற்றிருக்கும் இந்த வாழ்க்கை.

மாறிவரும் நாகரீக உலகில் ஒருவர் தன்னை எப்படி மாற்றிக்கொண்டால் வெற்றியின் சிகரத்தை எட்ட முடியும்?

தேவையில்லாத ஒழுக்கக்கேடான செயலை எளிதாகப் பின்பற்றுவதிலிருந்து விடுபட்டாலே வெற்றி பெற்றுவிடலாம்.

உடை, உணவு (Fast Food, Junk Food) செயல்பாட்டு ஒழுக்கங்களில் மேற்கத்திய நாடுகளை பின்பற்றுவதால் இன்றைக்கு இளமையிலே, இருதய, உடல் பருமன் இரத்தக்கொதிப்பு நோய்களுக்கு ஆளாகி வேதனைப்பட வேண்டியதாக இருக்கிறது.

உடை, உணவு முறைகளை பின்பற்றும் அதே சமயம் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களின் உடல் உழைப்பு, உறுதி தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு, ஆர்வம் போன்றவற்றிலும் பின்பற்றி, நம்முடைய கலாச்சாரத்தோடு வாழ்ந்தோமாயானால் வெற்றிச் சிகரத்தை எளிதில் எட்டலாம்.

திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு நம்பிக்கையுடன் உழைக்கும் மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டால் இங்கு சாதிக்க முடியாததென்று எதுவுமே இல்லை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2007

சிந்தனைத் துளி
யானையின் மனோபாவம்
மனம் மருந்து மனிதநேயம்
ரியல் ரிஸ்க்
இரத்தக்கசிவை நிறுத்துவது எப்படி?
மனதின் மொழி
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்
தேர்வுகளுக்கு தயாராதல் – I
வேரில் பழுத்த பலா
கேள்வி பதில்கள்
புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்
உண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்
கோடீஸ்வரர்களின் நேசம்
உயிரியல் தொழில்நுட்பம் (Bio-technology)
அகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
குழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…
தளர்ச்சி விடு முயற்சி தொடு
சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை
கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்!
இதுதான் வாழ்க்கை
விஷம் குடித்தால்….
விடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)
கடமைகளை மறக்கலாமா
வெற்றிக்குத் தேவை பொறுப்பு
மாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
பட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்