Home » Cover Story » திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!

 
திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!


செங்கோட்டுவேலு ஜி
Author:

தன் இலக்கை சரியாகத்தெரிந்து கொண்டு அதை நோக்கி விடாமுயற்சியுடன் செல்பவர்கள் வெற்றியடைகிறார்கள். அந்த வெற்றியாளர்களின் வரிசையில் தனி சிறப்பு இடம் பிடித்திருப்பவர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் சென்னை, போரூர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இருதய இயலின் இணைப்பேராசிரியர் டாக்டர் ஜ. செங்கோட்டுவேலு.

இவர் பிரான்ஸைச் சேர்ந்த டாக்டர் மேரி கிளாட் மோரிஸ் என்பவரின் கீழ் தன்னுடைய பெல்லோஷ்ப் பின் இன்டர்வென்ஷனல் கார்டியலாஜியை நிறைவு செய்தவர். இந்திய மற்றும் சர்வதேச இதய ஆராய்ச்சி இதழ்களிலும், யூரோ பி.சி. ஆர் உள்ளிட்ட புத்தகங்களிலும் தன்னுடைய கட்டுரைகளை வெளியிட்டுள்ளவர். பல தேசிய மற்றும் சர்வதேச இருதய இயல் கழகங்களில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்துள்ளவர்.

பல தேசிய மற்றும் சர்வதேச இருதய இயல் பயிலரங்களில் சிறப்புப் பேச்சாளராக அழைத்து சிறப்பிக்கப்பட்டவர். CTO குறித்து ஜப்பானிய மருத்துவர்களை வரவழைத்து சென்னையில் ஒருங்கிணைத்த கூட்டத்தை நடத்திய சிறப்புக்குரியவர்.

முன்னிலை இருதய சிகிச்சை நிபுணராக இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஏஞ்ஜியோ சிகிச்சைகளை செய்துள்ளவர். இந்திய இருந்த ஆராய்ச்சி இதழ் இவரை Focus issueவிற்கு சிறப்பு ஆசிரியராக அழைத்து நியமித்த பெருமைக்குரியவர்.

மேலும்,

 • பைவாப்ளோ ரெஜிஸ்டிரியில் பிரதான ஆராய்ச்சியாளர்,
 • ஒயாஸிஸ் சிக்ஸ் ஸ்ட்டியின் கூட்டு ஆராய்ச்சியாளர்.
 • ஆல்கஹால் செப்டல் அப்லேஷன் உள்ளிட்ட 11 ஆய்வுத்தாள்களை எழுதியிருக்கக்கூடியவர்.
 • யூரோ, பிசிஆர், சிங்கப்பூர் லைவ் மற்றும் API கோர்ஸ் புத்தகங்களுக்கு தன்னுடைய பங்களிப்பை தந்திருப்பவர்.
 • பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது – 2007 (ஆல் இந்திய கல்சுரல் அகாடமி) அகில இந்திய கால்ச்சார மையம் விருதுகளை பெற்றிருப்பவர்.
 • ரோட்டரி கிளப்புடன் இணைந்து எண்ணற்ற இருதய முகாம்களில் பங்கெடுத்து வருபவர்.
 • சென்னை மெரீனாவில் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இருதய விழிப்புணர்ச்சி நிகழ்வை சிறப்புடன் நடத்தியவர்.

“இந்த உலகத்தில் யாருமே தோற்பதற்கு வாய்ப்பில்லை. நான் தோற்று விட்டேன்” என்று ஒப்புக்கொள்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள். அதனால் கிடைக்கின்ற வாய்ப்பைச் சவாலாக எடுத்துக் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றியின் சிகரம் தூரம் அல்ல நமக்கு மிக அருகாமையில்தான்” என அறிஞர்களின் கருத்துக்களை மேற்கொள்காட்டி எளிமையாக, எதார்த்தமாக நம்மிடையே அன்பு கலந்து பேசிய மருத்துவரோடு நாம் இருந்த நேரம் ஆனந்தமான நேரம்.

