Home » Articles » பாராட்டும் தன்னம்பிக்கையும்

 
பாராட்டும் தன்னம்பிக்கையும்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

பாராட்டும் தன்னம்பிக்கையும்


இனிய வாசகர்களே!

வாழ்க வளமுடன், முன்பொரு காலத்தில் குருகுலக் கல்வி முறையில் பாடம் பயின்ற மாணவர் இருவர், படிப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல குருவிடம் விடை பெற்றனர். அப்போது குரு இருவரிடமும் தலா ஐந்து விதைகளைக் கொடுத்து, “இவை அழகான மலர்ச்செடியின் விதைகள். மூன்று மாதத்தில் பூக்கும். பூக்களைக் கொண்டு வாருங்கள். என ஆசீர்வதித்து அனுப்பினார்.

பூத்த பூக்கள் இருவரும் குருவிடம் கொண்டு வந்தனர். ஒருவர் சிறிய கூடையிலும், மற்றவர் பெரிய கூடையிலும் கொண்டு வந்தனர். இருவரிடமும் குரு விசாரித்தா. பெரிய கூட நிறையப் பூக்களைக் கொண்டு வந்தவர் தெரிவித்தது: தினமும் அன்புடன் செடிகளைத்தொட்டு; அதிக அளவில் பூக்க வேண்டும் என்று கூறியதால், ஏரளமான பூக்கள் கிடைத்தன.

இது சாத்தியமா?… சிந்தித்தால் உண்மை என உணரலாம். நாம் படித்திருக்கிறோம். தூங்கி விட்ட வீரன் தன் தளபதியான நெப்போலியன் வந்து விட்டார் என அறிந்த உடனே துப்பாக்கி என நினைத்து பீரங்கியை தூக்கித் தோளில் வைத்ததை கடமைக்கே இவ்வளவு சக்தி வெளிப்பாடு எனில், பாராட்டின் வெளிப்பாடுகள் எப்படியிருக்கும். பார்ப்போமே!

பாராட்டு – விளக்கம்

நாம் பேசுகிறோம். அல்லது ஒரு செயல் செய்கிறோம். அதனால் மகிழ்ந்தவர்கள் பயன்பெற்றவர்கள், நம் திறமையை உணர்ந்தவர்கள் உள்ளம் நிறைந்து கூறும் வார்த்தைகளே பாராட்டு. பாராட்டு தொடர்ந்தால் அது புகழ் என அழைக்கப்படுகிறது.

இயல்பாக செய்வதால் பாராட்டு பெறுவது ஒரு வகை: பிறரிடம் பாராட்டு பெறவேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு பாராட்டு பெறுவது மற்றொரு வகை. இன்று பாராட்டு, புகழ் வேண்டாம் என்று கூறுபவர்கள் ஒருவருமே இல்லை எனக்கூறலாம். இது ஒரு சக்கரம் போன்றது. ஒரு செயல் அல்லது பேச்சு. அதனால் பாராட்டு, அது தொடரும்போது புகழ். மீண்டும் பேச்சு, செயல்களில் சிறப்பு நிலை,பாராட்டும், புகழும் வரும்போது ஓகோ, நம்மிடம் இவ்வளவு ஆற்றல்கள் திறமைகள் உள்ளதா என வியந்து மகிழ்ந்து மேலும் அவைகளை மெருகேற்றிக் கொள்வோம்.

இயல்பு

பாராட்டுக்கு விருப்பப்படாதவர்கள் ஒருவருமேயில்லை. ஆதிகாலம் முதலே மனிதரின் வாழ்வில் பாராட்டு கலந்து விட்டது. அனைத்துக்கும் மூலமான இறைவனைப் பாராட்டிப் பேசினால், பாடினால் அவர் மனம் மகிழ்ந்து கேட்டவைகளை வழங்கியதாக படித்திருக்கிறோம். பாராட்டுப் பெற்ற மன்னர்கள், அவ்வாறு தனைப் பாராட்டியவர்களுக்கு பரிசு,பொன், பொருள், பதவி என வழங்கி மகிழ்ச்சியை வெளிக்காட்டியுள்ளனர் என்பதை சரித்திர நூல்களில் வாசித்துள்ளோம்.

வீடுகளில் அம்மாவின் சமையலைப் பாராட்டிக்கூறினால், “என் குழந்தைக்கு இது மிகவும் பிடிக்கும்” என மேலும் பக்குவமாய் சமைத்து மகிழ்வுடன் பரிமாறும் தாயார்களை நம் வாழ்வில் பார்த்துள்ளோம். சாப்பிடும்போது, மிகவும் நன்றாக இருந்தது எனப்பாராட்டினால், இன்னும் சிறிது சாப்பிடுங்கள் என்று மகிழ்ந்து பரிமாறும் உள்ளங்களை எல்லா இடங்களிலும் சந்தித்திருக்கிறோம்.

