Home » Articles » வேரில் பழுத்த பலா

 
வேரில் பழுத்த பலா


கமலநாதன் ஜெ
Author:

வீட்டிற்குள் பழைய தேவையற்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் செல்கிறீர்கள். தூசியும் அழுக்குமாக இருக்கும் அந்த அறைக்குள் 5 நிமிடம்கூட இருக்க முடிவதில்லை. வெளியில் வேகமாக வந்து முகம், கை கால்களை தண்ணீரால் கழுவிக்கொண்டு புதிய பூத்துவாலையால் துடைத்துக் கொண்டு மின்விசிறியை ஓடவிட்டு வரவேற்பறை சோபாவில் சாய்கிறீர்கள். மணம் நிறைந்த அத அறையின் இனிய சூழலில் சுகமும் மகிழ்ச்சியும் கூட இனிய உறக்கம் கண்களைத் தழுவ இரண்டு மணி நேரம் துயில் கொள்ளுகின்றீர்கள்.

ஆனால் பொறாமையும் வஞ்கமும் இச்சையும் ஏக்கமும் நிறைந்த இருட்டான மனதோடு வாழ எந்த தயக்கமும் இல்லை. இருட்டான எதிர்மறை எண்ணங்களோடு இதயத்தை வைத்திருந்தால் நாளாக நாளாக பழைய பொருட்களை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தது போல வாழ்க்கைமாறிப் போகும். வரவேற்பறையின் சுகந்தம் போல மனதை மணம்வீசும் இனிய எண்ணங்களால் நிரப்பிக் கொண்டால் வாழ்க்கைவசந்தமாக இருக்கும். இனிமை, அன்பு, தன்னம்பிக்கை மனித நேயம் இவற்றால் மனதை நிருப்புங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிவீசும் மாளிகையாக மாறுவதை உணரலாம்.

தண்ணீரின் தன்மை அது இருக்கும் பாத்திரத்தின் தன்மையைப்பொறுத்து மாறுவது போல மனித வாழ்க்கையின் தன்மை மனதின் தன்மையைப் பொறுத்து மாறுகின்றது. ஆக்கபூர்வமான சிந்தனைகள் கொண்டவனின் வாழ்க்கை ஆனந்த மயமானதாக அமையும். வில்லிலிருந்து புறப்படுகின்ற ‘விண்’ ணென்ற தன்மைதான் நிர்ணயிக்கின்றது.

மனதின் தன்மை என்பது ஊக்கமே
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
ஊக்கம் உடையானுழை”

என்பது வள்ளுவம்.

“ஊக்கம் உடையவர்களைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு அவர்கள் இருக்கும் இடம் சென்று சேருமாம் வெற்றி. இது திருவள்ளுவர் தரும் நற்செய்தி.

ஆயுள் அதிகம் இல்லையென்று
அல்லியும் ரோஜாவும் அழவில்லை
இலையுதிர் காலம் வந்து போவதில்
சோலைக்குக்கூட சோகமில்லை!
மாதத்தில் பாதிநாள் தேய்ந்துபோவதில்
வானுக்கும் நிலவுக்கும் வழக்கு இல்லை!
வாழ்க்கை என்பதே சோதனைதான்!
சோர்ந்துவிடாமல் சாதிக்கப் புறப்படு!

என்கிறார் கவிஞர் வெற்றிச் செல்வி. இருக்கின்ற துன்பங்களை ஒன்றொன்றாய் எண்ணிப்பார்த்து கவலைப்படாமல் கொண்டிருப்பதே மனித மனத்தின் இயல்பாகி விட்டது. ஆயுள் அதிகம் இல்லை என்று அல்லியும் ரோஜாவும் அழுகின்றனவா பாருங்கள்! இலையுதிர் காலம் ஆண்டுக்கொரு உறை வந்து நாம் கஷ்டப் பட்டு வளர்த்த இலை தழை மலர்களை யெல்லாம் உதிரச் செய்து விடுகின்றனவே என்று சோலை வருத்தப்படுகிறா என்று பாருங்கள்! நிம்மதி என்பது நமக்குக் கிடைத்த வரங்களை எண்ணிப் பார்ப்பதில் தான் கிடைக்குமே தவிர நமக்கு வாய்த்த துன்பங்களை எண்ணிப் பார்ப்பதில் இல்லை. நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் பிறந்த அந்த நாளிலிருந்து இந்தக் கட்டுரையை நீங்கள்படிக்கும் இந்த நிமிடம் வரை எத்தனை அரிய அற்புத அதிசயிக்கத்தக்க வாய்ப்புகளை, நிமிடங்களை, தருணங்களை இறைவன் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான்! அவற்றைப் பட்டியலிட்டுப் பாருத்து மகிழ்ச்சி அடைவதை விட்டுவிட்டு வாய்த்த ஒருசிலதுன்பங்களை எண்ணிக் கொண்டு வாழ்க்கையை வண்ணமிழந்த மலராக மாற்றுவதால் என்ன பயன்?