உங்கள் இளமைப்பருவம் குறித்து?

நான் பிறந்தது, வளர்ந்தது, மேல்நிலை கல்வி வரை படித்து எல்லாம் சேலத்தில் தான். அப்பா குணசேகரன், அம்மா கிருஷ்ணவேணி, தம்பி பாலாஜி, நான் இப்படி ஒரு அளவான குடும்பம்.

எனக்கு இளமையில் இருந்தே மருத்துவத்துறை மீது ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. காரணம் எங்கள் குடும்பம் சார்ந்து யாருமே மருத்துவராக இல்லை. அது மட்டுமல்லாமல் அப்பாவுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. நாம் ஏன் இதய மருத்துவராக முயற்சிக்ககூடாது. மருத்தவராகி அப்பாவின் இதயப்பாதிப்பிற்கு ஏன்? தீர்வுக் காணக் கூடாது என தீவிர இலட்சியத்தை மனதுக்குள் ஆழமாகப் பதியவைத்தேன். செயல்பட்டேன். 1986-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து. MBBS படித்தேன். அதற்குப் பிறகு சென்னையில் MD Caridiology யும், DNB Cardiology பட்டம் புதுடில்லியிலிருந்தும் கிடைக்கப்பெற்றேன்.

இளம் வயதிலேயே சாதிப்புக்குரிய மருத்துவராக திகழ்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! இந்த இடத்தை எட்டுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்துச் சொல்லுங்களேன்?

இந்தியாவிலேயே முதன் முதலாக ஏஞ்சியோ பிளாஸ்டிக் செய்தவரும் இன்டர் வென்ஷனல் கார்டியாலஜி சிறப்பு மருத்துவ நிபுணருமான டாக்டர் திரு. மாத்யூ அவர்களுடன் இரண்டு வருடம் அப்பல்லோ மருத்துவமனையில் பணி புரிந்தேன்.

அதற்குப் பின்பு 2002 -ல் பிரான்ஸ் சென்று பணியாற்றினேன். இங்கு சென்று பணிபுரிதல் என்பது சாதாரணமானதல்ல. காத்திருக்க வேண்டும். மூன்று வருடங்கள் காத்திருந்து வாய்ப்புப்பெற்றேன். நம்முடைய பலம் என்ன? வசதிகள் எப்படி? மருத்துவ ஆற்றல் எந்தளவுக்கு இருக்கிறது? ஃபிரெஞ்சு மொழி தெரியுமா? இப்படி பல்வேறு சோதனைக் கட்டங்களைக் கடந்துதான் பிரான்ஸில் மருத்துப் பணியாற்ற இடம் கிடைக்கும்.

அன்றைக்கு என்னோடு மற்ற மூன்று பேருக்கு மேட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

வருடத்திற்கு 5000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ‘ஏஞ்சியோ பிளாஸ்டி செய்யக்கூடிய சிறப்புப்பெற்ற மையத்தில் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை என்று சொல்ல முடியும்.

உலகத்திலேயே ரேடியல் ஏஞ்சியோ பிளாஸ்டிக் (கை மூலம்) செய்து சாதித்த டாக்டர் திரு ரூலவர்ட் அவர்களுடனும் மருந்து தடவிய ஸ்டென்ட்டை உலகிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்திய டாக்டர் திருமதி. மேரி கிளார்ட் மோரிஸ் அவர்களுடனும் இணைந்து பணியாற்றி காலங்கள் என்னை சாதிக்கத் தூண்டிய காலங்கள். கால நேரம் மறந்து காரியத்தில் (தொழிலில்) கண்ணும் கருத்துமாக இருந்தேன். ஆர்வமாக செயல்புரிந்தேன். சாதிக்க முடிந்திருக்கிறது.

சென்னை போரூர் ராம்ச்சந்திரா மருத்துவக் கல்லூரி பணியில் தங்களை எப்போதிருந்து இணைத்து கொண்டீர்கள்? இங்கு தங்கள் பணியின் சிறப்புகள் குறித்து?