சிறு குழந்தைகள் பாராட்டப்படும் போது, மகிழ்ந்து மேலும் திறமையைக் காண்பிக்க செயல்படுவதை அறிவோம். ஏன்? ஐந்தறிவுள்ள உயிரினங்களும், பாராட்டப்படும்போது அதிக திறமையுடன் ஆற்றலுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றன என்பதையும் அறிவோம்.

ஏனென்றால் பாராட்டுவதும், பாராட்டு பெறுவதும் இறைநிலையின் இயல்புகள். அந்த இறைநிலையே பரிணாம வளர்ச்சியில் தன்மாற்றம் (Transformation) பெற்று நாமாக வந்துள்ளோம். எனவே, நம் மன ஆற்றலுக்கு இணை இறைசக்தி தான். அவ்வளவு ஆற்றல் திறமை நம் அனைவரிடமும் இயல்பாகவே உள்ளன.

வேறுபடக் காரணம்

ஆனால் பலர் தனக்குப் போதிய ஆற்றல் திறமை, தன்னம்பிக்கை இல்லையென அடிக்கடி கூறுவதைக்கேட்டு வருகிறோம். காரணம் என்ன? வளர்ப்பு முறை, சிறுவயதில் ஏற்பட்ட பய உணர்வு, பெற்ற தோல்வியான அனுபவங்கள் இவைகளால் தம் ஆற்றலை அறியாமல், அறிய முடியாமல் அறிந்தும் அதை நடைமுறைப்படுத்தாமலிருப்பதே, மழைநீர் தூய்மையானது ஆனால், எங்கு விழுகிறதோ அத்தன்மை யுடையதாக மாறுகிறது. கோவில் குளத்தில் விழுந்தால் புனிதமானது. சாக்கடையில் விழுந்தால் அசுத்தமானது. இதுபோல், பல கூறலாம். எனவே இறைத்தன்மையுடன் பிறக்கும் ஒவ்வொரு குழ்நைதையும் தன் பெற்றோரின் குணநலப் பண்புகளை இயல்பிலேயே பெறுகின்றன. பிறந்த பின் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அதற்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறது.

அங்கீகாரம் (Recognition)

பாராட்டுக்கு முதல்படி இது. ஒருவரது இருப்பை அறிவிப்பதே அங்கீகாரம். ஊரில் திருவிழா, எல்லோரும் வந்து செல்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் சிறப்பு கவனிப்புகள். இதுவே அங்கீகாரம். நோக்கம் அவர்களது ஆற்றலை கௌரவிப்பது மற்றும் அவரிடமிருந்து மேலும் பல சேவைகளைப் பெறுவது.

இதுபோன்ற நிகழ்வுகள் ஜேஸி ரோட்டரி மற்றும் அரிமா சங்க கூட்டங்களில் முக்கியமானவர்களது வருகையை அறிவித்து அவர்களது இருப்பை அங்கீகரிப்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். பலர் நிறைந்த அவையில் அவர்கட்கு வழங்கப் படும் பிரத்யேகமான பாராட்டே இது.

அளவு முறை

அமிர்தம் உயர்ந்தது. அரியது. ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடுகிறது. அதுபோலவே, பாராட்டும் புகழும். இவை குளிருக்கு இதமான வெயில் போன்றது. நேரம், அளவு அதிகமாகாமல் இருக்க வேண்டும். காற்று வீசுகிறது. அளவாக மெதுவாக வீசினால் சூறாவளி. புயல் என்று நமக்கு உயிர் போன்றது; நம்மை வாழ வைப்பது, அதிகமாகப் பெய்தால் வெள்ளமாகி சேதம் உண்டாக்குகிறது. நல்ல சுவையான உணவு, அளவாக உண்டால் ஆனந்தம் உண்டாகிறது. அதிகமாகச் சாப்பிட்டால் தொந்தரவு உண்டாகிறது.

அதிகமாகப் பாராட்டுபெறுபவர் சிலர் தலைக்கனம் பிடித்து அலைவதைக் காண்கிறோம். அதுபோலவே புகழ் கிடைத்து விட்டால், சாதாரண பாமரனுக்கும் அது தெரிந்து விட்டால், புகழ் பெற்றவர் விருப்பப்படி செயல்பட முடியாது. பாதுகாப்பு வளையத்துக்குள்தான் அவர் பவனி வர வேண்டும்.

எதிர்பார்ப்பு

நண்பர் ஒருவர் சிங்கப்பூர் சென்று வந்தார். டால்பின் மீன்கள் செய்யும் வித்தைகளைப் பார்த்து மகிழ்ந்தாராம். அவைகள் விதவிதமாய் நீந்துவது, கரணம் போடுவது நடனமாடுவது எனப் பலவிதமான சாகஸங்களைச் செய்தனவாம். ஒவ்வொரு முறை செய்து முடித்த பின்னும் சிறு உணவைப்பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்த செயலைச் செய்ததாம்.