நல்லதோர் வீணைசெய்தே – அதை
நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

என்று மகாகவி பாரதி பாடுது இதை மனதில் வைத்துதான்.

சங்கீதம் இசைக்க வேண்டிய மனதை சங்கடம் விளைக்கின்ற நிலமாக்கி பாழ்படுத்தலாமா?

விசையுறு பந்தினைப் போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நலமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

என்று வேண்டுகிற மகாகவி பாரதி நல்ல உடலும் நறுமணம் மிக்க மனமும் மனித வாழ்க்கையின் ஆதாரம் என்று சுட்டிக் காட்டுகிறான்.

நவீன வாழ்க்கை பரபரப்பும் முணு முணுப்பும், சலிப்பும், ஏமாற்றமும், விரக்தியுமாக நகர்ந்து கொண்டிருப்பதால்தான் மன அமைதி என்பது கிட்டாப் பொருள் ஆகிக்கொண்டிருக்கிறது. தோல்வி எண்ணங்கள் மனதைவிட்டு அகலாமல் மனதை அழுத்திப்பிடித்துக் கொண்டு நிகழ்காலத்தில் வாழ விடாமல், நிகழ்காலத்தை நினைக்கவிடாமல் சோர்வுதரும். பழைய கனவுகளையே பற்றிக் கொண்டு நம்மைப் பாடாய் படுத்துகின்றது. ஒருநாளில் ஆயிரம் சரியான செய்லபாடுகளை நமது உடல் நிகழ்த்துகின்றது. கைகள், கால்கள், செவிகள், கண்கள் தமது கடமைகளை சரிவரச் செய்கின்றன. இருபினும் யாரோ ஒரு நண்பர் வந்து நம்மிடம் வருந்தத்தக்க ஓரிரு செய்திகளை ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டுச் செல்கின்றனர். அவ்வளவுதான்! நமது ஆயிரம் சரியான செயல்பாடுகளால் விளைந்த உற்சாகம் வற்றிப் போய்விடுகின்றது. உடல் பதறுகின்றது. ஐம்புலன்களும் நிலையிழக்கின்றன. சீற்றம் கண்களை சிவக்கச் செய்கின்றது. மனம் அமைதியிழந்து அலைபாய்கின்றது.

ஏன் இந்த அவலநிலை! பூத்துக் குலுங்கும் ஆயிரம் மலர்களைப் பார்க்காமல் அந்த ந்ந்தவனத்தின் ஓரத்தில் ஓடும் சாக்கடையைப் பார்ப்பதால் என்ன பயன்?

இந்த நிலையிலிருந்து விடுபடவேண்டும். அதற்குதான் வெற்றியையும் தோல்வியையும் சரிசம்மாக கருதுகின்ற மனோபாவம் வரவேண்டும் என்கின்றனர். சான்றோர். மகிழ்ச்சியையும், துன்பத்தையும் ஒரேமாதிரி எதிர்கொள்ள வேண்டும். இருடையும் வெளிச்சத்தையும் ஒரே மாதிரி பழகிக் கொள்ள வேண்டும். எந்த நிலை வந்தாலும் ஒரே மாதிரி உணர்வோடு அதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் வரவேண்டும்.

அந்த நாட்டின் ஓர் ஓரத்தில் உள்ள கிராமத்தில் இருந்தார் அந்த ஞானத்துறவி ஆசாபாசங்கள் அனைத்தையும் துறந்த மகான் என்று நாடே கொண்டிடாடியது. அவரை தரிசிக்க ஆவல் கொண்டார் அரசர். படை பரிவாரங்களோடு அந்த கிராமத்தைச் சென்றடைந்தார். ஞானத் துறவியை பழங்கள் காணிக்கை வைத்து தொழுது வணங்கினார். அவரிடம் ஞான உபதேசங்களை கேட்டு மகிழ்ந்தார். இறுதியாக அவரைத் தன்னுடைய அரண்மனைக்கு ஒருமுறை விஜயம் செய்து ஆசிகள் வழங்கவேண்டும் என்று வேண்டினார்.

துறவி கேட்டார்: “யாருடைய அரண்மனை அது?”

அரசர் சொன்னார்: “என்னுடைய அரணம்னைதான்”.

துறவி மீண்டும் கேட்டார்: “உன்னுடையதா? 100 ஆண்டுகளுக்கு முன்பு உன்னுடையதாக இருந்ததா? 100 ஆண்டுகளுக்குப் பின்பு உன்னுடையதாக இருக்குமா?- அவரது பலத்த சிரிப்பொலியால் அந்த பிராந்தியமே அதிர்ந்தது . அரசரின் ‘தான்’ என்ற அகம்பாவம் அந்த நிமிடமே அழிந்தது. எல்லாவற்றையும் பற்றற்று ஒருசேரப் பார்க்கின்ற பக்குவம் பிறந்தது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்