புகழ்பெற்ற இருதய மருத்துவ நிபுணர் டாக்டர் திரு. தணிகாசலம் அவர்களால் 2003 அக்டோபர் மாதம் போரூர் ராமச்சந்திர பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். சேர்ந்த ஆண்டே சென்னையில் முதன்முதலாக “ரேடியல் ஏஞ்சியோ பிளாஸ்டிக்” அறிமுகம் செய்த சிறப்பு கிடைத்தது.

டாக்டர் திரு. தணிகாசலம் அவர்களுடன் இணைந்து அடுத்தடுத்து செயல்புரிந்து எனக்கு பெரும் பயன்பாடாக அமைந்தது. அதன் சிறப்பாக மருத்துவ உலகில் நல்ல ஆங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது 2004லிருந்து இன்று வரை நிறைய பொது நிகழ்ச்சிகள் (Public Programme) உலக அளவு பயிலரங்குகள் (International Conference) உள்ளூர் செயல்முறை பயிலரங்குகள் (Local Workshop) என பலவாறு பங்கெடுத்து வருகிறேன், மேலும்

ரோட்டரிகள் உடன் இணைந்து இன்றைய மருத்துவ முகாம்களில் பங்கெடுத்து வருகிறேன். சென்னையில் இதய நோய் விழிப்புணர்வு முகாம்களை பல பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளோடு இணைந்தும் செய்து வருகிறேன்.

வாழ்க்கையில் போராட்டம் இல்லாமல் பாராட்டுகள் கிடைப்பது அரிது. உங்களுக்கு தொழில் சார்ந்து போராட்டங்கள்?

தொழிலில் போராட்டம் இருந்தது என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஆனால் கார்டியாலஜி முடித்துவிட்டு இன்டர் வென்ஷனல் கார்டியாலஜிக்குள் வருவது என்பது பெரிய சிரமம் என்பதை உணர்ந்திருந்தும் நுழைந்தேன். நமது இந்தியாவில் அந்த மருத்துவ தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது என்பது கடினம். காரணம் என்னவென்றால் அந்த வசதி வாய்ப்புகள் நமக்கு போதுமானதாக இல்லை. இன்றைக்கு ஓரளவு அதில் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். 2000த்திலிருந்து 2007 இன்று வரை தொடர்ந்து செயல் செயல் செயல் என செயல்படுத்திக்கொண்டே இருந்ததினால் தான் இந்நிலையை எட்ட முடிந்திருக்கிறது. இன்றைக்கும் பலர் முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எளிதில் கிடைப்பதில்லை. என்றுதான் இந்தத்துறை இன்னும் இருக்கிறது என்பதற்காக விட்டுவிடாதீர்கள். முயற்சிகள் தான் முன்னேற்றத்தை தரும்.

இளம் வயதிலேயே ‘ஹார்ட் அட்டாக் வருவதற்கு காரணம் என்ன?

1940,1950 களில் இருந்த விட ஜப்பான், ஆஸ்திரேலிய, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் நமது நாட்டில் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம்

கிராமப்புற மக்கள் நகர்புறத்தை நோக்கி இடம் பெயர்தல், நகர்ப்புற வாழ்க்கையில் இருக்கக்கூடிய மன அழுத்தங்கள் ஃபாஸ்ஃபுட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நீண்ட நேரம் இருந்த இடத்தில் அமர்ந்தவாறே வேலை பார்ப்பது, புகை பிடிப்பது, வாழ்க்கை முறை மாற்றங்கள் டயாபடிஸ், இரத்த அழுத்தம் இப்படி நிறையக் காரணங்களால் இளம் வயதிலேயே இதய பாதிப்பு வருகிறது.

2020ல் இந்தியாவில் தான் இதய நோயாளிகள் அதிகம் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். உலகத்திலேயே டயாபடிஸால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக இருக்கப்போவும் நமது இந்தியாவில்தான். டயாபடிஸ் இருந்தால் இதய நோய் வந்துவிடும்.

