Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

டாக்டர் பட்டத்திற்கான ஆய்வின் நோக்கம்

அங்கொன்றும் இங்கொன்று மாகப் பரவிக் கிடக்கின்ற வேளாண்மை மரபுகளைத் தொகுத்து விளக்குவதோடு, பண்டைய மரபுகள் இன்றைய வேளாண்மை அறிவியலுக்கு வழிகாட்டுவதையும், துணை நிற்பதையும், வகுத்துச் சுட்டுவதும் புதிய நுட்பங்களுக்குப் பழைய மரபுகள் அடிப்படையாய் அமைந் துள்ளதை வெளிப்படுத்துவதுமே அய்யா இல.செ.க. அவர்களின் ஆய்வின் நோக்கமாகும்.

வேளாண்மை ஒன்றையே குறியாகக் கொண்டு முற்றிலும் புதிய நோக்கில், முழுமையான கண்ணோட்டத்தில் “தமிழர் வேளாண்மை மரபுகளை” ஆய்வுப் பொருளாக முதன் முதலில் மேற்கொண்டவர் இல.செ.க!

சங்க காலத்தில் “வேளாண்மை” என்ற சொல்லுக்குக் கொண்ட பொருள். அச்சொல் இன்று கொண்டுள்ள விரிந்த பொருள், சங்ககாலத் தமிழ் மக்கள் மண் வளத்திற்கேற்ப நிலத்தைப் பகுத்துக்கொண்ட தன்மை, பயிரிடு முறைகளில் அவர்கள் போற்றிய நுட்பங்கள், பொதுத்தன்மை ஆகிய ஆய்வுக்குரிய பொருளாக மேற்கொண்டுள்ளார்.

சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்றுள்ள பயிர்கள், மரஞ்செடி கொடிகள், வேளாண்மைக்குத் தொடர்பான உயிர்கள், வேளாண்மைக் கருவிகள், வேளாண்மைச் சமுதாயத்தின் வாழ்வியல் முறைகள், வேளாண்மைக் கலைச்சொற்கள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும் நெறிமுறைகள் பல உள. அவற்றுள் ஒன்று, கண்டுணர் திறனாய்வு நெறி (Inductive Criticism) “கண்டுணர் முறை” முன்னமே வகுத்த விதிகளைக் கொண்டு ஆய்வது அன்று; ஒரு நூலைக் கற்கும்போது அதிலிருந்தே விதிகளைக் கண்டு உணர்ந்து ஆய்வது ஆகும்.

இந்நெறிமுறைப்படி தொகை யிலும் பாட்டிலும் காணப்பெறும் வேளாண்மைச் செய்திகளைத் தொகுத்தும் பகுத்தும் இன்றைய வேளாண்மை அறிவியல் பகுப்பு முறையினை அளவுகோலாகக் கொண்டு ஆய்வு நடத்தப் பெற்றுள்ளது. தமிழர் வேளாண்மை மரபுகளை ஆய்வதே தலையாய நோக்கம் ஆதலின், ஆய்வுக்
குரிய முதன்மையும் தலைமையுமான கருத்துக்கள் மட்டுமே எடுத் தாண்டுள்ளார்.

ஒவ்வொரு இயலும் அறிவியல், தமிழியல், ஒப்பியல், பயனியல் என்னும் நான்கு பகுப்புகளைக் கொண்டது. இங்கு அறிவியல் என்னும் பகுதியில், தற்காலத்தில் தோன்றி வளர்ந்து வரும் வேளாண்மை பற்றிய அறிவியல் கருத்துக்கள் சுருங்க உரைக்கப் பெறுகின்றன. தமிழியல் என்னும் பகுதியில் மூல நூல்கள், துணை நூல்கள் வழியாக ஆயப்பெறும் வேளாண் மரபுகள் குறிக்கப்பெறுகின்றன. ஒப்பியல் என்னும் பகுதியில் தற்கால வேளாண்மை அறிவியல் சிந்தனைகளோடு பண்டைத் தமிழ் வேளாண்மை அறிவியல் சிந்தனைகளோடு பண்டைத் தமிழ் வேளாண்மை மரபுகள் ஒப்பிட்டும் உறழ்ந்தும் ஆயப்பெறுகின்றன. பயனியல், பண்டைத் தமிழ் வேளாண்மை மரபுகளைத் தொகுத்து, அவற்றைத் தற்கால அறிவியல் கருத்துக்களோடு ஒப்பிட்ட தனால் தோன்றும் உண்மைகளை உரைக் கின்றது. இம்முறையில் ஒவ்வொரு இயலையும் அமைத்துள்ளார்.

ஐந்தாம் இயல் இரு பகுதிகளைக் கொண்டது. அதில் முதல் பகுதி மூன்று உட்பிரிவுகளையும், இரண்டாம் பகுதி இரண்டு உட்பிரிவுகளையும் உடையது. அவற்றின் தனித்தன்மை நோக்கி, ஒவ்வொரு உட்பிரிவுக்கும் அறிவியல், தமிழியல், ஒப்பியல், பயனியல் ஆகியவை கொடுக்கப் பெற்றுள்ளன.