பக்கத்து வீட்டுக்காரர் மகன் பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறவில்லை; ஆனால் இரு பாடங்களில் 100% மதிப்பெண் பெற்றார். இருந்தாலும் அப்பா தன்னைப் பாராட்டவில்லையென கண்டித்த தாயையும் கூறி இன்னும் வருத்தப்படுகிறார்.

இந்நிகழ்ச்சிகள் எல்லா உயிர்களுமே பாராட்டை எதிர்பார்க்கின்றன என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

வகைகள்

பெரிய கூட்டங்களில் பேசிய பின், அவரை அருகிலிருப்போர் கை குலுக்கி நன்கு பேசினீர்கள் எனப் பாராட்டுவார்கள். நோக்கம் மேலும் பல இடங்களில் பேசவேண்டும் என்பதுடன் அவர் தயாரிப்புக்கும், பயிற்சிக்கும், கொடுக்கும் அங்கீகாரமே கைகுலுக்கல்.

ஒருவர் செயல்படத் தூண்டுவதும் ஒருவகை பாராட்டுத்தான். “உன்னால் முடியும் நீ சிறு வயதில் மற்றவர்கள் செய்யத் தவறிய ஒரு நல்ல செயலைச் செய்த அனுபவம் உள்ளது. எனவே உன்னால் முடியும்” என்று செயலுக்கு முன்பே பாராட்டுவது அவரது தன்னம்பிகையினை அதிகரிக்கும்; செயல்பட வைக்கும் இவ்வகையான பாராட்டுக்கள் குடும்பம் உறவினர்கள், நண்பர்கள் என எல்லா நிலையிலும் நல்ல சூழலை நிலவச்செய்யும்.

செயற்கரிய செய்வதற்கு உரம் போன்றது பாராட்டு, நடந்து பழகும் குழந்தை விழுந்தாலும் “எழுந்து வா” என்றால் மகிழ்வுடன் துடிப்புடன் எழுந்து நடப்பதை அறிவோம்.

“முடியும் முடியும் என்றால் முடவனும் நடப்பான். முடியாதென்றால் முழு மனிதனும் முடவனாவான்”.

தன்னம்பிக்கை பாராட்டும்

இயல்பாகவே அனைவருக்கும் தன்னம்பிக்கை உள்ளதை நாம் அறிவோம். அதை அதிகரிக்கும் செயலைச் செய்வது பாராட்டு ஒரு பாராட்டு நம் உடல், மூளை, உயிர் சீவகாந்தம், வான் காந்தம் என எல்லா இடங்களிலும் பதிவாகிறது. தகுதியின் காரணமாகப் பாராட்டுப் பெறும் ஒருவர் மேலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார். பயம், தோல்வி, அவச்செயல் இவைகளால் தன்னம்பிக்கை குறைந்து செயல்பட்டு வருந்துவர். பாராட்டு என்பது வாடிய பயிரை வாழவைக்கும் மழைத்துளி போன்றது. துணிவு, திறமை, இவற்றை அதிகரித்து சவால்களை எதிர்கொள்ள வைக்கும்.

எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காவிட்டால் தான் என்ற அகந்தை (ego) யும் உண்டாகும். சமீபத்தில் அரசில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு பெற்றேன். அவரது உயர் அதிகாரி இவரிடம் கூறியதாய் ஒரு செய்தியைத் தெரிவித்தார். ” Don’t show your intelligence before your superiors”. அதாவது நம் புத்திசாலித்தனத்தை, திறமைகளை உயர் அதிகாரிகள் முன் காண்பிக்கக்கூடாது என்பது பொருள்.

இப்போது புரிந்ததா? திறமைசாலியான புத்திசாலியான பலரும் அரசாங்க அலுவலகங்களில் பணியிலிருந்தும் பொது மக்களுக்கு நிறைவான சேவை செய்ய வாய்ப்பு பெறாமல் உள்ளனர். ஆனால் தனியார் நிறுவனங்களில் தேடிக் கண்டு பிடித்து திறமையானவர்களை ஊக்கப்படுத்தி, வளர்ச்சி காண்கின்றனர். வயதில் பெரியவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையைக்கூட தனியார் நிறுவனங்கள் அளித்துள்ளதாய் அறிகிறேன்.

கருத்துக்களை சுதந்திரமாய் தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கவே இதுபோன்ற சலுகைகள். ஆக பாராட்டும் புகழும் ஒருவரிடமுள்ள தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து சிறப்பாகச் செயல்பட வைக்கும் பாராட்டுவோம்; பாராட்டுப் பெறுவோம்.

தன்னம்பிகையுடன் வாழ்வோம் வாழ்க வளமுடன்
-தொடரும்.

 

3 Comments

  1. senthil says:

    நல்ல katturi

  2. veeramani says:

    super

  3. rathnam says:

    today good news for me

Post a Comment