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களை குடும்பத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளானாவர்களை, மீண்டும் மீண்டும் புகைபிடிப்பவர்களை எல்லாம் இனம் கண்டு அவர்களுக்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே நோயிலிருந்து நிவாரணம் பெறமுடியும்.

பரம்பரை மூலமாக இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கிறாதா?

வருவதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கிறது. Heredidary என்று சொல்லக்கூடிய இதனை தவிர்க்க முடியாததே காரணம். அதிக எடையாலும், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் இருந்தாலும், சர்க்கரை பாதிப்பு இருந்தாலும் விரவாகவே வர வாய்ப்பிருக்கிறது.

இதய நோயில் ஆண்கள் பாதிக்கபடுவது போல் பெண்கள் பாதிக்கப்படுவதில்லையே ஏன்?

ஓவரியில் எஸ்டோரிஜன் என்ற ஹார்மோன் இருக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது பெண்களுக்கு நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். இதனால் இதயத்திற்கு வருகிற இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தாமதப்படுத்தும். இந்த செயல்கூட எஸ்ட்டோரிஜன் என்கிற ஹார்மோன் இருக்கும் வரைதான் பெண்களுக்கு ‘மெனபாஸ்’ வந்து விட்டாலும், கருப்பப்பையை அகற்றும் போது ஓவரிசையும் அகற்றிவிட்டார்கள் என்றாலும் ஆண்களுக்கு வருகின்ற பாதிப்பு போலவே பெண்களுக்கும் வரக்கூடும்.

மற்ற நேரங்களை விட காலை நேரங்களில் அதிகம் ஹார்ட் அட்டாக் ஏற்பட என்ன காரணம்?

அதிகாலை நேரங்களில் ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்பட சிம்பதட்டிக் ஏக்டிவிட்டி என்று சொல்வதின் செயல்பாடு காலையில் அதிகமாக இருக்கும் அதேபோல் இரத்தக்குழாய்களில் இரத்தித்தில் படிய வைக்கிற ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இதன் காரணங்களால் தான் ஹார்ட் அட்டாக் அதிகாலை நேரங்களில் அதிகமாக வருகிறது. பொதுவாகவே அதனால் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும் மாலையில் செய்வது ரொம்பவும் நல்லது என்று நான் சொல்வேன்.

பைபாஸ் சிகிச்சை என்பது இதய பாதிப்பு உள்ளவர்கள் எல்லோருக்கும் அவசியம் தானா?

ஹார்ட் அட்டாக்/ஏஞ்சைனா வந்தது என்றாலே அடிப்படை பரிசோதனையான ECG, ECHO Cardiogram மூலமாக இதயத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்தவுடன் தேவைப்பட்டால் ட்ரெட்மில் பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனையில் தொந்தரவு, ஏற்கனவே இருதய பாதிப்பு இருந்தது என்றால் ஏஞ்சியோகிராம் எடுக்கப்பட வேண்டும்.

ஏஞ்சியோகிராம் எடுத்த பின்புதான் இதயகுழாயில் பாதிப்பு எந்தளவு என்பது தெரியவரும். இதயத்துக்கு இரத்தைத் கொண்டு வர மூன்று இரத்தக்குழாய்கள் இருக்கிறது. அதில் எங்கு அடைப்பு எத்தனை அடைப்பு, எவ்வளவு நீளமா இருக்கிறது? பிரிகிற இடமா? ரொம்ப நாளாக அடைத்து இருக்கிறதா? என்பதை பொறுத்துத்தான் சொல்ல முடியும்.

பொதுவாக இதய சிகிச்சை முறையில் மூன்றுவகை இருக்கிறது.

முதலில் மெடிக்கல் ட்ரீட்மெண்ட்

இரண்டாவது ஏஞ்சியோபிளாஸ்டி இரத்தக் குழாயில் வொயர் சொருகி, பலூனை விரிவடையச் செய்து ஸ்டெண்ட் மூலமாக அடைப்புகளை சரிசெய்வதாகும்.

மூன்றாவது வகைதான் பைபாஸ் சர்ஜரி.