இவ்வாய்வில் “முன்னுரை” முதல் இயலாக வடித்துள்ளார். “வேளாண்மை மரபுகள்” என்ற இரண்டாம் இயல், மரபுகள் பற்றி பல்வேறு விளக்கங்களை எடுத்துக்கூறி, வேளாண்மை மரபுகளை விளக்குகின்றது. சொல்லாலும் பொருளாலும் வளர்ந்துள்ள வேளாண்மை என்றசொல்லின் வளர்ச்சி நிலைகள் விளக்கப்படுவதையும் இவ்விரண்டாம் இயலுள் காணலாம். இன்றைய அறிவியல் நோக்கில் இச்சொல் வேளாண்மையியல், தோட்டக்கலையியல், வனஇயல், கால்நடையியல், மீனியல், வேளாண் பொறியியல், மனையியல் உள்ளிட்ட கிராமப்புறச் சமுதாயவியல் ஆகியவற்றின் கருத்தோட்டங்களை உள்ளடக்கிய பொதுச் சொல்லாக விளங்குகிறது என்பதையும் இவ்வியல் சுட்டிக் காட்டியுள்ளார்.

“நிலவளமும் நீர்வளமும்” என்றமூன்றாம் இயலில் நால்வகை நிலத்து மண்ணின் தன்மை, அவற்றில் விளையும் பொருள்கள், அவற்றின் தொன்மையை விளக்கும் மரபுப் பெயர்கள் ஆகியவை விளக்கப் பெறுவதோடு, அப்பாகுபாடு அறிவியல் நோக்குடையது என்பதும் சுட்டப் பெறுகின்றது. பாலைக்கு நிலம் இல்லை என்பதும் அது பருவத்தால் பெறும் பெயர் என்பதும் தெளிவாக்கப்படுகிறது. முரம்பு, கரம்பை, உவர், களர் போன்ற பயன்படாத நிலங்கள் பற்றிய விளக்கங்கள் தெளிவுறுத்தப்பெறுகின்றன. மழையின் இயக்கங்களை அறிதல், மழைவேண்டிப் பெறல், மிகுமழையை நிறுத்துதல் போன்றநம்பிக்கை வழிப்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப் பெற்றுள்ளன. இயற்கை, செயற்கை நீர்நிலைகள் பற்றியும் நீர்நிலைகளை அமைக்கும் முறைகள் பற்றியும் நீர்நிலைகளை ஆள்வைத்துக் காத்த நிலை பற்றியும் சுட்டப் பெற்றுள்ளன. நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசனின் கடமை என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.

“வேளாண்மைச் செய்முறைகள்” என்ற நான்காம் இயலில், நன்செய், புன்செய் இரண்டிற்கும் உரிய செய்முறைகள் தனித்தனியே ஆராயப்பெற்று உழுதல், எருவிடுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், காத்தல், அறுவடை செய்தல் ஆகிய செய்வினைகள் பற்றிய தொன்மை நுட்பங்கள் சுட்டப் பெற்றுள்ளன. பண்டைத் தமிழ்மக்கள் விதையைப் பேணிக்காத்த முறைதெளிவாக்கப் பெற்றுள்ளது. நெல்லறுவடைக்குப் பின் பயறுகள் விதைப்பது, கரும்பு அறுவடைக்குப்பின் கட்டைப் பயிர் விடுவது, தினையுடன் பருத்தி, தினையுடன் அவரை கலந்து விதைப்பது போன்றபயிரிடுமுறைகள் விளக்கப்பெற்று, அம்முறையே இன்றைய அறிவியல் உலகிலும் பின்பற்றப்படுவது தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. உழவுத் தொழிலின் பல்வேறு நிலைகளிலும் இசை இணைந்திருந்தமை வெளிப்படுத்தியுள்ளார்.

“பயிர்களும் உயிர்களும்” என்றஐந்தாம் இயலில் நெல், தினை முதலாய பயிர்வகைகள், அவரை, கொள் முதலாய பயறுவகைகள், முதற்கொண்டு சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள முக்கியப் பயிர்கள் அனைத்தும் கணிக்கப் பெற்றுள்ளன. மலர்கள், காய்கள், கனிகள், கிழங்குகள், கீரைகள் முதலாய தோட்டக்கலைப் பயிர்வகைகளும் தொகுக்கப்பெற்று ஆராயப்பெற்றுள்ளன சங்க இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ள மரஞ்செடி கொடிகள் அனைத்தும் சுட்டப்பெற்றுள்ளன. உயிரினங்களில் வேளாண்மையோடு தொடர்புடைய பசு, எருது, எருமை, ஆடு, கோழி ஆகியவை மட்டும் ஆய்வுக்குக் கொள்ளப்பட்டு, அவற்றின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், குறிக்கப்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள நன்னீர், கடல்நீர், மீன்வகைகள், மீன்பிடிப்பு முறைகள், மீன் உணக்கல் ஆகியனவும் விளக்கி உள்ளனர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2005

ஒட்டுநர் மருத்துவராகிறார்…..
இமேஜை வளர்த்துக்கொள்ளுங்கள்
மனச்சோர்வுக்கு மருந்து
வாழ்க்கை என்பதோர் பெருங்கனவு
தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்
இழப்பின் மதிப்பு
நீங்க ஹார்டு ஒர்க்கரா? ஸ்மார்ட் ஒர்க்கரா?
மலரும் மனமும்
நிறுவனர் நினைவுகள்
ஏணிகளும் பாம்புகளும்
தன்னம்பிக்கை
அனைவரும் போற்றும் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
வெற்றி தரும் வேலை நேரம்
திறந்த உள்ளம்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
கூச்சமும் பயமும் நீங்கிட..
அனிதா குப்புசாமி புஷ்பவனம் பேட்டி
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
உழைப்பால் உயர்ந்தவர்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுடன் ஓர் நேர்முகம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்