ஆகவே, ஒவ்வொரு இதய நோயாளியின் இரத்தக்குழாய் பாதிப்பைப் பொறுத்து இந்த மூன்று சிகிச்சை முறைகளில் ஏதேனும் ஒன்று மேற்கொள்ளப்படுகிறது.

உலக அளவில் நமது நாடு மருத்துவ துறையில் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது?

உலக அளவில் ஒப்பிடும் போது நாம் அவர்களுக்கு சரிசமமாகவே இருக்கிறோம். சிகிச்சை முறைகள், தொழில்நுட்ப சாதனங்கள் என எந்த ஒன்றும் புதிதாக வருகிறது என்றால் முதலில் யுரோப்பிற்குத் தான் வரும். அங்குள்ள மருத்துவ வசதிகளை /உபகரணங்களை இன்றைக்கு நம் நாடும் சரிசமமாக பெற்றுள்ளது.

மருத்துவ சிகிச்சையில் நம் நாடு முன்னேற்றம் அடைந்து வருவதற்கு காரணம் மருத்துவ சிகிச்சை கட்டணம் குறைவு. மேலும் காத்திருத்தல் என்பது இல்லை. UK போன்ற நாடுகளில் ஒரு பைபாஸ் சர்ஜரி செய்துகொள்ள மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். நம் நாட்டில் காத்திருப்பு என்பது இல்லை. இன்னும் “மெடிக்கல் டூரிசம்” மருத்துவ முறை பரவலாகிடும் போது நம் வளர்ச்சி அற்புதமாக இருக்கும்.

பிரான்சு, அமெரிக்கா, ஸ்ரீலங்கா, ஓமன் போன்ற நாடுகளிலிருந்து வருகை புரிந்து இதய பாதிப்பிற்கு உள்ளான அவர்களுக்கு நான் சிகிச்சை கொடுத்தேன். அவர்கள் தங்கள் நாடு சென்று ஆராய்ந்து பார்த்தபோது தற்போதைய தொழில்நுட்ப முறையை சிறப்புடன் மேற்கொண்டு சிகிச்சை அளித்திருப்பதை பாராட்டியிருக்கிறார்கள். இது நமது மருத்துவ வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

பைபாஸ் சர்ஜரி, ஏஞ்சியோபிளாஸ்டி செய்தவர்கள் எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது?

பைபாஸ் சர்ஜரியோ, ஏஞ்சியோ பிளாஸ்டியோ செய்துவிட்டால், முற்றிலும் இனி இதயப்பிரச்சனை வராது என்று சொல்லிவிட முடியாது. இந்ந சிகிச்சை முறையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட இரத்த அடைப்பை நீக்குகிறது. ஆனால் வேறு இடத்தில் இனி அடைப்பு வராது என்று கூற முடியாது. வேறு இடத்தில் இந்த அடைப்பு வரலாம். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கூட வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே நாளும் உணவுக்கட்டுப்பாடு மருந்து எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

கொழுப்பைச் சேர்க்கக்கூடிய உணவு வகைகளை தவிர்த்து விடுதலினாலும், சர்க்கரை நோய் இருப்பின் அதனை சரிவர கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தலினாலும், வாரத்தில் ஐந்து நாட்களுக்கு 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதனாலும் மீண்டும் வராமல் பாதுகாத்துகொள்ள முடியும்.

மருத்துவத்துறையை பொறுத்த மட்டும் மன தைரியம் என்பது அத்தியாவசியம், உங்களுக்குள் எப்படி?

அந்த தைரியம்தான் என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது. காம்ளக்ஸ் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யும்போது திடீர் என்று எதிர்பாராத விதமாக இடர்ப்பாடுகள் வருவதற்கு வாய்ப்புண்டு. அப்படி ஆகும்போது இரத்தம் குறைவதற்கும் வாய்ப்புண்டு. இதுபோன்ற நேரங்களில் மருத்துவரின் செயல்பாடு வேகமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். கூடவே மன தைரியம் நிரம்ப இருக்க வேண்டும். முடியும் இந்நோயாளியின் உயிரை காப்பாற்றி விடுகின்ற சிகிச்சையை தந்துவிட முடியும் என்கிற மனநிலை எனக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த மனநிலைதான் எனக்கு நிறைய வெற்றிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

ஆய்வு, மருத்துவம், பொது நிகழ்ச்சி என வேலைப்பளு அதிகம் உள்ள நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை எப்படி குறைத்துக் கொள்கிறீர்கள்?

முதலில் திட்டமிடுதல் மூலமாக குறைத்துக்கொள்கிறேன். கடைசி நேரத்தில் திட்டமிடாமல் அவசர அவசரமாக செய்தலை தவிர்த்து விடுகிறேன். அடுத்து உடற்பயிற்சி மூலமாக நாள்தோறும் உற்சாகமாக செயல்படும் மனநிலையை உருவாக்கிக்கொள்கிறேன்.

எல்லவாற்றிற்கும் மேலாக குடும்பத் தாருடன் என் மனைவி (டாக்டர் பூர்ணிமா) இரு குழந்தைகளுடன் (ராகுல், அஸ்வத்) மனம் விட்டுப் பேசி, சிரித்து மகிழ்ந்து கொள்வதின் மூலமாகவும் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்கிறேன்.

எதிர்வரும் காலத்தில் நீங்கள் சாதிக்க நினைப்பது?

உலகில் மிகச்சிறந்த Journalsகளில் என்னுடைய ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன். ஆம் என்னுடைய ஆர்வம் எல்லாம் தற்பொழுது ஆய்வின் மீதுதான் தினமும் 20% நேரத்தை ஆய்விற்காக செலவிட்டு வருகிறேன். இன்னும் நிறைய வித்தியாசமான மருத்துவமுறைகள கண்டுபிடித்து அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த குறிக்கோளாகும்.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

“Focus on one goal” என்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை ஒன்றைத் தீர்மானமாக எடுதுக்கொண்டு அதை அடைந்தே தீர்வது என்கிற எண்ணத்தோடு செயல்பட்டால் எப்படியும் சாதித்து விடலாம்.

போட்டிகள் அதிகமாக இருப்பதால் எதையாவது செய்து எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.

சரியான வழியை தேர்ந்தெடுத்து சரியானவர்களின் வழிகாட்டுதலில் முன்னுக்கு வரவேண்டும்.

நமது பண்பாடு, நமது கலாச்சாரம், நமது குடும்ப ஒற்றுமை போன்றவற்றிலிருந்து விட்டு விலகும் மாற்றங்களை விரும்பும் போது மன அழுத்தம் வரக்கூடும்.

மன அழுத்தம் அதிகமாகும்போது உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடும். ஆகவே நாகரீக மாற்றங்களை உடல்நிலை மனநிலையை மாற்றிவிடாத அளவு ஏற்றுக்கொண்டு வாழ்தல் நலமளிக்கும் என்பதை அறிந்து செயல்படுதல் வேண்டும்.

‘தன்னம்பிக்கை’ குறித்து?

மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல ஆரோக்கியமான சமுதாயம் மலர துணைபுரியக்கூடிய இதழாக வெளிவந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துவரும் தன்னம்பிக்கை படிக்கும் ஒவ்வொருவரையும் வெற்றியாளன் ஆக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்!


Share
 

2 Comments

 1. M. J. SYED ABDULRAHMAN says:

  நன்றி சிறப்பு
  “Focus on one goal”
  என்பதுதான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை ஒன்றைத் தீர்மானமாக எடுதுக்கொண்டு அதை அடைந்தே தீர்வது என்கிற எண்ணத்தோடு செயல்பட்டால் எப்படியும் சாதித்து விடலாம்.
  தன்னம்பிக்கைக்கு நிகர் தன்னம்பிக்கையே
  நன்றி நல்ல விசையம் மனோசக்தி

 2. M. kowsalya says:

  it is useful for me now i know hart problems and how to maintain our hart
  without diseases so i like to thank dr senkottuvelu.j

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்